கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>கணினி வழி தேர்வு புரட்சி: டி.என்.பி.எஸ்.சி., அறிமுகம்: எளிமையாக இருக்க வழிமுறைகள்

டி.என்.பி.எஸ்.சி.,யில் நடந்துவரும் சீர்திருத்த திட்டங்களின் வரிசையில், அடுத்த கட்டமாக, கணினி வழி தேர்வு முறை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டிச., 9ம் தேதி நடக்கும் தோட்டக் கலை அலுவலர் உள்ளிட்ட, நான்கு பதவிகளுக்கான தேர்வுகள், இந்த முறையில் நடக்கும் என, தேர்வாணைய செயலர் அறிவித்துள்ளார்.
அவரது அறிவிப்பு:தேர்வுக்கான ஆண்டு திட்டம், இணையவழி விண்ணப்பம், இணையவழி நுழைவுச்சீட்டு பதிவிறக்கம், தேர்வு மையங்களில் வீடியோ பதிவு கண்காணிப்பு முறை, "கீ-ஆன்சர்' வெளியிடுதல், இணையவழி சான்றிதழ் சரிபார்ப்பு, பதவி ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு என, பல்வேறு சீர்திருத்தங்கள், போட்டித் தேர்வு முறைகளில் செய்யப்பட்டுள்ளன. இதன் அடுத்த கட்டமாக, கணினி வழி தேர்வுகளை நடத்த, தேர்வாணையம் முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக, தோட்டக் கலை அலுவலர் - 94 பணியிடங்கள், உதவிப் பொறியாளர் - தானியங்கி ஊர்திகள் - 1 பணியிடம், முதுநிலை ஆசிரியர் - 3 பணியிடங்கள், பள்ளி உதவி ஆசிரியர் - 3 பணியிடங்கள் ஆகிய பதவிகளுக்கு, டிச., 9ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்பட உள்ளது. கணினி வழி தேர்வு, தற்போது நடைமுறையில் உள்ள, "ஓ.எம்.ஆர்.,' விடைத்தாளில் விடை அளிக்கும் கொள்குறி வகை தேர்வு போன்றது. தேர்வர்கள், குறித்த நேரத்தில், கம்ப்யூட்டர் முன் அமர்ந்ததும், திரையில் கேள்விகளும், பதில்களும் தோன்றும். கேள்விகளை படித்து, நான்கு விடைகளில், சரியான ஒரு விடையை தேர்வு செய்து, "மவுஸ்' மூலம், "கிளிக்' செய்ய வேண்டும்; அவ்வளவு தான்.விடைகளை மறு ஆய்வு செய்யவும், மாற்றவும், ஒரு கேள்வியை விடுத்து, அடுத்த கேள்விக்குச் செல்லவும், வழி வகை செய்யப்பட்டுள்ளது. கேள்விகளும், விடைகளும் வரிசை முறையின்றி கலந்து, தேர்வர்களுக்கு, கணினி திரையில் தோன்றச் செய்வதால், ஒரு தேர்வர், அருகில் இருக்கும் மற்றொரு தேர்வரை பார்த்து, விடை அளிக்க முடியாது. மேலும், தேர்வர்களின் நடவடிக்கைகள், கேமரா வழியாக கண்காணிக்கப்படுவதால், இந்த தேர்வு முறை மிகவும் நம்பிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும்.
* இந்த வகை தேர்வுகளில், விடைத்தாள்களை, "ஸ்கேன்' செய்ய வேண்டிய வேலை இல்லை. அதனால், தேர்வு முடிவுகள், விரைவில் வெளியாகும்.
* இந்த தேர்வை எழுத, அதிகமான கணினி அறிவு தேவையில்லை. "மவுசை' பயன்படுத்தி, விடைகளை, "கிளிக்' செய்ய தெரிந்திருந்தால் போதும்.
* தேர்வு முடிந்ததும், தேர்வர்கள், தாங்கள் சமர்பித்த விடைகளின் விவரங்களை, "பிரின்ட்' செய்து கொள்ளலாம்.* இந்த வகை தேர்வுக்கு, தேர்வர்கள் பயிற்சி பெறுவதற்கு வசதியாக, தேர்வாணைய இணையதளத்தில், மாதிரி தேர்வு பக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதை பயன்படுத்தி, தேர்வர்கள் தயாராகலாம்.
* டிச., 9ல் நடக்கும் தேர்வுக்கு, 23ம் தேதி வரை, இணையதளம் (www.tnpsc.tn.nic.in) வழியாக விண்ணப்பிக்கலாம்.

>>>குரூப் 2 தேர்வு வெற்றி ரகசியங்கள்

நாளை குரூப்-2 தேர்வு நடக்கிறது. அன்று மதியம், இந்து அறநிலையத்துறையின் கீழ்வரும் திருக்கோயில்களின் செயல் அலுவலர்களுக்கான குரூப்-7 "பி' தேர்வும் நடக்கிறது. இத்தேர்வுகளை எழுதும் மாணவர்களுக்கு முக்கிய ஆலோசனைகள்:
சமீபத்தில் நடந்த டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில் வினாத்தாள் மாற்றி அமைக்கப்பட்டு, சிந்தனைத் திறனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மனப்பாடம் செய்து எழுதியவர்கள், இனி சிந்தனைத் திறனை வளர்த்துக் கொள்வது அவசியம். ஒரு சம்பவம் அல்லது நிகழ்ச்சி எப்போது நடந்தது என்ற தகவலை மட்டும் தெரிந்து கொள்ளாமல், அது நடந்ததற்கான காரணங்களை அறிய வேண்டும். முந்தைய வினா தாள்களில் பொதுத் தமிழ் எளிமையாக இருந்தது. பெரும்பாலான மாணவர்கள், 90 சதவீத மதிப்பெண்களை பெறுவது சாத்தியமாக இருந்தது. மாற்றியமைக்கப்பட்ட வினாத்தாளில் 80 சதவீத மதிப்பெண்கள் பெறுவதே சவாலான விஷயம். தமிழில் அதிகபட்ச மதிப்பெண்களை பெறுபவர்களால் தான், தேர்வில் சாதிக்க முடியும். சொற்களை ஒழுங்குபடுத்தி, சரியான சொற்றொடர் அமைக்கும் பகுதியில் புகழ்பெற்ற செய்யுள் வரிகளே வினாக்களாக தரப்படுகின்றன. "பொருள்  தருக' பகுதி வினாக்கள், பொருத்துக வடிவில் கேட்கப்படுகின்றன. ஆழமான பொருள் கொண்ட இவ்வகை வினாக்களுக்கு விடையளிக்க, பிளஸ் 1, பிளஸ் 2 தமிழ்ப் புத்தகத்தில் செய்யுள் பகுதிளை படிக்க வேண்டும். பகுபத உறுப்பு இலக்கணம், சீர்பிரித்தல், அசைபிரித்தல், எதுகை, மோனை, அளபெடைகள், யாப்பு, ஆகு பெயர்கள் ஆகியவை வினாத்தாளில் புதிய அம்சங்கள். இவற்றுக்கு சரியாக விடையெழுத நல்ல பயிற்சியும், பரிச்சயமும் அவசியம். இவை ஒன்பதாம், பத்தாம் வகுப்பு பாடப் புத்தகத்திலிருந்து கேட்கப்படுகின்றன. விடைக்கேற்ற வினாவை தேர்வு செய்யும் பகுதியில், செய்யுள் வடிவத்திலேயே வினாக்கள் இடம் பெறும். பொதுவாக திருக்குறள், செய்யுள், பழமொழிகளிலிருந்தே கேள்விகள் தரப்படுகின்றன. இதற்கு விடையளிக்க, ஆறிலிருந்து பிளஸ் 2 வரை உள்ள திருக்குறள், செய்யுளை படித்தால் போதும். இலக்கணக் குறிப்பு, வாக்கிய வகைகளை தேர்வு செய்தல் ஆகியவற்றுக்கு உதாரணம் கேட்பதை விட, அவற்றுக்கு வரையறைகள் கேட்கப்படுகின்றன. இந்த வினாக்கள் எளிமையாக தோன்றினாலும், நுட்பமான வேறுபாடுகள் கொண்டவை. கவனமாக பதிலளிக்க வேண்டும். நூல் மற்றும் நூலாசிரியர்கள் குறித்த வினாக்களில் நவீன எழுத்தாளர்கள் பற்றியும், நூல்கள் பற்றியும் விவரங்களை தொகுத்து வைத்துக் கொள்வது நல்லது. சாகித்ய அகாடமி விருது வென்றவர்கள், பரிசு பெற்ற நூல்கள், ஞான பீட பரிசு பெற்றவர்கள் ஆகியோரையும் அறிந்து கொள்ள வேண்டும். வரலாறு பாடத்துக்கு, 6,7,8ம் வகுப்பு பாடப் புத்தகங்களே போதுமானவை. இப்பாடங்களில் உள்ள தலைப்புகளை ஒட்டி, மேலும் சில தகவல்களை சேகரித்து வைத்துக் கொண்டால் நல்ல மதிப்பெண் பெறலாம். புவியியல் பாடத்துக்கு 7,8ம் வகுப்பு பாடப் புத்தகங்களும், பொருளியலுக்கு 9,10, பிளஸ் 1 பாடப்புத்தகங்களும் போதுமானவை. அறிவியல் பாடத்துக்கு, 6-10 வகுப்பு வரை உள்ள இயற்பியல், வேதியியல் பாடங்களும், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உயிரியல் பாடங்களும் அவசியம். புத்தகத்தில் உள்ள பயிற்சி வினாக்களையும், விளக்கப் படங்களையும் படிக்க வேண்டும். நடப்பு நிகழ்வுகள் சம்பந்தப்பட்ட வினாக்களுக்கு விடையளிக்க, தினசரி செய்தித்தாள்கள் படித்து வருவது தான் ஒரே வழி. சமீபத்திய நிகழ்வுகள் அடங்கிய புத்தகங்கள் ஓரளவு பயன் தரும். எல்லாவற்றையும் விட, தேர்வு எழுதும் மூன்று மணி நேரமும் நேரத்தை சரியாக பயன்படுத்தி, விரைவாக அனைத்து வினாக்களுக்கும் விடையளிப்பது அவசியம்.
தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளுங்கள், வெற்றி உங்கள் வசம்.

>>>நவம்பர் 03 [November 03]....

  • ஔரங்கசீப் பிறந்ததினம் (1618)
  • பனாமா விடுதலை தினம்(1903)
  • பாம்பே டைம்ஸ் முதன் முதலில் வெளியிடப்பட்டது (1838)
  • பாம்பே டைம்ஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா எனப் பெயரிடப்பட்டது(1861)
  • அமெரிக்கா, வருமான வரியை அறிமுகப்படுத்தியது(1913)
  • போலந்து, ரஷ்யாவிடம் இருந்து விடுதலை அடைந்தது(1918)
  • அமர்த்தியாசென்  பிறந்ததினம் (1933)

>>>பள்ளி குழந்தைகளுக்கு விதவிதமான உணவுகள்: முதல்வர்

பள்ளிகளில் செயல்படும் சத்துணவு திட்டத்தில், பல புதிய உணவுகளை, குழந்தைகளின் விருப்பத்திற்கேற்ப வழங்குவதற்கு, தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, சட்டப் பேரவையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது: சோதனை முறையின் அடிப்படையில், புதிய உணவு வகைகளை சத்துணவு திட்டத்தில் படிப்படியாக அறிமுகம் செய்ய எனது தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது.
இதன்படி, மாதத்தின் முதல் மற்றும் மூன்றாம் வாரங்களில்,
திங்கட்கிழமை - காய்கறி பிரியாணி மற்றும் மிளகுத்தூள் முட்டை
செவ்வாய்க்கிழமை - கொண்டைக்கடலை புலவு மற்றும் தக்காளி முட்டை மசாலா
புதன்கிழமை - தக்காளி சாதம் மற்றும் மிளகுத்தூள் முட்டை
வியாழக்கிழமை - சாதம், சாம்பார் மற்றும் வேகவைத்த முட்டை
வெள்ளிக்கிழமை - கருவேப்பிலை சாதம் அல்லது கீரை சாதம், முட்டை மசாலா மற்றும் மிளகாய்ப் பொடியில் வறுத்த உருளைக்கிழங்கு.

மாதத்தின் இரண்டாம் மற்றும் நான்காம் வாரங்களில்,
திங்கட்கிழமை - சாம்பார் சாதம் மற்றும் வெங்காயம், தக்காளி முட்டை மசாலா.
செவ்வாய்க்கிழமை - மீல் மேக்கர், காய்கறி கலவை சாதம் மற்றும் மிளகுத்தூள் முட்டை
புதன்கிழமை - புளியோதரை மற்றும் தக்காளி முட்டை மசாலா
வியாழக்கிழமை - எலுமிச்சை சாதம், தக்காளி முட்டை மசாலா மற்றும் சுண்டல்
வெள்ளிக்கிழமை - சாதம், சாம்பார், வேகவைத்த முட்டை மற்றும் உருளைக்கிழங்கு பொறியல்.
ஆகிய அட்டவணைகளில் உணவுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதேபோன்று, அங்கன்வாடி மையங்களுக்கு வரும் குழந்தைகளின் சிறப்பம்சம் மற்றும் செரிமானத் திறன் ஆகியவற்றினைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கும் புதிய உணவு வகைகள் அறிமுகம் செய்யப்படும். புதிய திட்டத்தின்படி,
திங்கட்கிழமை - தக்காளி சாதம், வேகவைத்த முட்டை
செவ்வாய்க்கிழமை - கலவை சாதம் மற்றும் சுண்டல்
புதன்கிழமை - காய்கறி புலவு சாதம் மற்றும் வேகவைத்த முட்டை
வியாழக்கிழமை - எலுமிச்சை சாதம் மற்றும் வேகவைத்த முட்டை
வெள்ளிக்கிழமை - பருப்பு சாதம், வேகவைத்த உருளைக்கிழங்கு
சனி மற்றும் ஞாயிறு - கலவை சாதம்.
மேற்கூறிய புதிய உணவுவகைத் திட்டம், ஒவ்வொரு மாவட்டத்திலும், முதலில் ஒரு வட்டாரத்தில் மட்டும் முன்னோடித் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டு, அந்த வட்டாரத்தில், இந்த புதிய உணவுமுறை திட்டத்தின் செயல்பாடு குறித்து அறிந்த பின்னர், மற்ற வட்டாரங்களுக்கு விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

>>>அரசு ஊழியர்களுக்கு பண்டிகை முன்பணம் உயர்வு

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பண்டிகை முன்பணத்தை, 2,000 ரூபாயில் இருந்து, 5,000 ரூபாயாக உயர்த்தி, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சட்டசபையில், விதி, 110ன் கீழ், அவர் வெளியிட்ட அறிக்கை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நலன்களை காக்கும் வகையில், வீடு கட்டும் முன்பணம், 15 லட்சம் ரூபாயில் இருந்து, 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. பெண் ஊழியர்களுக்கான, மகப்பேறு விடுப்பு, மூன்றிலிருந்து, ஆறு மாதமாகவும், அரசு ஊழியர்களுக்கான, புதிய மருத்துவக் காப்பிட்டு திட்டம் உள்ளிட்ட, பல சலுகைகள் வழங்கப்பட்டு உள்ளன. கடந்த, 1996ல், முதல்வராக இருந்த போது, 25 ஆண்டுகள், அப்பழுக்கற்ற பணியை முடித்த, அரசு ஊழியர்களுக்கு, 500 ரூபாய் மதிப்புள்ள, இந்திரா விகாஸ் பத்திரத்தை வழங்க உத்தரவிட்டு, வழங்கப்பட்டு வந்தது. பின், இந்திரா விகாஸ் பத்திரத்திற்கு பதில், கிசான் விகாஸ் பத்திரம் வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்தாண்டு டிச., முதல், கிசான் விகாஸ் பத்திரத்தை, மத்திய அரசு நிறுத்திவிட்டது. இதை கருத்தில் கொண்டு, 15 ஆண்டுகளுக்கு முன் நிர்ணயிக்கப்பட்ட, 500 ரூபாயை, 2,000 ரூபாயாக உயர்த்தியும், அதை ரொக்கமாக வழங்குவதோடு, பணியை பாராட்டி, அரசு சார்பில் சான்றிதழ் வழங்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இது மட்டுமின்றி, ஐந்து ஆண்டுகளுக்கு முன் நிர்ணயிக்கப்பட்ட, 2,000 ரூபாய் பண்டிகை முன்பணத்தை, 5,000 ரூபாயாக உயர்த்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளன.

>>>இளங்கலை, முதுகலை படிப்புகளில் அறிமுகமாகிறது செய்முறை, எழுத்து தேர்வு

இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வு முறையில், அடுத்த கல்வி ஆண்டில், பல சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படுகின்றன. செய்முறைத் தேர்வுக்கு, 40 மதிப்பெண்கள், எழுத்துத் தேர்வுக்கு, 60 மதிப்பெண்கள் என, பிரித்து வழங்கவும், மொழிப் பாடங்களில், அறிவை மேம்படுத்துவதற்கு, பல புதிய திட்டங்களும் அமல்படுத்தப்பட உள்ளன.
தமிழக அரசு பல்கலைகளின், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்கள் கூட்டம், உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் தலைமையில், சென்னையில் நடந்தது. தமிழ்நாடு உயர்கல்வி மன்ற துணைத் தலைவர் சிந்தியா பாண்டியன் மற்றும் சென்னை பல்கலை, மதுரை காமராஜர் பல்கலை உள்ளிட்ட, பல்வேறு பல்கலைகளின், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்கள், கூட்டத்தில் பங்கேற்றனர்.
இளங்கலை, முதுகலை தேர்வுகளில், அடுத்த கல்வி ஆண்டில் இருந்து, பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வருவது குறித்து, கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது. பாட வாரியாக வழங்கப்படும், 100 மதிப்பெண்களை, செய்முறைத் தேர்வுக்கு, 40, எழுத்து தேர்வுக்கு, 60 என, பிரித்து வழங்குவது என, கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. வருகைப் பதிவேடு, செய்முறைப் பதிவேடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில், 40 மதிப்பெண்களையும், எழுத்துத் தேர்வுக்கு, 60 மதிப்பெண்களும் வழங்கப்படுகிறது.
இதில், தேர்ச்சிக்குரிய, 40 மதிப்பெண்களைப் பெற, செய்முறைத் தேர்வுக்கு ஒதுக்கப்பட்ட, 40ல், குறைந்தபட்சம், 16 மதிப்பெண்களும், எழுத்து தேர்வுக்கான, 60 மதிப்பெண்களில், குறைந்தபட்சம், 24 மதிப்பெண்களும் பெற வேண்டும் என, முடிவு எடுக்கப்பட்டது.
முதுகலையிலும், இதே நடைமுறை அமல்படுத்தப்படும் எனவும், அதில் தேர்ச்சி பெற, செய்முறைத் தேர்வில் குறைந்தபட்சம், 20 மதிப்பெண்களும், எழுத்துத் தேர்வில், குறைந்தபட்சம், 30 மதிப்பெண்களும் பெற வேண்டும் என, முடிவு செய்யப்பட்டது.
ஆங்கிலம் மற்றும் தமிழ் பாடத்தில், அறிவை மேம்படுத்துவதற்கு, வாசித்தல், குழு விவாதம் உள்ளிட்ட, பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட உள்ளன. குறிப்பாக, பட்டப் படிப்புகளுக்குப் பின், வேலை வாய்ப்புகளைப் பெற, ஆங்கிலத்தில், தகவல் தொடர்புத் திறன் அவசியமாக இருப்பதால், இதில் அதிக கவனம் செலுத்த, உயர்கல்வி துறை திட்டமிட்டுள்ளது. பல்கலைகளின் பாடத்திட்டங்களை மேம்படுத்துவதற்காக, ஒரு கோடி ரூபாயை, தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
பாடத் திட்டங்களை, எந்தெந்த வகையில் மேம்படுத்துவது என்பது குறித்து, விரிவாக விவாதித்து, ஆய்வு செய்து, உரிய பரிந்துரைகளை செய்ய, தனிக்குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும், இக்குழுவின் செயல்பாடுகள் குறித்தும், கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. தேர்வு சீர்திருத்தங்கள் தொடர்பான அரசின் முடிவு, வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில், உயர்கல்வி துறை மானியக் கோரிக்கையின் போது, அறிவிப்பாக வெளியிடப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

>>>தலைமை இன்றி தள்ளாடும் ஆதிதிராவிட நலப் பள்ளிகள்

தமிழகத்தில் உள்ள, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பற்றாக்குறையால், மாணவர்களின் கல்வித்தரம் குறைந்து வருகிறது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், 1,095 பள்ளிகள், செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில், 1.50 லட்சம் மாணவர்கள், பயின்று வருகின்றனர். இதில், நூற்றுக்கும் குறைவான மேல்நிலைப் பள்ளிகளே செயல்படுகிறது. இம்மேல்நிலைப் பள்ளிகளில், 24 தலைமை ஆசிரியர்கள், 97 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், இங்கு பயிலும் மாணவர்களின் கல்வித்தரம், குறையும் அபாயத்தில் உள்ளது.
இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது: தமிழகத்தில், பெரும்பான்மையான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகளில், பல ஆண்டுகளாக, ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. காலியாக உள்ள பணியிடங்களில், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம், கவுரவ ஆசிரியர்களை நியமித்திருந்திருக்கலாம். அதுகுறித்தும், எந்த அக்கறையும் காட்டவில்லை. இதனால், நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்த, மாணவர்களின் கல்வித்தரம் குறைந்து கொண்டே வருகிறது.
நிதிநிலை அறிக்கையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளியில் பயிலும், மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்காக, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அரசு அறிவித்திருக்கிறது, ஆண்டு கணக்கில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப முன்வரவில்லை. இதேநிலை தொடர்ந்தால், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் பயிலும், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கணிசமாகக் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, ஆதிதிராவிடர் நலத்துறை, கல்வி பிரிவு உயர் அதிகாரிகளிடம் கேட்ட போது, "காலி பணியிடங்களில், ஆசிரியர்களை நியமிக்கும் நடவடிக்கை துரிதமாக நடந்து வருகிறது. தீபாவளிக்கு பின், காலி பணியிடங்களை நிரப்பி விடுவோம்" என்றனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Storm warning: IT companies should advise their employees to work from home tomorrow (November 30) - Tamil Nadu Govt.

புயல் எச்சரிக்கை: தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை நாளை (நவம்பர் 30)  வீட்டிலிருந்து பணிபுரிய (Work from Home) அறிவுறுத்த  ...