செல்போன் இன்று ஏழை எளிய மக்கள் வரை பரவிவிட்டது. மிகக் குறைவான
எழுத்தறிவு உடையவர்கள் கூட இன்று சகஜமாக அதைப் பயன்படுத்துகிறார்கள்.
அடுத்த கட்டமாக செல்போன் மூலமே இண்ட்டர்நெட்டை பயன்படுத்தும் வசதி
வேகமாகப் பரவி வருகிறது.
ஆயிரக்கணக்கான வருடங்களாக மனிதன் அனுபவித்திராத தகவல் தொடர்பு வசதிகள்
உலகில் இந்த ஐம்பது வருடங்களாக பிரும்மாண்டமாக வளர்ந்திருக்கின்றன. இந்த
தொழில்நுட்பப் புரட்சி மனிதனுக்கு கிடைத்த வரமா, சாபமா என்பது அவ்வப்போது
சர்ச்சையாகிக் கொண்டிருக்கிறது. ஒரு கல்யாணப் பத்திரிகை வைக்க வண்டி
கட்டிக் கொண்டு ஒரு நாள் பயணம் செய்த மனிதர்கள் இன்று ஒரு நொடியில் ஒரு
தகவலை இன்னொருவருக்கு செல்போனில் அனுப்பமுடிவது வசதிதான். அதே சமயம்
செல்போன் பேசிக் கொண்டே ரயில் பாதையைக் கடப்பதால் மாதம்தோறும் நூற்றுக்
கணக்கில் ரயிலில் அடிபட்டு இறக்கும் இளைஞர்கள் எண்ணிக்கை பயமுறுத்துகிறது.
ஒரு புதிய தொழில்நுட்பம் வந்தால் போதாது. அதை தனக்கு எதிராக தானே
மாற்றிக் கொள்ளாமல் பயன்படுத்தும் பக்குவமும் மனிதர்களுக்கு
தேவைப்படுகிறது. அந்தப் பக்குவம், மன முதிர்ச்சி இல்லாத சமூகத்தில் அந்த
தொழில்நுட்பம் நிச்சயம் சாபமாகத்தான் மாறும்.