கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>கேட் தேர்வில் யார் அதிகம்?

இந்த ஆண்டு கேட் தேர்வுக்கு விண்ணப்பத்தவர்களின் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.
கேட் நுழைவுத் தேர்வு அக்., 11ம் தேதி தொடங்கியது. வரும் நவ., 6 வரை நடக்கிறது. தேர்வு முடிவு 2013 ஜன., 9ம் தேதி வெளியிடப்படுகிறது. இந்தியாவில் உள்ள 13 இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனஜ்மென்ட் (ஐ.ஐ.எம்.,) கல்வி நிறுவனங்கள், 100 தனியார் கல்வி நிறுவனங்களில், மேலாண்மை படிப்புகளில் சேர்வதற்கு கேட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு கேட் தேர்வுக்கு, 2 லட்சத்து 14 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இது, கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது, 4.2 சதவீதம் அதிகம். விண்ணப்பித்த மாணவிகளின் எண்ணிக்கையும் 8.6 சதவீதம் அதிகரித்தது.
விண்ணப்பித்துள்ளவர்களில் 67.6 சதவீதம் பேர் இன்ஜினியரிங் பிரிவைச் சேர்ந்தவர்கள். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் இருந்து 31,040 பேர் விண்ணப்பித்துள்ளனர். அடுத்தபடியாக, உத்தரபிரதேசத்தில் இருந்து 25,270 பேரும், டில்லியில் இருந்து 21,507 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
டாப்  5 நகரங்கள்
* டில்லி  21,224 பேர்
* பெங்களூரு 19,553 பேர்
* மும்பை  16,895 பேர்
* ஐதராபாத்  16,138 பேர்
* புனே  13,368 பேர்
தேர்வு முடிவுகளில், எந்தெந்த மாநிலம் எந்த இடத்தை பெறுகிறது என்பதை, பொறுத்திருந்து பார்க்கலாம்.

>>>மாணவனின் சம்பளம் 70 லட்சம்

கேரளாவில் உள்ள கோழிக்கோடு என்.ஐ.டி., கல்லுõரியில் படிக்கும் திஜூ ஜோஸ் என்ற எம்.டெக்., மாணவர், ஆண்டுக்கு 70 லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு தேர்வாகியுள்ளார். கேரளாவில் இதுவரை எந்த இன்ஜினியரிங் மாணவரும், இவ்வளவு பெரிய சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்ததில்லை. இவர்தான் முதல் முறையாக சாதித்துக் காட்டியுள்ளார். இதற்குமுன் 22 லட்சம் ரூபாய் என்பதே சாதனையாக இருந்தது. கல்லூரியில் நடந்த வளாகத் தேர்வில் கூகுள் நிறுவனம், அமெரிக்காவின் கலிபோர்னியா அலுவலகத்துக்கு இம்மாணவனை தேர்வு செய்துள்ளது. இன்னும், இம்மாணவருக்கு ஓராண்டு படிப்பு பாக்கி உள்ளது. இதன் பின் 2013 அக்., மாதத்தில் பணியில் சேர இருப்பதாக அம்மாணவர் தெரிவித்துள்ளார்.

>>>மாணவர்கள் பின்பற்ற வேண்டிய 10 கட்டளைகள் அறிமுகம்

மாணவர்கள் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய 10 கட்டளைகள் குறித்து வாழ்வியல் திறன் விளக்கம் தர அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி 9ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளில் மாணவ, மாணவிகளுக்கு வாழ்வியல் திறன் கல்வி பயிற்சி என்ற தலைப்பில், 10 கட்டளைகள் விளக்கம் தரப்படுகிறது. மாணவர்களுக்கு விளக்கம் தர, ஆசிரியர்களுக்கு பயிற்சி தரப்படுகிறது.
10 கட்டளைகள்: தன்னை பிறர் நிலையில் வைத்து பார்த்தல், பிரச்னைகளை சமாளிக்கும் திறன், உறவு முறையை வலுப்படுத்தும் திறன், படைப்பாற்றல் திறன், கூர்சிந்தனை திறன், மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் திறன், உணவுர்களை கையாளும் திறன், தன்னை அறிதல், முடிவெடுக்கும் திறன், தகவல் தொடர்பு திறன்.
பயிற்சி வகுப்புகளில் மேற்கூறிய இந்த 10 கட்டளைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

>>>பொறியியல் கலந்தாய்வில் 5 மாணவர்கள் பங்கேற்பு

உச்ச நீதிமன்ற உத்தரவுப் படி ஒ.சி. பிரிவு மாணவர்களுக்கு அண்ணா பல்கலையில், நடந்த பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வில், வெறும் ஐந்து மாணவர்கள் மட்டுமே பங்கேற்றனர். கடிதம் அனுப்பப்பட்டிருந்த மேலும் 822 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. தமிழகத்தில், அரசு வேலை வாய்ப்பு மற்றும் கல்வி சேர்க்கையில், 69 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. இதில், ஓ.சி., பிரிவில், 31 சதவீதம் மட்டும் வழங்கப்படுகிறது. ஆனால், இப்பிரிவினருக்கு, 50 சதவீதம் வழங்க வேண்டும் என்பது, சுப்ரீம் கோர்ட் உத்தரவு. மீதமுள்ள, 19 சதவீத இடங்களை கூடுதலாக ஏற்படுத்தி, அதனை நிரப்ப, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட், சமீபத்தில் உத்தரவிட்டது. அதன்படி, 827 பேருக்கு, கலந்தாய்வு கடிதங்களை, அண்ணா பல்கலை அனுப்பியது. நேற்று நடந்த கலந்தாய்விற்கு, வெறும் ஐந்து மாணவர் மட்டுமே வந்தனர்; 822 பேர் வரவில்லை. வந்த ஐந்து பேரும், கிண்டி பொறியியல் கல்லூரி மற்றும் மதுரை தியாகராயர் கல்லூரியில், ஏற்கனவே பொறியியலில் சேர்ந்து படித்து வருகின்றனர். இவர்கள், பாடப் பிரிவுகளை மட்டும் மாற்றிக் கொண்டதாக, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன. கலந்தாய்வு கடிதங்களை பெற்ற மாணவ, மாணவியர், ஏற்கனவே நல்ல கல்லூரிகளில், விரும்பிய பாடப் பிரிவுகளில் சேர்ந்து விட்டதால், அவர்கள் கலந்தாய்வுக்கு வரவில்லை எனவும், பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன.

>>>ஆசிரியர் பணி நியமனம்: மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை

உடற்பயிற்சி, ஓவிய ஆசிரியர் பணி நியமனத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான, 3 சதவீத இடஒதுக்கீடு, பின்பற்றப்படாததால், ஆசிரியர் பணி நியமனத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என, மாற்றுத்திறனாளி நல அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதுகுறித்து, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க நிர்வாகிகள் கூறியதாவது: தமிழகம் முழுவதிலும், பல்வேறு பள்ளிகளில் காலியாக உள்ள, உடற்பயிற்சி மற்றும் ஓவிய ஆசிரியர் பணியிடங்களுக்கு, 1,400 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், முன்னுரிமை விதிகள் கடைபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலின் படி, ஒரு மாற்றுத்திறனாளிக்கு கூட முன்னுரிமை வழங்கவில்லை என்பது தெளிவாகிறது. எனவே, இப்பணிகளுக்கு ஏற்ற மாற்றுத் திறனாளிகள் யாரும் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிந்திருக்கவில்லை என்றால், அத்தகவல் வெளிப்படையாக தெரிவிக்கப்பட வேண்டும் . அதுமட்டுமின்றி, மாற்றுத்திறனாளிகளுக்கு, சட்டப்படி, 3 சதவீத ஒதுக்கீடு அளித்த பின், பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும். அது வரையில், ஆசிரியர் பணி நியமனத்தை நிறுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

>>>முதுகலை ஆசிரியர் தேர்வு: நவ. 15க்குள் புதிய பட்டியல்

முதுகலை ஆசிரியர் தேர்வுக்காக, 3,219 பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி, 32 மாவட்டங்களிலும், நேற்று துவங்கியது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியரை நியமனம் செய்ய, ஜூலையில் போட்டித் தேர்வை நடத்தி, தேர்வுப் பட்டியலையும், டி.ஆர்.பி., வெளியிட்டது. 23 கேள்விகளுக்கான விடைகளில் குளறுபடி ஏற்பட்டதால், சிலர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். தேர்வுப் பட்டியலை ரத்து செய்ய உத்தரவிட்ட ஐகோர்ட், குளறுபடியான கேள்விகளுக்கு, உரிய மதிப்பெண்களை வழங்கி, அதன் அடிப்படையில், புதிய தேர்வு பட்டியலை தயாரித்து வெளியிட உத்தரவிட்டது. அதன்படி, புதிய பட்டியலை தயாரிக்க, கூடுதலாக, 3,219 பேருக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு செய்யும் பணி, 32 மாவட்டங்களிலும் நேற்று துவங்கியது. இன்றும், தொடர்ந்து, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. நவம்பர் 15ம் தேதிக்குள், புதிய தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

>>>4ம் தேதி குரூப்-2 தேர்வு: 6.5 லட்சம் பேர் பங்கேற்பு

நவம்பர் 4ம் தேதி நடக்கும் குரூப்-2 தேர்வை தமிழகம் முழுவதும் சுமார் 6.5 லட்சம் பேர் எழுதுகின்றனர். இந்த தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், டி.என்.பி.எஸ்.சி., செய்து முடித்துள்ளது. நகராட்சி கமிஷனர், சார்-பதிவாளர், உதவி வணிகவரி அலுவலர் உள்ளிட்ட, குரூப்-2 நிலையில், 3,687 காலி பணியிடங்களை நிரப்ப, ஆகஸ்ட் 12ல், தேர்வு நடந்தது. இதில், 6.5 லட்சம் பேர் பங்கேற்றனர்.  அத்தேர்வு கேள்வித்தாள், முன்கூட்டியே, "லீக்" ஆனதால், தேர்வு ரத்து செய்யப்பட்டு, நவம்பர் 4ல், மறுதேர்வு நடக்கும் என  தேர்வாணையம் அறிவித்தது. அதன்படி, 4ம் தேதி நடக்கும் மறுதேர்வில், ஏற்கனவே பதிவு செய்த, 6.5 லட்சம் பேரும் பங்கேற்கின்றனர். இவர்களுக்கான, "ஹால் டிக்கெட்&', தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள், இணையதளத்தில் இருந்து, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து வருகின்றனர். மாநிலம் முழுவதும், 3,456 மையங்களில், தேர்வு நடக்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக, தேர்வாணைய தலைவர் நடராஜ் தெரிவித்தார். வழக்கம் போல், அனைத்து தேர்வு மையங்களிலும், வீடியோ கண்காணிப்பு இருக்கும் எனவும், அவர் தெரிவித்தார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2024-2025 Kalai Thiruvizha Banner

 கலைத் திருவிழா 2024-2025 Kalai Thiruvizha Banner HD >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...