கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>"ஆரம்ப கல்வி மிக முக்கியமானது சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும்' - அப்துல்கலாம்

"ஆரம்பக்கல்வி மிகவும் முக்கியமானது. இதில், தேவையான சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும்,'' என, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வலியுறுத்தினார்.
மாணவ, மாணவர்களின் கேள்விகளுக்கு, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், உற்சாகமாக பதில் அளித்தார்.

மாணவர்களின் கேள்விகளும், கலாம் அளித்த பதில்களும்:

சரண்யா: சீனாவில் உள்ள பல்கலைக்கு சென்று பேசினீர்களே... அங்குள்ள கல்வித்தரம் திருப்தி அளிக்கிறதா?
சீனா வேறு; நாம் வேறு. அவர்களுக்கு ஒரு லட்சியம்; நமக்கும் ஒரு லட்சியம். அங்கு, தொழில்நுட்ப முன்னேற்றம் உள்ளது. 2020ம் ஆண்டில், இந்தியாவும் வளர்ந்த நாடாக மாறும்.

முகமது முஸ்தபா: தற்போதைய கல்வி முறை சிறப்பாக உள்ளதா; மாற்றம் தேவையா?
தற்போதைய கல்வி முறை, ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, மேல்நிலைக்கல்வி என, மூன்று நிலைகளில் உள்ளன. இதில், ஆரம்ப கல்வியில், சீர்திருத்தங்கள் கொண்டுவர வேண்டும். இந்த நிலை, மிகவும் முக்கியமானது. படைப்புத்திறனை உருவாக்கக்கூடிய வகுப்புக்கள், ஆசிரியர்கள் மிகவும் தேவை. இந்த வகை வகுப்புகளும், ஆசிரியர்களும் இருந்தால், ஆரம்பக்கல்வி மிகச்சிறப்பாக இருக்கும்.

ஹெலன் சோனியா: சரித்திரம், ஆங்கிலம், மொழிப்பாடப்பிரிவுகளை மாணவர்கள் ஆர்வம் இல்லாமல் படிக்கின்றனர். மற்ற பாடங்களைப்போன்று, இந்த பாடங்களையும், ஆர்வமுடன் படிக்க என்ன செய்யலாம்?
நானும் தமிழ் வகுப்பில் தான், பத்தாம் வகுப்பு வரை படித்தேன். பாடத்தில் ஆர்வம் ஏற்படுவது, சம்பந்தபட்ட ஆசிரியர் மற்றும் அவரின் கற்பிக்கும் விதத்தை பொறுத்தது இருக்கும். படைப்புத்திறன் மிக்க ஆசிரியர்கள் இருந்தால், ஆர்வம் தானாக வரும்.

தினகரன்: விரைவில் உலகம் அழியும் என்ற ரீதியில், நாளிதழ் ஒன்றில் செய்தி படித்தேன். இது உண்மையா?
சந்திரசேகரன் சுப்பிரமணியன், சந்திரயானைக் கண்டுபிடித்தார்; நோபல் பரிசு பெற்றார். அவர் ஆய்வின்படி, இந்த பூமியும், சூரியனும், 10 பில்லியன் ஆண்டுகள் வரை சுற்றிக் கொண்டே இருக்கும். கவலை வேண்டாம். ஏற்கனவே, 5 பில்லியன் ஆண்டுகள் சுற்றிவிட்டன. இன்னும், 5 பில்லியன் ஆண்டுகள் மீதம் இருப்பதால், இப்போதைக்கு கவலை வேண்டாம்.

வினிதா: நாட்டு மக்களின் வாழ்க்கைத்தர வேறுபாடு, மலைக்கும், மடுவுக்குமாக உள்ளது. ஏழை, ஏழையாகவே இருக்கிறான்; பணக்காரர் பணக்காரராகவே இருக்கின்றனர். இந்த ஏற்றத்தாழ்வு குறையுமா?
இந்தியாவில், 6 லட்சம் கிராமங்கள் உள்ளன. 75 சதவீத மக்கள் அங்கு வசிக்கின்றனர். இந்த ஏற்றத்தாழ்வு, வேறுபாடுகள் எல்லாம், 10 ஆண்டுகளில் குறையும். இவ்வாறு கலாம் பதில் அளித்தார்.

>>>அரசு பொறியியல் கல்லூரிகளில் காலி பணியிடங்களை நிரப்ப ஒப்புதல்

அரசு பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள, 151 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஒப்புதலை, தமிழக அரசு வழங்கியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகளில், 154 உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தன. இதையடுத்து, தொழிற்கல்வி கமிஷனர், இப்பணியிடங்களை தேர்வு மூலம் நிரப்புமாறு, ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு பரிந்துரைத்தார். இந்தாண்டு பிப்ரவரி மாதம், இதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு, ஏப்ரல் மாதம், 22ம் தேதி தேர்வை நடத்தி முடித்தது. அரசு பொறியியல் கல்லூரிகளில், 14 துறைகளின் கீழ் காலிப்பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த தேர்வு முடிவுகள் வெளியிடும் வேளையில், வழக்கு தொடரப்பட்டதை கருத்தில் கொண்டு, தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ள, 151 பேருக்கு, பணி நியமன ஆணை வழங்கும்படி தொழிற்கல்வி கமிஷனருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணை, நேற்று வெளியிடப்பட்ட நிலையில், இந்த பணி நியமன ஆணையானது, சென்னை ஐகோர்ட்டின், இறுதித்தீர்ப்பிற்கு கட்டுப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>>ஐ.ஏ.எஸ்., தேர்வில் மாற்றம் யு.பி.எஸ்.சி., பரிந்துரை

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை தேர்வு செய்வதற்கு நடத்தப்படும், சிவில் சர்வீஸ் தேர்வில் மாற்றம் கொண்டு வர, மத்திய பணியாளர் தேர்வாணையம் அரசுக்கு கருத்து தெரிவித்து உள்ளது,'' என , மத்திய பணியாளர் துறை, இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

ராஜ்யசபாவில், அவர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:சிவில் சர்வீசஸ் தேர்வில், மாற்றம் கொண்டு வருவது தொடர்பாக, யு.ஜி.சி.,யின் முன்னாள் தலைவர் பேராசிரியர், அருண் எஸ்.நிகவேகர் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இக்கமிட்டி, தற்போது நடைமுறையில் உள்ள பிரதான தேர்வில், சர்வதேச நிலைமைகளை அடிப்படையாக கொண்டு மாற்றங்களை கொண்டு வரவேண்டும் என்பது உட்பட, பல்வேறு பரிந்துரை களை அளித்துள்ளன. இந்த பரிந்துரைகள் குறித்து, அரசு எவ்வித முடிவும் எடுக்கவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

>>>நாசா செல்லும் கொடைக்கானல் மாணவர்

திருச்சியில் எம்.ஏ.எம். கல்வி நிறுவனங்கள் சார்பில், பள்ளி மாணவர்களுக்கிடையே நடத்தப்பட்ட திறனறி தேர்வில் முதலிடம் பிடித்த கொடைக்கானல் மாணவருக்கு நாசா விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிடுவதற்கான அனுமதி கிடைத்துள்ளது.
திருச்சியில் எம்.ஏ.எம். கல்வி நிறுவனங்கள் சார்பில், பள்ளி மாணவர்களுக்கிடையே "திறனறி" தேர்வு நடந்தது. இதில்,கொடைக்கானல் சீயோன் மெட்ரிக் பள்ளியில், பிளஸ் 2 படிக்கும், எத்தியோப்பியாவைச் சேர்ந்த மாணவர், அமானுவேல் டிபெபு காஷு முதலிடம் பிடித்தார்.
இவருக்கு, அமெரிக்காவில் உள்ள, நாசா விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட அனுமதியும், அங்கு சென்று வர, 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது.

>>>இந்தியாவின் தேசிய நீர் விலங்கு!

இந்தியாவின் தேசியப் பறவை எது ? இந்தியாவின் தேசிய விலங்கு? சுலபமாக மயில், புலி என்று சொல்லிவிடுவீர்கள். இந்தியாவின் தேசிய நீர் விலங்கு எது தெரியுமா? தெரியாவிட்டாலும் பிரச்சினையில்லை. தெரிந்துகொள்ளுங்கள். இந்தியாவின் தேசிய நீர் விலங்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. ‘டால்பின்’.

கடலில் துள்ளி விளையாடும் டால்பின்களைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். சில பேர் பார்த்தும் கூட இருப்பீர்கள். ராமேஸ்வரத்துக்கு அருகிலிருக்கும் குருசடை தீவுக்கு அருகாக டால்பின்களை நிறைய காண்பதாக மீனவர்கள் சொல்கிறார்கள். . ஏனெனில் மனிதனுக்குப் பிறகு உயிரினங்களில் அதிக பகுத்தறிவோடு வாழும் விலங்கு டால்பின் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். நாய்கள், யானைகள் போன்றே மனிதனுக்கு இணக்கமான நீர்வாழ் உயிரினம் இது.

நம் நாட்டின் தேசிய நீர் விலங்காக அறிவிக்கப்பட்டிருப்பது கடலில் வாழும் டால்பின்கள் அல்ல. நதிநீரில் வாழும் டால்பின்கள். டால்பின்கள் நதிகளிலும் வாழும் ஓர் உயிரினம். இவை கடல் டால்பின்களை ஒப்பிடுகையில் உருவம், அளவு மற்றும் குணத்தில் நிரம்பவே மாறுபடுகிறது.

நதிநீர் மாசுபடுதல் மற்றும் மனித வேட்டைகளின் காரணமாக இந்த உயிரினம் அருகிக் கொண்டே வருகிறது. இந்த வகை டால்பின்களுக்கு பார்வைக் குறைபாடு உண்டு. சிலவற்றுக்கு சுத்தமாக கண்ணே தெரியாது. எனவே ஆபத்து வருவதை அறியாமல் எங்கோ போய் முட்டிக்கொண்டு மரணிக்கின்றன. குறிப்பாக மனிதர்கள் பயன்படுத்தும் படகுகளிலும், மீன்வலைகளிலும் மாட்டிக் கொண்டு உயிரிழக்கின்றன.

இந்தியாவில் சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா ஆகிய வற்றாத நதிகளில் இப்போது நூற்றுக்கும் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே டால்பின்கள் வாழ்கின்றன. 1993ல் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் கங்கையில் மட்டும் அறுநூறும், பிரம்மபுத்ராவில் மட்டும் நானூறும் இருந்தன. கங்கையில் வாழும் டால்பின்கள் ‘சூசு’ (Susu) எனவும், சிந்துவில் வாழும் டால்பின்கள் ‘புலான்’ (Bhulan) என்றும் அழைக்கப்படுகிறது.

இந்திய நதிநீர் டால்பின்கள் பொதுவாக பழுப்பு மற்றும் கருப்பு நிறத்தில், நீண்ட மூக்கோடு, பெரிய தலையோடு காணப்படும். அதிகபட்சமாக எட்டு அடி நீளம். சராசரியாக நூறு கிலோ எடை. மேல் தாடையிலும், கீழ் தாடையிலும் மிகக்கூர்மையான தலா இருபத்தெட்டு பற்கள் உண்டு. இருபுறமும் அகலமான துடுப்பு போன்ற இறக்கைகள் உண்டு. திமிங்கலத்தைப் போலவே இவையும் பாலூட்டி இனம் என்பதால் நுரையீரல் மூலமாகவே சுவாசிக்கிறது. முப்பது முதல் ஐம்பது நொடிகளுக்கு ஒருமுறை நீர்மட்டத்துக்கு மேலே வந்து சுவாசித்துவிட்டு செல்லும். இவற்றின் கர்ப்பக்காலம் ஒன்பது மாதம். புதியதாக பிறக்கும் டால்பின் குட்டிகள் 65 செ.மீ நீளம் இருக்கும். குட்டியாக இருக்கும்போது தாய்ப்பாலும், வளர்ந்த பிறகு சிறுமீன்கள், இறால் போன்றவற்றை உணவாக எடுத்துக் கொள்ளும். நதிநீர் டால்பின்கள் சராசரியாக முப்பத்தைந்து ஆண்டுகள் உயிர்வாழும். பார்வைக் குறைபாடு இவைகளுக்கு இருப்பதால் கடல் டால்பின்களைப் போல பயிற்சியளித்து, மனிதர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியாது. கடல் டால்பின்கள் அமெரிக்க ராணுவத்தில் கூட உளவுப் பணியாற்றுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லா டால்பின்களுக்குமே ஒலியலைகளை (Sonar sense) கிரகித்துக் கொள்ளக்கூடிய தன்மை உண்டு. நீரில் வாழும் பாலூட்டிகளில் டால்பின்கள் மட்டுமே இந்த சிறப்பினைப் பெற்றிருக்கின்றன. ஒலியலைகளை உணர்வதின் மூலமாகவே இவை இரை தேடுகின்றன. டால்பின்களால் 2,00,000 ஹெர்ட்ஸ் அளவுக்கான அல்ட்ரா சோனிக் ஒலியலைகளை ஏற்படுத்த முடியும் (மனிதர்களது காது 18,000 ஹெர்ட்ஸ் அளவுக்கே கேட்கும் சக்தி கொண்டது). பார்வைக் குறைபாட்டை ஒலிகள் மூலமாகவே டால்பின்கள் தவிர்க்கின்றன.

சீனநதி டால்பினான ‘பைஜி’ என்ற உயிரினம் அழிந்துவிட்டதாகவே கூறப்படுகிறது. கடைசியாக ‘பைஜி’யை 2004ஆம் ஆண்டுதான் பார்க்க முடிந்ததாம்.

உலகின் அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றாக இருப்பதால், இவற்றைக் காக்கும் முகமாக ‘தேசிய நீர் விலங்காக’ மத்திய அரசு அறிவிக்க வேண்டுமென்று பீகார் முதல்வர் நிதீஷ்குமார் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இக்கோரிக்கையின் முக்கியத்துவத்தை பிரதமரின் அமைச்சரவை ஏற்றுக்கொண்டதின் அடிப்படையில் டால்பின் அதிகாரப்பூர்வமாக ‘இந்தியாவின் தேசிய நீர் விலங்காக’ மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெய்ராம்ரமேஷால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இனி மீதமிருக்கும் டால்பின்களை காக்கவும், அவை இனப்பெருக்கம் செய்யவும் இனி திட்டங்கள் தீட்டப்படும்.

இந்திய வன உயிரின பாதுகாப்புச் சட்டம் 1972ன் படி மாமிசத்துக்காகவோ அல்லது வேறு எதற்காகவோ இந்த டால்பின்களை வேட்டையாடும் பட்சத்தில், வேட்டையாடுபவர்கள் மீது சட்டம் பாயும். பெரும்பாலும் மருத்துவத்துக்கு உதவும் மீன் எண்ணெய்கள் தயாரிக்கவே இவை வேட்டையாடப் படுகின்றன. வேட்டையாடுபவர்களுக்கு ஒன்று முதல் ஆறு வருடங்கள் வரை சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.

>>>டிசம்பர் 07 [December 07]....

நிகழ்வுகள்

  • கிமு 43 - ரோம அரசியல்வாதி மார்க்கஸ் டலியாஸ் சிசேரோ படுகொலை செய்யப்பட்டான்.
  • 1724 - போலந்தின் டொரூன் என்ற இடத்தில் ஒன்பது புரட்டஸ்தாந்து மதத்தினருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை அடுத்து அங்கு கலவரம் மூண்டது.
  • 1787 - டெலவெயர் 1வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவில் இணைந்தது.
  • 1815 - நெப்போலியனுக்கு ஆதரவாக இருந்த பிரெஞ்சுத் தளபதி மிக்கேல் நேய் என்பவனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
  • 1900 - மாக்ஸ் பிளாங்க் தனது பேர்லின் இல்லத்தில் வைத்து புகழ்பெற்ற கரும்பொருள் வெளியேற்ற விதியைக் கண்டுபிடித்தார்.
  • 1910 - யாழ்ப்பாணம், மானிப்பாய் இந்துக் கல்லூரியின் புதிய கட்டடம் திறக்கப்பட்டது.
  • 1917 - முதலாம் உலகப் போர்: ஆஸ்திரியா-ஹங்கேரி மீது ஐக்கிய அமெரிக்கா போரை அறிவித்தது.
  • 1941 - இரண்டாம் உலகப் போர்: பின்லாந்து, ஹங்கேரி, போலந்து, ருமேனியா ஆகியவற்றின் மீது கனடா போரை அறிவித்தது.
  • 1941 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியர் ஹவாயின் பேர்ள் துறைமுகத்தைத் தாக்கினர்.
  • 1946 - ஜோர்ஜியாவின் அட்லாண்டாவில் உணவுச்சாலை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 119 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1949 - சீனக் குடியரசின் அரசு நான்கிங் நகரில் இருந்து தாய்வானுக்கு மாறியது.
  • 1966 - துருக்கியில் இராணுவ முகாம் ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 68 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1971 - பாகிஸ்தானில் நூருல் அமீன் பிரதமராகவும் சுல்பிக்கார் அலி பூட்டோவை உதவிப் பிரதமராகவும் கொண்ட கூட்டணி அரசை அதிபர் யாகியா கான் அறிவித்தார்.
  • 1972 - அப்போலோ திட்டத்தின் கடைசி விண்கலம் "அப்போலோ 17" சந்திரனை நோக்கி ஏவப்பட்டது.
  • 1975 - கிழக்குத் தீமோரை இந்தோனீசியா முற்றுகையிட்டது.
  • 1983 - ஸ்பெயின் மாட்ரிட் நகரில் இரண்டு விமானங்கள் மோதியதில் 93 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1987 - கலிபோர்னியாவில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவர் தனது முன்னாள் முதலாளியையும் விமான ஓட்டியையும் சுட்டுக் கொன்றபின் தன்னைத் தானே சுட்டுக் கொன்றான். இதனால் விமானம் தரையில் மோதியதில் அதில் பயணம் செய்த அனைத்து 43 பேரும் கொல்லப்பட்டனர்.
  • 1988 - ஆர்மீனியாவில் இடம்பெற்ற 6.9 ரிக்டர் நிலநடுக்கத்தில் 25,000 பேர் கொல்லப்பட்டு 400,000 பேர் வீடுகளை இழந்தனர்.
  • 1988 - யாசர் அரபாத் இஸ்ரேலை தனிநாடாக அங்கீகரித்தார்.
  • 1995 - கலிலியோ விண்கலம் விண்ணுக்கு ஏவப்பட்டு 6 ஆண்டுகளின் பின்னர் வியாழனை அடைந்தது.

பிறப்புக்கள்

  • 1928 - நோம் சோம்சுக்கி, அமெரிக்கப் பேரறிஞர்

இறப்புகள்

  • 1947 - நிக்கலாஸ் பட்லர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1862)
  • 1956 - லாரி பர்ட், முன்னாள் அமெரிக்க கூடைப்பந்து வீரர்
  • 1985 - றொபேட் கிறேவ்ஸ், ஆங்கில எழுத்தாளர் (பி. 1895)
  • 1993 - வூல்ஃப்காங்க் போல், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1913)
  • 1998 - மார்ட்டின் ரொட்பெல், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1925)

சிறப்பு நாள்

  • ஐக்கிய அமெரிக்கா - பேர்ள் துறைமுக நாள்
  • இந்தியா - கொடி நாள்

>>>உயிர் உடைத்த புகைப்படம்…!!!

 

புலிட்சர் விருதின் முலம் உலகப் புகழ்பெற்ற இந்தப் படத்தை எடுத்த கெவின் கார்ட்டர் தற்கொலை செய்து கொண்டார் ஏன்?

கெவின் கார்ட்டர்- தென்னாப்பிரிக்காவின் அழகிய ஊரான ஜோஹன்ஸ்பர்க்கைச் சேர்ந்தவர். உலகப் புகழ்பெற்ற புகைப்படக்காரர். எல்லா சிறந்த புகைப்படக்காரர்களைப் போன்றே இவருக்கும் நல்ல புகைப் படங்களை எடுக்க வேண்டுமென்ற ஆசையும் ஆர்வமும் இருந்தன. இந்த ஆர்வம் அவரை நாடு,நகரம்,கிராமம்,காடு, மலை என்று கொண்டு சென்றது.

1993 இல் இந்த ஆர்வம் அவரைத் தனது சக புகைப்படப் பத்திரிக்கையாளர்களுடன் சூடானுக்குக் கொண்டு சென்றது. அப்போது சூடான் வரலாறு காணாத பஞ்சத்தில் சிக்கித் தவித்துக் கொண்டு இருந்தது.

குறிப்பாக சூடானின் தென்பகுதி மக்கள் உண்ண உணவின்றி, பருக நீரின்றி பசி, தாகத்தில் தவித்துக் கொண்டிருந்தனர்.பசி பஞ்சத்தில் தவிக்கும் மக்களின் நிலைகளைக் காமிராவில் பதிவு செய்ய கெவின் தொலைதூர கிராமங்கள் வரை சென்றார்.

இறுதியாக அவர் முயற்சி கைகூடியது. ஒரு நாள் தன் காமிராவை தோளில் தொங்க விட்டுக் கொண்டு உள்ளத்தை உலுக்கக் கூடிய படத்துக்கான காட்சியைத் தேடியலைந்து கொண்டிருந்தபோது அப்படிப்பட்ட காட்சி தென்பட்டது அவரது நற்பேறு என்றுதான் கூற வேண்டும்.பசி பஞ்சத்தால் அடிபட்ட நோஞ்சன் நிலையில் உள்ள ஒரு சிறுமி நடக்கக் கூட இயலாத நிலையில் எலும்புக் கூடு போன்ற தன்னுடலை தவழ்ந்து இழுத்துக் கொண்டு மெல்ல மெல்ல ஊர்ந்து செல்வதைக் கண்டார்.

அந்தச் சிறுமி ஐக்கிய நாடுகளின் சபையின் சார்பாக அமைக்கப்பட்டு இருந்த உணவு வழங்கும் முகாமை நோக்கி தள்ளாடியபடி தவழ்ந்து கொண்டிருந்தது உண்மையிலேயே இதயத்தைப் பிழியக் கூடியதாக இருந்தது.

தோளில் இருந்து காமிராவை இறக்கி கோணம் பார்த்த கெவினுக்கு இன்னொரு வியப்பும் காத்திருந்தது.

ஆம்; அந்த எலும்பும் தோலுமான சிறுமிக்குப் பின்னாலேயே சிறிது தொலைவில் ஒரு பிணம் தின்னிக்கழுகும் சிறுமியின் மீது பார்வையை நிலை நிறுத்திக் கொண்டு இருந்தது.

எப்போது சிறுமியின் உடலை விட்டு உயிர் பிரியும்; மீதியுள்ள அந்தத் தோலையும் அதைச் சுற்றி இருக்கும் சிறிது மாமிசத்தையும் எப்போது சாப்பிடலாம் எனக் காத்திருந்தது பிணம் தின்னிக்கழுகு.

கெவின் கேமரா லென்சை கண்ணுக்கு ஒத்திக் கொண்டார்; சிறுமியையும் கழுகையும் ஒரு பிரேமில் அடக்கிக் கொண்டு ‘க்ளிக்’ செய்தார்.

இப்போது அவரது புகைப்படக்கருவியில் மிக அரிதினும் அரிதான படம் பதிவாகி விட்டது.

இதை விற்றால் நல்ல விலை கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் காமிராவைத் தோளில் மாட்டிக் கொண்டு தனது வண்டியை ஸ்டார்ட் செய்தார்; பறந்து விட்டார். இந்த அரிதான படத்தை ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிக்கைக்கு விற்று விட்டார்.

இந்தப் புகைப்படம் 1993 மார்ச் திங்கள் 26 ஆம் நாள் காலை நாளிதழில் முதல் பக்கத்தில் வெளியானது. இந்தப் படத்தைப் பார்த்ததும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் பத்திரிக்கை அலுவலகத்திற்கு தொலைப்பேசி மூலம் தொடர்புக் கொண்டனர்.

அனைவரும் ஒரே கேள்வியைத்தான் கேட்டனர். புகைப்படத்தில் உள்ள சிறுமி என்ன ஆனாள்? அவள் உயிருடன் பிழைத்தாளா அல்லது இறந்து விட்டாளா? இந்தக் கேள்விக்கான பதில் பத்திரிக்கையின் தொலைபேசி ஆப்ரேட்டரிடமோ படத்தை எடுத்த கெவின் கார்ட்டரிடமோ இல்லை.

1994 மே 23 அன்று பெரும் கை தட்டல்களுக்கு இடையே கெவின் கார்ட்டர் கொலம்பியப் பல்கலைக்கழகத்தின் பிரமாண்டமான அரங்கத்தில் இந்த அரிதான புகைப்படத்திற்கான புலிட்சர் விருதப் பெற்றுக்கொண்டார் இந்த விருது புகைப்படத் துறையில் நோபல் விருதுக்கு இணையானது.

விருது பெற்ற சில நாட்களுக்குப்பின் கெவின் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார்.

கெவினுக்கும் அங்கு இருந்த பிணம்தின்னிக் கழுகுக்கும் என்ன வேற்றுமை? இரண்டும் ஒரே விதமாகத்தான் செயல்பட்டுள்ளனர்.‘குறைந்தபட்சம் புகைப்பட நிபுணர் கெவின் அந்த சிறுமிக்கு ஒரு வாய் தண்ணீர் அல்லது சாண்ட்விச் தந்து உயிரைக் காப்பாற்றி இருக்கலாம்; அல்லது தனது வலுவான கைகளினால் அந்தச் சிறுமியைத் தூக்கிச் சென்று உணவளிக்கும் அமைப்பு அலுவலகத்தின் வாயிலிலாவது சேர்த்து இருக்கலாம்; கல்லெடுத்து வீசி அந்தக் கழுகையாவது விரட்டி இருக்கலாம்; ஆனால் இவற்றில் எதையும் செய்யாமல் வெறும் ஒரு படத்தை எடுத்தார்; அதை அதிக விலை தந்த பத்திரிக்கைக்கு விற்று விட்டார் என்று ஒருவர் அவர் மீது குற்றம் சாட்டியதுதான் காரணம்.

புகைப்பட வல்லுநர் கெவின் விரைவில் ஜோஹன்ஸ்பர்க் திரும்பி விட்டார். இரண்டு மாதங்களுக்குப் பின் கடற்கரைக்கு அருகில் அவரது கார் நின்று கொண்டிருந்தது. அதில் அவர் பிணமாகக் கிடந்தார்.

கெவின் தற்கொலை செய்துகொண்டார்.
அவரது பிணத்திற்கு அருகில் காவல்துறைக்கு ஒரு கடிதம் கிடைத்தது. அதில் சில வரிகளே இருந்தன. முதல் வரி I am Really, Really Sorry.

இன்று பல்வேறு செய்தி சேனல்களிலும் அடிபட்டும் விபத்துக்குள்ளாகியும் இரத்தச் சிதறலில் துடித்துக் கிடப்பவர்களைப் படங்களாய்ப் பார்க்கும் போதும் அவர்களின் அபயக் குரலைக் கேட்கும் போதும் ஏனோ கெவின் கார்ட்டர் நினைவுக்கு வருகிறார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Did the Tamil Nadu decorative vehicle be rejected in the Republic Day parade procession? - Tamil Nadu Govt Information Checker explanation

குடியரசு தின அணிவகுப்பு ஊர்வலத்தில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிப்பா? - தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் Did the Tamil Nadu ...