கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>மாணவனின் சம்பளம் 70 லட்சம்

கேரளாவில் உள்ள கோழிக்கோடு என்.ஐ.டி., கல்லுõரியில் படிக்கும் திஜூ ஜோஸ் என்ற எம்.டெக்., மாணவர், ஆண்டுக்கு 70 லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு தேர்வாகியுள்ளார். கேரளாவில் இதுவரை எந்த இன்ஜினியரிங் மாணவரும், இவ்வளவு பெரிய சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்ததில்லை. இவர்தான் முதல் முறையாக சாதித்துக் காட்டியுள்ளார். இதற்குமுன் 22 லட்சம் ரூபாய் என்பதே சாதனையாக இருந்தது. கல்லூரியில் நடந்த வளாகத் தேர்வில் கூகுள் நிறுவனம், அமெரிக்காவின் கலிபோர்னியா அலுவலகத்துக்கு இம்மாணவனை தேர்வு செய்துள்ளது. இன்னும், இம்மாணவருக்கு ஓராண்டு படிப்பு பாக்கி உள்ளது. இதன் பின் 2013 அக்., மாதத்தில் பணியில் சேர இருப்பதாக அம்மாணவர் தெரிவித்துள்ளார்.

>>>மாணவர்கள் பின்பற்ற வேண்டிய 10 கட்டளைகள் அறிமுகம்

மாணவர்கள் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய 10 கட்டளைகள் குறித்து வாழ்வியல் திறன் விளக்கம் தர அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி 9ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளில் மாணவ, மாணவிகளுக்கு வாழ்வியல் திறன் கல்வி பயிற்சி என்ற தலைப்பில், 10 கட்டளைகள் விளக்கம் தரப்படுகிறது. மாணவர்களுக்கு விளக்கம் தர, ஆசிரியர்களுக்கு பயிற்சி தரப்படுகிறது.
10 கட்டளைகள்: தன்னை பிறர் நிலையில் வைத்து பார்த்தல், பிரச்னைகளை சமாளிக்கும் திறன், உறவு முறையை வலுப்படுத்தும் திறன், படைப்பாற்றல் திறன், கூர்சிந்தனை திறன், மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் திறன், உணவுர்களை கையாளும் திறன், தன்னை அறிதல், முடிவெடுக்கும் திறன், தகவல் தொடர்பு திறன்.
பயிற்சி வகுப்புகளில் மேற்கூறிய இந்த 10 கட்டளைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

>>>பொறியியல் கலந்தாய்வில் 5 மாணவர்கள் பங்கேற்பு

உச்ச நீதிமன்ற உத்தரவுப் படி ஒ.சி. பிரிவு மாணவர்களுக்கு அண்ணா பல்கலையில், நடந்த பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வில், வெறும் ஐந்து மாணவர்கள் மட்டுமே பங்கேற்றனர். கடிதம் அனுப்பப்பட்டிருந்த மேலும் 822 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. தமிழகத்தில், அரசு வேலை வாய்ப்பு மற்றும் கல்வி சேர்க்கையில், 69 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. இதில், ஓ.சி., பிரிவில், 31 சதவீதம் மட்டும் வழங்கப்படுகிறது. ஆனால், இப்பிரிவினருக்கு, 50 சதவீதம் வழங்க வேண்டும் என்பது, சுப்ரீம் கோர்ட் உத்தரவு. மீதமுள்ள, 19 சதவீத இடங்களை கூடுதலாக ஏற்படுத்தி, அதனை நிரப்ப, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட், சமீபத்தில் உத்தரவிட்டது. அதன்படி, 827 பேருக்கு, கலந்தாய்வு கடிதங்களை, அண்ணா பல்கலை அனுப்பியது. நேற்று நடந்த கலந்தாய்விற்கு, வெறும் ஐந்து மாணவர் மட்டுமே வந்தனர்; 822 பேர் வரவில்லை. வந்த ஐந்து பேரும், கிண்டி பொறியியல் கல்லூரி மற்றும் மதுரை தியாகராயர் கல்லூரியில், ஏற்கனவே பொறியியலில் சேர்ந்து படித்து வருகின்றனர். இவர்கள், பாடப் பிரிவுகளை மட்டும் மாற்றிக் கொண்டதாக, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன. கலந்தாய்வு கடிதங்களை பெற்ற மாணவ, மாணவியர், ஏற்கனவே நல்ல கல்லூரிகளில், விரும்பிய பாடப் பிரிவுகளில் சேர்ந்து விட்டதால், அவர்கள் கலந்தாய்வுக்கு வரவில்லை எனவும், பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன.

>>>ஆசிரியர் பணி நியமனம்: மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை

உடற்பயிற்சி, ஓவிய ஆசிரியர் பணி நியமனத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான, 3 சதவீத இடஒதுக்கீடு, பின்பற்றப்படாததால், ஆசிரியர் பணி நியமனத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என, மாற்றுத்திறனாளி நல அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதுகுறித்து, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க நிர்வாகிகள் கூறியதாவது: தமிழகம் முழுவதிலும், பல்வேறு பள்ளிகளில் காலியாக உள்ள, உடற்பயிற்சி மற்றும் ஓவிய ஆசிரியர் பணியிடங்களுக்கு, 1,400 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், முன்னுரிமை விதிகள் கடைபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலின் படி, ஒரு மாற்றுத்திறனாளிக்கு கூட முன்னுரிமை வழங்கவில்லை என்பது தெளிவாகிறது. எனவே, இப்பணிகளுக்கு ஏற்ற மாற்றுத் திறனாளிகள் யாரும் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிந்திருக்கவில்லை என்றால், அத்தகவல் வெளிப்படையாக தெரிவிக்கப்பட வேண்டும் . அதுமட்டுமின்றி, மாற்றுத்திறனாளிகளுக்கு, சட்டப்படி, 3 சதவீத ஒதுக்கீடு அளித்த பின், பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும். அது வரையில், ஆசிரியர் பணி நியமனத்தை நிறுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

>>>முதுகலை ஆசிரியர் தேர்வு: நவ. 15க்குள் புதிய பட்டியல்

முதுகலை ஆசிரியர் தேர்வுக்காக, 3,219 பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி, 32 மாவட்டங்களிலும், நேற்று துவங்கியது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியரை நியமனம் செய்ய, ஜூலையில் போட்டித் தேர்வை நடத்தி, தேர்வுப் பட்டியலையும், டி.ஆர்.பி., வெளியிட்டது. 23 கேள்விகளுக்கான விடைகளில் குளறுபடி ஏற்பட்டதால், சிலர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். தேர்வுப் பட்டியலை ரத்து செய்ய உத்தரவிட்ட ஐகோர்ட், குளறுபடியான கேள்விகளுக்கு, உரிய மதிப்பெண்களை வழங்கி, அதன் அடிப்படையில், புதிய தேர்வு பட்டியலை தயாரித்து வெளியிட உத்தரவிட்டது. அதன்படி, புதிய பட்டியலை தயாரிக்க, கூடுதலாக, 3,219 பேருக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு செய்யும் பணி, 32 மாவட்டங்களிலும் நேற்று துவங்கியது. இன்றும், தொடர்ந்து, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. நவம்பர் 15ம் தேதிக்குள், புதிய தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

>>>4ம் தேதி குரூப்-2 தேர்வு: 6.5 லட்சம் பேர் பங்கேற்பு

நவம்பர் 4ம் தேதி நடக்கும் குரூப்-2 தேர்வை தமிழகம் முழுவதும் சுமார் 6.5 லட்சம் பேர் எழுதுகின்றனர். இந்த தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், டி.என்.பி.எஸ்.சி., செய்து முடித்துள்ளது. நகராட்சி கமிஷனர், சார்-பதிவாளர், உதவி வணிகவரி அலுவலர் உள்ளிட்ட, குரூப்-2 நிலையில், 3,687 காலி பணியிடங்களை நிரப்ப, ஆகஸ்ட் 12ல், தேர்வு நடந்தது. இதில், 6.5 லட்சம் பேர் பங்கேற்றனர்.  அத்தேர்வு கேள்வித்தாள், முன்கூட்டியே, "லீக்" ஆனதால், தேர்வு ரத்து செய்யப்பட்டு, நவம்பர் 4ல், மறுதேர்வு நடக்கும் என  தேர்வாணையம் அறிவித்தது. அதன்படி, 4ம் தேதி நடக்கும் மறுதேர்வில், ஏற்கனவே பதிவு செய்த, 6.5 லட்சம் பேரும் பங்கேற்கின்றனர். இவர்களுக்கான, "ஹால் டிக்கெட்&', தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள், இணையதளத்தில் இருந்து, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து வருகின்றனர். மாநிலம் முழுவதும், 3,456 மையங்களில், தேர்வு நடக்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக, தேர்வாணைய தலைவர் நடராஜ் தெரிவித்தார். வழக்கம் போல், அனைத்து தேர்வு மையங்களிலும், வீடியோ கண்காணிப்பு இருக்கும் எனவும், அவர் தெரிவித்தார்.

>>>பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு: சனிக்கிழமைகளில் நடக்குமா?

நீலம் புயல் இன்று கரையை கடக்கும் போது, கனமழை பெய்யும் என்பதால், அரியலூர், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், திருவாரூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து விடுமுறை அறிவிக்கப்பட்டு வருவதால், கல்வித்துறை நிர்ணயித்தபடி, நவம்பருக்குள், அரையாண்டு பாடத் திட்டங்களை முடிக்க வேண்டும் எனில், இனி, சனிக்கிழமைதோறும் பள்ளிகளை நடத்தினால் தான் முடியும் என, ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இம்மாதம், 2ம் தேதி, காந்தி ஜெயந்தி, 23ல் ஆயுத பூஜை, 24ல் விஜயதசமி, 27ல் பக்ரீத் என, நான்கு நாள், அரசு விடுமுறை விடப்பட்டது. கடந்த சில தினங்களாக, தொடர்ந்து பெய்து வரும் மழையால், கடலூர், நாகை, விழுப்புரம், அரியலூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட, சில மாவட்டங்களில், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. புயல் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட, பல்வேறு மாவட்டங்களில், நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. புயல், கரையை கடக்கும் போது, கனமழை பெய்யும் என்பதால், அரியலூர், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், திருவாரூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய, ஒன்பது மாவட்டங்களுக்கு, இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி, தொடர்ந்து, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதால், கல்வித்துறை நிர்ணயித்த காலத்திற்குள், பாடத்திட்டங்களை முடிக்க முடியாத நிலை, ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: அரையாண்டு தேர்வுக்கான பாடத் திட்டங்களை, நவம்பர் இறுதிக்குள் முடிக்க வேண்டும். அதிகபட்சமாக, டிசம்பர் முதல் வாரம் வரை, கால அவகாசம் வழங்கப்படுகிறது. மழையால், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில், பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை விடப்படுகிறது. இந்த நாட்களை, ஈடு செய்ய வேண்டும் எனில், அரையாண்டு தேர்வு வரை, அனைத்து சனிக்கிழமைகளிலும், பள்ளிகளை நடத்துவதைத் தவிர, வேறு வழியில்லை. சனிக்கிழமைகளில், பள்ளியை நடத்த வேண்டும் என, இதுவரை, கல்வித்துறை எவ்வித உத்தரவையும் வழங்கவில்லை. எனினும், பாடத்திட்டங்களை முடிக்க, பள்ளி நிர்வாகங்களே, சனிக்கிழமையும், அரை நாள் பள்ளியை நடத்தலாம். அதன்படி, சனிக்கிழமைகளில் பள்ளியை நடத்தி, பாடத்திட்டங்களை முடிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-11-2024

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-11-2024 - School Morning Prayer Activities... அனைத்து குழந்தைகளுக்கும் இனிய குழந்தைகள் தின வாழ்த்...