கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>கூகுள் டூடுல் போட்டியில் சண்டிகர் மாணவர் வெற்றி!

தேசிய குழந்தைகள் தினத்தையொட்டி, கூகுள் இந்தியா நடத்திய 'கூகுள் டூடுல்' போட்டியில் சண்டிகர் மாணவர் அருண் குமார் யாதவ் வெற்றி பெற்றார்.
இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14-ல் கூகுளின் இந்திய வலைத்தளப் பக்கத்தின் மாணவர் அருண் குமாரின் படைப்பில் உருவான டூடுல் வெளியாகும்.

உலக அளவில் சிறப்பு தினங்களையும், தலைவர்கள் மற்றும் வரலாற்று நாயகர்களின் பிறந்த தினங்களையும் கூகுள் தனது வலைப்பக்கத்தில் சிறப்பிக்கும். கண்ணைக் கவரும் அம்சங்கள்கொண்ட அந்தப் பக்கங்களே கூகுள் டூடுல் எனப்படுகிறது.

நடப்பு ஆண்டின் குழந்தைகள் தினத்தையொட்டி, இந்திய மாணவர்களுக்கு கூகுள் இந்தியா ஒரு போட்டியை வைத்தது. டூடுல் ஃபார் கூகுள் என்பது அந்தப் போட்டி. அதன் தலைப்பு - 'வேற்றுமையில் ஒற்றுமை'.

இந்தப் போட்டியில் இந்தியா முழுவதும் 60 நகரங்களைச் சேர்ந்த 2,00,000 சிறுவர், சிறுமிகள் தங்கள் கற்பனையில் டூடுல்களை வரைந்து அனுப்பினர்.

டெல்லியில் உள்ள ரயில் அருங்காட்சியகத்தில் திங்கட்கிழமை வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

இதில், சண்டிகரைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர் அருண் குமாரின் டூடுல், குழந்தைகள் தினத்தன்று கூகுள் இந்தியாவில் வெளியிட தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது. கால்பந்து வீரர், கதகளி நடனக் கலைஞர், மயில், விவசாயி மற்றும் பூக்களைக் கொண்டு கூகுள் டூடுலை அவர் கண்ணைக்கவரும் வகையில் டூடுலை உருவாக்கினார்.

மேலும், கோழிக்கோடைச் சேர்ந்த வாசுதேவன் தீபக், பெங்களூரைச் சேர்ந்த ஷ்ர்வயா மற்றும் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ப்ரீத்தம் பால் ஆகிய மூன்று மாணவர்களும் வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

பிரபல கார்ட்டூனிஸ்ட் அஜித் நினான் மற்றும் நடிகர் போமன் ஹிரானி ஆகியோர் நடுவர் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

''குழந்தைகளின் படைப்பாற்றலை ஊக்கப்படுத்தும் வகையில் கடந்த 4 ஆண்டுகளாக நாங்கள் கூகுள் டூடுல் போட்டிகளை நடத்தி வருகிறோம். கூகுள் மூலமாக விழிப்பு உணர்வும் மேற்கொண்டு வருகிறோம்," என்றார் கூகுள் இந்தியாவின் துணைத் தலைவரும், நிர்வாக இயக்குனருமான ராஜன் ஆனந்தன்.  

>>>நவம்பர் 14 [November 14]....

நிகழ்வுகள்

  • 1885 - செர்பியா பல்கேரியா மீது போர் தொடுத்தது.
  • 1889 - நெல்லி பிளை என்ற பெண் ஊடகவியலாளர் 80 நாட்களுக்குள் உலகைச் சுற்றி வரும் தனது திட்டத்தை 72 நாட்களுக்குள் வெற்றிகரமாக முடித்தார்.
  • 1918 - செக்கொஸ்லவாக்கியா குடியரசாகியது.
  • 1922 - பிபிசி தனது வானொலி சேவையை ஐக்கிய இராச்சியத்தில் தொடக்கியது.
  • 1940 - இரண்டாம் உலகப் போர்: இங்கிலாந்தில் கவெண்ட்ரி நகரம் ஜேர்மனியரின் குண்டுவீச்சில் பலத்த சேதமடைந்தது. கவெண்ட்ரி தேவாலயம் முற்றாக அழிந்தது.
  • 1956 - ஹங்கேரியில் போர் முடிவுக்கு வந்தது.
  • 1963 - ஐஸ்லாந்து தீவின் அருகில் உள்ள சூர்ட்ஸி என்னும் தீவு வட அட்லாண்டிக் கடலில் எழுந்த எரிமலையால் புதிதாகத் தோன்றியது.
  • 1965 - வியட்நாம் போர்: லா ட்ராங் என்ற இடத்தில் அமெரிக்கப் படைகளுக்கும் வடக்கு வியட்நாம் படைகளுக்கும் இடையில் பெரும் போர் வெடித்தது.
  • 1969 - அப்பல்லோ திட்டம்: அப்போலோ 12 விண்கப்பல் மூன்று விண்வெளி வீரர்களுடன் சந்திரனை நோக்கிச் சென்றது.
  • 1970 - மேற்கு வேர்ஜீனியாவில் அமெரிக்க விமானம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 75 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1971 - மரைனர் 9 செவ்வாய் கோளை சென்றடைந்தது. இதுவே பூமியில் இருந்து வேறொரு கோளின் செயற்கைச் செய்மதியாகச் செயற்பட்ட முதலாவது விண்கலமாகும்.
  • 1975 - மேற்கு சகாராவை விட்டு ஸ்பெயின் விலகியது.
  • 1990 - கிழக்கு ஜெர்மனி மற்றும் மேற்கு ஜெர்மனிகளின் இணைப்பிற்குப் பின்னர் போலந்துக்கும் ஜெர்மனிக்கும் இடையிலான எல்லைகள் வரையறுக்கப்பட்டன.
  • 1991 - நாடு கடந்த நிலையில் வாழ்ந்த கம்போடியாவின் இளவரசர் நொரொடோம் சிஹானூக் 13 ஆண்டுகளின் பின்னர் புனோம் பென் திரும்பினார்.
  • 1996 - டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
  • 2001 - ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலை ஆப்கான் கூட்டுப் படைகள் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தன.

பிறப்புக்கள்

  • 1840 - குளோட் மொனே, பிரெஞ்சு ஓவியர் (இ. 1926)
  • 1889 - ஜவகர்லால் நேரு, இந்தியப் பிரதமர் (இ. 1964)
  • 1930 - எட்வேர்ட் வைட், நாசா விண்வெளி வீரர் (இ. 1967)
  • 1931 - இரா. பெருமாள் ராசு, இந்தியக் கவிஞர்
  • 1954 - காண்டலீசா ரைஸ், ஐக்கிய அமெரிக்காவின் 66வது செயலாளர்
  • 1971 - அடம் கில்கிறிஸ்ற், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்.

இறப்புகள்

  • 1831 - ஹெகல், ஜெர்மன் நாட்டு மெய்யியல் அறிஞர் (பி. 1770)

சிறப்பு நாள்

  • இந்தியா: குழந்தைகள் நாள்.
  • உலக நீரிழிவு நோய் நாள்

>>>சிவன்மலை கோவிலில் பாடபுத்தகம் வைத்து பூஜை பள்ளி கல்வி சிறப்பாகும் என கருத்து

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்துள்ள சிவன்மலை முருகன் கோவிலில், ஆண்டவர் உத்தரவு படி, தற்போது பள்ளி பாட புத்தகம் வைத்து, பூஜை நடக்கிறது. இதனால், நாட்டில் பள்ளிகல்வி சிறப்பாக இருக்கும் என, பக்தர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். நாட்டில் எந்த முருகன் கோவிலிலும் இல்லாத சிறப்பு, சிவன்மலை முருகன் கோவிலில் உண்டு. இங்கு மூலவராக வீற்றிருக்கும் சுப்பிரமணியர், பக்தர்களின் கனவில் வந்து சொல்லும் பொருளை வைத்து, அதற்கு சிறப்பு பூஜை நடத்துவது, நடந்து வருகின்றன. இதில், தற்போது கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியை சேர்ந்த பழனிசாமி என்பவரது கனவில் வந்த, முருகப்பெருமான், பள்ளி பாடபுத்தகம் வைத்து பூஜிக்க சொல்லியுள்ளார். அவர் கோவில் நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்து, முறைப்படி பூஜை உத்திரவு கேட்டு, கடந்த, 5ம் தேதி முதல், ஐந்தாம் வகுப்பு, ஆங்கிலபுத்தகம் மற்றும் + 1வகுப்பு தமிழ் உரை புத்தகம் வைத்து, பூஜை நடக்கிறது. பள்ளி பாடபுத்தகம் வைத்து பூஜை நடப்பதால், நாட்டில் பள்ளி கல்வி சிறப்பாக இருக்கும், மாணவர்களிடம் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும் என்று, பக்தர்கள் கூறுகின்றனர். இதற்கு முன், விபூதி வைத்து பூஜை நடந்தது. அப்போது நாட்டில் அதிகபடியான கோவில்களில், குடமுழுக்கு நடந்தது. மேலும், மக்களிடம் ஆன்மீகம் ஈடுபாடு அதிகரித்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், ஆற்று நீர் வைத்துப் பூஜை செய்யப்பட்டது, காவிரி பிரச்னை, முல்லை பெரியாறு பிரச்னை தலைதூக்கியது. துப்பாக்கி வைத்து பூஜை செய்தபோது, கார்கில் போர் நடந்தது. அதற்கு முன், மண் வைத்து பூஜை நடந்தது. அப்போது, "ரியல் எஸ்டேட்' தொழில் செழித்து, பூமி விலை பலமடங்கு அதிகரித்தது. ஒரு படி அரிசியும், 100 ரூபாய் பணம் வைத்து பூஜை நடந்தது. அதனால், அரிசி விலை பல மடங்கு உயர்ந்தது, தற்போது உயர்ந்தும் வருகிறது. அடுத்து, 500 ரூபாய் பணம் வைத்து பூஜை நடந்ததால், நாட்டில் பண புழக்கம் அதிகரித்தது. மஞ்சள் பொடி வைத்து பூஜை நடந்த போது, நல்ல விலைக்கு மஞ்சள் விற்பனை ஆனது. தங்கம் வைத்து பூஜை நடந்த போது, தங்கம் விலை பல மடங்கு உயர்ந்தது. தற்போது பள்ளி பாட புத்தகம் வைத்து பூஜை நடப்பதால், பள்ளிகல்வி சிறப்பாக இருக்கும் அல்லது சிக்கலை சந்திக்கும் என, சிவன் மலை முருக பக்தர்கள் பெரிதும் நம்புகின்றனர்.

>>>காவலர், துப்புரவு பணியாளர் பணிக்கு 3,640 பேர் தேர்வு

அரசுப் பள்ளிகளில் பணிபுரிய, காவலர்கள், 1,470 பேர் மற்றும் துப்புரவு பணியாளர்கள், 2,170 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல், தமிழக அரசு இணையதளத்தில்  நேற்று வெளியிடப்பட்டன. அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், காவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களை நியமனம் செய்வது தொடர்பான அறிவிப்பு, ஏற்கனவே வெளியாகி இருந்தது. வேலை வாய்ப்பு பதிவு அடிப்படையில், இவர்கள் அனைவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
இதுகுறித்து, கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகையில்,""இரு பணிகளுக்கும், குறிப்பிட்ட கல்வித்தகுதி நிர்ணயிக்கப்படவில்லை. வேலை வாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில், அனைவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிலர், 5ம் வகுப்பு படித்துள்ளனர். சிலர், 7ம் வகுப்பு படித்துள்ளனர். இவர்கள், விரைவில், பணி நியமனம் செய்யப்படுவர்'' என, தெரிவித்தன. சம்பளமாக, 10 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும் என தெரிகிறது.

>>>ஆசிரியர் காலியிட பட்டியல் வெளியிடப்படுமா?

இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் காலியிட பட்டியலை, தொடக்க கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வி இயக்ககம் வெளியிட வேண்டும் என, டிஇடி, தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் எதிர்பார்க்கின்றனர். டிஇடி, தேர்வு வழியாக, 25 ஆயிரம் ஆசிரியர் தேர்வு செய்யப்படுகின்றனர். ஜூலையில் நடந்த டிஇடி, தேர்வில், 2,448 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அக், 14ல் நடந்த, அடுத்த தேர்வில், 19 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில், முதலில், 2,448 பேர், பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். அடுத்ததாக, 19 ஆயிரம் பேர் நியமனம் செய்யப்படுவர். மேலும், 2,900 முதுகலை ஆசிரியரும், விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர். பாட வாரியாக உள்ள மொத்த பணியிடங்களின் எண்ணிக்கையை, டிஆர்பி, வெளியிடாமல் உள்ளது. மேலும், மாவட்ட வாரியாக உள்ள ஆசிரியர் காலி பணியிடங்களின் பட்டியலை, தொடக்க கல்வித்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை வெளியிடவில்லை. காலியிடங்கள் விவரங்களை, இணையதளத்தில், இரு துறைகளும் வெளியிட்டால், இப்போதே, தங்களுக்கு ஏற்ற இடங்களை தேர்வு செய்ய வசதியாக இருக்கும் என, ஆசிரியர் பணிக்கு தேர்வு பெற்றவர்கள் கருதுகின்றனர். இடைநிலை ஆசிரியர், பதிவுமூப்பு அடிப்படையிலும், இதர வகை ஆசிரியர்கள், மதிப்பெண் அடிப்படையிலும் நியமிக்கப்பட உள்ளனர். அதனால், காலியிட பட்டியலை வெளியிட்டால், தகுதி வரிசைப்படி, எந்த இடங்கள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன என்பதை, இப்போதே தெரிந்துகொள்ள முடியும் எனவும், அவர்கள் தெரிவிக்கின்றனர் வழக்கமாக, கலந்தாய்வு நடக்கும் இடத்தில், ஒரு மணி நேரம் முன்பு, காலி பட்டியல் வெளியிடப்படுகிறது. இதனால், பட்டியலை பார்ப்பதற்கு, தேர்வு பெற்றவர்கள், முட்டி மோதும் நிலை இருக்கிறது. சமீபகாலமாக, "ஆன்-லைன்" வழியாக, கலந்தாய்வு நடந்து வருவது, மேற்கண்ட பிரச்னையை தீர்க்கும் என்றாலும், காலியிட பட்டியலை, இப்போதே வெளியிட வேண்டும் என்பது, தேர்வு பெற்றவர்களின் கோரிக்கையாக உள்ளது
இதுகுறித்து, பள்ளிக் கல்வித்துறை வட்டாரம் கூறுகையில், "காலியிட விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. முழுமையான விவரங்கள் கிடைத்ததும், இணையதளத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தன.

>>>பட்டதாரி ஆசிரியர் தேர்வு: மதிப்பெண் சலுகை கோரி மனு தாக்கல்

பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு, தகுதி தேர்வு மதிப்பெண்ணில் சலுகை வழங்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்குப் பதிலளிக்கும்படி, அரசுக்கு, "நோட்டீஸ்" அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், அனங்கூரைச் சேர்ந்தவர் சங்கீதா. அருந்ததியின சமூகத்தைச் சேர்ந்த இவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு: நான், பிஎஸ்சி, மற்றும் பிஎட், பட்டம் பெற்றுள்ளேன். ஆசிரியர் தகுதி தேர்வில், முதல் தாளில், 57.33 சதவீதம், இரண்டாம் தாளில், 57.33, சதவீதம் பெற்றேன். 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கே, சான்றிதழ் சரிபார்ப்புக்கு கடிதம் அனுப்பப்பட்டது. எனக்கு அனுப்பப்படவில்லை.
இடைநிலை ஆசிரியர்கள், 7,000 பணியிடங்களுக்கு, முதல் தாளில், 10 ஆயிரத்து 397 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்; ஆனால், பட்டதாரி ஆசிரியர்களைப் பொறுத்தவரை, 20 ஆயிரம் இடங்கள் தேவைப்படுகின்றன. 8,849 பேர் தான் தேர்ச்சி பெற்றுள்ளனர். எனவே, பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப, பற்றாக்குறை உள்ளது.
இடஒதுக்கீட்டுப் பிரிவினரைப் பொறுத்தவரை, சலுகைகள் வழங்க, அரசுக்கு அதிகாரம் உள்ளது. பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களைப் பொறுத்தவரை, ஐந்து சதவீத மதிப்பெண் சலுகை வழங்கினால், அதாவது, 60 சதவீதத்துக்குப் பதில், 55 சதவீத மதிப்பெண் எடுத்தால் போதுமானது, என, இருக்க வேண்டும்.
எனவே, தகுதி மதிப்பெண்ணை, 55 சதவீதமாக நிர்ணயிக்கக் கோரி, அரசுக்கு மனு அனுப்பினேன். தகுதி மதிப்பெண்ணில், எனக்கு சலுகை வழங்கி, சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனு, நீதிபதி சந்துரு முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் நீலகண்டன் ஆஜரானார். மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி, அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, நீதிபதி சந்துரு உத்தரவிட்டுள்ளார்.

>>>சிலிண்டருக்கு பணமில்லை: விறகுக்கு மாறும் அங்கன்வாடிகள்

அங்கன்வாடிகளில், எரிவாயு சிலிண்டர் பயன்படுத்த நிதி கிடைக்காததால், சத்துணவு சமைக்கும் பணிக்கு விறகுகளை பயன்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும், 49,499 அங்கன்வாடி மையங்கள், 4940 குறு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.  இங்கு, புகையில்லா சமையலறை உருவாக்கப்பட்டு, சமையல் எரிவாயு இணைப்பு, அடுப்பு, குக்கர் வழங்கப்பட்டது. இதற்குரிய சிலிண்டரை அங்கன்வாடி பணியாளர்களே ரூ1400க்கு வாங்குகின்றனர். இதற்கான பணம், கடந்த ஓராண்டாக வழங்காமல், இழுத்தடிப்பதால், மீண்டும் விறகுக்கு மாறி வருகின்றனர்.
அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாவட்ட செயலாளர் வாசுகி கூறியதாவது: சமையல் எரிவாயு சிலிண்டர் 1400 ரூபாய்க்கு வாங்கப்படுகிறது. வீடுகளுக்கு வாங்கப்படும் அளவு தான் உள்ளது. ஒரு சிலிண்டர் 2 மாதத்துக்கு வரும். விறகுக்கு ஒரு குழந்தைக்கு 19 பைசா ஒதுக்குகின்றனர். அதிகபட்சம் 20 குழந்தைகள் இருந்தால், மாதத்துக்கு 114 ரூபாய். இரண்டு மாதத்துக்கு 228 ரூபாய். அந்த தொகையை கணக்கிட்டு தான் சிலிண்டருக்கு பணம் வழங்கப்படும், என கூறுகின்றனர். இதன்படி பார்த்தால், ஒரு சிலிண்டரை ஓராண்டுக்கு பயன்படுத்த சொல்கின்றனர். அந்த செலவு தொகையையும், ஓராண்டாக வழங்காமல் இழுத்தடிப்பதால், மீண்டும் விறகுக்கு மாறும் நிலை உள்ளது, என்றார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து; 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி - ரயில் சேவை பாதிப்பு

 கடலூர்: பள்ளி வேன் மீது ரெயில் மோதி கோர விபத்து; 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி - ரெயில் சேவை பாதிப்பு கடலூரில் செம்மங்குப்பம் அருகே பள்ளி வ...