கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பஸ் படிக்கட்டில் பயணம் செய்தால் பள்ளியிலிருந்து நீக்கம்: தமிழக அரசு அறிவிப்பு

பஸ் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள் பள்ளியிலிருந்து  நீக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை பெருங்குடியில் நேற்று முன்தினம் பஸ் மீது லாரி மோதியதில் படிக்கட்டில்  பயணம் செய்த 4 மாணவர்கள் பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக தலைமை  நீதிபதி எம்.ஒய்.இக்பால் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்தார்.

இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள்  எடுத்துள்ளன என்பது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு சென்னை உயர்  நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் தலைமை  வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் படித்து பார்த்தனர்.பிறகு  அவர்கள் "தமிழக அரசு எடுத்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் பாராட்டும்படி உள்ளது.  இந்த விதிமுறைகளை இன்று முதல் அமல்படுத்த வேண்டும்.இதை அமல்படுத்தினால்  90 சதவீத விபத்துக்களை தடுக்கலாம்" என்று கூறினார்கள்.

அப்போது வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன், "கடைசி பஸ்சில் மாணவர்கள்  செல்வதால்தான் கூட்டம் அதிகமாகி விடுகிறது.பெரும்பாலும் அவர்கள் படிக்கட்டில்  பயணம் செய்வதால்தான் விபத்து ஏற்படுகிறது" என்றார்.

அவர்  தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:

பஸ் படிக்கட்டில் பயணம் செய்வதை தவிர்க்க கல்லூரிகள், பள்ளிகளில் விழிப்புணர்வு  செய்யப்படும். நெரிசல் மிகுந்த நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படும்.  போக்குவரத்து விதிகளை மீறினால் வழங்கப்படும் தண்டனை விபரம் பற்றி பிரசாரம்  செய்யப்படும். படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்கள் முதலில்  எச்சரிக்கை செய்யப்படுவார்கள். இதுபற்றி மாணவரின் பெற்றோருக்கும், பள்ளிக்கும்  தகவல் தெரிவிக்கப்படும்.

மாணவர்கள் தொடர்ந்து பஸ் படிக்கட்டில் பயணம் செய்தால் அவர்கள்  கண்காணிக்கப்படுவார்கள்.பிறகு அவர்களை பள்ளியில் இருந்து நீக்க கடும் நடவடிக்கை  எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை வருகிற ஜனவரி மாதம் 2 ஆம் தேதிக்கு  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

>>>பள்ளி ஆசிரியர்கள் விபரம்: இணையதளத்தில் பதிவு : கணக்கெடுப்பு தீவிரம்

தமிழக அரசு பள்ளிகளில், ஆசிரியர்களின் விபரம், கல்வி துறை இயக்குனரகம் மூலம், சேகரித்து இணையதளத்தில் பதிவு செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் அரசு பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்கள், தற்போது பணியில் உள்ளவர்கள், பெயர், பிறந்த தேதி, பாலினம், பணியில் சேர்ந்த தேதி, பாடம், தற்போதைய பள்ளியில் சேர்ந்த தேதி, காலிபணியிடங்கள், ஆசிரியர்கள் அதிகம் அல்லது குறைவு போன்ற விபரங்களை சேகரித்து வருகின்றனர். இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் தனி "ஐ.டி.' வழங்கப்பட்டு, விபரங்கள்  பதியப்படுகிறது.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இதன் மூலம் ஆசிரியர் பற்றாக்குறை விபரத்தை, சென்னையிலிருந்தே உயரதிகாரிகள் நேரடியாக தெரிந்து கொள்ள முடியும். தலைமை ஆசிரியர்கள் பதவியேற்றவுடன், இந்த முகவரியில் பள்ளியின் நிலையை, அவ்வப்போது "அப்டேட்' செய்ய வேண்டும், என்றார்.

>>>6,500 இடைநிலை ஆசிரியர்களுக்கு சொந்த மாவட்டங்களில் வேலை

ஒரே நாளில், 9,664 இடைநிலை ஆசிரியர்களுக்கு, மாநிலம் முழுவதும், நேற்று பணி நியமன கலந்தாய்வு நடந்தது. 6,532 பேருக்கு, அவரவர் சொந்த மாவட்டங்களிலேயே, இடங்கள் கிடைத்தன. டி.இ.டி., தேர்வில், 9,000 இடைநிலை ஆசிரியர்கள், தேர்வு பெற்றனர். இவர்கள் அனைவரும், தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு ஆரம்பப் பள்ளிகளில், பணியாற்ற உள்ளனர். இவர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு, 32 மாவட்டங்களிலும், நேற்று நடந்தன. காலையில், மாவட்டத்திற்குள் பணி நியமனத்திற்கான கலந்தாய்வும், பிற்பகலில், வெளி மாவட்டங்களில், பணி நியமனம் பெறுவதற்கான கலந்தாய்வும் நடந்தன. மொத்த ஆசிரியரில், 6,532 பேருக்கு, அவரவர் சொந்த மாவட்டங்களிலேயே, பள்ளிகளை தேர்வு செய்தனர் என்றும், மீதமுள்ள 3,132 பேர், வெளி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளை தேர்வு செய்தனர் என்றும், தொடக்க கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

>>>விடிய விடிய நடந்த ஆசிரியர் கலந்தாய்வு: நாளை முதல்வர் தலைமையில் பணிநியமன ஆணை

 
இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு விடிய விடிய நடந்தது. இதில் நாளை அவர்களுக்கு பணிநியமன ஆணையினை முதல்வர் தலைமையில் நடக்கும் விழாவில் வழங்கப்பட உள்ளது.
கடந்த ஜூலை , அக்டோபர் மாதங்களில் டி.ஆர்.பி. சார்பில் ஆசிரியர்கள் பணிக்கான டி.இ.டி. தேர்வு நடந்தது. இதில் தேர்வு பெற்றவர்களுக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு கடந்த 9-ம் தேதி முதல் நடந்து வருகிறது. ஏற்கனவே நடந்த கலந்தாய்வில் 6,500 ஆசிரியர்கள் சொந்த மாவடங்களில் பணி நியமனம் பெற்றனர். இதையடுத்து தொடக்க கல்வித்துறையில் 9,664 ‌இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நேற்று துவங்கி விடிய விடிய நடந்து வருகிறது. டி.ஐ.டி. தேர்தவில் 9,664 இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் 8,718 பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 18 ஆயிரத்து, 382 ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதாலும், நாளை சென்னையில் நடக்க உள்ள பணிநியமன ஆணைய வழங்கும் விழா முதல்வர்  தலைமையில் நடப்பதாலும் நேற்று துவங்கிய கலந்தாய்வு பணிகள் விடிய விடிய நடத்தி முடித்துள்ளது டி.ஆர்.பி. நள்ளிரவு 3 மணிவரை இந்த கலந்தாய்வு நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த கலந்தாய்வின் போது சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன.
நாளை பணிநியமன ஆணை நடக்க உள்ளதால் இதற்கான ஏற்பாடுகள், மும்முரமாக நடந்து வருகின்றன.தேர்வு பெற்ற ஆசிரியர்கள் அனைவரும், சென்னைக்கு வர வேண்டும் என, கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் அனைவரும், 13ம் தேதி காலையில், சென்னையில் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>>முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியீடு

ஜவ்வாக இழுத்துக் கொண்டிருந்த, முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலை, ஒருவழியாக, நேற்றிரவு, டி.ஆர்.பி., வெளியிட்டது. ஒதுக்கப்பட்ட 2,895 பணியிடங்களில், 2,308 பணியிடங்களுக்கான பட்டியல் மட்டும், வெளியாகி உள்ளது.
பட்டியலில் இடம் பெற்றிருப்பவர்கள், அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களை சந்தித்து, சென்னைக்கு புறப்பட்டு வர வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள, 2,895 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, இந்த ஆண்டு, மே, 27ல், டி.ஆர்.பி., போட்டித் தேர்வை நடத்தியது. இதனை, 1.5 லட்சம் பேர் எழுதினர்.
சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து, இறுதி பட்டியல் தயாரான நேரத்தில், தமிழ்வழியில் படித்தவர்கள் பிரிவில், போதிய தேர்வாளர்கள் இல்லாதது, தாவரவியல் பாடத்திற்கு, இறுதி பட்டியலை வெளியிட, கோர்ட் தடை என, பல்வேறு சிக்கல்களால், இறுதி பட்டியல் வெளியாகவில்லை.
இந்நிலையில், நாளை சென்னையில் நடக்கும் ஆசிரியர் பணி நியமனம் வழங்கும் விழாவில், முதுகலை ஆசிரியர்களுக்கும் சேர்த்து வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டது. வழக்கு நிலுவையில் இருக்கும் போது, இறுதி தேர்வு பட்டியலை வெளியிட முடியாது என, தமிழக அரசிடம், டி.ஆர்.பி., தெரிவித்தது.
எனினும், அரசு தரப்பு சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை நடத்தி, முடிந்தவரை, பெரும்பாலானவர்களுக்கு, இறுதி பட்டியலை வெளியிடுமாறு, டி.ஆர்.பி.,க்கு உத்தரவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை நடத்திய, டி.ஆர்.பி., நேற்றிரவு, 2,308 பேருக்கு மட்டும், இறுதி பட்டியலை, இணையதளத்தில்  வெளியிட்டது.
பட்டியலில் இடம்பெற்றுள்ள தேர்வர்கள்,  ஹால் டிக்கெட்டுடன், சென்னைக்கு வரும் வகையில், தயாராக புறப்பட்டு, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களை, இன்று சந்திக்க வேண்டும் என, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
முதுகலை ஆசிரியர் அனைவரும், இன்று மாலைக்குள் சென்னை வந்ததும், அவர்களுக்கு, பணி நியமன உத்தரவு நகல் வழங்கப்படுகிறது. முதல்வர் கையால், உத்தரவை பெற்றபின், வேறொரு நாளில் கலந்தாய்வு நடத்தி, பணி ஒதுக்கீட்டு உத்தரவை வழங்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
மீதமுள்ள பணியிடங்களுக்கான தேர்வுப் பட்டியலை, வழக்கு முடிந்தபின் வெளியிட, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது. இவர்களுடன் சேர்த்து, புதிதாக பணி நியமனம் பெறும் ஆசிரியர்களின் எண்ணிக்கை, 20,800 ஆக உயர்ந்துள்ளது.

>>>ஆதிவாசி மாணவர்களின் படிப்பிற்காக ஆசிரியர்கள் நடத்தும் டூவீலர் சர்வீஸ்

தேனி மாவட்டத்தில், ஆதிவாசி மாணவர்களை, தினமும் பள்ளிக்கு அழைத்து வர, ஆசிரியர்கள் இருவர் இலவச டூ வீலர் சர்வீஸ் நடத்தி வருகின்றனர். பெரியகுளம் சத்யா நகர் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் 38 மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களில், 21 பேர் வனப்பகுதியில் 5 கி.மீ., தூரம் உள்ள ஆதிவாசி மக்கள் வசிக்கும் செல்லாக்காலனி கிராமத்தை சேர்ந்தவர்கள்.
இப்பகுதி மாணவர்கள் போக்குவரத்து வசதி இல்லாததால், பள்ளிக்கு வருவதில் சிரமம் ஏற்பட்டது. ஆதிவாசி மக்களும் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் அக்கரை செலுத்துவதில்லை.

ஒருநாள் குழந்தைகள் வீட்டில் இருந்தால் கூட, தங்களுடன் வேலைக்கு அழைத்துச் சென்று விடுகின்றனர். இதனால் செல்லாக்காலனி மாணவர்கள் வராவிட்டால் பள்ளியே வெறிச்சோடி விடும். இதனை உணர்ந்த ஆசிரியர்கள் இருவரும், காலையில் பள்ளி தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே பள்ளிக்கு வந்து விடுகின்றனர்.

பள்ளியில் இருந்து டூ வீலரில் ஆதிவாசி காலனிக்கு சென்று அங்குள்ள மாணவர்களை தங்கள் டூ வீலரில் ஏற்றி பள்ளிக்கு அழைத்து வருகின்றனர். தினமும் காலையில் 4 முறை,மாலை 4 முறை என பள்ளிக்கும், ஆதிவாசி காலனிக்கும் இலவச டூ வீலர் சர்வீஸ் நடத்துகின்றனர். ஆண்டு முழுவதும் இவர்களின் சேவை தொடர்கிறது. இதற்கு ஆகும் செலவுகளையும், சிரமத்தையும் பற்றி இவர்கள் கவலைப்படுவதில்லை.

ஆசிரியர் செல்லத்துரை கூறியதாவது: நாங்கள் அழைத்து வராவிட்டால் ஆதிவாசி மாணவர்கள், பள்ளிக்கு வராமல் படிப்பை நிறுத்தி விடுவார்கள்.படிப்பு பாழாகி விடக்கூடாது என்பதற்காக, நாங்கள் தினமும் இந்த இலவச சேவையை செய்து வருகிறோம்' என்றார்.

>>>தகுதித் தேர்வில் வெற்றி பெற்றும் பணி இல்லை : மனமுடைந்த ஆசிரியர் தற்கொலை முயற்சி

டி.ஆர்.பி., தேர்வில் தேர்ச்சி பெற்றும், வேலை வாய்ப்புக்கான தகுதி இல்லாததால், மனமுடைந்த பட்டதாரி ஆசிரியர், வேலை வாய்ப்பு அலுவலக வளாகத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்றதால், பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம், வடலூர், தோமையன் நகரைச் சேர்ந்தவர் லாரன்ஸ், 46; பி.ஏ., பட்டப்படிப்பில், "தத்துவம்' பாடத்தை முதன்மைப் பாடமாகவும், பி.எட்., படிப்பில் சமூக அறிவியலும் படித்துள்ளார். திட்டக்குடி அடுத்த, தனியார் பள்ளியில், கடந்த, 14 ஆண்டுகளாக ஆசிரியராக பணிபுரிகிறார். இவர், அக்டோபரில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான பிரிவு தேர்வில், 114 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். பட்டதாரி ஆசிரியர்களுக்கு, தமிழக அளவில், தமிழ், ஆங்கிலம், கணிதம், சமுக அறிவியல் மற்றும் அறிவியல் ஆகிய பாடங்களுக்கு மட்டுமே, பணி வாய்ப்புகள் என,
அறிவிக்கப்பட்டிருந்தது. சி.இ.ஓ., அலுவலகத்தில், கடந்த மாதம் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பின் போது, வேலை வாய்ப்புக்கான தகுதியில், தத்துவம் பாடம் இல்லை என்பதால், "வேலை இல்லை' என அனுப்பப்பட்டார். நேற்று முன்தினம், கடலூரில் நடந்த கலந்தாய்விற்கு வந்த லாரன்சிடம், அதிகாரிகள் அதே தகவலைக் கூறினர். நேற்று காலை, வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு வந்த லாரன்ஸ், இதுகுறித்து விசாரித்தார். அங்கேயும், தனக்கு வேலை கிடைக்க வாய்ப்பில்லை என்ற விஷயம் தெரிய வந்தது. மனமுடைந்த அவர், வேலை வாய்ப்பு அலுவலக வளாகத்திலேயே, விஷம் குடித்தார். அங்கிருந்தவர்கள் அவரை, கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். லாரன்சுக்கு புரட்சிமணி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடலூர் புதுநகர் போலீசார், விசாரணை மேற்கொண்டனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Free Note Books Requirement List from EMIS as on 27.12.2024 - DEE Proceedings

  2025-26 ஆம்‌ கல்வியாண்டில்‌ அரசு / அரசு நிதியுதவி பெறும்‌ தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ 1 முதல்‌ 8ஆம்‌ வகுப்பு வரை  பயிலும்‌ மாணவ...