ரத்த வங்கி மேலாண்மையை மேம்படுத்த கம்ப்யூட்டர்கள், டேட்டா கார்டுகளை முதல்வர் வழங்கினார்.
இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தன்னார்வ ரத்த தான கொடை திட்டத்தில் தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை
மாநிலமாக திகழ்கிறது. தரமான மற்றும் பாதுகாப்பான ரத்தம் மற்றும் ரத்தக்
கூறுகள், தேவைப்படும் அனைத்து நோயாளிகளுக்கும் உடனடியாக சென்றடைவதை
இத்திட்டம் உறுதி செய்கிறது. தமிழகத்தில் 85 அரசு ரத்த வங்கிகள், 180
தன்னார்வ தனியார் ரத்த வங்கிகள், 9 மத்திய, மாநில நிறுவன ரத்த வங்கிகள் என
மொத்தம் 274 அரசு அங்கீகாரம் பெற்ற ரத்த வங்கிகள் இயங்கி
வருகின்றன.தமிழகம், கடந்த ஆண்டில் 7.11 லட்சம் ரத்த அலகுகளை தன்னார்வ ரத்த
கொடை திட்டத்தின் மூலம் சேகரித்துள்ளது. மேற்கண்ட ரத்த வங்கிகள்
மட்டுமல்லாமல், 196 அரசு மற்றும் 57 தனியார் என மொத்தம் 253 ரத்த சேமிப்பு
மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவைகள் அனைத்தும் ரத்தத்தை பாதுகாக்கவும்,
சேமித்து வைத்து நோயாளிகளின் அவசரகால ரத்த தேவைகளை பூர்த்தி செய்யவும்
அரசின் அங்கீகாரம் பெற்றுள்ளது.
அரசு ரத்த வங்கிகளின் செயல்பாடுகள் வலைதளத்தின்
www.tngovbloodbank.in
மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்த வலைதளம் தன்னார்வ ரத்த
கொடையாளர்கள் தங்கள் கொடை விருப்பத்தை (இ-ரிஜிஸ்ட்ரி) பதிவு செய்வதற்கு
வழிவகை செய்துள்ளது. மேலும், இவ்வலைதளத்தில் உள்ள தன்னார்வ ரத்த கொடையாளர்
விவரங்கள் அரசு ரத்த வங்கிகளின் அவசரகால ரத்த தேவையை பூர்த்தி செய்வதற்கு
உதவியாக உள்ளது.இந்த வலைதளம் அரசு ரத்த வங்கிகளின் ரத்த இருப்பு, ரத்த தான
முகாம் நடைபெறும் நாள் மற்றும் இடம் பற்றிய விவரம், ரத்த தான முகாம்
அமைப்பாளர்களின் தொலைபேசி எண் போன்றவைகளை அனைவரும் அறியும் வண்ணம்
அமைக்கப்பட்டு உள்ளது.
வலைதள ரத்த வங்கி மேலாண்மை முறையை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு
மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில குருதி
பரிமாற்றுக் குழுமம் இணைந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்ட 25
மடிகணினிகளையும், 25 இணையதள இணைப்பான்களையும் (டேட்டா கார்டு) அரசு
மருத்துவ கல்லுரி மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர்களின் பயன்பாட்டிற்காக
முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.இந்த நிகழ்வின்போது, மக்கள் நல்வாழ்வு
மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், மக்கள் நல்வாழ்வு
மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள்
உடனிருந்தனர்.
இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.