கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>நான் ஒரு மருத்துவ தூதர்: மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு

"டெங்கு' காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த, பள்ளி மாணவர்களை "மருத்துவ தூதராக' மாநகராட்சி அனுப்பி வருகிறது.சென்னையில் "டெங்கு' காய்ச்சலால், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொசு ஒழிப்பு குறித்து, பள்ளி மாணவர்கள் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மாநகராட்சி ஈடுபட்டுள்ளது."மருத்துவ தூதர்'மண்டல சுகாதார அதிகாரிகளால், பள்ளி மாணவர்கள் அனைவருக்கும், ஒரு அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. அதில், "என் வீட்டிற்கும் தெருவுக்கும், நான் ஒரு மருத்துவ தூதர்' எனவும், மாணவ, மாணவியர் பெயர், படிக்கும் வகுப்பு, பள்ளியின் பெயர் போன்ற விவரங்களும், குறிப்பிடப்பட்டுள்ளன.தூய்மையான நீரில்...அட்டையின் மறுபக்கம், ஆட்டுக்கல், தேங்காய்ஓடு, வாழை மரம், டயர், வாளி, குளிர் சாதனங்கள், திறந்த கிணறு, திறந்த மேல்நிலை தொட்டி, பூந்தொட்டி, அடைபட்ட மாடிகள், பிளாஸ்டிக் கப் போன்ற படங்கள் அடங்கிய வாசகத்துடன் அட்டை உள்ளது. மேலும், இந்த பொருட்களில் தேங்கி நிற்கும், தூய்மையான நீரில் இருந்து, கொசு உற்பத்தியாகி, "டெங்கு' உள்ளிட்ட நோய்கள் பரவுகிறது என, குறிப்பிடப்பட்டுள்ளது.இது குறித்து மண்டல நல அலுவலர் ஒருவர் கூறியதாவது:கொசு ஒழிப்பு குறித்து, தங்கள் வீட்டுக்கு மட்டுமில்லாமல், தெருவில் உள்ள அனைவருக்கும் மாணவ, மாணவியரை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

>>>மாணவர்களுக்கு விலையில்லா பொருட்கள் - பள்ளிகளிடம் வசூல் புகார்

மாணவர்களுக்கு விலையில்லா பொருட்கள் வழங்க பள்ளிகளிடம் கட்டணம் வசூல் செய்வதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு மாணவர்களுக்கு பல்வேறு விலையில்லா பொருட்களை வழங்கி வருகிறது. ஆனால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இந்த பொருட்களை வழங்க பள்ளிகளிடமிருந்து  கெடுபிடி வசூல் செய்து வருவதாக புகார் கூறப்படுகிறது. இதனால் ஆசிரிய, ஆசிரியைகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் வள்ளியூர் உட்பட ஒரு சில தொடக்க கல்வி அலுவலகங்களில் இருந்து பள்ளி மாணவர்களுக்கு அரசு வழங்குகின்ற விலையில்லா பொருட்களான புத்தகம், குறிப்பேடு மற்றும் சீருடை போன்றவற்றை பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் வினியோகம் செய்த போது இரு பருவங்களுக்கும் சேர்த்து துவக்கப் பள்ளிக்கு 300 ரூபாய், நடுநிலைப் பள்ளிக்கு 500 ரூபாய் வீதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. விலையில்லா பொருட்கள் வினியோகத்ற்கு தேவையான நிதியை அரசு ஒதுக்கியுள்ள நிலையில் சில அதிகாரிகள் ஆசிரியர்களிடம் கெடுபிடி வசூல் செய்து வருவது கண்டிக்கதக்கது. எனவே, அரசின் விலையில்லா பொருட்களை வழங்க கட்டாய வசூல் செய்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகையை உடனடியாக திரும்ப வழங்க வேண்டும். இவ்வாறு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

>>>300 பள்ளிகளில் மின் இணைப்பு "கட்' : "பில்' கட்ட ரெடி; தொகை தெரியவில்லை

மதுரை மாவட்டத்தில், 300 பள்ளிகளில், துண்டிக்கப்பட்ட மின் இணைப்புக்களை மீண்டும் பெற, "பில்' தொகை விவரங்களை பெற முடியாமல், கல்வி துறையினர் தவிக்கின்றனர். இம்மாவட்டத்தில், 16 ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில், 300 தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில், 2009ல் இருந்து, மின் கட்டணம் செலுத்தப்படவில்லை. பல லட்ச ரூபாய் நிலுவையானதால், மின்வாரியம், 2012, ஜனவரியில், பள்ளிகளின் இணைப்புக்களை துண்டித்தது. மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் மேலமடை, ஒத்தக்கடை உட்பட, 50 பள்ளிகள் மூலம், அதிகபட்சம், 5 லட்சம் வரை நிலுவை உள்ளது. இப்பள்ளிகளில், 2009ல் இருந்து மின்சாரம் இல்லாததால், கோடையில் மின்விசிறி, குளிர் காலத்தில் லைட் வசதி இன்றி, மாணவர்கள் கல்வி கற்கின்றனர். அரசு வழங்கிய, டி.வி.டி., கம்ப்யூட்டர், "டிவி' ஆகியவற்றை இயக்க முடியாமலும், மூலம் ஆங்கிலம் கற்றல் போன்ற, "கணினி வழி கற்றல்' திட்ட உபகரணமும், காட்சி பொருட்களாக உள்ளன.
கல்வித்துறை உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு இப்பிரச்னையை, ஆசிரியர் சங்கங்கள் எடுத்துச் சென்றன. பள்ளிகள் வாரியாக, மொத்த நிலுவை தொகை விவரம் தெரிவித்தால், அதற்கான நிதியை ஒதுக்குவதாக, தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால், மொத்த, "பில்' விவரத்தை தெரிவிக்க, மின் வாரிய அதிகாரிகள் இழுத்தடிப்பதாக, புகார் எழுந்துள்ளது. தலைமையாசிரியர்கள் கூறுகையில், " பள்ளி செயல்படும் பகுதிக்கு உட்பட்ட மின்வாரிய அலுவலகத்தில், மொத்த, பில் குறித்த தகவல் கேட்டால், ஓராண்டுக்கு மேல், பணம் கட்டாததால், அந்த தகவல் இல்லை. உயர் அதிகாரிகளிடம் கேட்டு பெறுங்கள் எனக் கூறி விடுகின்றனர்' என்றனர். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சுபாஷினி, ""இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பேசப்படும்,'' என்றார்.

எதிர்பார்ப்பு : தமிழகத்தில், 2009க்கு முன், பள்ளிகளுக்கு மின் கட்டணத்தை, அந்தந்த ஊராட்சி நிர்வாகம் செலுத்தியது. தி.மு.க., ஆட்சியில் ஸ்டாலின் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த போது, பள்ளிகளுக்கு, அரசே மின் கட்டணத்தை செலுத்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்போது இருந்தே, அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு மின் கட்டணம் செலுத்தும் பிரச்னை உள்ளது. பழைய முறைப்படி, பள்ளிகளுக்கான மின் கட்டணத்தை, ஊராட்சிகள் கட்ட வேண்டும் என, ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

>>>மாணவர்களை வரவேற்கும் பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டு கல்வி அமைப்பானது, முறைப்படுத்தப்பட்ட மற்றும் பணி வாய்ப்புகளை பெறுவதற்குரிய படிப்புகளை, பிரெஞ்சு மற்றும் ஆங்கில மொழிகளில் வழங்குகிறது.
முக்கிய சிறப்பம்சங்கள்
* உலகப்புகழ் பெற்ற பல்கலைக்கழகங்கள்
* பலதரப்பட்ட படிப்புகள் மற்றும் பாடத்திட்டங்கள்
* பிரான்ஸ் நாட்டின் பொதுத்துறை கல்வி நிறுவனங்களுக்கு,
* அந்நாட்டு அரசு அளிக்கும் உயர்ந்தபட்ச மானியங்கள்
* 3500க்கும் மேற்பட்ட உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் நெட்வொர்க்.
பிரான்ஸ் நாட்டில் பலதரப்பட்ட துறைசார்ந்த படிப்புகள் வழங்கப்பட்டாலும், பொறியியல், மேலாண்மை, மொழி மற்றும் கலாச்சாரம், வணிகம், பேஷன், சுற்றுலா மற்றும் ஹாஸ்பிடாலிடி போன்ற துறைசார்ந்த படிப்புகளே, அதிகளவிலான வெளிநாட்டு மாணவர்களால் விரும்பப்படுகின்றன.
நிதி சார்ந்த ஆதரவு மற்றும் உதவிகள்
ஒவ்வொரு ஆண்டும், பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம், இந்தியாவிலுள்ள பிரெஞ்சு இன்ஸ்டிட்யூட் மூலமாக, இந்தியாவைச் சேர்ந்த இளநிலை முதல் பி.எச்டி நிலை வரையிலான மாணவர்களுக்கு, 100 உதவித்தொகைகள் வரை வழங்குகிறது. மாணவர்கள், தாங்கள் விரும்பும் கல்வி நிறுவனத்தின் உதவித்தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம்.
வகுப்பறை அனுபவம்
பிரான்ஸ் நாட்டு கல்வியமைப்பானது, தியரி மற்றும் நடைமுறை அனுபவம் ஆகிய 2 விஷயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது. அதிகபட்ச முறைப்படுத்தப்பட்ட கற்பித்தலானது, நாடு முழுவதுமுள்ள கல்வி நிறுவனங்களால் பின்பற்றப்படுகிறது.
இந்நாட்டு கல்வி நிறுவனங்களில் சேரும் வெளிநாட்டு மாணவர்கள், தங்களின் படிப்பை எந்த சிக்கலுமின்றி வெற்றிகரமாக முடிக்க, வருகைப் பதிவு மற்றும் தேர்வு செயல்பாடுகளில் கவனம் செலுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Case studies, Internships and Presentations போன்றவை, பிரான்ஸ் நாட்டின் உயர்கல்வி வகுப்பறைகளில் முக்கியமான அம்சங்கள். மேலும், ஆசிரியர்கள் மற்றும் சர்வதேச ஒருங்கிணைப்பாளர்களுடன், உரையாடும்படி, சர்வதேச மாணவர்கள் ஊக்கமளிக்கப்படுகிறார்கள்.
படித்து அனுபவம் பெறுக...
பிரான்சில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், தங்களுக்கான நிதி உதவியாக, உதவித்தொகை என்ற அம்சம் தவிர்த்து, பகுதிநேரமாக பணிபுரிந்தும், தேவையான நிதி ஆதாரங்களைப் பெறலாம். மேலும், தேசிய மாணவர் நலத் திட்டத்தில் இணைந்த கல்வி நிறுவனங்களில் சேரும் வெளிநாட்டு மாணவர்களுக்கு, படிப்பின்போது, பகுதிநேரமாக பணிபுரியும் உரிமை அளிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் படிப்பை பற்றிய மேலதிக விபரங்களுக்கு http://www.campusfrance.org/fr/ என்ற வலைத்தளம் செல்க.

>>>பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பிலும் புகார் பெட்டி : கல்வி துறைக்கு, தேசிய ஆணையம் உத்தரவு

"அனைத்து வகை பள்ளிகளிலும், ஒவ்வொரு வகுப்பிலும், புகார் பெட்டி அமைக்க, கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, தேசிய குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணைய தலைவர், சாந்தா சின்கா உத்தரவிட்டார். இந்த ஆணையத்தின் சார்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நிகழ்ந்த குழந்தை உரிமை மீறல்கள் குறித்த, இரண்டு நாள் பொது விசாரணை, சென்னையில் நேற்று துவங்கியது. இதற்காக, குழந்தை உரிமை மீறல் சம்பவங்களில் பாதிக்கப்பட்டோர், விசாரணை செய்த போலீசார், கல்வித்துறை அதி காரிகள் உள்ளிட்ட பலதுறையைச் சேர்ந்த அதிகாரிகள், பொது விசாரணையில் ஆஜராக வேண்டும் என, தேசிய கமிஷன் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, பல்வேறு துறையைச் சேர்ந்த அதிகாரிகள், விசாரணைக்கு வந்தனர். கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா, பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன், தொடக்க கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும், கூட்டத்திற்கு வந்திருந்தனர்.
62 உரிமை மீறல்கள் : இரு மாநிலங்களிலும் நிகழ்ந்த, 62 உரிமை மீறல்கள் குறித்த சம்பவங்கள், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், கல்வி உரிமை மறுத்தல், குழந்தை தொழிலாளர், உடல் ரீதியான தண்டனை அளித்தது, குழந்தை கடத்தல், பாலியல் கொடுமைகள் என, பல்வேறு உரிமை மீறல் சம்பவங்கள் இடம் பெற்றிருந்தன. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா, செத்தவரை கிராமத்தைச் சேர்ந்த, 13 வயது சிறுமி, கடந்த ஏப்ரல் மாதம், அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவரால், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து, விசாரணை நடந்தது. பாதிக்கப்பட்ட சிறுமி, பேச முடியாமல் அழுததைக் கண்டு, பார்வையாளர்கள் கடும் வேதனை அடைந்தனர்.
மிரட்டல் புகார் : "போலீசார் சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை; உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து, உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கவில்லை' என, சிறுமியின் தாய் குற்றம் சாட்டினார்; மேலும், தங்களுக்கு, தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாகவும் தெரிவித்தார். இதற்கு டி.எஸ்.பி., அளித்த பதில் திருப்தி அளிக்காததால், ""பாதிக்கப்பட்ட சிறுமிக்கென தனியாக வக்கீலை நியமித்து, அவருக்கு உரிய நீதி கிடைக்க, காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, சாந்தா சின்கா உத்தரவிட்டார். மேலும், ""சிறுமி விரும்பும் பள்ளியில், கல்வியைத் தொடர, கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிக்கு, 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, அவர் தெரிவித்தார். பள்ளிக் கல்வித்துறை செயலர் சபிதா பேசுகையில், ""சிறுமி, எந்தப் பள்ளியில் சேர விரும்பினாலும், அந்தப் பள்ளியில் சேர்ப்பதற்கு, அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்,'' என்றார்.
புகார்பெட்டி : இரண்டாவதாக, சென்னை, வெட்டுவாங்கேணியைச் சேர்ந்த, 11 வயது சிறுமி, அருகில் உள்ள செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் (அரசு உதவிபெறும் பள்ளி) படித்து, பள்ளி ஆசிரியையின் கொடுமைக்கு ஆளாகி, ஜூனில், "கெரசின்' ஊற்றி தீ வைத்து, தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக, பள்ளி நிர்வாகத்தின் செயல்பாடுகளை, சாந்தா சின்காவும், முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவியும், கடுமையாக கண்டித்தனர். மாணவியரை ஆசிரியை கொடுமைப்படுத்தியது குறித்து, தங்களுக்கு எதுவும் தெரியாது என, பள்ளி தாளாளர் தெரிவித்தார். இதற்கு, ""பள்ளியில் நடப்பது எதுவுமே தெரியாமல், எப்படி ஒரு நிர்வாகம் இருக்க முடியும்? மாணவியரிடம், குறைகளை கேட்டறியும் வழக்கத்தை கடைபிடித்தீர்களா?'' என, பல்வேறு கேள்விகளை, வசந்திதேவி கேட்டார். இதையடுத்து, ஆணைய தலைவர் சாந்தா சின்கா கூறியதாவது: சம்பந்தபட்ட பள்ளி மட்டுமில்லாமல், அனைத்து வகை பள்ளிகளிலும், ஒவ்வொரு வகுப்பிலும், புகார் பெட்டி அமைப்பதற்கு, கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவ, மாணவியரிடம், முறையாக குறைகளை கேட்டறிந்து, அதை நிவர்த்தி செய்ய, பள்ளி நிர்வாகங்களும், கல்வித்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சாந்ததின்கா தெரிவித்தார்.

>>>"தமிழகத்தில் 46% பள்ளிகளில் கழிப்பிட வசதியில்லை"

அடிப்படை சுகாதார வசதிகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கென தனித்தனி கழிப்பிட வசதி இல்லாத காரணத்தால், பொருளாதார நிலையில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகள், பள்ளிப் படிப்பை தொடருவதற்கு தயக்கம் காட்டுவது, தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சைல்டு ரைட்ஸ் அண்டு யூ (Child Rights and You) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்திய இந்த ஆய்வில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த சென்னையில் உள்ள 100 குடும்பங்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. இவர்களில் 94 சதவிகிதம் பேர், போதிய சுகாதார வசதி இல்லாத காரணத்தினால், தங்களின் பெண் குழந்தைகளை, பள்ளிகளில் இருந்து நிறுத்தி விடுவதாக கூறினர். இதே நிறுவனம், டெல்லி, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு முன்னணி நகரங்களிலும் ஆய்வை நடத்தியது. தமிழகத்தில் செயல்படும் 46% பள்ளிகளில் முறையான கழிப்பிட வசதி இல்லை என்பதும் இந்த நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லாதது, பெண் ஆசிரியர்கள் பற்றாக்குறை, இளம் வயதிலேயே திருமணம் போன்ற பல்வேறு காரணங்களால், மாணவிகளின் எண்ணிக்கை சரிந்து வருவதாக அந்த ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டியுள்ளன. இந்த ஆய்வில் சென்னையைச் சேர்ந்த பெற்றோர் பலருக்கு, கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ், மாணவிகளுக்கு முறையான, சுகாதாரமான கழிப்பிட வசதியை பள்ளிகள் செய்து தர வேண்டும் என்ற விதிமுறை தெரிந்திருக்கவில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 85% பெற்றோருக்கு கட்டாயக் கல்விச் சட்டம் என்ற சட்டம் இருப்பதே தெரியவில்லை.

>>>அக்., 19, 20 ல் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு ஆன் லைன் கவுன்சிலிங்

உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு ஆன் லைன் கவுன்சிலிங், அக்., 19, 20ம் தேதிகளில் நடக்கவுள்ளதாக, பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்றும் 430 பட்டதாரி ஆசிரியர்களுக்கு, உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு வழங்கப்படவுள்ளது. இதற்கான ஆன் லைன் கவுன்சிலிங், அக்., 19, 20 ம் தேதிகளில் நடக்கவுள்ளது. பதவி மூப்பு அடிப்படையில், எண்கள் வழங்கப்பட்டுள்ளன. அக்., 19 காலை 9 முதல் 12.30 மணி வரை, 967 முதல் 1116 எண் உள்ளவர்களுக்கும், பிற்பகல் 1.30 முதல் மாலை 5 மணி வரை, 1117 முதல் 1216 வரை எண் உள்ளவர்களுக்கும் நடக்கிறது. அக்., 20 காலை 9 முதல் மதியம் 12.30 மணி வரை, 1217 முதல் 1366 வரை எண் உள்ளவர்களுக்கும், பிற்பகல் 1.30 முதல் மாலை 5 மணி வரை, 1367 முதல் 1466 வரை எண் உள்ளவர்களுக்கும் நடக்கவுள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...