சென்னையில் உள்ள, 2 கல்லூரிகளில், கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்த
கட்டணத்துக்கும் அதிகமாக வசூலிப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை, சென்னை
ஐகோர்ட் நீக்கியது.
தமிழ்நாடு கத்தோலிக்க சிறுபான்மை
நலச் சங்கம் உள்ளிட்ட, இரண்டு அமைப்புகள், தாக்கல் செய்த மனுவில்
கூறியிருப்பதாவது: சென்னையில், லயோலா கல்லூரி மற்றும் ஸ்டெல்லா மேரீஸ்
கல்லூரிகளில், கல்விக் கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்த கட்டணத்துக்கும்
அதிகமாக வசூலிக்கின்றன; இவை, அரசு உதவி பெறும் கல்லூரிகள். எனவே, கூடுதல்
கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
மனுக்களை விசாரித்த ஐகோர்ட், இரண்டு கல்லூரிகளிலும், கூடுதல் கட்டணம்
வசூலிக்க, தடைவிதித்து, ஏப்ரல் மற்றும் ஜூன் மாதத்தில் உத்தரவிட்டது.
இவ்வழக்கு, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, "முதல்
பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.
கல்லூரிகள் தரப்பில், வழக்கறிஞர், ஐசக் மோகன்லால், "நன்கொடை
வசூலிப்பதில்லை; லாப நோக்கிலும் செயல்படவில்லை. நிதிக் குழு தயாரித்த
திட்டத்தின் அடிப்படையில், கட்டணம் வசூலிக்கப்படுகிறது" என்றார்.
இதையடுத்து, இரண்டு கல்லூரிகளுக்கும் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி,
"முதல் பெஞ்ச்' உத்தரவிட்டது. விசாரணையை, வரும், 29ம் தேதிக்கு, ஒத்தி
வைத்தது.