கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>அக்டோபர் 16 [October 16]....

  • சர்வதேச உணவு தினம்
  • சிலி ஆசிரியர் தினம்
  • பாஞ்சாலங்குறிச்சி மன்னன் கட்டபொம்மன், ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டான்(1799)
  • வால்ட் டிஸ்னி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது(1923)
  • பிரிட்டன் இந்தியாவில் வங்காளப் பிரிப்பு இடம்பெற்றது(1905)

>>>ஒரு மாதத்தில் டி.இ.டி., மறுதேர்வு முடிவுகள்

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய, ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள், ஒரு மாதத்தில் வெளியாகும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த, இலவச கட்டாய கல்விச் சட்டத்தின் கீழ், பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில், முதன்முறையாக, ஆசிரியர் தகுதித் தேர்வு, கடந்த ஜூலை, 12ம் தேதி நடந்தது. இதில், தேர்வு எழுதியவர்கள், 6.71 லட்சம் பேர். இந்த தேர்வில் பங்கேற்றவர்களில், வெறும், 2,448 பேர் மட்டுமே, தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி 0.36 சதவீதம் மட்டுமே. இந்த தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் புதிதாக விண்ணப்பித்த, 17 ஆயிரம் பேர் என, மொத்தம், 6.16 லட்சம் பேருக்கு, நேற்று மறுதேர்வு நடந்தது. தேர்வுக்காக, 1,094 மையங்கள் அமைக்கப்பட்டன. தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த, 6.16 லட்சம் பேரில், 1.40 லட்சம் பேர், பங்கேற்கவில்லை.
நேரம் அதிகரிப்பு
காலையில், இடைநிலை ஆசிரியருக்கான முதல் தாளும், பிற்பகலில், பட்டதாரி ஆசிரியருக்கான இரண்டாம் தாள் தேர்வும் நடந்தது. இரு தேர்வுகளும், தலா, 150 மதிப்பெண்களுக்கு நடந்தது. முந்தைய தேர்வில், தேர்வர்களுக்கு தேர்வு எழுத, ஒன்றரை மணி நேரம் மட்டுமே வழங்கப்பட்டது. ‘இந்த நேரம் போதாது’ என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, தேர்வு நேரத்தை, மூன்று மணி நேரமாக உயர்த்தி, டி.ஆர்.பி., அறிவித்தது.
22 ஆயிரம் இடங்கள்
ஆசிரியர் தகுதித் தேர்வு மூலமாக, 5,451 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களையும், 18 ஆயிரத்து 932 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. முந்தைய தேர்வில் தேர்ச்சி பெற்ற, 2,448 பேருக்கான இடங்களைத் தவிர்த்து, மீதமுள்ள, 22 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கு, இத்தேர்வில் தேர்ச்சி பெறும் நபர்கள் நியமிக்கப்படுவர். தேர்வில், முதல் தாள் எளிதாகவும், இரண்டாம் தாளில், கேள்விகள் கடினமாக இருந்ததாகவும், தேர்வு எழுதியவர்கள் தெரிவித்தனர். ஒரு சில கேள்விகள், பாடத்திட்டத்திற்கு வெளியே இருந்து தேர்வு செய்யப்பட்டிருந்ததால், அவற்றிற்கு விடையளிப்பதில் சிரமம் இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர். முந்தைய தகுதித் தேர்வு முடிவை வெளியிட, ஒன்றரை மாதங்களுக்கு மேல் ஆனது; ஆனால், இந்த முறை தேர்வு முடிவை, ஒரே மாதத்தில் வெளியிடத் தேவையான நடவடிக்கையை, ஆசிரியர் தேர்வு வாரியம் எடுத்துள்ளது.

>>>உண்டு, உறைவிடப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை

தமிழகத்தில் உள்ள, பல்வேறு உண்டு உறைவிடப் பள்ளிகளில், ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால், பழங்குடியின மாணவர்களின் எதிர்காலம், பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மலைப் பிரதேசங்களில் வசிக்கும் பழங்குடியின குழந்தைகள், சமவெளிப் பகுதிகளுக்குச் சென்று கல்வி கற்பது சாத்தியமில்லை. அதே சமயம், அருகில் உள்ள பள்ளிகளுக்குச் செல்ல, 10 கி.மீ., செல்ல வேண்டும். பழங்குடியின மாணவர்கள் வாழ்க்கை, கல்வித் தரம் உயர வேண்டும் என்பதற்காக, உண்டு உறைவிடப் பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டன. மாணவர்கள், பள்ளியிலேயே கல்வி கற்று, உண்டு, ஓய்வெடுக்க, இப்பள்ளிகள் உதவின. தமிழகமெங்கும் உள்ள, 297 உண்டு உறைவிடப் பள்ளிகளில், 30 ஆயிரம் மாணவர்கள் பயில்கின்றனர். தற்போது, இதில் பெரும்பாலான பள்ளிகளில், 100க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக, பல்வேறு பழங்குடியினர் நல அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
நல அமைப்புகளின் நிர்வாகிகள் கூறியதாவது:
மாணவர்கள், உண்டு ஓய்வெடுப்பதற்கான இடமாக மட்டுமே, பள்ளிகள் உள்ளன. பெரும்பாலான பள்ளிகளில், ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதால், கல்வி கற்க இயலாமல், மாணவர்கள் தவித்து வருகின்றனர். இதனால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் இருந்த தேர்ச்சி சதவீதம், இந்த ஆண்டு இல்லை. சமவெளிப் பகுதிகளில், சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன், ஆசிரியர்கள் இருப்பதால், மலைப் பகுதிகளுக்குச் செல்ல மறுக்கின்றனர். இதுவே, ஆசிரியர் பற்றாக்குறைக்கு முக்கிய காரணம்.இவ்வாறு, அவர்கள் கூறினர். தற்போது, அதே பகுதிகளில் வசிக்கும், படித்த பட்டதாரிகள், வேலையின்றி இருக்கின்றனர். அவர்களில் பலர், உறைவிடப் பள்ளிகளில் சேவை செய்ய, விருப்பத்துடன் இருக்கின்றனர். காலியாக உள்ள பணியிடங்களில், ஆசிரியர் நியமிக்கும் வரை, அவர்களை தற்காலிக ஆசிரியர்களாக பணி அமர்த்தலாம். இதனால், உடனடி தீர்வு கிடைப்பதுடன், பள்ளியிலிருந்து விலகிச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம். இதுகுறித்து, பழங்குடியின நலத்துறை உயரதிகாரிகளிடம் கேட்ட போது, ‘விரைவில், இப்பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும்’ என்றனர்.

>>>அப்துல் கலாம் கடந்துவந்த பாதை...

 
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும், இந்தியாவின் ‘ஏவுகணை மனிதர்’ என அழைக்கபடுபவருமான அப்துல் கலாம், 1931ம் ஆண்டு அக்.,15ம் தேதி, தமிழகத்தின் தீவுப்பகுதியான ராமேஸ்வரத்தில் பிறந்தார். இவரது முழுப்பெயர் ‘ஆவுல் பக்கீர் ஜெனுலாபுதீன் அப்துல் கலாம்’. தென் தமிழகத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த கலாமின் தாய் மொழி தமிழ். குடும்ப வறுமையால், படிப்புச் செலவுக்கு நாளிதழ் விநியோகம் செய்தார். பள்ளியில் சராசரி மாணவராக இருந்த கலாம், ஆய்வுகளுக்காக அதிக நேரம் செலவு செய்தார். பள்ளிப்படிப்பை முடித்தவுடன், 1954ம் ஆண்டு திருச்சியில் உள்ள ஜெயின்ட் ஜோசப் கல்லூரியில் இயற்பியல் பட்டம் பெற்றார். 1960ம் ஆண்டு ‘மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி’ (எம்.ஐ.டி.,)யில், ‘ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்’ பட்டம் பெற்றார். தொடர்ந்து, டிபன்ஸ் ரிசர்ச் அண்டு டெவலப்மென்ட் ஆர்கனைசேஷனில் (டி.ஆர்.டி.ஒ.,), ஏரோநாட்டிக்கல் டெவலப்மென்ட் எஸ்டாபிலிஷ்மென்ட் தலைமை விஞ்ஞானியாக, பணியில் சேர்ந்தார். இந்திய ராணுவத்திற்கு சிறிய ரக ஹெலிகாப்டரை வடிவமைத்ததே அவரின் பணி. 1969ம் ஆண்டில் இஸ்ரோவுக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். அங்கு, இந்தியாவின் முதல் உள்நாட்டு செயற்கைக்கோளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். சீரிய முயற்சியால் போலார் எஸ்.எல்.வி., எஸ்.எல்.வி., 3 போன்ற ராக்கெட் திட்டங்களை வெற்றிகரமாக உருவாக்க உதவினார்.  இஸ்ரோ, 1970ம் ஆண்டு எஸ். எல்.வி., ராக்கேட் மூலமாக ரோகிணி 1 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. அதே ஆண்டில், புராஜெக்ட் டெவில், வேலியண்ட் என்ற இரண்டு செயற்கைக் கோள்களும் கலாமின் முயற்சியால், எஸ்.எல். வி., ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. அப்போது பிரதமராக இருந்த இந்திரா, மத்திய அமைச்சரவை நிதி ஒதுக்க மறுத்த போதிலும், இந்தியாவின் விண்வெளி திட்டங்களுக்காக, ரகசியமாக நிதி ஒதுக்கினார். தொடர்ந்து செயற்கைக்கோள்களை ஏவிய கலாம், அக்னி, பிரித்வி போன்ற ஏவுகணை உருவாக்குவதில் பெரும்பங்கு வகித்தார். ஜூலை 1992 முதல், டிசம்பர் 1999 வரை மத்திய பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைமை அறிவியல் ஆலோசகராக இருந்தார். இந்த காலகட்டத்தில் தான், பொக்ரான்-2 அணு சோதனை நடத்தப்பட்டது. இது வெற்றிகரமாக நடத்தப்பட்டதால் அவர் இந்திய நாட்டின் உயர்மட்ட அணு விஞ்ஞானி எனும் அளவிற்கு உயர்ந்தார்.
இந்திய ஜனாதிபதி:  
கே.ஆர். நாராயணனுக்கு பின், இந்தியாவின் 11வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கலாம், 2002 ஜூலை 25ல் பதவியேற்றார். இவருக்கு பா.ஜ., காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவு இருந்ததால், இவரை எதிர்த்து போட்டியிட்ட லட்சுமியைக் காட்டிலும் அதிக ஓட்டுகள் பெற்று 2007 ஜூலை 25வரை ஜனாதிபதியாக பணியாற்றினார். 13வது மற்றும் 14வது ஜனாதிபதி தேர்தலிலும் இவர் போட்டியிட வேண்டும் என பல்வேறு கட்சிகள் வலியுறுத்தின. இவர் மறுத்து விட்டார். இது இவரது பெருந்தன்மையை காட்டியது.
தற்போது இவர்:
திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகத்தின் வேந்தராகவும், சென்னை அண்ணா பல்கலை.,யில் பேராசிரியராகவும், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்( ஐ.ஐ.எம்.,)- ஆமதாபாத், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ( ஐ.ஐ.எம்.,) இந்தூர், மைசூர் பல்கலை., மற்றும் பல இந்திய கல்வி நிறுவனம், ஆராய்ச்சி நிறுவனங்களில் வருகை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இப்போது பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கும் சென்று, மாணவர்களை சந்தித்து, சிறந்த எதிர்கால சந்ததியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

>>>ஆசிரியர் நியமனம்: புதிய விதிமுறையில் வெளிப்படைத்தன்மை வெளிப்படுமா?

ஆசிரியர் நியமனத்திற்கான, புதிய விதிமுறையில், வெளிப்படைத்தன்மை வெளிப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இடைநிலை ஆசிரியர் நியமனத்தை பொறுத்தவரை, சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வரும் வழக்கில், இறுதி தீர்ப்பு வரும் வரை, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில், பணி நியமனம் நடக்கும் என்பது, தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த வகை ஆசிரியர், டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்றால் போதும்; அதன் பின், தேர்ச்சி பெற்றவர்களில், காலிஇடங்கள் எண்ணிக்கைக்கு தகுந்தபடி, இன சுழற்சி வாரியாக, பதிவுமூப்பு அடிப்படையில், பணி நியமனம் செய்யப்படுவர். பட்டதாரி ஆசிரியர், டி.இ.டி., தேர்வில் பெறும் மதிப்பெண் மற்றும் பிளஸ் 2, பட்டப்படிப்பு, பி.எட்., ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், பணி நியமனம் இருக்கும்.
கேள்வி
இரு வகை ஆசிரியர் தேர்விலும், வெளிப்படைத்தன்மை வெளிப்படுமா என்பதுதான், தேர்வர் முன் இருக்கும் கேள்வி. இணையதளத்தில், பதிவு எண்ணை பதிவு செய்தால், சம்பந்தப்பட்ட தேர்வர், தேர்வாகி உள்ளாரா, இல்லையா என்பது தெரிய வரும். ஆனால், ஒருவரின் தேர்வு, நியாயமான முறையில் நடந்து இருக்கிறதா என்பதை, மற்றவர் அறிய, தற்போது வழியில்லை. இதனால், வெளிப்படைத்தன்மை, 100 சதவீத அளவிற்கு கடைபிடிக்கப்படுமா என, தேர்வர் மத்தியில், சந்தேகம் இருக்கிறது.தேர்வு பெற்ற ஒருவரின், பிளஸ் 2, ஆசிரியர் பட்டயத் தேர்வு, பட்டப்படிப்பு, பி.எட்., மற்றும் டி.இ.டி., தேர்வில் பெற்ற மதிப்பெண்களை, தனித்தனியே பட்டியலிட்டு, அவற்றை, அனைத்து தேர்வர்களும் பார்க்கும் வகையில், வெளிப்படையாக, இணையதளத்தில், டி.ஆர்.பி., வெளியிட வேண்டும் என்பது, தேர்வர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறியதாவது: வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்க, 100 சதவீதம், நடவடிக்கை எடுக்கப்படும். ஒருவரின் தேர்வு முறையை, மற்றவர்தெரிந்து கொள்ள, தற்போது வழியில்லை தான். இதுகுறித்து, ஆலோசித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். டி.இ.டி., தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கென, தனி, "சாப்ட்வேர்' தயாரிக்க, முயன்று வருகிறோம்.டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெறும் தேர்வர், பிளஸ் 2 உள்ளிட்ட இதர படிப்புகளில் பெற்ற மதிப்பெண் விவரங் களை, டி.ஆர்.பி., இணையதளத்தில் பதிவு செய்ய உத்தரவிட உள்ளோம்.

>>>சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சிறுபான்மையின மாணவ, மாணவியிர் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை அளிக்க, காலகெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் பூஜா குல்கர்னி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் வாழும் மதவழி சிறுபான்மையின பிரிவைச் சார்ந்த ஐ.டி.ஐ., ஐ.டி.சி., என்.சி.வி.டி., பாலிடெக்னிக், டிப்ளமோ, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள், எம்.பில் (தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி நீங்கலாக) படிக்கும் மாணவ, மாணவியர் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை பெறுவதற்காக, புதியது மற்றும் புதுப்பித்தலுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வரும், 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்காத தகுதி வாய்ந்த சிறுபான்மையின மாணவ மாணவிகள், இணையதளம் மூலம் விண்ணப்பித்து, கல்வி நிலையங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும், விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, அத்துடன் மதிப்பெண் சான்றிதழ், சாதி, வருமானம், கல்விக்கட்டணம் செலுத்திய ரசீது, இருப்பிட முகவரி, வங்கி கணக்கு எண் இணைத்து கல்வி நிலையங்களில் வரும், 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதுவரை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த மாணவ, மாணவியர் முழு விவரங்கள் பூர்த்தி செய்யாமல் இருந்தால், முழு விவரங்களை உடனடியாக பூர்த்தி செய்து, தாமதமின்றி கல்வி நிலையங்களுக்கு ஆன்லைன் மூலம் சமர்பிக்க வேண்டும். கல்வி நிலையங்கள், ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த விண்ணப்பங்களை அவ்வப்போது பரிசீலித்து, தகுதியான விண்ணப்பங்களை பரிந்துரை செய்ய வேண்டும். இது தொடர்பான கேட்பு பட்டியல்கள் மற்றும் சான்றாவணங்களை வரும், 31ம் தேதிக்குள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலருக்கு அனுப்ப வேண்டும்.மேலும் விவரங்கள் அறிய விரும்புவோர் சிறுபான்மையினர் நல ஆணையர் அலுவலக டெலிபோன் எண்: 044-28523544ல் தொடர்பு கொள்ளலாம், என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

>>>விவசாயத்துறையின் முதுகெலும்பு: சர்வதேச கிராமப்புற பெண்கள் தினம்

இந்தியாவின் பெரும்பாலான பகுதி கிராமங்கள் தான். இங்கு வாழும் பெண்களின் வாழ்க்கைத் தரம் பின்தங்கிய நிலையில் உள்ளது. இவர்களின் பிரதான தொழில் விவசாயம். கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் என பல வழிகளிலும் நகர்ப்புற பெண்களுக்கு கிடைக்கும் வசதிகள், கிராமப்புற பெண்களுக்கு கிடைப்பதில்லை. இவர்கள் வீட்டு வேலைகளை மட்டுமல்லாமல், விவசாயம், மீன் பிடித்தல், மேய்ச்சல் உள்ளிட்ட தொழில்களையும் செய்கின்றனர். இதில் பல்வேறு சிரமங்கள் இருந்தாலும், இவர்களது பணி தொடர்கிறது. கிராமப்பற குடும்பங்களில், பெண்களின் வருமானமும் முக்கிய தேவையாக உள்ளது. உலகின் வளர்ச்சிக்கு, கிராமப்புற பெண்களின் பங்களிப்பை மறுக்க முடியாது. இவர்களை அங்கீகரிக்கும் விதத்திலும், உரிய வசதிகள் செய்து தர வலியுறுத்தியும் அக்.,15ம் தேதி, சர்வதேச கிராமப்புற பெண்கள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
விவசாயம் அதிகம்
உலக உணவு உற்பத்தியில் கிராமப்புற பெண்களின் பங்கு தான் அதிகம். காய்கறிகள், பழங்கள், தானியங்கள், பூக்கள் உள்ளிட்ட விவசாயத் துறையின் முதுகெலும்பாக இவர்கள் திகழ்கின்றனர். உலகளவில் பெண்களின் வேலைவாய்ப்பில், மூன்றாவது இடத்தில் விவசாயத்துறை உள்ளது. ஆப்ரிக்கா, தெற்கு ஆசிய நாடுகளில் 60 சதவீத பெண்கள், விவசாயப் பணிகளில் தான் ஈடுபடுகின்றனர். கிராம பெண்களின் வேலை நேரம், ஆண்களை விட கூடுதலாக உள்ளது. என்ன செய்யலாம்கிராமப்புற பெண்களின் தொழில்களுக்கு கடனுதவி வழங்குதல், வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்குதல், இலவச மருத்துவ பரிசோதனை , சுகாதாரம் உள்ளிட்ட வசதிகளை அவர்களுக்கு செய்து தருவது ஒவ்வொரு அரசின் கடமை.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...