கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>GROUP-IV TYPIST COUNSELLING SCHEDULE

>>>வி.ஏ.ஓ., தேர்வு முடிவு வெளியீடு

வி.ஏ.ஓ., தேர்வு முடிவுகள், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில், நேற்று வெளியிடப்பட்டன.வருவாய்த் துறையில் காலியாக உள்ள, 1,870 வி.ஏ.ஓ., பணியிடங்களை நிரப்ப, செப்., 30ல், டி.என்.பி.எஸ்.சி., போட்டித்தேர்வை நடத்தியது. இந்தப் பதவிக்கு, 10ம் வகுப்பு கல்வித்தகுதி என்பதால், ஏழு லட்சத்திற்கும் மேற்பட்டோர், தேர்வை எழுதினர்.இதன் முடிவுகள், தேர்வாணைய இணையதளத்தில் நேற்று வெளியானது. தேர்வு பெற்றவர்களின் பதிவெண்கள், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு பெற்ற அனைவருக்கும், விரைவில், தேர்வாணைய அலுவலகத்தில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்க உள்ளது.

>>> Click here to Download VAO Results.... 

>>>குரூப்-1 தேர்வு தள்ளிவைப்பு - டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு, ஜனவரி, 27ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.செயலர் விஜயகுமார் அறிவிப்பு:துணை கலெக்டர், டி.எஸ்.பி., வணிக வரித்துறை உதவி கமிஷனர், மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ஆகிய பதவிகளுக்கான குரூப்-1 முதல்நிலைத் தேர்வு, வரும், 30ம் தேதி நடக்கும் எனவும், இதற்கு, 6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும், ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
தேர்வுக்கு விண்ணப்பிக்க, 24ம் தேதி வரை, வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதனால், முதல்நிலைத் தேர்வு, ஜனவரி, 27ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், இணையதளத்தில் பதிவு செய்த, இரு நாட்களுக்குள், கட்டணங்களை செலுத்த வேண்டும். இவ்வாறு செயலர் தெரிவித்துள்ளார். 25 காலி பணியிடங்களுக்கு, ஏற்கனவே, 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தற்போது, தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதால், மேலும், 30 ஆயிரம் பேர் வரை விண்ணப்பிக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

>>>கல்வி நிறுவனங்களில் மன நல ஆலோசனை மையங்கள்:நீதிபதி அறிவுறுத்தல்

"ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும், தற்கொலை தடுப்புக்கான மன நல ஆலோசனை மையங்கள் அமைய வேண்டும். தீவிரமாக முயற்சித்தால், மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க முடியும்,'' என, நீதிபதி, பிரபா ஸ்ரீதேவன் பேசினார்.
சர்வதேச தற்கொலை தடுப்புச் சங்கமும், "சிநேகா' தற்கொலை தடுப்புச் சங்கமும் இணைந்து, தற்கொலை தடுப்புக்கான, ஐந்தாவது பசிபிக் மாநாட்டை சென்னையில் நடத்தின. இதில், நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் பேசியதாவது:இந்தியாவில் நிகழும் தற்கொலைகளில், மாணவர்களின் தற்கொலை Œம்பவங்களை சகித்துக் கொள்ள முடியவில்லை. எதிர்காலத்தில், பெரிய அளவில் சாதிக்க இருப்பவர்கள், தற்கொலையை தீர்வாக தேர்ந்தெடுப்பது, துரதிஷ்டமானது.

பள்ளி கல்வியில், எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில், தோல்வி அடையும் மாணவர்கள், தற்கொலை செய்து கொள்கின்றனர். தோல்வி அடைந்தவர்கள், வெற்றி பெறுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதை அவர்கள் அறியாதததே, இதற்கு காரணம்.
அதுமட்டுமின்றி, பெற்றோர்களின் அதிகப்படியான எதிர்பார்ப்பே, மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு காரணமாகும். தங்கள் குழந்தைகள் எப்படியாவது பொறியாளராகவும், டாக்டர்களாகவும் உருவாக வேண்டும் என, பெற்றோர் நினைக்கின்றனர்.
தங்கள் கனவுகளை, பிள்ளைகளின் மீது திணிக்கின்றனர்; இது தவறானது. படிக்கும் மாணவர்கள் அனைவரும், டாக்டர்களாகவும், பொறியாளராகவும் மாற முடியாது என, பெற்றோர்கள் உணர வேண்டும்.

கிராமப்புறங்களில் இருந்து வரும் மாணவர்கள், நகரங்களில் படிக்கும் போது, ஆங்கிலம் தெரியாததால் தற்கொலை செய்கின்றனர். பல ஆலோசனை வழங்கிய பின்னரும், தற்கொலைகள் தொடர்கின்றன.ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும், தற்கொலை தடுப்புக்கான மன நல ஆலோசனை மையங்கள் அமைய வேண்டும். தீவிரமாக முயற்சித்தால், மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க முடியும். கடந்த பத்து ஆண்டுகளாக, நடத்தப்பட்ட ஆராய்ச்சி ஆதாரங்களின்படி, தற்கொலைகள் தடுக்கப்படலாம் என்பது, உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அறிவியல் வல்லுநர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில், விழிப்புணர்வு ஏற்படுத்தினால், தற்கொலைகளை முற்றிலும் தடுக்கலாம்.

தற்கொலை செய்ய முயற்சிக்கிறவர்களை, நமது அரசியல் சட்டம் தண்டிக்கிறது. இதனால், அவர்கள் மேலும், மன அழுத்தத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர்.
எனவே, தண்டனையை மாற்றி, மன நல ஆலோசனை வழங்கும் வகையில், சட்ட திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில், "சிநேகா' தற்கொலை தடுப்புச் சங்கத்தின் தலைவர், நல்லி குப்புசாமி வரவேற்புரை நிகழ்த்தினார். பல்வேறு நாடுகளில் இருந்து, மன நல ஆலோகர்களும், தற்கொலை தடுப்பு சங்கத்தினரும் பங்கேற்றனர்.

>>>"முறைப்படி திருமணம் புரியாத பெண்ணின் வாரிசுகளுக்கும் அரசு ஊழியரின் பண பலன்களை வழங்கலாம்'

"ஏற்கனவே திருமணமான மத்திய அரசு ஊழியர், மற்றொரு பெண்ணை மணந்து, அதன் மூலம் பிறந்த குழந்தைகளுக்கும், ஓய்வூதியம் மற்றும் பணப் பலன்கள் வழங்கப்பட வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை, சமீபத்தில், அனைத்து துறைகளுக்கும் அனுப்பியுள்ள, உத்தர வில் தெரிவித்துள்ளதாவது:முறைப்படி திருமணம் செய்து கொண்ட, அரசு ஊழி யரின் வாரிசுகளுக்குத் தான், அவருடைய பணப்பலன்கள் கிடைக்க வேண்டும் என்பது வழக்கத்தில் உள்ள நிலை.இதில், மாற்றம் செய்யப்பட வேண்டும் என, தொடர்ந்து, பல தரப்பிலிருந்தும் வேண்டுகோள் விடுக்கப்பட்டதன் விளைவாக, மத்திய, சட்டம், நீதித்துறை மற்றும் நிதியமைச்சகம் ஆலோசனை மேற்கொண்டு, மத்திய, சிவில் சர்வீசஸ் (ஓய்வூதிய) விதிகள், 1972ல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, மத்திய அரசு ஊழியரின், ஓய்வூதியம் மற்றும் பணப் பலன்களை, அவருடைய, முறையான திருமண வாரிசுகளுக்கு வழங்கப்படுவது போல, சட்ட அங்கீகாரம் இல்லாத வகையில், மற்றொரு பெண்ணை, அவர் மணந்திருந்தால், அந்தப் பெண்ணின் குழந்தைகளுக்கும், பணப் பலன்கள் பிரித்து கொடுக்கப்பட வேண்டும்.

இரண்டு வகையான வாரிசுகளுக்கும், எவ்வளவு சதவீதம் பிரித்து கொடுக்கப்பட வேண்டும் என்பதை, நிலைமையின் உண்மைத் தன்மையை ஆராய்வதன் மூலமும், விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை பொறுத்தும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளே முடிவெடுத்துக் கொள்ளலாம்.இந்த உத்தரவு, கடந்த மாதம், 27ம் தேதி முதல் தான், அமலுக்கு வந்துள்ளது. எனவே, முந்தைய வழக்குகளுக்கும், கோரிக்கைகளுக்கும், இந்த உத்தரவு செல்லாது. இந்த வசதியை, முந்தைய காலத்திற்கு பயன்படுத்தி, பணத்தை பெற்றுத் தர வேண்டும் என்ற கோரிக்கைகளை, ஏற்க முடியாது.இவ்வாறு, அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>>பி.எப்., சந்தாதாரர்களுக்கு இ - பாஸ்புக் அறிமுகம்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள், தங்கள் கணக்கு விவரங்களை, ஆன்-லைனில் தெரிந்து கொள்ளும் வகையில், இ-பாஸ்புக் சேவை, நேற்று முதல் துவங்கப்பட்டுள்ளது.தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்ட சந்தாதாரர்களுக்கு, அவர்களது கணக்கில் சேர்ந்துள்ள, சந்தா மற்றும் வட்டி விவரங்கள் அடங்கிய ரசீது, ஆண்டுதோறும் வழங்கப்பட்டது. இதை, மின்னணு ரசீதாக பார்க்கும் வசதி, இணையதளம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, ஒவ்வொரு சந்தாதாரரும், தங்கள் மாதாந்திரா கணக்கு விவரங்கள் அடங்கிய, மின்னணு ரசீதை, இ.பி.எப்., இணையதளத்தில் பார்க்க, வசதி செய்யப்பட்டு இருந்தது.

தற்போது, இந்த கணக்கு விவரங்களை, மாதாந்தோறும் டவுன்லோடு செய்து கொள்ளும், இ-பாஸ்புக் வசதியை, மத்திய வருங்கால வைப்பு நிதி கமிஷனர், ஆர்.சி.மிஸ்ரா, நேற்று துவக்கி வைத்தார். இந்த வசதியை, www.epfindia.gov.in இணையதளத்தில் பெறலாம்.தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில், சேர்ந்துள்ள சந்தாதாரர்கள், இந்த இணையதளத்தில், தங்களது போட்டோவுடன் கூடிய அடையாள எண் உள்ள, பான்கார்டு, டிரைவிங் லைசன்ஸ், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு ஆகியவற்றில், ஏதாவது ஒன்றை பதிவு செய்து கொள்ள வேண்டும். பாஸ்வேர்டாக, மொபைல் போன் எண்ணை பதிய வேண்டும்.இவ்வாறு பதிவு செய்த பிறகு, தங்கள் கணக்கு எண்ணை செலுத்தி, பாஸ்புக்கை டவுன்லோடு செய்து கொள்ள முடியும்.

>>>சிம் கார்டு பெறுவது எளிதல்ல

 


 தெருவின் முனைகளில் குடை விரித்து நின்று கொண்டு, ட்ரைவிங் லைசன்ஸ் அல்லது வாக்காளர் அடையாள அட்டை நகல் பெற்றுக் கொண்டு, சிம் கார்டுகளை மொபைல் சேவை நிறுவனங்கள் வழங்கியது ஒரு காலம். இந்த தாராளம் படிப்படியாகக் குறைந்து வந்தது. அண்மையில் அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, சிம் கார்டு பெறுவது எளிதான காரியம் அல்ல என்பது தெளிவாகியுள்ளது. உச்ச நீதி மன்றம் அண்மையில் வெளியிட்ட தீர்ப்பை அடுத்து, அரசு சிம் கார்டு வழங்கும் முறைக்கு கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. நவம்பர் 9 முதல் அமலுக்கு வந்துள்ள இந்த விதிமுறைகளின் படி, சிம் வேண்டும் ஒருவர், அதற்கான ஆவணங்களின் நகல்களை மட்டும் அளித்தால் பெற முடியாது. யாருடைய பெயரில் சிம் கார்டு வழங்கப்படுகிறதோ, அவர் அதனை வழங்கும் மையத்திற்கு நேரில் சென்று வாங்க வேண்டும். அளிக்கப்படும் புகைப்படம் மற்றும் ஆவணங்கள் அவருடையதுதானா என உறுதி செய்யப்படும். நுகர்வோர் பணம் செலுத்தியவுடன், ஏற்கனவே இயக்கப்பட்ட சிம் பெறும் பழக்கம் எல்லாம் இனிமேல் செல்லுபடியாகாது. மேலும், அனைத்து ஆவணங்களை அளித்து, நேரில் சென்று வந்தாலும், துறை ரீதியாக, கொடுக்கப்பட்ட முகவரியில் உறுதி செய்யப்பட்ட பின்னரே, சிம் செயல்படுத்தப்படும். தவறான அல்லது போலியான ஆவணங்களைக் கொடுத்து வாங்கிய சந்தாதாரர் மட்டுமின்றி, வழங்கிய விற்பனை மையமும் சட்ட ரீதியான நடவடிக்கையை எதிர் நோக்க வேண்டியதிருக்கும். புதிதாக சிம் வாங்குவோர் மட்டுமின்றி, ஏற்கனவே சிம் வைத்திருப்போர் குறித்த தகவல்களும் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. பல மாதங்களாகப் பயன்படுத்தப்படாத சிம் கார்டுகள் பதிவு நீக்கப்பட்டு வருகின்றன. மேற்காணும் நடவடிக்கைகள் அனைத்து மொபைல் சேவை நிறுவனங்களுக்கும் பொருந்தும். இதனாலேயே, பல நிறுவனங்களின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 5% அளவிற்கு சராசரியாகக் குறைந்துள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட அரசு ஊழியர் தம்பதி - அதிர்ச்சி சம்பவம்

 ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட அரசு ஊழியர் தம்பதி - நாமக்கல்லில் அதிர்ச்சி சம்பவம் உயிரை மாய்த்துக் கொண்ட சுப்பிரமணி திருச்சி R...