கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>தேர்ச்சி விகிதம் அதிகரிக்க மாணவர்களை தத்தெடுக்க உத்தரவு

அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, 10 ,12ம் வகுப்பில் தலா பத்து மாணவர்களை தத்தெடுத்து, தினமும் அவர்களை கண்காணிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு உயர்,மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புகளில், ஆண்டுதோறும் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கவும், அனைவரும் இடைநிலை கல்வியை கடக்கவும், அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, ஒவ்வொரு பள்ளியிலும், 10, 12ம் வகுப்பிற்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள், குறைந்தது தலா பத்து மாணவ, மாணவிகளை தத்தெடுக்க வேண்டும். தங்களது கட்டுப்பாட்டிலுள்ள மாணவர்களிடம், தினமும் தங்களது பாடம் தவிர, மற்ற ஆசிரியர்கள் நடத்தியவை, வீட்டு பாடங்களை கண்காணிக்க வேண்டும். அவர்களை பொதுத் தேர்வில் அதிக மார்க் எடுக்க வைப்பதுடன், தேர்ச்சி விகித்தை அதிகரிக்க செய்ய வேண்டும். மாணவர்கள் தேர்வில் தோல்வியை தழுவினாலும், பள்ளிக்கு சரியாக வராவிட்டாலும், சம்பந்தப்பட்ட ஆசிரியரே பொறுப்பு. இதற்கான உத்தரவு, முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "அரசு பள்ளிகளில் மாணவர்களை தத்தெடுப்பது, ஆசிரியர்களுக்கு கூடுதல் சுமை. மாணவர்கள், ஆசிரியர் இடையே தகுந்த ஒத்துழைப்பு தேவை. ஒழுக்கமில்லாத மாணவ, மாணவிகளை கண்டிக்கக்கூடாது என, உத்தரவு இருக்கும் போது, ஒழுக்கமற்றவர்களை திருத்திக் கொண்டு வருவதில் சிரமம் ஏற்படும். பெற்றோர்களும் ஒத்துழைக்க வேண்டும்" என்றார்.

>>>10 நாட்களில் டி.இ.டி தேர்வு கீ-ஆன்சர் வெளியீடு

ஆசிரியர் தகுதி மறுதேர்வின், "கீ-ஆன்சர்" 10 நாட்களில் வெளியிடப்படுகிறது. அக்டோபர் 14ல் நடந்த, டி.இ.டி., மறு தேர்வில், 4.75 லட்சம் பேர் பங்கேற்றனர். ஜூலையில் நடந்த தேர்வை விட, இப்போது நடந்த தேர்வு, எளிதாக இருந்ததாலும், தேர்வு நேரத்தை, மூன்று மணி நேரமாக அதிகரித்து வழங்கியதாலும், அதிகம் பேர் தேர்ச்சி பெறுவர் என, டி.ஆர்.பி., எதிர்பார்க்கிறது. இதற்கிடையே, கேள்விகளுக்கான விடைகளை (கீ-ஆன்சர்), 10 நாளில் வெளியிட, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது. தற்போது, மாவட்டங்களில் இருந்து, விடைத்தாள் கட்டுகள், சென்னைக்கு வந்து கொண்டிருக்கின்றன. விடைத்தாள், ஸ்கேன் செய்வதற்கு முன்பே, விடைகளை வெளியிட்டால், ஏதாவது முறைகேடு நடப்பதற்கு வழி வகுத்தது போல் ஆகிவிடும் என்பதால், ஸ்கேன் செய்யும் பணிகள் முடிந்தபின், விடைகளை வெளியிட, டி.ஆர்.பி., தீர்மானித்துள்ளது.

>>>வறுமையே உனக்கு வறுமை வராதா: இன்று உலக வறுமை ஒழிப்பு தினம்

உலகில் ஏதாவது ஒரு இடத்தில், வறுமையால் யாராவது பாதிக்கப்பட்டால், அவர்களது மனித உரிமை மீறப்படுகிறது என்கிறார் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோசப் ரெசின்கி. இவர், சிறு வயது முதலே வறுமைக்கு எதிராக போராடினார். இவரது முயற்சியால் தான், உலக வறுமை ஒழிப்பு தினம் 1987 அக்.,17ல் உருவாக்கப்பட்டது. பின் ஐ.நா., சபையால், இத்தினம் அங்கீகரிக்கப்பட்டது. வறுமையை ஒழிக்கவும், அனைவருக்கும் அடிப்படை வசதி கிடைப்பதை உறுதி செய்யவும் நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா., வலியுறுத்துகிறது. "வறுமையால் உருவாகும் வன்முறைக்கு முடிவு: தேவையை பூர்த்தி செய்து அமைதியை உருவாக்குதல்' என்பது இந்தாண்டு மையக் கருத்து.
எது வறுமை:
அனைவருக்கும் சுத்தமான தண்ணீர், சத்தான உணவு, மருத்துவம், வேலை வாய்ப்பு, சுகாதாரம், கல்வி, உடை, இருப்பிடம் கிடைக்க வேண்டும். இவை இல்லாத அனைவரும், வறுமை நிலையில் இருப்பவர்கள் என கருதப்படுகிறார்கள். பட்டினி, வன்முறைக்கு வறுமை வழிவகுக்கிறது.
129 கோடி பேர்:
உலக மக்கள் தொகையில், 129 கோடி பேர் வறுமை நிலையில் வாழ்கின்றனர். இதில் 40 கோடி பேர் இந்தியாவிலும், 17 கோடி பேர் சீனாவிலும் உள்ளனர். இந்தியாவில் 32.7 சதவீதம் பேர், சர்வதேச வறுமைக் கோட்டுக்கும் கீழே வாழ்கின்றனர். 68.7 சதவீதம் பேர், 100 ரூபாய் வருமானத்தில் வாழ்கின்றனர் என 2008ல "உலக வங்கி' நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏன் இந்த இடைவெளி:
வசதி படைத்தோர் - ஏழைகளுக்கு இடையேயான இடைவெளி அதிகரிக்கிறது. வளராத நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, உலகின் முதல் மூன்று பணக்காரர்களின் சொத்து மதிப்பை விட குறைவு. உலக பணக்காரர்களில், 20 சதவீதம் பேர், உலகின் மொத்த வளங்களில் 86 சதவீதத்தை வைத்துள்ளனர். மீதமுள்ள 80 சதவீத மக்களுக்கு கிடைப்பது 14 சதவீதம் மட்டுமே.
அக்கறையின்மை:
ஏழ்மை நிலையில் மக்கள் தள்ளப்படுவதற்கு அரசியல்வாதிகள், ஊழல், லஞ்சம், கல்வியறிவின்மை, வேலை வாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, புதிய தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தாமை போன்ற காரணங்கள் உள்ளன. இருப்பினும், ஏழைகளின் பசியை போக்க எந்த அரசுக்கும் அக்கறை இல்லாததே முக்கிய காரணம். ஆட்சிக்கு வந்தால் அதைத் தருவோம், இதைத் தருவோம் என தேர்தலின் போது அனைத்து கட்சிகளும் வாக்குறுதிகளை அள்ளி விடுகின்றன. ஆனால் ஆட்சியில் அமர்ந்தவுடன், மக்களின் பசியைக்கூட போக்க அவை முன்வருவதில்லை.
என்ன செய்யலாம்:
ஏழைகளை ஒரே நாளில் வசதியானவர்களாக மாற்ற முடியாது. இப்போதிருந்து தொலைநோக்கு திட்டங்களை தீட்டினால், வரும் சந்ததியினரும் வறுமைக் கோட்டில் வசிப்பதை தவிர்க்கலாம். கல்வியறிவே ஒரு நாட்டின் வளர்ச்சியை தீர்மானிக்கிறது. உலகில் 11 கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்வதில்லை என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா, வும், 2015ம் ஆண்டுக்குள், அனைத்து நாடுகளும் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறது. அரசுகளுடன் மக்களும் முயற்சி எடுத்தால், ஏழ்மை நிலையை முடிந்தளவு குறைக்கலாம்.

>>>சுற்றுலா கைடு - ஓர் பயன்மிகு தொழில்துறை

சுற்றுலா கைடு என்பது ஒரு சுவாரஸ்யம் நிறைந்த தொழிலாகும். ஒரு குறிப்பிட்ட இடம் அல்லது நாட்டைப் பற்றிய ஒரு சிறந்த மதிப்பீட்டை, சுற்றுலாப் பயணிகளிடம் உருவாக்கும் ஒரு மாபெரும் பணியை கைடு மேற்கொள்கிறார். சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு, நலன், திருப்தி மற்றும் சந்தோஷம் போன்றவை உறுதிப்படுத்தப்பட வேண்டும். நல்ல தகவல்தொடர்பு திறன், வெளிநாட்டு மொழியில் புலமை மற்றும் பிறரிடம் சகஜமாக பேசிப் பழகும் பாங்கு போன்றவை ஒரு வெற்றிகரமான சுற்றுலா கைடுக்கு தேவையான பண்புகள்.
லைசன்ஸ் அளிக்கப்பட்ட கைடுகளின் வகைகள்
இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகம், போதுமான தகுதிகளை அடைந்த கைடுகளுக்கு, பிராந்திய அடிப்படையில் லைசன்ஸ்களை வழங்குகிறது. மொத்தம் 5 பிராந்தியங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன, அவை, வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு ஆகியவையே. மாநில அளவிலான லைசன்ஸ், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளால் வழங்கப்படுகிறது. இதற்கான விபரங்கள், அந்தந்த மாநில சுற்றுலாத் துறைகளின் இணையதளத்தில் கிடைக்கப்பெறும். பிராந்திய நிலையிலான கைடுகளில்(Regional level guides - RLG) 4 பிரிவினர் உள்ளனர்
1. பொது
முழுநேர அடிப்படையில், தங்களுக்கான பிராந்தியங்களில் இவர்கள் பணிபுரியலாம். இவர்கள், ஆங்கிலத்தில் சரளமாக பேசக்கூடியவர்களாக, பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். அதேநேரத்தில், தங்களின் பள்ளி படிப்பிலும், ஆங்கிலத்தை ஒரு பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டும்.
2. பொது - மொழி அடிப்படையிலான
பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், கொரியன், ரஷ்யன், ஜப்பானீஸ், தாய், அராபிக், ஹங்கேரியன், போலிஷ், ஹீப்ரூ மற்றும் சைனீஸ் போன்ற மொழிகளில் புலமைப்பெற்றவர்கள் இந்தப் பிரிவுக்குள் வருவார்கள். இவர்கள், அவ்வப்போது, சுற்றுலா அமைச்சகத்தால் அடையாளம் காணப்படுவார்கள்.
இவர்கள், ஏதேனும் ஒரு பட்டப் படிப்பை கட்டாயம் முடித்திருக்க வேண்டும் மற்றும் ஆங்கிலம் தவிர்த்த, மேற்கூறிய மொழிகள் ஒன்றில் புலமை பெற்றிருக்க வேண்டும்.
3. நிபுணத்துவ கைடுகள்
சுற்றுலா, இந்திய வரலாறு, கட்டடக்கலை, கலாச்சாரம் மற்றும் வனம் - வனவிலங்குகள் போன்ற சுற்றுலா தொடர்பான துறைகளில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் மற்றும் சிறப்பு படிப்புகளை மேற்கொண்டவர்கள், சிறப்பு பிரிவில் அடங்குவார்கள். நிபுணத்துவ கைடுகள் என்ற பெயரில் அழைக்கப்படும் இவர்கள், ஆங்கிலத்தில் புலமைப் பெற்றிருக்க வேண்டும்.
4. நிபுணத்துவம் - மொழி அடிப்படையிலான
சுற்றுலா தொடர்பான, இந்திய வரலாறு, கட்டடக்கலை, கலாச்சாரம், தொல்லியல் துறை, வனம் - வனவிலங்கு மற்றும் சுற்றுலா ஆகியவை தொடர்பான படிப்புகளில் முனைவர் பட்டம் அல்லது சிறப்பு படிப்பை முடித்தவர்கள் இப்பிரிவில் அடங்குவார்கள்.
வெளிநாட்டு மொழியில், படித்தல், எழுதுதல் மற்றும் பேசுதல் போன்ற அம்சங்களோடு, நல்ல புலமைத்துவம் பெற்றிருக்க வேண்டும்.
தகுதிகள் மற்றும் பணியிடங்கள்
மேற்கூறிய சுற்றுலா கைடுகள் பிரிவுகளில் ஒருவர் தேர்வு பெற்றிட, முதல் மீடியா விளம்பரம் கொடுக்கப்படும் தேதி பிரகாரம், 20 வயதுடையவராக இருத்தல் வேண்டும். பல்வேறு நாடுகளிலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வருகை மற்றும் அதற்கு தேவைப்படும் கைடு பணிநிலைகள் ஆகியவற்றின் அடிப்படையில், சுற்றுலா கைடுகளின் தேவை அளவிடப்படும். இந்தப் பணியானது, 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை அரசால் நடத்தப்படும்.
தேர்வாதல்
கைடுகளை தேர்வு செய்யும் செயல்பாடானது, சுற்றுலா மற்றும் பயண மேலாண்மைக்கான இந்திய கல்வி நிறுவனம்(IITTM) அல்லது சுற்றுலா அமைச்சகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேறு ஏதேனும் அமைப்பைக் கொண்டு நடத்தப்பெறும். ஒருவர் தேர்வு பெற்றவுடன், அவருக்கு IITTM -ல் பயிற்சியளிக்கப்படும்.
பிராந்திய வாரியாக, பயிற்சிக்காக, எத்தனை இடங்கள் காலியாக இருக்கின்றன என்பதைக் குறிப்பிட்டு கொடுக்கப்படும் விளம்பரங்கள் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்படும். 3 மணிநேரம் நடத்தப்படும் நுழைவுத் தேர்வின் மூலமாக, பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் ஒருவரின் பொது நுண்ணறிவுத் திறன் மற்றும் தகுதி பரிசோதிக்கப்படும்.
மொத்தம் 300 மதிப்பெண்களில், குறைந்தபட்சம் 150 மதிப்பெண்கள் பெற வேண்டும்.
பயிற்சிக்காக அறிவிக்கப்பட்ட இடங்கள், நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பப்படும்.
பயிற்சி மற்றும் லைசன்ஸ் பெறுதல்
குவாலியர், புவனேஷ்வர், டெல்லி, கோவா மற்றும் நெல்லூர் போன்ற இடங்களில் அமைந்துள்ள IITTM -ன் வளாகங்களில், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்திய ஆர்கியாலஜிகல் சர்வே ஆப் இந்தியாவின் இடங்களில் களப் பயிற்சி மற்றும் வகுப்பறை பயிற்சிகள் இத்திட்டத்தில் இடம்பெறும்.
பொது மற்றும் பொது(மொழி அடிப்படையிலான) வகையினருக்கு 26 வாரங்களும், நிபுணத்துவம் மற்றும் நிபுணத்துவம்(மொழி அடிப்படையிலான) வகையினருக்கு 13 வாரங்களும் பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சி முடித்த அனைவரும், இன்னொரு பெரிய படிநிலையைக் கடக்க வேண்டும். எழுத்துத் தேர்வு மற்றும் Viva voce போன்ற அம்சங்களைக் கொண்ட அடுத்தக்கட்ட தேர்வானது, ஒருவரின் வழிகாட்டும் திறன், பாரம்பரிய சின்னங்கள் மற்றும் இடங்களைப் பற்றிய அறிவு, தகவல் தொடர்பு திறன் மற்றும் வெளிநாட்டு மொழியில் அவரின் புலமை(தேவையான இடங்களில்) போன்றவை இவைகளின் மூலம் அளவிடப்படும்.
இந்த இறுதித் தேர்வை ஒருவர் எழுத, வகுப்பறை மற்றும் களப்பயிற்சியில், குறைந்தது 80% வருகைப்பதிவை பெற்றிருக்க வேண்டும். அனைத்தையும் வெற்றிகரமாக முடித்தப்பின்னர், இந்திய அரசின், பிராந்திய இந்திய சுற்றுலா அலுவலகத்தால், பிராந்திய நிலையிலான கைடு லைசன்ஸ் வழங்கப்படும்.
இந்த லைசன்ஸ் 3 வருடங்களுக்கு செல்லும். பின்னர், Refresher courses முடித்து இதை புதுப்பித்துக் கொள்ளலாம்.
வெளிநாட்டு மொழியில் புலமை
கைடு படிப்பை வெற்றிகரமாக முடிக்க, இந்தப் புலமையானது அவசியமான ஒன்று. ஆங்கிலத்தில் தடுமாற்றம் உள்ளவர்கள், பிரட்டிஷ் கவுன்சில் நடத்தும் மொழித்திறன் படிப்புகளில் பங்கேற்று, தங்களின் மொழியறிவை வளர்த்துக் கொள்ளலாம். மேலும், பிற வெளிநாட்டு மொழிகளைப் படிக்க, தனியார் நிறுவனங்களை அணுகலாம்.
அவை, இதுதொடர்பான பயிற்சிகளை வழங்குகின்றன. வெளிநாட்டு மொழிகளைப் படிப்பவர்கள், சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதரகங்கள் நடத்தும் மொழி படிப்புகளில் சேர்ந்து பயிற்சி பெறுவதே சிறந்தது. ஏனெனில், இதன் மதிப்பு அதிகம்.
சுற்றுலா ஆபரேட்டர்கள் மற்றும்
அதிகளவிலான வாய்ப்புகள் இதுபோன்ற ஆபரேட்டர்களிடமிருந்தே வருகின்றன. Cox and kings, Thomas cook, Le passage to India tours and travels, Kuoni travels, Abercrombie, Kent India and SITA tour and travels போன்றவை, முன்னணி சுற்றுலா ஆபரேட்டர் நிறுவனங்களாகும். இவை பெரும்பாலும், சர்வதேச விமானங்கள் அதிகம் வரும் மும்பை மற்றும் டெல்லியை அடிப்படையாக கொண்டவை.
சம்பளம்
சுற்றுலா தொழில் துறையில் நல்ல அறிமுகம் பெற்ற ஒருவர் லைசன்ஸ் பெற்ற கைடு, வருடத்திற்கு ரூ.4 முதல் ரூ.7 லட்சம் வரை சம்பாதிக்கிறார். மேலும், வருவாயானது, ஒருவர் எந்த மொழியில் புலமை பெற்றிருக்கிறார் என்பதைப் பொறுத்தும் மாறுபடுகிறது.
ஆங்கிலம் மட்டுமே நன்கு அறிந்த ஒருவர், ஒரு நாளைக்கு ரூ.2,500 பெறுகிறார். ஆங்கிலம் தவிர்த்த பிற வெளிநாட்டு மொழிகளில் பணிபுரியும் ஒருவர், ஒரு நாளைக்கு ரூ.3,000 வரை பெறுகிறார்.
முக்கிய அறிவுரை
சுற்றுலா ஆபரேட்டர்களின் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கையாளும்போது, கவனமாகவும், பொறுமையாகவும் இருக்க வேண்டும். ஏனெனில், இவர்கள் உங்களைப் பற்றி தரும் Feedback -கள்தான், உங்களுக்கான எதிர்கால வாய்ப்புகளை அதிகரித்து, அதிக வருமானத்திற்கு வழிவகுக்கும்.

>>>அக்டோபர் 17 [October 17]....

  • உலக வறுமை ஒழிப்பு தினம்
  • கவிஞர் கண்ணதாசன் இறந்த தினம்(1981)
  • அன்னை தெரசா அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்(1979)
  • போட்ஸ்வானா மற்றும் லிசோதோ ஆகியன ஐநாவில் இணைந்தன(1966)

>>>Letter No.48211, Dt:09-10-2012 - Tamil Nadu Revised Scales of Pay Rules, 2009 – Fixation of pay of employees on promotion to higher post carrying identical scales of pay and grade pay-clarification

>>>புதிய விதிகளுக்கு எதிர்ப்பு : தனியார் பள்ளி வாகனங்கள் ஒரு நாள் "ஸ்டிரைக்'

பள்ளி வாகனங்களுக்கான, புதிய விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, 19 ஆயிரம், தனியார் பள்ளி வாகனங்கள், ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன. சென்னை சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி சுருதி, ஜூலை, 25ம் தேதி பள்ளி பஸ்சில் இருந்த, ஓட்டை வழியாக விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து, பள்ளி வாகனங்களுக்கான புதிய விதிமுறைகளை, செப்., 3ம் தேதி, தமிழக அரசு ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது. அதில், பள்ளி மாணவர்களை அழைத்து செல்லும் உதவியாளர் நடத்துனருக்கான உரிமம் வைத்திருக்க வேண்டும்; ஓட்டுனர் பகுதி, தனி கேபினாக பிரிக்கப்பட வேண்டும்; மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பள்ளி வாகனங்களுக்கு தகுதிச் சான்று பெற வேண்டும் உட்பட, 22க்கும் மேற்பட்ட விதிமுறைகள் இடம்பெற்றன. இந்த புதிய விதிமுறைகளில், உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, செப்., 26ம் தேதி அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டது. இதையடுத்து, இம்மாதம், 1ம்தேதி முதல், நடைமுறைக்கு வந்தது. புதிய விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, 19 ஆயிரம் தனியார் பள்ளி வாகனங்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் சங்கம் அறிவித்துள்ளது.
வழக்கு தொடர முடிவு : தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் சங்கத்தின் பொதுச் செயலர் நந்தகுமார் கூறியதாவது: மாநிலம் முழுவதும், 19 ஆயிரம் பள்ளி வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இவை உரிய அனுமதி பெற்றவை. பள்ளி வாகனங்களுக்கான, புதிய விதிகளை, தனியார் பள்ளிகள் உடனே அமல்படுத்த வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது. வாகன உதவியாளர் நடத்துனருக்கான உரிமம் வைத்திருக்க வேண்டும்; மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பள்ளி வாகனங்களுக்கு தகுதிச் சான்று பெற வேண்டும் என்பன உள்ளிட்ட, ஆறு விதிகளை செயல்படுத்துவதில் சிரமம் உள்ளது.
வேலை நிறுத்தம் : இப்புதிய விதிகளை செயல்படுத்த, கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும். ஒரு சில விதிகளுக்கு தடைகோரி, ஐகோர்ட்டில் வழக்கு தொடர உள்ளோம். ஒரு சில விதிகளை தளர்த்த அரசிடம் வலியுறுத்தியும், அதை ஏற்கவில்லை. இப்புதிய விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நவ., 19ம் தேதி, அனைத்து பள்ளி வாகனங்களும், ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...