உசிலம்பட்டி முத்துராமலிங்கத்தேவர் கல்லூரி பேராசிரியர் மீது நடவடிக்கை
எடுக்க, முன் அனுமதி கோரிய மனுவை பரிசீலிக்காத, மதுரை கல்லூரிக் கல்வி இணை
இயக்குனருக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை கண்டனம்
தெரிவித்துள்ளது.
முத்துராமலிங்கத்தேவர் கல்லூரி
செயலாளர் தாக்கல் செய்த மனு: எங்கள் கல்லூரி பேராசிரியர் ரவி. இவரது
நன்னடத்தை சரியில்லாததால், 2011 நவம்பர் 18ல் சஸ்பெண்ட் செய்தோம். சார்ஜ்
மெமோ அளித்தோம். பழநி ஆண்டவர் கல்லூரி முதல்வர் (ஓய்வு) ஜெயபாலன் விசாரணை
அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
ரவி விளக்கம் அளிக்க, போதிய வாய்ப்பளிக்கப்பட்டது. அவரது பதில்,
திருப்தி அளிக்கவில்லை. அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானது. ரவியை
பணி நீக்கம் செய்ய நிர்வாகம் முடிவு செய்தது. அதற்கு முன் அனுமதி கோரி,
மதுரை கல்லூரிக் கல்வி இணை இயக்குனருக்கு பரிந்துரைத்தோம். அதன் மீது
நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதி வினோத் கே.சர்மா முன், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்
வக்கீல் ஈ.வி.என்.சிவா ஆஜரானார்.நீதிபதி: ரவி மீது கடுமையான
குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. மனுதாரர், கல்லூரிக் கல்வி இணை
இயக்குனருக்கு பரிந்துரைத்து 6 மாதங்கள் ஆகிறது. அதில், இணை இயக்குனர்
எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவரது பணியை, சரிவர மேற்கொள்ளவில்லை.
மனுவை 2 மாதங்களுக்குள் பரிசீலித்து, உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என,
உத்தரவிட்டார்.