கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>மத்திய அரசுக்கு இணையான சம்பளம் : போராட்டத்தில் ஆசிரியர் கூட்டணி

"ஆறாவது ஊதியக்குழுவில், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு வழங்கிய ஊதியத்தை, தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்கும் வரை, தொடர் போராட்டம் நடத்தப்படும்,'' என, தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி மாநில தலைவர் காமராஜ் கூறினார்.
அவர் கூறியதாவது: ஆறாவது ஊதியக்குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு வழங்கிய ஊதியத்திற்கு இணையாக, தமிழகத்திலும் வழங்க வேண்டும். அவர்களுக்கான சலுகைகளையும் வழங்க வேண்டும் என்ற ஏழு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அக்., 15 முதல் நவ., 12 வரை, மாவட்டங்களில் கூட்டங்கள் நடத்த உள்ளோம். நவ., 22 ல், மாவட்ட தலைநகரங்களில் ஊர்வலம், ஜனவரியில் தர்ணா போராட்டம் நடைபெறும். இதன்பிறகும் கோரிக்கையை ஏற்காவிட்டால், தொடர் போராட்டம் நடத்துவோம். கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும், இதுவரை பேச்சு நடத்த, தமிழக அரசு அழைக்கவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக, இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்காததால், 3,000க்கும் மேற்பட்ட "ஓராசிரியர் பள்ளிகள்' செயல்படுகின்றன. மேலும், 2,000 க்கும் மேற்பட்ட நடுநிலைப் பள்ளிகளில், இரண்டு ஆசிரியர் மட்டுமே உள்ளனர், என்றார்.

>>>சி.இ.ஓ.,க்கள் 6 பேர் மாற்றம்

முதன்மைக் கல்வி அலுவலர்கள், ஆறு பேர், இட மாற்றம் செய்யப் பட்டனர். கோவை மாவட்ட சி.இ.ஓ., ராஜேந்திரன், சென்னை மாவட்ட சி.இ.ஓ.,வாக நியமிக்கப்பட்டார்.
மாற்றம் செய்யப்பட்டவர்கள் விவரம்:
பெயர் - பழைய இடம் - புதிய இடம்
1.சிவா தமிழ்மணி சி.இ.ஓ., - சென்னை துணை இயக்குனர் - நிர்வாகம், தொடக்க கல்வி இயக்ககம்.
2.ராஜேந்திரன் சி.இ.ஓ., - கோவை சி.இ.ஓ.,-சென்னை
3.செங்குட்டுவன் துணை இயக்குனர் - நிர்வாகம், தொ.க.இ., சி.இ.ஓ., வேலூர்
4.பொன் குமார் சி.இ.ஓ., - வேலூர் எஸ்.எஸ்.ஏ., - சி.இ.ஓ., - கிருஷ்ணகிரி
5.ராமசாமி எஸ்.எஸ்.ஏ., - சி.இ.ஓ., - கிருஷ்ணகிரி சி.இ.ஓ., - தேனி
6.ஞானகவுரி சி.இ.ஓ., - தேனி சி.இ.ஓ., - கோவை
பதவி உயர்வு
1.சிவகாம சுந்தரி டி.இ.இ.ஓ., - சென்னை கூடுதல் சி.இ.ஓ., - ராமநாதபுரம்
2.வசந்தா டி.இ.ஓ., - கடலூர் சி.இ.ஓ., - நீலகிரி
3.ஜெயலட்சுமி டி.இ.ஓ., - பெரம்பலூர் எஸ்.எஸ்.ஏ., - சி.இ.ஓ., - சிவகங்கை

>>>ஒரு மாதத்தில் வி.ஏ.ஓ., "ரிசல்ட்' :

தேர்வாணைய தலைவர் நடராஜ், குரூப்-2 தேர்வு துறை ஒதுக்கீட்டு ஆணைய பெற்றவர்கள் மத்தியில் பேசியதாவது: அரசுப் பணி, தெய்வீகப் பணி. இதனை உணர்ந்து, பணி நியமனம் பெற்றவர்கள் நேர்மையுடனும், சிறப்புடனும் பணியாற்ற வேண்டும். இந்த கலந்தாய்வு, வெளிப்படையாக நடக்கிறது. துறை வாரியான, காலி பதவிகள் எண்ணிக்கை குறித்த விவரங்களை, இணையதளத்தில் வெளியிட்டுள்ளோம். அவை தினமும், "அப்டேட்' செய்யப்படும். கலந்தாய்வுக்கு வருபவர்கள், காலியிட விவரங்களை தெரிந்துகொண்டு, அதற்கேற்ப, விரும்பும் பணிகளை தேர்வு செய்யலாம். ஏற்கனவே நடந்த, குரூப்-1 தேர்வின், முக்கியத் தேர்வு முடிவு, விரைவில் வெளியிடப்படும். புதிய குரூப்-1 தேர்வு அறிவிப்பு, விரைவில் வெளியிடப்படும். தற்போது வரை, 40 காலிப் பணியிடங்கள் தரப்பட்டுள்ளன. செப்., 30ல் நடந்த வி.ஏ.ஓ., தேர்வு முடிவு, ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும். இவ்வாறு நடராஜ் கூறினார்.

>>>கலந்தாய்வு மூலம் 143 தலைமை ஆசிரியர் நியமனம்

பள்ளிக் கல்வித்துறை, நேற்று நடத்திய பதவி உயர்வு கலந்தாய்வில், 143 பேர், அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக, பதவி உயர்வு செய்யப்பட்டனர். காலியாக உள்ள, 143 அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித்துறை இணையதளம் வழியாக, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில், நேற்று கலந்தாய்வு நடந்தது. இதில், பணிமூப்பு அடிப்படையில், தகுதி வாய்ந்த முதுகலை ஆசிரியர் மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் என, 171 பேர், கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். 28 பேர், பதவி உயர்வை மறுத்து விட்டனர். மீதமுள்ள, 143 பேர், பணியிடங்களை தேர்வு செய்தனர். இவர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனரின் பதவி உயர்வு உத்தரவு கடிதங்கள், இணையதளத்தில் வெளியிடப்பட்டன. தர்மபுரி, நாகை, ராமநாதபுரம், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தான், அதிக காலிப் பணியிடங்கள் இருந்தன. சென்னையில், இரு பணியிடங்கள் இருந்தன. இதற்கு, 10 பேர் அழைக்கப்பட்டனர். ஐந்து பேர், பதவி உயர்வு வேண்டாம் என, தெரிவித்தனர். மீதமுள்ள ஐந்து பேரில், ஒருவர், ஒரு காலிப் பணியிடத்தை தேர்வு செய்தார். மற்றொரு காலி பணியிடத்தை, வெளி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் தேர்வு செய்ததாக, முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்தார். பள்ளிக் கல்வித் துறையில், சமீப காலமாக, பல்வேறு கலந்தாய்வுகள், "ஆன்-லைன்' வழியாக நடந்து வருகின்றன. சமீபத்தில், 1,200 முதுகலை ஆசிரியர் நியமனம், ஆன்-லைன் வழியாக நடந்தது. இந்த முறையால், ஆசிரியர்கள் அலைச்சலின்றியும், அவர்களின் போக்குவரத்து செலவு, துறை சார்பில் நடக்கும் இதர ஏற்பாடுகள் என, பல்வேறு பண விரயம் தடுக்கப் பட்டுள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

>>>குரூப்-2 தேர்வு :தேர்ச்சி பெற்றவர்களுக்கு கலந்தாய்வு துவக்கம்

குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற, 3,472 பேருக்கு, பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கும் கலந்தாய்வு, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில், நேற்று துவங்கியது. முதல் ஐந்து இடங்களைப் பெற்றவர்களில், மூன்று பேர், சார்பதிவாளர் பதவியையும், இருவர் நகராட்சி கமிஷனர் பதவியையும் தேர்வு செய்தனர். நகராட்சி கமிஷனர், தலைமைச் செயலக உதவிப்பிரிவு அலுவலர், வணிகவரி உதவி அதிகாரி, சார்பதிவாளர் உள்ளிட்ட, 6,692 பதவிகளை நிரப்ப, கடந்த ஆண்டு, ஜூலையில், டி.என்.பி.எஸ்.சி., எழுத்துத் தேர்வை நடத்தியது. இதில், 3.5 லட்சம் பேர் பங்கேற்றனர். இதன் முடிவு, கடந்த ஜூனில் வெளியானது. இதில், 6,949 பேர் தேர்ச்சி பெற்றனர். இதைத் தொடர்ந்து, ஜூன் இறுதியில் துவங்கி, ஜூலை இறுதி வரை, நேர்முகத் தேர்வு நடந்தது. ஆகஸ்ட் முதல் வாரத்தில், இறுதி தேர்வுப் பட்டியலை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது. மொத்த பணியிடங்களில், சார்பதிவாளர், நகராட்சி கமிஷனர் உள்ளிட்ட 3,472 பணியிடங்கள், நேர்முகத்தேர்வை உள்ளடக்கியது. மீதமுள்ள, 3,220 பணியிடங்கள், நேர்முகத்தேர்வு அல்லாத பணியிடங்கள். நேர்முகத்தேர்வு கொண்ட பணியிடங்களில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, துறை ஒதுக்கீட்டு ஆணை வழங்கும் கலந்தாய்வு, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில், நேற்று துவங்கியது. நேற்று, 600 பேர் அழைக்கப்பட்டனர்.மதிப்பெண் அடிப்படையில், முதல் ஐந்து இடங்களைப் பெற்றவர்களுக்கு, தேர்வாணைய தலைவர் நடராஜ், துறை ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார்.
முதலிடம் பெற்றவர்கள் : மதுரையைச் சேர்ந்த ஷேக் முகைதீன் முதலிடம் இடம் பிடித்து, சார்பதிவாளர் பதவியை தேர்வு செய்தார். பொறியாளரான இவர், படிப்பை முடித்த கையோடு, ஒரே முயற்சியில் வெற்றிபெற்று, சாதனை படைத்தார். தஞ்சாவூர் மாவட்டம், கண்டிதப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நாவேந்திரன், நகராட்சி கமிஷனர் பதவியை தேர்வு செய்தார். மூன்றாவது இடம்பெற்ற இந்துநேசன், நான்காம் இடம் பெற்ற கடலூர் பாலாஜி ஆகியோரும், சார்பதிவாளர் பதவியை தேர்வு செய்தனர். திருப்பூர் மாவட்டம், அங்கேரிப்பாளையத்தைச் சேர்ந்த மகேஸ்வரி, நகராட்சி கமிஷனர் பதவியை தேர்வு செய்தார். 3,472 பேரில், ஐந்தாவது இடம் என்றாலும், பெண்களில், முதலிடம் என்ற பெருமையை, மகேஸ்வரி பெற்றார். பி.காம்., பட்டதாரியான இவர், 340க்கு, "கட்-ஆப்' 295.5 மதிப்பெண் எடுத்தார். சமீபத்தில் வெளியான குரூப்-4 தேர்விலும், இவர் தேர்ச்சி பெற்றிருக்கிறார். மகேஸ்வரி கூறுகையில்,""கணவர் ஆனந்தராஜ், கோவையில், "பார்மசிஸ்ட்'டாக வேலை பார்க்கிறார். மதுமிதா என்ற பெண் குழந்தை உள்ளது; அவள், இரண்டாம் வகுப்பு படிக்கிறாள். கடினமாக உழைத்தால், எதையும் சாதிக்க முடியும். நகராட்சி கமிஷனர் வேலையில் சேர்வதை நினைத்து, மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்,'' என்றார். இவர்கள் ஐந்து பேருக்கும், துறை வாரியான பணி ஒதுக்கீட்டு ஆணைகளை, தேர்வாணைய தலைவர் நடராஜ் வழங்கினார். தொடர்ந்து, 20ம் தேதி வரை, கலந்தாய்வு நடக்கிறது. துறை வாரியான காலி பணியிடங்கள் விவரம், இணையதளத்தில் வெளியிடப்பட்டன. பல்வேறு பதவிகளின், காலி எண்ணிக்கையின் நிலவரங்களை, அவ்வப்போது தேர்வர்கள் தெரிந்துகொள்ளும் வகையில், இணையதளம் வழியாக, பெரிய திரையில் காட்டப்பட்டது. இது, கலந்தாய்வுக்கு வந்தவர்களுக்கு, பயனுள்ளதாக இருந்தது.

>>>சாப்பிடுவதற்கு முன் கைகழுவும் பழக்கம் இந்தியாவில் 38 சதவீதத்தினரிடமே வழக்கம் : யுனிசெப் ஆய்வாளர் தகவல்

"இந்தியாவில், 53 சதவீதம் மக்கள் மட்டுமே, கழிவறையை பயன்படுத்திய பின், கைகளை கழுவுகின்றனர். சாப்பிடும் முன், கை கழுவும் பழக்கத்தை வெறும், 38 சதவீதத்தினர் வழக்கமாக கொணடுள்ளனர்,'' என, யுனிசெப் சுகாதார சிறப்பியலாளர், அருண் தபோல் தெரிவித்தார்.
"உலக கை கழுவும் தின'த்தை முன்னிட்டு, யுனிசெப் மற்றும் இந்திய செய்தி நிறுவனத்துடன், பள்ளி குழந்தைகள் இணைந்து, கை கழுவ வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர். சோப்பு போட்டு, கை கழுவுவதால் ஏற்படும் நன்மைகள்; கை கழுவும் பழக்கத்திற்கு மக்களை எப்படி மாற்றுவது, கை கழுவுவதற்கு சரியான வழிமுறை எது; கை கழுவும் பழக்கத்தால், உயிர் பலி வாங்கும் நோய்களிலிருந்து எப்படி காப்பற்றலாம் என்பது குறித்து விளக்கப்பட்டன. இதன் முக்கியத்துவத்தை, பாடல்கள் மூலமாகவும், நாடகங்கள் நடத்தியும் மாணவர்கள் எடுத்துரைத்தனர். இதுகுறித்து, யுனிசெப் சுகாதார சிறப்பியலாளர், அருண் கூறியதாவது: இந்தியாவில், 53 சதவீதம் மக்கள் மட்டுமே, கழிவறையை பயன்படுத்திய பின், கைகளை கழுவுகின்றனர். சாப்பிடும் முன், வெறும் 38 சதவீதத்தினர் மட்டுமே கை கழுவுகின்றனர். சமைக்கும் முன் கை கழுவும் பழக்கம், 30 சதவீதம் பேரிடம் உள்ளது என, பொது சுகாதார குழுமம் தெரிவித்துள்ளது. வளரும் நாடுகளில், ஒவ்வொரு ஆண்டும், பல லட்சம் குழந்தைகள் உயிரிழப்பதற்கு வயிற்று போக்கும், சுவாச கோளாறும் முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன. ஐந்து வயது வரையுள்ள குழந்தைகளின் மரண எண்ணிக்கையை, வரும், 2015ம் ஆண்டுக்குள் மூன்றில் இரண்டு பங்காக குறைப்பதற்கு, சோப்பு போட்டு கை கழுவும் பழக்கம் மிகப்பெரிய அளவில் கை கொடுக்கும். இவ்வாறு அருண் கூறினார்.

>>>உணவு ஒரு கனவா: இன்று உலக உணவு தினம்

உயிர் வாழ உணவு அவசியம். அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. இது மனித உரிமையும் கூட. பசியால் யாரும் வாடக்கூடாது, அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அக்.,16ம் தேதி, உலக உணவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. "விவசாயத்துக்கு ஒத்துழைப்பு: "உலக உணவு உற்பத்திக்கு வழி' என்பது, இந்தாண்டு மையக் கருத்து. ஒவ்வொருவருக்கும், போதுமான அளவு உணவு கிடைக்க வேண்டும். வசதி வாய்ப்பற்றோர், உடல் ஊனமுற்றோர், இயற்கை சீரழிவுகளால் பாதிக்கப்பட்டோருக்கு உணவு வழங்க வேண்டியது அரசின் கடமை என்கிறது ஐ.நா., சபை. இதை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன.
மூன்று கோடி:
உலகில் 85 கோடிப்பேர் பசியாலும், ஊட்டச்சத்து குறைபாட்டாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 82 கோடிப்பேர், இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளை சேர்ந்தவர்கள். ஆண்டுதோறும், பட்டினியால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை, மூன்று கோடியே 50 லட்சத்துக்கும் அதிகம். இதை பாதியாக குறைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டும், ஒவ்வொரு ஆண்டும் பட்டினி மரணங்கள் அதிகரிக்கின்றன.அனைவருக்கும் தேவையான உணவு இருந்தாலும், அதை பெறும் அளவு பணம் இல்லாததே மரணங்களுக்கு காரணம்.
உணவு கிடைக்குமா:
வளரும் நாடுகளில் நிலவும் விலைவாசியால், உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மக்கள் தொகை பெருக்கம், உற்பத்தி குறைவு போன்றவை, விலைவாசி உயர்வுக்கு வழி வகுக்கின்றன. ஏழைகளுக்கு மூன்று வேளை உணவு என்பது, கடினமான விஷயமாகிறது. உலக வங்கி அறிக்கையின் படி, 2010 - 2011ம் ஆண்டில், உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்தால், உ<லகம் முழுவதும் 7 கோடி பேர் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சர்வதேச விருது:
உலகளவில் அதிக உணவு உற்பத்திக்கு காரணமானவர்களை பாராட்டும் விதத்திலும், ஊக்குவிக்கும் விதத்திலும் சர்வதேச உணவு விருது, 1986 முதல் வழங்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு வென்ற, நார்மன் போர்லாக் என்ற அமெரிக்கரின் முயற்சியால் இவ்விருது உருவாக்கப்பட்டது. இவ்விருது பெறுபவருக்கு 13 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. இந்தியாவின் சார்பில் இதுவரை எம்.எஸ்.சுவாமிநாதன், வர்கீஸ் குரியன் உள்ளிட்ட ஆறு பேர் இவ்விருதை பெற்றுள்ளனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...