“குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா ,
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா
எந்த நேரமும் சண்டை
ஓயாத முரட்டு உலகமடா
விதவிதமான பொய்களை வைத்துப் புரட்டும் உலகமடா
சிலர்குணமும் இதுபோல் குறுகிப்போகும் கிறுக்கு உலகமடா “.
இன்று பட்டுக்கோட்டை போல மக்களுக்கான கருத்துக்களை விதைக்கும் பாடலாசிரியரைத் தேடவேண்டியுள்ளது.
பாட்டுடைக் கவிஞன் பாரதிக்குப் பிறகு, தமிழ்க்கவிதையில் எளிமையும்,
இனிமையும், புதுமையும் புகுந்து நவீன கவிதை பிறந்தது. தமிழ்க் கவிதை மரபில்
உடைப்பு ஏற்பட்டது. கவிதை புதிய பரிமாணத்தில், புதிய களங்களில், தளங்களில்
பயணித்தது. இவர்களை தமிழ்உலகம் பாரதி பரம்பரையினர் என்று
பெருமைப்படுத்துகிறது. இந்தப் பரம்பரையில் வந்த பாரதிதாசனும்,
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் பாராட்டப்பட வேண்டியவர்கள். பாவேந்தர்
பாரதிதாசனை நேரிலே பார்க்காமலே அவரை தனது மானசீக குருவாக ஏற்று, பாரதிதாசனே
வியந்து பாராட்டும் கவிஞராகத் திகழ்ந்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (ஏப்ரல் 13, 1930 அக்டோபர் 8, 1959) ஒரு
சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர். எளிமையான தமிழில் சமூக
சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடுவது அவருடைய சிறப்பு . இப்போது
அவரது பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. 29 ஆண்டுகளே வாழ்ந்தாலும்
தான் எழுதிய பாடல்களால் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும்
'பாட்டுக்கோட்டை'யாகவே அறியப்பட்டவர் பட்டுக்கோட்டையார். திரையுலகப்
பாடல்களில் பட்டிருந்த கறையை நீக்கி, மக்கள் நெஞ்சம் நிறைவுறவும்,வியத்தகு
செந்தமிழில் எளிமையாக அருமையான கருத்துக்களும், முற்போக்குக்
கருத்துக்களும் கொண்ட பாடல்கள் எழுதி குறுகிய காலத்தில் புகழ் அடைந்தவர்
பட்டுக்கோட்டையார். கிட்டத்தட்ட 189 படங்களில் பாட்டு எழுதியவர்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
இடதுசாரி இயக்கத்தின் இடையறா ஈர்ப்பாளி..!
இளம் பிராயத்திலேயே விவசாய சங்கத்திலும் கம்யூனிஸ்ட் கட்சியிலும் ஈடுபாடு
கொண்டிருந்தார். தான் பின்பற்றி வந்த கட்சியின் இலட்சியத்தை உயரத்தில்
பறக்கும் வகையில் கலை வளர்ப்பதில் சலியாது ஈடுபட்டார். நாடகக் கலையில்
ஆர்வமும், விவசாய இயக்கத்தின் பால் அசைக்கமுடியாத பற்றும் கொண்டிருந்தார்.
தஞ்சையைச் சேர்ந்த வீரத் தியாகிகள் சிவராமன், இரணியன் ஆகியோருடன் சேர்ந்து
விவசாய இயக்கத்தைக் கட்டி வளர்க்க தீவிரமாகப் பங்கெடுத்தார். தமது 29 ஆண்டு
வாழ்வில் விவசாயி, மாடு மேய்ப்பவர், உப்பளத் தொழிலாளர், நாடக நடிகர் என 17
வகைத் தொழில்களில் ஈடுபட்டு இறுதியில் கவிஞராக உருவானவர்.