கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>நவம்பர் 08 [November 08]....

நிகழ்வுகள்
  • 1520 - டென்மார்க் படைகள் சுவீடனை முற்றுகையிட்டன. சுமார் 100 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
  • 1811 - இலங்கையில் இயற்றப்பட்ட புதிய நீதிமன்ற சட்டப்படி மேல் நீதிமன்றம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ஒன்று கொழும்பில் பிரதம நீதியரசரின் நீதிமன்றமும், Puisne Justice என அழைக்கப்படும் நீதிமன்றம் யாழ்ப்பாணத்திலும் அமைக்கப்பட்டன. கிரிமினல் வழக்குகளுக்கு ஜூரி முறையும் அமுலுக்கு வந்தது.
  • 1889 - மொன்டானா ஐக்கிய அமெரிக்காவின் 41வது மாநிலமாக இணைந்தது.
  • 1895 - எதிர்மின் கதிர்களைச் சோதனையிடும் போது வில்ஹெம் ரொண்ட்ஜென் எக்ஸ் கதிர்களைக் கண்டுபிடித்தார்.
  • 1917 - ரஷ்யாவில் அக்டோபர் புரட்சியை அடுத்து லெனின், ட்ரொட்ஸ்கி, ஸ்டாலின் ஆகியோருக்கு முழு அதிகாரமும் தரப்பட்டது.
  • 1923 - மியூனிக் நகரில் ஹிட்லர் தலைமையில் நாசிகள் ஜெர்மனிய அரசைக் கவிழ்க்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.
  • 1938 - பாரிஸ் நகரில் ஜெர்மனிய தூதுவர் கொலை செய்யப்பட்டதை அடுத்து ஜெர்மனியிலும் ஆஸ்திரியாவிலும் யூதர்களுக்கு எதிராக வன்முறைகள் கிளம்பின.
  • 1939 - மியூனிக் நகரில் ஹிட்லரைக் கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது.
  • 1942 - மேற்கு உக்ரேனின் தெர்னோப்பில் நகரில் நாசி ஜேர்மனியினர் 2,400 யூதர்களை பெல்செக் நகரில் இருந்த வதை முகாமுக்கு அனுப்பினர்.
  • 1950 - கொரியப் போர்: ஐக்கிய அமெரிக்க வான்படையினர் வட கொரிய மிக் விமானங்கள் இரண்டை சுட்டு வீழ்த்தினர்.
  • 1965 - பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம் அமைக்கப்பட்டது.
  • 1977 - கிமு 1ம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க மன்னன் இரண்டாம் பிலிப்பு என்பவனின் சமாதி மனோலிஸ் அண்ட்ரோனிக்ஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
  • 1987 - வடக்கு அயர்லாந்தில் பிரித்தானிய இராணுவ நினைவு நிகழ்வொன்றில் ஐரியக் குடியரசு இராணுவத்தினரின் குண்டு வெடித்ததில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
  • 2006 - வாகரை குண்டுத்தாக்குதல்: மட்டக்களப்பு வாகரையில் இலங்கை இராணுவத்தினர் ஏவிய பல்குழல் எறிகணை வீச்சுத் தாக்குதலில் 40 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 125-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
  • 2006 - பாகிஸ்தானில் தர்காய் என்ற இடத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 45 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

பிறப்புக்கள்

  • 1656 - எட்மண்ட் ஹேலி, பிரித்தானிய வானியல் ஆராய்ச்சியாளர் (இ. 1742)
  • 1680 - வீரமா முனிவர், இத்தாலியத் தமிழறிஞர் (இ. 1847)
  • 1900 - ந. பிச்சமூர்த்தி, தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவர், (இ. 1976)
  • 1902 - ஜி. ஜி. பொன்னம்பலம், இலங்கையின் தமிழ் அரசியல்வாதியும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், (இ. 1977)
  • 1923 - ஜாக் கில்பி, அமெரிக்க மின்னியல் பொறியாளர், (இ. 2005)
  • 1927 - லால் கிருஷ்ண அத்வானி, இந்திய அரசியல்வாதி
  • 1984 - நயன்தாரா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

இறப்புகள்

  • 1958 - சி. கணேசையர், ஈழத்துத் தமிழறிஞர் (பி. 1878)

>>>டி.இ.டி., தேர்வில் தேறியவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி துவங்கியது

டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி, 32 மாவட்டங்களிலும், நேற்று துவங்கியது. இம்மாதம், 2ம் தேதி வெளியான, டி.இ.டி., தேர்வு முடிவில், 19 ஆயிரத்து 246 பேர், தேர்ச்சி பெற்றனர். இவர்களில், 10 ஆயிரத்து 397 பேர், இடைநிலை ஆசிரியருக்கான முதல் தாள் தேர்வில், தேர்ச்சி பெற்றவர்கள். மீதமுள்ள, 8,849 பேர், பட்டதாரி ஆசிரியருக்கான, இரண்டாம் தாள் தேர்வில், தேர்ச்சி பெற்றவர்கள். இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, நேற்று, சான்றிதழ் சரிபார்ப்பு பணி துவங்கியது. இன்றும், தொடர்ந்து நடக்கிறது. சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, எழும்பூர், மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இரு நாளும் சேர்த்து, 417 பேர், பங்கேற்கின்றனர். 10 குழுக்களைச் சேர்ந்த அலுவலர்கள், சான்றிதழ்களை சரிபார்க்கின்றனர். வரும், 8, 9ம் தேதிகளில், முதல் தாள் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. இதில், சென்னை மாவட்டத்தில், 572 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். இந்தப் பணிகள் முடிந்த பின், இறுதி தேர்வுப் பட்டியலில், எத்தனை பேர் இடம்பெற்றுள்ளனர் என்ற விவரம் தெரியவரும். உரிய சான்றிதழ் இல்லாத தேர்வர்கள், தேர்வுப் பட்டியலில் இருந்து நீக்கப்படுவர். இம்மாத இறுதிக்குள், இறுதி தேர்வுப் பட்டியல் அடங்கிய கோப்புகளை, கல்வித்துறைக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் அனுப்பும். அதன்பின், சம்பந்தபட்ட ஆசிரியர்களுக்கு, பணி நியமன கலந்தாய்வு நடக்கும். டிசம்பர் இறுதிக்குள், 19 ஆயிரம் பேரும், பணி நியமனம் செய்யப்படுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

>>>உயர்கிறது ஐஐடி கல்விக் கட்டணம்

ஐஐடி -களில் இளநிலைப் படிப்புகளுக்கான வருடாந்திர கல்விக் கட்டணம், அடுத்தாண்டு முதல், ரூ.90000 என்ற அளவில் அதிகரிக்கவுள்ளது. ஐஐடி இயக்குநர்கள் அடங்கிய கமிட்டி இந்தக் கட்டண உயர்வை பரிந்துரைத்துள்ளது.
தற்போதைய நிலையில், வருடாந்திர கல்விக் கட்டணமாக ரூ.50000 வசூலிக்கப்பட்டு வருகிறது. இது, அடுத்தாண்டு முதல் 80% அதிகரிக்கவுள்ளது.
இதுதொடர்பான இறுதி முடிவு, ஐஐடி -களின் உச்சபட்ச அதிகாரமுடைய அமைப்பான முழு ஐஐடி கவுன்சிலால், ஜனவரி 7ம் தேதி எடுக்கப்படவுள்ளது. இக்குழுவில், அரசின் பிரதிநிதிகளும் உண்டு.
நவம்பர் 5ம் தேதியன்று, ஐஐடி கவுன்சிலின் ஸ்டான்டிங் கமிட்டி உறுப்பினர்கள், கடந்த 1 வருடமாக நிலுவையில் இருக்கும் கட்டண உயர்வு செயல்திட்டத்தைப் பற்றி விவாதிக்க மும்பையில் கூடினார்கள். இந்த கமிட்டியானது, பழைய 7 ஐஐடி -களின் இயக்குநர்களைக் கொண்டது.
அதேசமயம், இந்த ரூ.40,000 கட்டண உயர்வானது, சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்குப் பொருந்தாது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடன் திட்டம்
ககோட்கர் கமிட்டியின் பரிந்துரைகளை, வரும் 2013ம் ஆண்டு முதல் அமல்படுத்த, ஐஐடி கவுன்சில், ஏற்கனவே, கொள்கையளவில் அனுமதியளித்திருந்தது.(ஐஐடி ஆண்டு கல்விக் கட்டணத்தை ரூ.2 லட்சத்திற்கும் மேலாக உயர்த்தி, அதன்மூலம் ஐஐடி -கள் நிதிக்காக அரசினை நம்பியிருக்கும் நிலையை மாற்ற வேண்டும் என்று ககோட்கர் கமிட்டி பரிந்துரைத்திருந்தது).
இந்தப் புதிய கூடுதல் கட்டண உயர்வை சமாளிக்க இயலாத மாணவர்கள், படிப்பு முடிந்து, பணிவாய்ப்பைப் பெற்ற பிறகு, அத்தொகையை செலுத்தும் வண்ணம், கடன் திட்டமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஐஐடி -களில் வசூலிக்கப்படும் கல்வி கட்டணமானது, பல தனியார் பல்கலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் கல்விக் கட்டணத்தை விட மிகமிக குறைவானது என்பது மட்டுமின்றி, ஐஐஎம் போன்ற இதர புகழ்பெற்ற மத்திய அரசு கல்வி நிறுவனங்களையும் விட குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.

>>>சிறுபான்மை பள்ளிகளில் அடிப்படை வசதிக்கு ரூ.50 லட்சம்

சிறுபான்மை பள்ளிகளில் கழிப்பறை, குடிநீர் வசதிகளை ஏற்படுத்த, அடிப்படை கட்டடமைப்பு வளர்ச்சி திட்டத்தில் (ஐ.டி.எம்.ஐ.,), மத்திய அரசு, 50 லட்சம் நிதி வழங்குகிறது. இப்பள்ளிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த, புதிய திட்டத்தை, அரசு கொண்டு வந்துள்ளது. இதற்காக, முதன்மைக் கல்வி அலுவலர், பிற்பட்ட, சிறுபான்மை நல அலுவலர், சிறுபான்மை உறுப்பினர்கள் இருவர், தொடக்கக்கல்வி அலுவலர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, பள்ளிகளில் கழிப்பறை, குடிநீர் வசதி குறித்து ஆய்வு செய்து, நிதி வழங்க பரிந்துரைக்கும். இந்நிதியை பெற, பள்ளிகள் விண்ணப்பிக்கலாம். மானியக்குழுவின் பரிந்துரைகள், தொடக்கல்வித்துறை இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்படும். பின், நிதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

>>>12 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்: 1.40 லட்சம் பேருக்கு வேலை

தமிழக தொழில்துறை வரலாற்றில், முதல் முறையாக, 12 நிறுவனங்கள், 20 ஆயிரத்து 928 கோடி ரூபாய் முதலீடு செய்யும் ஒப்பந்தங்கள் ஒரே நாளில் கையெழுத்தாகி உள்ளன. இதன் மூலம், நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என முதல்வர்  தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த, 12 நிறுவனங்கள் புதிதாக தொழில் துவங்கவும், ஏற்கனவே உள்ள தொழில்களை விரிவுபடுத்தவும் தமிழக அரசுடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன. இதற்கான விழா, சென்னையில் நேற்று நடந்தது.
விழாவில், முதல்வர் பேசியதாவது: நாட்டில் பொருளாதார தாராளமய கொள்கையை, அமல் செய்த பின், தமிழகம் தான், முதன் முதலில், 1992ல் பொருளாதார கொள்கையை அறிவித்தது. இதன் மூலம், தமிழகத்தின் பொருளாதார மேம்பாட்டுக்கு, வலுவான அடித்தளம் போடப்பட்டது.  இன்று, ஆட்டோமொபைல் தொழிலில், உலகின் முக்கிய கேந்திரமாக, தமிழகம் விளங்க இதுவே காரணம். 2001ம் ஆண்டு, மீண்டும் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த போது, தொழில் வளர்ச்சிக்கு உகந்த சூழலை ஏற்படுத்தினோம். 2003ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட தொழில் கொள்கை மூலம், தமிழகத்தில் எலக்ட்ரானிக்ஸ் துறையில், பெரும் புரட்சியே ஏற்பட்டது. நோக்கியா, பாக்ஸ்கான், பிளக்ஸ்ட்ரானிக்ஸ் போன்ற நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் துவங்கின. இன்று, உலகின் மொபைல் போன் உற்பத்தியில், சென்னை முன்னணியில் உள்ளது. இதற்கு, 1992 மற்றும் 2003ல் அறிவிக்கப்பட்ட தொழில் கொள்கைகளே காரணம். தொழில் கொள்கை 2012 விரைவில் வெளியிடப்பட உள்ளது. கடந்த, 18 மாதங்களில் மட்டும், ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 706 கோடி ரூபாய் அன்னிய முதலீடு வந்துள்ளது. அன்னிய முதலீடு என்பது, இருபுறமும் கூர்மையுள்ள கத்தி போன்றது. அதை கவனமாக கையாள வேண்டும். ஆனால், சிறு வணிகத்தில் அன்னிய முதலீட்டை மத்திய அரசு அனுமதித்துள்ளதை தமிழக அரசு ஏற்கவில்லை.
சூரிய சக்தி உற்பத்தி குறித்த கொள்கையை ஏற்கனவே வெளியிட்டுள்ளோம். இவையெல்லாம் தமிழகத்தின் பொருளாதாரத்தை முதல் இடத்துக்கு கொண்டு செல்லும்.

>>>அரையாண்டு தேர்வுக்கு இடையே விடுமுறை: மாணவர்கள் பரிதவிப்பு

அரையாண்டுத் தேர்வு அட்டவணையில், தேர்வின் இடையில் 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதனால், விடுமுறையை நிம்மதியாக கழிக்க முடியாமலும், தேர்வுக்கு முழு மனதுடன் தயாராக முடியாத தர்மசங்கடமான சூழ்நிலை மாணவர்களுக்கு ஏற்பட்டு உள்ளது. ஆண்டுதோறும், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு அரையாண்டுத் தேர்வு, டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் துவங்கி, 10 நாட்கள் நடைபெறும். பின், 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். இந்த ஆண்டு, அரசு தேர்வுத் துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள தேர்வு அட்டவணையின் படி, 10ம் வகுப்பு தேர்வு, டிசம்பர்  19ம் தேதி துவங்கி, ஜனவரி 7ம் தேதியிலும், பிளஸ் 2 தேர்வு, டிசம்பர் 19ம் தேதி துவங்கி, ஜனவரி 10ம் தேதியும் நிறைவடைகின்றன. இதில், மொழித் தாள்கள் மட்டும் தொடர்ச்சியாக, டிசம்பர் 19ம் தேதி முதல், 22ம் தேதி வரை நடக்கிறது. மற்ற பாடங்களுக்கான தேர்வு, 10 நாட்களுக்குப் பின், ஜனவரி 2ம் தேதி நடக்கிறது. பொதுவாக, தேர்வுகள் தொடர்ச்சியாகவோ, ஓரிரு நாட்கள் இடைவெளியிலோ நடக்கும். இம்முறை, 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால், விடுமுறையையும் நிம்மதியாக அனுபவிக்க முடியாமல், தேர்வுக்கும் முழு மனதுடன் தயாராக முடியாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படுவதன் முக்கிய நோக்கமே, கல்வியாண்டின் துவக்கத்தில் இருந்து படித்த பாடங்களை, ஆண்டு இறுதித் தேர்வுக்கு முன், மீண்டும் ஒருமுறை மனப்பாடம் செய்து, எழுதி பார்ப்பதற்காக தான். ஒரு தேர்வு முடிந்து, அடுத்த தேர்வுக்கு தயாராவதற்கு முன், மாணவர்கள் உடல், மன ரீதியாக தயார்படுத்திக் கொள்வதற்காக, விடுமுறை அளிக்கப் படுகிறது. இந்த ஆண்டு தேர்வு முடிந்த பிறகு, விடுமுறை விடுவதற்கு பதிலாக, இடையிலேயே 10 நாட்கள் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதனால், மாணவர்கள் விடுமுறையை நிம்மதியாக கழிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதோடு, 10 நாட்களும் அவர்கள் தேர்வுக்கு பயனுள்ள முறையில் தயார் ஆவார்களா என்பதும் சந்தேகமே. இது போன்ற செயல்களால் மாணவர்களுக்கு தேவையில்லாத மன அழுத்தம் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, மாவட்ட கல்வி அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த ஆண்டு முதல், முப்பருவ கல்வித் திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளதால், பாடச் சுமை அதிகரித்து உள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் பாடத்தை நடத்தி முடிக்க வேண்டி உள்ளதால், விடுமுறை நாட்களை குறைக்கும் விதமாக, இம்முடிவு மேற்கொள்ளப்பட்டு உள்ளது” என்றார்.

>>>பல்கலை., வாகனங்களை ஜப்தி செய்ய மாணவர்கள், பொதுமக்கள் எதிர்ப்பு

நில உரிமையாளர்களுக்கு, கூடுதல் இழப்பீடு தொகை வழங்கும் விவகாரத்தில், பாரதியார் பல்கலைக்கழக வாகனங்களை ஜப்தி செய்ய, நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், மாணவர்கள், பொதுமக்களின் எதிர்ப்பால், ஜப்தி செய்ய சென்றவர்கள், நடவடிக்கை எடுக்க முடியாமல் திரும்பினர்.
கடந்த, 1982ம் ஆண்டு, கோவையில் பாரதியார் பல்கலை அமைக்க, தொண்டாமுத்தூர், வடவள்ளி பகுதியைச் சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் நிலம் பெறப்பட்டது. ஆனால், நில உரிமையாளர்களுக்கு, குறைந்தளவே இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கூடுதல் தொகை வழங்கக் கோரி வலியுறுத்திய போதும், நிர்வாகம் கண்டுகொள்ளாததால், வடவள்ளி, மருதாபுரத்தைச் சேர்ந்த ரங்கப்பமுதலியார் மற்றும் இவரது மகன்கள் குருகேசன், 71, மாரியப்பன், 65, ஆகியோர், 2009ம் ஆண்டு, கோவை இரண்டாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். கடந்த ஜூலை, 27ம் தேதி நடத்தப்பட்ட விசாரணையில், இவர்களுக்கு, 40 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. பல்கலை நிர்வாகத்திடம் கோர்ட் உத்தரவு சமர்பிக்கப்பட்ட நிலையிலும், உத்தரவை அமல்படுத்தாததால், வழக்கு தொடுத்தவர்கள், மீண்டும் கோர்ட்டில் மனு செய்தனர். விசாரணையில், பல்கலைக்குச் சொந்தமான, 11 வாகனங்களை ஜப்தி செய்ய, நீதிபதி சந்திரன் உத்தரவிட்டார். கோர்ட் உத்தரவுப்படி, வழக்கறிஞர்கள் விஜயகுமார், திருஞான சம்பந்தம், ஜப்தி அலுவலர்கள் மற்றும் வழக்குத் தொடர்ந்தவர்கள், பாரதியார் பல்கலைக்கு நேற்று சென்று, "வாகனங்களை ஜப்தி செய்ய வேண்டும்" என்ற கோர்ட் உத்தரவைக் காட்டி நடவடிக்கைக்கு முயன்றனர். ஆனால், பல்கலை மாணவர்களும், பொதுமக்களும் எதிர்ப்புத் தெரிவித்து, வளாகத்தில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், ஜப்தி செய்ய சென்றவர்கள், "கோர்ட்டில் முறையிட்டு, போலீஸ் பாதுகாப்புடன் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என, தெரிவித்து, நடவடிக்கையை மேற்கொள்ள முடியாமல் திரும்பிச் சென்றனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Attention Sabarimala Devotees - Devasam Board Notice

  சபரிமலை பக்தர்கள் கவனத்துக்கு - தேவசம் போர்டு அறிவிப்பு சபரிமலை செல்லும் பக்தர்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைக...