கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பொதுத்தேர்வு பணிகள் துவங்கின: நவ. 30க்குள் இறுதிப்பட்டியல்

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு பணிகளை, தேர்வுத்துறை துவக்கியுள்ளது. பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் பெயர் உள்ளிட்ட முழு விவரங்கள் அடங்கிய பட்டியலை, இம்மாதம், 30ம் தேதிக்குள், தேர்வுத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், மார்ச் முதல் வாரம் துவங்கிவிடும். செய்முறைத் தேர்வுகள், பிப்ரவரி, முதல் வாரத்தில் துவங்கி, 20ம் தேதி வரை நடக்கும். பிப்ரவரியில் செய்முறைத் தேர்வை நடத்துவதற்கு வசதியாக, ஜனவரி, 15ம் தேதிக்குள், அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடிக்க வேண்டும். இதனால், தேர்வுக்கான ஏற்பாடுகளை, தேர்வுத்துறை முழுவீச்சில் செய்து வருகிறது. பொதுத்தேர்வை எழுதும் மாணவ, மாணவியரின் பெயர், பள்ளி, குரூப் விவரம், தேர்வெழுதும் பாடங்கள், கல்வி மாவட்டம், வருவாய் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் அடங்கிய பட்டியல்கள் தயாரிக்கும் பணிகள், மாவட்ட வாரியாக, விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்தப் பணிகளை, இம்மாதம், 30ம் தேதிக்குள் முடித்து, பட்டியல்களை ஒப்படைக்க வேண்டும் என, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, தேர்வுத்துறை வட்டாரங்கள் கூறியதாவது: மாணவ, மாணவியர் பெயர் பட்டியல், விரைவில், மாவட்டங்களில் இருந்து வர ஆரம்பித்துவிடும். இம்மாத இறுதியில், எத்தனை பேர், பொதுத்தேர்வை எழுதுகிறார்கள் என்ற விவரம் தெரிந்துவிடும். பிளஸ் 2வை பொறுத்தவரை, முந்தைய தேர்வை, 7.56 லட்சம் பேர் எழுதினர். வரும் தேர்வில், கூடுதலாக, 30 ஆயிரம் பேர் முதல், 40 ஆயிரம் பேர் வரை எழுதுவர் என, எதிர்பார்க்கிறோம் இவ்வாறு, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. முந்தைய பிளஸ் 2 தேர்வுகள், 1,974 மையங்களில் நடந்தன. புதிய தேர்வு மையங்களுக்கு அனுமதி கோரி, பள்ளி நிர்வாகங்கள், தேர்வுத்துறையிடம் விண்ணப்பித்து வருகின்றன. 100 மையங்கள் வரை, புதிதாக அனுமதிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. பத்தாம் வகுப்பை பொறுத்தவரை, முந்தைய தேர்வை, 10.84 லட்சம் பேர் எழுதினர்; 3,033 மையங்களில், தேர்வுகள் நடந்தன. வரும் தேர்வில், 11.20 லட்சம் பேர் வரை, இத்தேர்வை எழுதுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. சமச்சீர் கல்வி திட்டம் அமல்படுத்துவதில் கால தாமதம் ஏற்பட்டதால், மார்ச் இறுதி வாரத்தில் துவங்க வேண்டிய தேர்வு, ஏப்ரல் 4ம் தேதி, 23ம் தேதி வரை நடந்தது. இந்த அட்டவணை, வரும் பொது தேர்வுக்கு பொருந்தாது எனவும், வழக்கம்போல், மார்ச், 20ம் தேதிக்குப் பின் துவங்கி, ஏப்ரல், 10 தேதிக்குள், தேர்வு முடிவடையும் வகையில், அட்டவணை இருக்கும் எனவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

>>>கல்வி கடன் விண்ணப்பங்கள்: வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ கண்டிப்பு

கல்விக் கடன் கோரும் மாணவர்களின் விண்ணப்பங்களை, தொழில்நுட்ப காரணங்களுக்காக நிராகரிக்க கூடாது என, வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, சர்வீஸ் ஏரியா எனப்படும் வங்கியின் செயல்பாட்டு வரையறை எல்லைக்குள் வராத மாணவர்களுக்கு வங்கிக் கடன் வழங்குவதில் தயக்கம் காட்டக் கூடாது என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. கல்விக்கடன் கோரி, நாடு முழுவதும் ஏராளமான மாணவர்கள், வங்கிகளில் விண்ணப்பிக்கின்றனர். சம்பந்தபட்ட வங்கியின், "சர்வீஸ் ஏரியா"வுக்குள் வசிக்காத, மாணவர்களின் விண்ணப்பங்கள், வங்கிகளால் நிராகரிக்கப்படுகின்றன. சில ஆண்டுகளாக, இதுபோல், ஏராளமான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, புகார்கள் குவிந்ததை அடுத்து, ரிசர்வ் வங்கி நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில், தொழில்நுட்ப காரணங்களை காட்டி, மாணவர்களின் கல்வி கடன் விண்ணப்பங்களை நிராகரிக்க கூடாது. குறிப்பாக, சம்பந்தபட்ட வங்கிகளின், "சர்வீஸ் ஏரியா"வுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்காத மாணவர்களுக்கு, வங்கிகளால், கல்வி கடன் மறுக்கப்படுவது, சரியான நடைமுறை அல்ல. வங்கிகளின்,"சர்வீஸ் ஏரியா"வுக்கு வெளியில் வசிக்கும் மாணவர்களுக்கும், கல்விக்கடன் வழங்க வேண்டும். வங்கிகளை பொறுத்த வரை, "சர்வீஸ்  ஏரியா" என்பது, அரசு மேற்கொள்ளும் திட்டங்களுக்கு தான் பொருந்தும்; மாணவர்களின் கல்வி கடன் விஷயத்தில், இந்த நடைமுறையை பின்பற்றக் கூடாது. இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>>தேர்வுத்துறை பணியாளர்களுக்கும் ஆசிரியர் பணி வழங்க கோரிக்கை

கல்வித்துறையில், ஆசிரியர் தகுதி வாய்ந்த பணியாளர்களுக்கு, ஆசிரியர் பணி வழங்குவது போல், தேர்வுத்துறை ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என, ஆசிரியர் தகுதி வாய்ந்த பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளிக் கல்வித்துறை, தொடக்க கல்வித்துறையில், ஆசிரியர் அல்லாத பணிகளில் வேலை பார்க்கும் ஊழியர்களில், பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் தகுதி உடையவர்களுக்கு, 2 சதவீதம் அளவில், ஆசிரியர் பணி வழங்கப்படுகிறது. இவ்வாறாக, பல ஊழியர்கள், ஆசிரியராக பணி மாறுதல் பெறுகின்றனர். இந்த வாய்ப்பு, தேர்வுத்துறை ஊழியர்களுக்கு மட்டும் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர் தகுதியுடன் பலர், தேர்வுத் துறையில், சாதாரண நிலையில் பணிபுரிந்து வருகின்றனர்.
தேர்வுத்துறை ஊழியர்கள் சிலர் கூறியதாவது: பள்ளிக் கல்வித்துறை அமைச்சகத்தின் கீழ் தான், தேர்வுத்துறையும் வருகிறது; இதர கல்வித் துறைகளும் வருகின்றன. அப்படியிருக்கும் போது, கல்வித்துறை ஊழியர்களுக்கு மட்டும், ஆசிரியர் பணி வாய்ப்பு வழங்கி, எங்களுக்கு மறுப்பது, எந்த வகையில் நியாயம் என, தெரியவில்லை. தகுதி வாய்ந்த தேர்வுத்துறை ஊழியர்களுக்கும், ஆசிரியர் பணி வழங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். தேர்வுத்துறை ஊழியர்களின் கோரிக்கை குறித்து, பள்ளிக்கல்வி வட்டாரங்கள் கூறுகையில், "இந்த விவகாரத்தில், தமிழக அரசு தான் முடிவு எடுக்க வேண்டும்" என, தெரிவித்தன.

>>>அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு காலவரையற்ற விடுமுறை

நிதி நெருக்கடி காரணமாக தவித்து வரும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நடக்க இருந்த தேர்வுகள் அனைத்தும் மறு தேதியின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக துணைவேந்தர் ராமநாதன் கூறியதாவது: நிதி நெருக்கடி காரணமாக தற்போது பல்வேறு தகவல்கள் ஊழியர்கள் மத்தியில் புரளியாக பேசப்படுகிறது. நிர்வாகத்தில், கண்டிப்பாக ஆள் குறைப்பு இல்லை. நிதி நிலை மோசமாக இருப்பதால், சம்பளம் கொடுப்பதில், சிக்கல் இருந்து வருகிறது. சம்பளம் குறைப்பது குறித்து, நான் மட்டுமே முடிவு செய்ய முடியாது. தற்போது எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது. இன்று முதல், பல்கலைக்கழகத்திற்கு காலவரையற்ற விடுமுறை விடப்படுகிறது. மேலும் ஹாஸ்டலில் தங்கியுள்ள மாணவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடக்க இருந்த தேர்வுகள் அனைத்தும் மறு தேதியின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஊழியர்கள் மன வேதனை அடைந்துள்ள நிலையில், தீபாவளி பண்டிகை வருவதால், குடும்பத்தினருக்கு புத்தாடை வாங்கவோ, பட்டாசு வாங்கவோ ஆர்வம் இல்லாமல் இருந்து வருகின்றனர்.
பல அறிஞர்களை உருவாக்கிய பல்கலை : கல்விப் பணியில் ஆர்வம் கொண்ட அண்ணாமலை செட்டியார், 1920ம் ஆண்டு, கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில், மீனாட்சி கல்லூரி துவங்கினார். பின்னர் படிப்படியாக வளர்ச்சியடைந்து, 1928ல், அண்ணா பல்கலைக்கழக சட்டத்தின்படி, 1929ம் ஆண்டு, ஒருங்கிணைந்த பல்கலைக்கழகமாக, தமிழக அரசின் நிதி உதவியுடன் மாறியது. கல்வியில் பின்தங்கிய தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக துவங்கப்பட்ட இப்பல்கலைக்கழகம், பல அறிஞர்கள், விஞ்ஞானிகள், கல்வி மேதைகளை உருவாக்கியது. இங்கு படித்தவர்கள், உலக அளவில் பல துறைகளில், மிக முக்கிய பொறுப்புகள் வகித்து வருகின்றனர். பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த, பல லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். தற்போது, 17 ஆயிரத்து 609 ஊழியர்கள், நேரடியாகவும், பல ஆயிரக்கணக்கான ஊழியர்கள், மறைமுகமாகவும் பணியாற்றி வருகின்றனர்.

>>>கல்வித்துறை அதிகாரிகளுக்கு எதிரான வழக்கில் முடிவுக்கு வந்தது

அரசு பள்ளிகளில் பணியாற்றும், 600க்கும் மேற்பட்ட, பகுதி நேர கடைநிலை ஊழியர்களை, பணி வரன்முறை செய்ய, அரசாணை பிறப்பித்ததைத் தொடர்ந்து, பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுக்கு எதிரான, கோர்ட் அவமதிப்பு வழக்கை, சென்னை ஐகோர்ட் முடித்துக் கொண்டது. தமிழகத்தில், பல மாவட்டங்களில் உள்ள, அரசு பள்ளிகளில், பகுதி நேர, தினக்கூலி ஊழியர்கள், பலர் பணியாற்றுகின்றனர். தங்களை பணிவரன்முறை செய்யக் கோரி, 600க்கும் மேற்பட்டோர், ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்தனர். இம்மனுக்கள் மீது, 2010ம் ஆண்டு, டிசம்பரில், ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது. ஊழியர்களின் மனுக்களை பரிசீலித்து, உத்தரவுகளை பிறப்பிக்குமாறு, பள்ளி கல்வித் துறைக்கு உத்தரவிடப்பட்டது. உத்தரவு அமல்படுத்தவில்லை எனக் கூறி, பள்ளி கல்வித் துறைச் செயலர், பள்ளி கல்வி இயக்குனர், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு எதிராக, கோர்ட் அவமதிப்பு வழக்கு, தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கை, நீதிபதி ஜோதிமணி (தற்போது ஓய்வு பெற்றுவிட்டார்) விசாரித்தார். அவர் பிறப்பித்த உத்தரவு: ஐகோர்ட் உத்தரவுப்படி, பணி வரன்முறை செய்து, கடந்த அக்., 3 ல் தேதி, பள்ளி கல்வித் துறை, உத்தரவு பிறப்பித்துள்ளது. பணப் பலன்கள் வழங்கப்படும் என, அரசு உத்தரவிலும், கூடுதல் அரசு பிளீடரின் வாதத்திலும், தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்கிறேன். கோர்ட் உத்தரவை அமல்படுத்தும் விதமாக, அட்வகேட்-ஜெனரல் நவநீதகிருஷ்ணன், கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய்காந்தி, எடுத்த நடவடிக்கைகளை, இந்த கோர்ட் பாராட்டுகிறது. இவ்வாறு, நீதிபதி ஜோதிமணி உத்தரவிட்டுள்ளார்.

>>>வாழ்வில் வெற்றியடைய விரும்பினால்...

எத்தனை புற அம்சங்கள் இருந்தாலும், தனக்கான எதிர்காலத் துறையைத் தேர்ந்தெடுப்பதில், ஒரு மாணவர், தன் விருப்பம் மற்றும் உள்ளார்ந்த திறனுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் நாம் நினைத்தப்படி திருப்தியான வாழ்க்கையை வாழ முடியும். ஆனால், தனக்கான ஒரு எதிர்கால தொழில்துறையைத் தேர்ந்தெடுப்பது, ஒவ்வொரு மாணவருக்கும் பெரிய சவாலாகவே எப்போதும் திகழ்கிறது. ஏனெனில், பலரால் விரும்பப்படுவது, பலரால் பரிந்துரைக்கப்படுவது, வருமானம் அதிகம் வருவது, பல கல்வி நிறுவனங்கள் குறிப்பிட்ட துறை சார்ந்த படிப்பிற்கே முக்கியத்துவம் கொடுப்பது போன்ற நெருக்கடியான அம்சங்களைத் தாண்டி, ஒரு மாணவர், தனது விருப்பம் மற்றும் தன்னுடைய பிறவித் திறமை ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு துறையை தேர்வு செய்வதென்பது சவாலான மற்றும் மனோதிடம் தேவைப்படும் ஒரு செயல்பாடாகும்.
இதுதொடர்பான சில ஆலோசனைகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.
விருப்பமே முக்கியம்
ஒருவர் தனிப்பட்ட முறையில் வாழும் சந்தோஷமான மற்றும் திருப்தியான வாழ்க்கையானது, அவரது பணி திருப்தியையே பெரிதும் சார்ந்துள்ளது. தான் செய்யும் பணியை விரும்பி மேற்கொள்ளும் ஒருவர், தனது வாழ்க்கையையும் விரும்புகிறார். நீங்கள் விரும்பித் தேர்ந்தெடுக்கும் பணியானது, வருமானம் குறைந்த ஒன்றாகவும் இருக்கலாம். வருமானம் குறைவு என்பதற்காக ஒருவரின் இயல்பார்ந்த விருப்பத்தை மாற்றிக் கொள்ளுதல் என்பது கடினம். வேண்டாத வேலையும்கூட. வருமானத்தைப் பெருக்குவதற்கு வேறு மாற்று வழிகளைக்கூட உருவாக்கிக் கொள்ளலாம். ஏனெனில், பணத்தால் மட்டுமே ஒருவருக்கு சந்தோஷத்தைக் கொடுத்துவிட முடியாது. எனவே, பணத்தின் அடிப்படையில் மட்டுமே, வருங்காலத் தொழிலை தேர்வு செய்வதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில், பலவிதமான உளவியல் சிக்கல்களை எதிர்கொள்வதோடு, இடையிலேயே தொழிலை மாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டு, காலங்கள் வீணாகும் சூழ்நிலை ஏற்படும்.
உள்ளார்ந்த திறன்
ஒருவர் பிறப்பிலேயே, மரபுவழியில் பல உள்ளார்ந்த ஆற்றல்களைப் பெற்றிருப்பார். ஒருவருக்கு வரலாறு, தத்துவம், அரசியல் உள்ளிட்ட விஷயங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அதைப் புரிந்துகொள்வதும் அவருக்கு எளிது. சிலருக்கு இலக்கியம் என்றால் உயிர். சிலருக்கு தொழில்நுட்பம் என்றாலே அலாதி விருப்பம். சிலருக்கோ, மருத்துவ ஆராய்ச்சியில் ஆர்வம். இப்படி, பலவாறாக இருக்க, இந்த சமூகம் பல சமயங்களில் அதைப் புரிந்துகொள்வதில்லை. பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் இயல்பாற்றலை அறியாமலேயே, சமூகத்தில், வருமானத்தின் பொருட்டு, பிரபலமாக இருக்கும் சில படிப்புகளில் சேரச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள் (உதாரணம் - மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகள்). விருப்பமில்லாத மற்றும் உள்ளார்ந்த ஆற்றல் இல்லாத துறைகளில் ஈடுபடுபவர்கள், எதையும் சாதிக்க முடியாமல், வாழ்க்கையை வெறுமனே வாழ்ந்துவிட்டு போய்விடுகிறார்கள். எனவே, பெற்றோர்கள் கொஞ்சம் யோசித்து செயல்பட வேண்டும்.
இலக்கை நிர்ணயித்தல்
லட்சியத்தை அடைய, இலக்கு நிர்ணயம் செய்வதென்பது, ஒரு மிகுந்த முக்கியத்தும் வாய்ந்த செயல்பாடாகும். சரியான இலக்கின் மூலமே, நமது கனவை நனவாக்க முடியும். உலகின் மிகப்பெரிய சாதனையாளர்கள் அனைவரும், சரியான ஒரு இலக்கை நிர்ணயம் செய்து, அதன்படி செயல்பட்டே தங்களின் லட்சியத்தை அடைந்தார்கள். இலக்கு நிர்ணயித்தல் என்பது, விரிவான செயல்திட்டம் வகுத்தலாகும். லட்சியத்தை அடைவதற்கான வழிமுறைகள், அதற்கான காலஅளவு, இன்னின்ன காலத்தில் இன்னின்ன முயற்சிகள், தேவைப்படும் மாற்றங்கள், சரியான நபர்களின் ஆலோசனைகள், ஏற்படும் தடைகளை களைவதற்கான வழிமுறைகள், சோர்ந்து போகாமல் இருப்பதற்கு தேவையான மனோதிடத்தை தக்கவைப்பதற்கான ஆலோசனைகளைப் பெறுதல், லட்சியத்தை அடைவதற்கான முழு காலஅளவு போன்ற அனைத்து விஷயங்கள் பற்றியும் திட்டமிட்டு முடிவெடுத்தலே இலக்கு நிர்ணயித்தலாகும். தெளிவான முறையில் இலக்கு நிர்ணயித்தப் பின்னர், தாமதமின்றி செயல்படத் தொடங்க வேண்டும்.
எதுவும் எளிதல்ல...
நீங்கள் ஒரு லட்சியத்தை நிர்ணயித்து, அதை அடைவதற்கான செயல்பாட்டில் ஈடுபடத் தொடங்குகையில், உங்களுக்கான பயணம் பெரும்பாலும் இலகுவானதாக இருக்காது. பலவிதமான தடைகள், மன உளைச்சல்கள், பலரின் எதிர்மறை கருத்துக்கள், உடலியல் உபாதைகள், திட்டமிட்ட காலத்தைவிட, அதிக காலம் செலவாதல், எதிர்பார்த்த எளிய வாய்ப்புகள் கிடைக்காமல் போதல் போன்ற எத்தனையோ தடைகளை எதிர்கொள்ள நேரிடும். ஆனால் அதற்கெல்லாம் சோர்ந்துவிட்டால், நிச்சயம் நினைத்ததை அடைய முடியாது. உங்களின் நண்பர்கள் ஜாலியாக பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கையில், நீங்கள் படிக்க வேண்டியதிருக்கலாம். ஆனால் அந்த ஜாலி நிரந்தரமல்ல என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். எந்த லட்சியமும் உடனடியாக அடையப்பட்டதல்ல. பல நாள் முயற்சியில், பல ரணங்களுடன் அடையப்பட்டவையே. பல சாதனையாளர்களின் பேட்டிகளைப் படிக்கையில் இதனை நாம் அறிந்து கொள்ளலாம். ஒவ்வொரு துறையில் சாதனைப் புரிந்தவர்களும் தாண்டி வந்த தடைக்கற்கள் பல. பள்ளிப் படிப்பை முடிக்கவே சிரமப்பட்டவர்கள் ஐஏஎஸ் ஆனதுண்டு. அனைத்து வாய்ப்புகளும் கிடைத்தவர்கள், கோட்டை விட்டதுமுண்டு. தளராத மனவுறுதியுடன், விடாத முயற்சியை மேற்கொள்பவரே, இறுதியில் வெற்றியாளராக ஜொலிப்பார் என்பதே உலக உண்மை. இதை உணர்ந்தவருக்கு கவலையில்லை.

>>>பிசியோதெரபிஸ்ட் பணியில் அருந்ததியருக்கு இடஒதுக்கீடு

பிசியோதெரபிஸ்ட் நியமனத்தில், அருந்ததியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கில், ஒரு இடத்தை காலியாக வைத்து, 5 பேரை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரைத்து, தகுதியான ஒருவரை நியமிக்க, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. மதுரை ஜெயந்தி மீனாம்பிகை, தாக்கல் செய்த மனு: கிராமப்புற மருத்துவ சுகாதார பணிகள் துறையில் பிசியோதெரபிஸ்ட் கள் (இயன்முறை மருத்துவர்) 15 பேர் பணி நியமனத்திற்கு, தொழிற்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகம் 79 பேரை பரிந்துரைத்தது. கல்வி, வேலைவாய்ப்பில் அருந்ததியருக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்க வேண்டும் என 2009 ஏப்.,29 ல் அரசு உத்தரவிட்டது. இதன்படி, "பிசியோதெரபிஸ்ட்'கள் நியமனத்தில், அருந்ததியருக்கு 3 சதவீத இடஒதுக்கீடு அளிக்கவில்லை. வேலைவாய்ப்பு அலுவலகத்தில், 2005 ஜூலை 20 வரை (கட்-ஆப்) பதிவு செய்த ஆதிதிராவிடர்களுக்கு, முன்னுரிமை வழங்கப்பட்டது. அருந்ததியர்களுக்கு அவ்வாறு தேதி நிர்ணயிக்கவில்லை. அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு செய்திருந்தால், எனக்கு பணி கிடைத்திருக்கும். பணி நியமனத்தில், எனது பெயரை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நீதிபதி எஸ்.மணிக்குமார் முன், மனு விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல், பிசியோதெரபி படித்தவர்களில், அருந்ததியர் 25 பேர் மட்டும், மதுரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். அதில், பதிவு மூப்பில் மனுதாரர் 2 வது இடத்தில் உள்ளார் என்றார். இதையடுத்து நீதிபதி  கூறியதாவது:  வேலைவாய்ப்பு அலுவலகத்தில், ஆதிதிராவிடர்களில் அருந்ததியர் பிரிவு என தனித்து காட்டவில்லை என, அரசு தரப்பே ஒத்துக்கொள்கிறது. "பிசியோதெரபிஸ்ட்' பணி நியமன தேர்வு நடைமுறை 2010 ல் துவங்கிவிட்டது. அரசு விதிகள்படி, இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படவில்லை. ஒரு பணி இடத்தை அருந்ததியர் பிரிவை சேர்ந்தவருக்கு உள் ஒதுக்கீடு முறையில், வழங்கியிருக்க வேண்டும். ஒரு பணி இடத்தை காலியாக வைத்திருக்க வேண்டும். தகுதியான 5 பேரை பரிந்துரைத்து அதன் அடிப்படையில், ஒருவரை 2 மாதங்களுக்குள், அரசு தேர்வு செய்ய வேண்டும் என, உத்தரவிட்டார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

LIC Website Wholely Changed to Hindi Language - “Should LIC give up business and impose Hindi..?” - Strengthening condemnations

 LIC Website முழுமையாக இந்தி மொழிக்கு மாற்றம் - “LIC வணிகத்தை காவு கொடுத்தாவது இந்தியை திணிக்க வேண்டுமா..?” - வலுக்கும் கண்டனங்கள்... LIC We...