கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பணிநியமன ஆணை பெறும் விழாவில் தவித்த ஆசிரியைகள்...

சென்னையில், 21 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஒரே நாளில் பணி நியமனம் வழங்கப்பட்டது சாதனையாக இருந்தாலும், அதை வாங்க ஆசிரியர்கள், கடுமையான நெருக்கடிகளை சந்திக்க வேண்டியிருந்தது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்வு செய்யப்பட்ட, 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரி மற்றும் இடை நிலை ஆசிரியர்களுக்கு, இம்மாதம் 9, 10, 11ம் தேதிகளில் கலந்தாய்வு நடத்தப்பட்டது.
பணி நியமன ஆணை வழங்கும் விழா, நேற்று நடந்த நிலையில், நேற்று முன்தினம் காலை முதலே, 650 பஸ்கள் மூலம், சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அனைவரும், நேற்று முன்தினம் இரவு, சென்னை பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில், பெரிய தனியார் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டனர். இரவு நேரத்தில் வந்திறங்கிய அவர்களுக்கு, சிறிது நேர ஓய்வு கூட அளிக்கப்படவில்லை. உடனடியாக, குளித்து தயாராக அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, இரவு இரண்டு மணி முதலே, அவர்கள் நந்தனம் விழா அரங்கிற்கு, பஸ்கள் மூலம் அழைத்துச் வரப்பட்டு, அரங்கில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர வைக்கப்பட்டனர். 50 பேருக்கு இரண்டு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் மூலமே, உணவு வழங்கப்பட்டது. எங்கு செல்வதாக இருந்தாலும், அவர்கள் அனுமதியின்றி செல்லக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. தேர்வுசெய்யப்பட்டவர்களில், பெண்களே அதிகம் இருந்த நிலையில், அவர்களுக்கு போதுமான கழிப்பிட வசதிகள் இல்லை.
ஆங்காங்கே இருந்த, மொபைல் கழிப்பிடங்களில், தண்ணீர் வசதி இல்லை. ஒவ்வொரு மொபைல் கழிப்பிடத்திற்கும், 20க்கும் மேற்பட்டவர்கள், வரிசையில் நின்றே, சென்று வந்தனர். முதல் நாள் இரவு முதலே அவர்கள், அங்கு அமர வைக்கப்பட்டதால், பெண்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியிருந்தனர். கொசுக்கடியால், பெரிதும் பாதிக்கப்பட்டதாக பயனாளிகள் புலம்பினர்.
ஆசிரியர் பணி நியமன ஆணை வழங்கும் விழாவில், 36 பேருக்கு, முதல்வர் ஜெயலலிதா பணி நியமன ஆணைகளை வழங்கினார். அதில், நான்கு மாற்றுத் திறனாளிகளும் அடக்கம். மற்றவர்களுக்கு, அவர்கள் சார்ந்த மாவட்ட அமைச்சர்கள் வழங்கினர். அரை மணி நேரத்தில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு, நியமன ஆணைகளை அவர்கள் வழங்கினர். நிகழ்ச்சி முடிந்ததும், அனைவருக்கும் பணி குறித்த, அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு, அதன் பின், வந்தது போல், ஒவ்வொரு பஸ்சிலும் ஏற்றி, அவர்கள் அனுப்பப்படுவர் என்று அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால், நிகழ்ச்சி முடிந்ததும், நியமன ஆணை பெற்றவர்கள் செல்ல விரும்பினால், தங்கள் உறவினர்களுடன் செல்லலாம் என அறிவிக்கப்பட்டதால், அனைவரும் நிம்மதியடைந்து சென்றனர்.

>>>பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர்!

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிபெற்ற, 20 ஆயிரத்து 920 ஆசிரியர்களுக்கு, பணி நியமன ஆணை வழங்கும் விழாவில், முதல்வர் ஜெயலலிதா கலந்துகொண்டு, பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
சமீபத்தில், TET எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழகமெங்கும் நடைபெற்றது. இதில் வெற்றிபெற்ற 20 ஆயிரத்து 920 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழாவும், 92 லட்சம் பள்ளி மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா கல்வி உபகரணங்கள் வழங்கும் விழாவும், சென்னை நந்தனத்திலுள்ள ஒய்.எம்.சி.ஏ உடற்கல்வி கல்லூரி திடலில், முதல்வர் ஜெயலலிதா தலைமையில் பிரமாண்டமாக நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்புரையாற்றிய ஜெயலலிதா, தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு தமது அரசு ஆற்றிவரும் சீரிய பங்கினைப் பற்றி விரிவாக குறிப்பிட்டார். அவற்றில், எப்போதும் இல்லாத வகையில், பள்ளி கல்விக்கு, ரூ.14,553 கோடி ஒதுக்கியது, 1 முதல் 12ம் வகுப்பு வரை கட்டணமில்லா கல்வி மற்றும் மாணவர் இடைநிற்றலை தவிர்க்க, 10 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, ரூ.5000 ஊக்கத்தொகை திட்டம் போன்ற முக்கிய அம்சங்களைக் குறிப்பிட்ட முதல்வர், "மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான பாடங்களைப் படிக்க, பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும்" என்றார்.
இதுமட்டுமின்றி, ஆசிரியர்களுக்கு அறிவுரை கூறும் விதமாக பேசிய முதல்வர், "ஆசிரியப் பணி என்பது ஒரு அறப்பணி. பிற பணிகளைவிட, உயர்ந்த ஸ்தானம் கொண்டப் பணி. எனவே, ஆசிரியர்கள், தங்களின் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டு, சிறந்த மாணவர்களை சமூகத்திற்கு உருவாக்கித் தர வேண்டும்" என்றும் கேட்டுக் கொண்டார்.
விழாவில், மாவட்டத்திற்கு தலா 1 ஆசிரியருக்கு பணி நியமன ஆணையையும், 16 மாணவர்களுக்கு, விலையில்லா கல்வி உபகரணங்களையும் முதல்வர் வழங்கினார். இதர ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணைகளை, அந்த விழா அரங்கிலேயே, அமைச்சர்கள் வழங்கினார்கள்.

>>>8ம் வகுப்பு தனித்தேர்வர்கள் சான்றிதழ் இன்றி தவிப்பு

தமிழகம் முழுவதும், 8ம் வகுப்பு தனித் தேர்வு முடிவுகள் வெளியாகி, மூன்று மாதங்களாகியும், மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இது, தேர்வு எழுதியவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
"அடுத்து, பத்தாம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டியிருப்பதால், சான்றிதழ் தேவை" என, தேர்வு எழுதியவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளிகளில் சேர்ந்து படிக்க முடியாதவர்களுக்கும், படிப்பை பாதியில் விட்டவர்களுக்கும், படிக்கும் வாய்ப்பை தருவதற்காக, ஆண்டுதோறும் நேரடியாக, 8ம் வகுப்பு நேரடி தனித் தேர்வை, அரசு தேர்வுத்துறை நடத்துகிறது.
ஆண்டுதோறும், நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில், தேர்வு நடைபெறும்; ஆயிரக்கணக்கானோர் தேர்வு எழுதுவர். ரயில்வே துறையில், "கலாசி" வேலையில் சேர, துப்புரவுப் பணியாளர்கள், பதிவு எழுத்தராகப் பதவி உயர்வு பெற, ஓட்டுனர் உரிமம் பெற என, பல நிலைகளில், எட்டாம் வகுப்பு தேர்வு அவசியம்.
இதற்காகவே, படிக்காமலிருந்த ஆயிரக்கணக்கானோர், எட்டாம் வகுப்பு தனித் தேர்வு எழுதுகின்றனர். நேரடியாக எட்டாம் வகுப்பு தேர்வு எழுதினால், தேர்ச்சி, தோல்வி என, தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டியிருக்கும்.
இதை தவிர்க்க, கடந்த ஆண்டு, எட்டாம் வகுப்பு நேரடி தனித் தேர்வை, ரத்து செய்ய, தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதும், அரசு வழக்கம் போல், எட்டாம் வகுப்பு தனித் தேர்வு நடத்த, உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி, கடந்த ஆண்டுக்கான எட்டாம் வகுப்பு நேரடித் தேர்வு, கடந்த ஏப்ரல் மாதம் நடந்தது; செப்டம்பர் மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. ஆனால், மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால், பத்தாம் வகுப்பு தேர்வுக்கு, விண்ணப்பிக்க உள்ளவர்கள், செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், "தேர்வு முடிவுகளை கணினியில் பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது. பத்தாம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்க, தேதி அறிவிப்பதற்கு முன்பாக, சான்றிதழ் வழங்கப்படும்" என்றனர்.

>>>தந்தைக்கு சமர்ப்பணம்...!


ஒவ்வொரு தந்தைக்கும் சமர்ப்பணம்...!

ஈரைந்து மாதங்கள்
எனை சுமந்த அன்னைக்கு பின்
இது வரைக்கும் என் வாழ்வை
தோள் சுமந்த தோழன்.

என்னை கருவாக்க சில நேரம்
இன்பம் கண்டார் ..
என்னை உருவாக்க இன்று
வரை எல்லாம் துறந்தார்.

இரவெல்லாம் கண்ணீர்
இதழ் எல்லாம் உமிழ் நீர்
அன்று மாடியில் தூங்கும் போது
நிலவை ரசிதேன் _ அவர்
மடியிலே தூங்கிய பின்
நிலவை மறந்தேன்.

நான் கண்மூடி படுக்கும்
வரை தூக்கம் இழந்தார் _ நான்
கால் எடுத்து நடக்கும் வரை
தோளில் சுமந்தார்.

மாலையில் கைபிடித்து
மலையோரம் நடப்போம்
அவர் கை பிடித்து போனது
வெறும் பாதை அல்ல.

நான் கால் வைத்த முதல்
பள்ளிக்கூடம் அதுவே
நிலவிலே மனிதன் போன
கதைகள் சொன்னார்
நான் நீதியில் வாழ பல
வழிகள் சொன்னார்.

அன்று கதிரவன் மறையும்
வரை கால் சென்றது
அந்த காட்சி மட்டும் இன்று
வரை கண்ணில் உள்ளது.

உழவாத நிலத்திலே உணவு இல்லை
உருகாத தங்கத்தில் உருவம் இல்லை
ஊதாத குழலுக்கு இசையும் இல்லை
உதை வாங்கா பிள்ளைக்கு உயர்வும் இல்லை.

என்னை அடித்தவுடன்
அழுவது ஆறு கண்கள்
தாயின் கண்கள் எனை
துடைக்க ஓடி வந்தது
தந்தையின் கண்கள்
அழுவதற்கு மறைவில் சென்றது.

நான் படிக்காமல் தூங்கி இருந்த
நேரத்தில் கூட _ நான்
படிப்பதற்கு தூங்காமல்
வேலை பார்தார்.

என் எதிர்கால வாழ்கையில்
பூக்கள் வளர
தன் நிகழ் கால வாழ்வையே
பணயம் வைத்தார்.

நான் வளரும் வரை
தோளில் தூக்கி வழி காட்டினார்
நான் வளர்ந்த பின்
தோளில் தட்டி வழி அனுப்பினார்.

எனை கல்லூரி சேர்க்க உடமை
இழந்தார் _ என் கல்விக்கு ஒளி
ஏத்த உடலை வருத்தார்.

என் கல்வியின் காசுக்கு தூக்கம்
இழந்தார் _ என் கண்ணீரின்
சமயம் எல்லாம் ஊக்கம்
கொடுதார்.

தியாகிகள் எல்லாம்
தந்தையாய் ஆகிறார்கள்
பல தந்தைகள் எல்லாம்
தியாகியாய் வாழ்கிறார்கள்.

>>>டிசம்பர் 14 [December 14]....

நிகழ்வுகள்

  • 1287 - நெதர்லாந்தில் இடம்பெற்ற பெரும் வெள்ளத்தினால் சூடர் சே கடல் தடுப்பு சுவர் இடிந்ததில் 50,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
  • 1542 - இளவரசி மேரி ஸ்டுவேர்ட் முதலாம் மேரி என்ற பெயரில் ஸ்கொட்லாந்தின் அரசியானாள்.
  • 1819 - அலபாமா ஐக்கிய அமெரிக்காவின் 22வது மாநிலமானது.
  • 1884 - இலங்கையில் இடம்பெற்ற பெரும் சூறாவளி காரணமாக யாழ்ப்பாணத்தில் மட்டும் பெரும் உயிர்ச் சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டன.
  • 1899 - யாழ்ப்பாணம் பொது மருத்துவமனையை தனியாரிடம் இருந்து இலங்கை அரசாங்கம் பொறுப்பெடுத்துக் கொண்டது.
  • 1900 - மாக்ஸ் பிளாங்க் தனது கரும்பொருள் கதிர்வீச்சு பற்றிய கொள்கையை நிறுவினார்.
  • 1903 - ரைட் சகோதரர்கள் தமது வான்வெளிப் பயணத்தை முதற்தடவையாகச் சோதித்தனர்.
  • 1911 - ரோல்ட் அமுண்ட்சென் தலைமையிலான 5 பேரடங்கிய குழு தென் முனையை அடைந்த முதலாவது மனிதர் என்ற பெயரைப் பெற்றனர்.
  • 1918 - பின்லாந்தின் மன்னனாக ஜெர்மனியின் இளவரசன் பிறீட்ரிக் கார்ல் வொன் ஹெஸ்சென் தெரிவுசெய்யப்பட்டான்.
  • 1939 - நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து சோவியத் ஒன்றியம் வெளியேற்றப்பட்டது.
  • 1941 - உக்ரேனின் கார்க்கிவ் நகரின் நாசி ஜேர்மனியத் தளபதி யூதர்கள் அனைவரும் நகரை விட்டு 2 நாட்களில் வெளியேற உத்தரவிட்டான். அடுத்த இரு நாட்களில் சுமார் 15,000 யூதர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
  • 1941 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பான் தாய்லாந்துடன் கூட்டு ஒப்பந்தம் செய்து கொண்டது.
  • 1946 - ஐநாவின் தலைமையகத்தை நியூயோர்க் நகரில் அமைக்க முடிவாகியது.
  • 1962 - நாசாவின் மரைனர் 2 விண்கலம் வெள்ளி கோளை அண்மித்தது. இதுவே வெள்ளியை அண்மித்த முதலாவது விண்கலமாகும்.
  • 1972 - அப்பல்லோ 17: யூஜின் சேர்னன் சந்திரனில் நடந்த கடைசி மனிதர் ஆனார்.
  • 2003 - சதாம் உசேன் கைப்பற்றப்பட்ட செய்தியை ஐக்கிய அமெரிக்காவின் அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ புஷ் அதிகாரபூர்வமாக றிவித்தார்.
  • 2003 - பாகிஸ்தான் அதிபர் பெர்வேஸ் முஷாரப் கொலை முயற்சி ஒன்றிலிருந்து உயிர் தப்பினார்.
  • 2004 - தென் பிரான்சில் வான் வீதி என அழைக்கப்படும் மில்லோ என்ற உலகின் மிகு உயர் பாலம் திறக்கப்பட்டது.

பிறப்புக்கள்

  • 1503 - நோஸ்ராடாமஸ், சிறந்த குறி சொல்லும் பதிப்பாளர் (இ. 1566)
  • 1546 - டைக்கோ பிரா, டேனியப் பிரபு (இ. 1601)
  • 1895 - போல் எல்யூவார், பிரெஞ்சுக் கவிஞர் (இ. 1952)
  • 1946 - சஞ்சய் காந்தி, இந்திய அரசியல்வாதி (இ. 1980)
  • 1953 - விஜய் அமிர்தராஜ் இந்திய டென்னிஸ் வீரர், நடிகர்.
  • 1979 - சாமர சில்வா, இலங்கைத் துடுப்பாட்ட அணியின் மட்டையாளர்

இறப்புகள்

  • 1799 - ஜார்ஜ் வாஷிங்டன், ஐக்கிய அமெரிக்க நாடுகளின் முதலாவது அரசுத் தலைவர். (பி. 1732)
  • 2006 - அன்டன் பாலசிங்கம், தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் (பி. 1938)

சிறப்பு நாள்

  • இந்தியா - எரிபொருள் சேமிப்பு நாள்

>>>விவேகானந்தர்

 
1893 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ந்தேதி இடம் அமெரிக்காவின் சிக்காகோ மாநிலம் உலக ஆன்மீக மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பல்வேறு நாடுகளிலிருந்து பல சமயங்களை சேர்ந்த பேச்சாளர்கள் கூடியிருந்தனர். மிடுக்காக உடையணிந்த மேற்கத்திய மத போதகர்கள் லேடீஸ் & ஜெண்டில்மேன் என்று தொடங்கி தங்கள் சொற்பொழிவை ஆற்றினர்....

இந்தியாவை பிரதிநிதித்து ஒருவர் அந்த மாநாட்டில் கலந்துகொண்டிருந்தார் அவரது முறை வந்ததும் பேசுவதற்கு மேட
ை ஏறினார் தனக்கு முன் பேசியவர்கள் போல மிடுக்கான கோட் சூட் உடைகளைப்போல் அல்லாமல் சாதாரண உடையும் தலைப்பாகயும் அணிந்திருந்த அவரை பார்த்தவுடன் அரங்கத்தில் லேசான சலசலப்பும் சிரிப்பும் பரவியது. சிலர் கேலியுடன் பார்த்தனர் வேறு சிலர் இவர் என்ன பேசப் போகிறார் என்று கொட்டாவி விட்டனர்.இன்னும் சிலர் பக்கத்தி இருந்தவரிடம் பேசத் தொடங்கினர்.

அந்த அலட்சியத்தையெல்லாம் பொருட்படுத்தாமல் அமைதியாக சிறிது நேரம் அனைவரையும் பார்த்த பிறகு சகோதர சகோதரிகளே என்று தனது சொற்பொழிவை தொடங்கினார் அவர். கூட்டத்தினரை அவ்வாறு அழைத்த விதத்திலேயே அரங்கத்தில் உள்ள அனைவரின் கவணமும் அவர்மீது திரும்பியது சிறிது மவுனம் காத்த பிறகு தனது பேச்சை தொடர்ந்தார். அவர் பேசி முடித்தபோது அரங்கம் வியப்போடு கைதட்டி அவருக்கு மரியாதை செய்த்தது. அவரது ஆடையிலிருந்த வித்தியாசத்தை மறந்து அவரின் பேச்சிலிருந்த உயந்த கருத்துக்களை நினைத்து மகிழ்ந்தது.

விழிப்புணர்வை ஏற்படுத்தும் கருத்துக்களை அந்த அந்நிய மேடையில் அழகாக முழங்கி மேற்கத்திய உலகில் மரியாதையைப் பெற்ற அந்த வரலாற்று நாயகர்தான் சுவாமி விவேகானந்தர். செல்வ செழிப்பில் பிறந்தும் துறவரம் பூண்டு நவீன இந்தியாவுக்கு நல்வழிகாட்டிய அந்த அரிய மாமனிதரின் கதையை தெரிந்துகொள்வோம்.

1863 ஆம் ஆண்டு சனவரி 12 ந்தேதி கல்கத்தாவில் புகழ்பெற்ற டார்டா குடும்பத்தில் உதித்தார் நரேந்திர நாதர் அதுதான் விவேகானந்தரின் இயர்பெயர். தந்தை விஸ்வநாதர் தாயார் புவனேஸ்வரி தேவி செல்வந்தர்களாகவும் அதே நேரத்தில் மக்களின் மரியாதை பெற்றவர்களாகவும் இருந்தனர். ஆங்கிலம் மற்றும் பெர்ஸிய மொழிகளில் புலமைப் பெற்றிருந்த தந்தை கல்காத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். மிகவும் கருணை உள்ளம் படைத்தவர் அவர். தாய் புவனேஸ்வரி தேவி ராமாயணத்திலும் மகாபாரத்திலும் புலமைப் பெற்றிருந்தார்.

சிறுவயதிலேயிருந்து எல்லாவற்றையும் ஆராய்ந்து அறியும் குணம் அவருக்கு இருந்தது. பின்னாளில் அவர் ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் சீடராக சேர்ந்தார்.

மற்ற சீடர்களிலிருந்து வேறுபட்டு விவேகமிக்கவராக திகழ்ந்ததால் நரேந்திர நாதருக்கு விவேகானந்தர் என்ற பெயரை சூட்டினார் ராமகிருஷ்ண பரமஹம்சர். அன்றிலிருந்து அந்த பெயரிலேயே அழைக்கப்பட்டார். யோகாசனத்தை முழுமையாக கற்று வேதாந்தங்களை கற்பிக்க தொடங்கினார் விவேகானந்தர். காசி லக்னோ ஆக்ரா பிருந்தாவனம் ரிஷிகேஸ் என இந்தியாவின் எல்லா பகுதிக்கும் யாத்திரை மேற்கொண்டார். சுமார் 14 ஆண்டுகள் பசிக்கொடுமையை உணர்ந்து அடுத்த வேளை என்ன சாப்பிடுவது எங்கு உறங்குவது என தெரியாமல் கடுமையான துறவு வாழ்க்கையை மேர்கொண்டார்.

அவர் இராமேஸ்வரத்துக்கு யாத்திரை மேற்கொண்டபோது இராமநாதபுரத்தின் மன்னனாக இருந்த பாஸ்கர சேதுபதியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. சொற்பொழிவாற்றுவதில் வல்லவரான அவருக்கு சிக்காகோவில் நடைபெற இருந்த உலக ஆன்மீக மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு வந்திருந்தது. விவேகானந்தரின் விவேகத்தை உணர்ந்திருந்த மன்னர் அந்த மாநாட்டில் பேச தம்மைவிட விவேகானந்தரே சிறந்தவர் என முடிவு செய்தார். அவரது வேண்டுகோளை ஏற்று சிக்காகோ சென்றபோதுதான் அந்த புகழ்பெற்ற சொற்பொழிவை ஆற்றினார் விவேகானந்தர்.

செப்டம்பர் 11 ந்தேதிக்கு பிறகு மேலும் மூன்று நாட்கள் அவரது சொற்பொழிவுகளில் மயங்கினர் மேற்கத்தியர்கள். அளவுக்கு மீறிய மதபற்று மூடத்தனமான பக்தி இவற்றிலிருந்து தோன்றிய மத வெறியால் உலகம் வன்முறையிலும் ரத்தக்களரியிலும் மிதக்கிறது. அதனால் நாகரிகம் அழிந்து எத்தனையோ சமுதாயங்கள் நம்பிக்கை இழந்துவிட்டன என்று முழங்கினார் விவேகானந்தர். அவரது பேச்சையும் அதிசயித்த ஒரு பெண் விவேகானந்தர் சென்ற இடமெல்லாம் பின் தொடர்ந்தார் அவரை தனிமையில் சந்திக்க வேண்டும் என்று எவ்வளவோ முயன்றார்.

அயோவா, சென்லுயி, டெட்ராயிட், பாஸ்டன், கேம்பிரிட்ஜ், வாஷிங்டன் நியூ யார்க் ஆகிய இடங்களில் விவேகானந்தருக்கு பேச அழைப்பு வந்தது. அவரும் சென்று பேசினார் அந்த இடங்களிளெல்லாம் அந்த பெண் பின்தொடர்ந்தார் கடைசியாக அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அமெரிக்க இளையர்கள் பலர் என் அழகில் மயங்கி என்னை சுற்றுகிறார்கள் ஆனால் நான் உங்கள் அறிவில் மயங்கி உங்களைச் சுற்றி வருகிறேன். என்னுடைய அழகும் உங்களுடைய அறிவும் சேர்ந்தால் நன்றாக இருக்குமே நாம் திருமணம் செய்துகொண்டால் என் அழகோடும் உங்கள் அறிவோடும் குழந்தை பிறக்கும் என்று கூறினார் அந்த 20 வயதுப் பெண். அப்போதுதான் 30 வயதைத் தொட்டிருந்த விவேகானந்தர் என்ன பதில் சொன்னார் தெரியுமா??

தாயே எனக்கு வயது 30 உங்களுக்கு 20 இருக்கும் நாம் திருமணம் செய்து நமக்கு பிறக்கும் குழந்தை அறிவுமிக்கதாக இருக்குமென்பதற்கு உத்தரவாதம் இல்லை. அதற்கு பதிலாக நீங்கள் என்னையே மகனாக ஏற்றுக் கொள்ளலாமே என்றார்.அந்த பதிலை கேட்டு ஸ்தம்பித்துபோனார் அந்தப் பெண் அப்படி காண்கின்ற பெண்களையெல்லாம் தாயாக கருதியவர் விவேகானந்தர். சிக்காகோ சொற்பொழிவுகளை முடித்துகொண்டு உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று விட்டு 1897 ஆம் ஆண்டு ராமேஸ்வரம் திரும்பினார் விவேகானந்தர்.

1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ந்தேதி தமது 39 வயதில் காலமானார். கண்ணியாகுமரியில் விவேகானந்தர் தியானம் செய்த இடம் “விவேகானந்தர் பாறை” என்று அழைக்கப்படுகிறது. கிழக்கத்திய மேற்கத்திய கலாச்சாரங்கள் பற்றிய ஆழமான அறிவு ஆன்மீக ஞானம், பேச்சாற்றல் இவைதான் விவேகானந்தரின் அடையாளங்கள். இந்தியாவில் மட்டுமல்ல மேற்கிலும் நிலவிய வறுமையை கண்டு மனம் பதைத்தவர்.

இந்தியாவின் சிறப்பு, மூடத்தனத்தின் ஒழிப்பு பகுத்தறிவின் முக்கியத்துவம் கல்வியின் அவசியம், ஏழ்மையின் கொடுமை என பல்வேறு பொருள் பற்றி எண்ணிலடங்கா சொற்பொழிவுகளை அவர் நிகழ்த்தியிருக்கிறார். 1897 ஆம் ஆண்டில் இராமகிருஷ்ண மிஷன் என்ற அமைப்பையும் உருவாக்கினார்.

எந்தவிதமான பிரச்சினைகளையும் சந்திக்கும் வலிமை உங்களுக்கு உண்டா உங்கள் அன்புக்குரியவர்கள் எதிர்த்தாலும் உங்கள் இலக்குகளை அடையும் விடாமுயற்சி உண்டா தன்னம்பிக்கை இருந்தால்தான் நீங்கள் சுதந்திரமாக இருக்க முடியும் உடலை திடமாக வைத்திருக்க வேண்டும் அதோடு கற்பதன் மூலமும் தியானத்தின் மூலமும் நீங்க வெற்றியடையலாம் என்கிறார் விவேகானந்தர்.

39 ஆண்டுகளே வாழ்ந்தாலும் அவர் ஓர் உதாரண வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு சென்றிருக்கிறார். அவர் கூறியதுபோல் உடல் வலிமை, மன வலிமை, விடா முயற்சி, தன்னம்பிக்கை, தொடர்கல்வி ஆகியவற்றை நாம் கடைபிடித்தால் நமக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும்

>>>மகாத்மா காந்திஜியையே அதிர வைத்த மாமனிதர் உமர் சுப்ஹானி !!!!

 
தேசவிடுதலைக்காக போராடும் காங்கிரஸ் பேரியக்கத்தின் பொருளாதார ஆதாரங்களுக்காக நிதி திரட்டும் முயற்சியில் காங்கிரஸ் கமிட்டி முனைந்தது. 1921 மார்ச் 31 - ஆம் தேதி விஜயவாடாவில் கூடிய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் ஒரு கோடி ரூபாய் நிதி திரட்டுவது என்றும், அந்நிதிக்கு திலகர் நினைவு சுயராஜ் நிதி என்றும் பெயரிட்டனர்.

அந்த நிதியில் 60 லட்சத்தை பம்பா
யிலும் மீதமுள்ள 40 லட்சத்தைப் பிற நகரங்களிலும் வசூல் செய்ய வேண்டுமென்று காந்திஜி அறிவித்தார். பம்பாயின் மிகப் பெரிய தொழில் அதிபர்களான ஏ.பி. காட்ரெஜ் மூன்று லட்சமும், ஜெயநாராயணன் இந்து மல்தானி ஐந்து லட்சமும், ஆனந்திலால் இரண்டு லட்சமும் நிதி வழங்கினர்.

லட்சக்கணக்கில் நிதி திரண்டுகொண்டிருந்த அந்நேரத்தில் பம்பாயின் மிகப் பெரிய பஞ்சாலையின் அதிபரான உமர் சுப்ஹானி என்ற இஸ்லாமியர் காந்திஜியிடம் நேரில் சென்று, திலகர் நினைவு சுயராஜ்ய நிதிக்காக ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

காசோலையை கையில் வாங்கிய காந்திஜியின் கண்கள் அதில் நிரப்பப்பட்டிருந்த தொகையை வாசித்தபோது ஆச்சரியத்தால் விரிந்தது. காங்கிரஸ் கமிட்டியின் நிதி திரட்டும் திட்டத்தை ஒருவரே நிறைவேற்றித் தருகிறாரே என்ற மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும், சுதந்திரப்போராட்ட நிதி என்பதால் அதில் பலரது பங்களிப்பும் இருந்தால்தான் அது சிறப்புடையதாக அமையும் என்று காந்திஜி கருதினார். எனவே அக்காசேரலையை உமர் சுப்ஹானியிடமே திருப்பிக் கொடுத்து, சில லட்சங்கள் மட்டும் வழங்குங்கள் என்கிறார். காந்திஜியின் விருப்பப்படி சில லட்சங்களை உமர் சுப்ஹானி வழங்கினார். ஒரு கோடி ரூபாயை திலகர் நினைவு சுயராஜ்ய நிதிக்கு உமர் சுப்ஹானி வழங்க முன்வந்த செய்தி ஆங்கில அரசுக்கு எட்டுகிறது. பம்பாய் மாகாண வைஸ்ராய் உடனடியாக உமர் சுப்ஹானியின் தொழிலைமுடக்குவதற்கான நடவடிக்கைகளில் இறங்குகிறார்.
உமர் சுப்ஹானியின் பஞ்சாலையில் உற்பத்தியாகும் பஞ்சை அரசே விற்றுத்தரும் என்று நிர்ப்பந்தப்படுத்தி வாங்கி, மிகக் குறைந்த விலையில் விற்றது. இதனால் உமர் சுபஹானிக்கு ஏற்பட்ட நஷ்டம் மூன்று கோடியே அறுபத்து நான்கு லட்சம். இதனை அவரது சகோதரி பாத்திமா இஸ்மாயில் ஒரு பத்திரிகைப் பேட்டியில்குறிப்பட்டுள்ளார்.*

அந்நியத் துணி பகிஷ்கரிப்புப் போராட்டம் முனைப்புடன் நடந்து கொண்டிருந்த போது, "அந்நியத் துணிகளை உங்கள் பஞ்சாலைகளில் வைத்து எரியூட்டலாமா?'' - என்று காந்திஜி கேட்டார். அதற்கு "என் பஞ்சாலை இதைவிட வேறு ஒரு நல்ல காரியத்திற்குப் பயன்படவாப் போகிறது'' - என்று உமர் சுப்ஹானி பதிலளித்திருக்கிறார்.

அந்நியத் துணிகளைத் தீயின் நாவுக்குத் தின்னக் கொடுக்கும் எழுச்சிமிக்க நிகழ்ச்சி காந்திஜி தலைமையில் உமர் சுப்ஹானியின் பஞ்சாலையில் நடைபெற்றது. ஆங்கில அரசால் தனது தொழிலுக்கு மேலும் இடைஞ்சல்கள் வரும் எனத்தெரிந்தும், தன் பஞ்சாலையை அந்நியத் துணிகளை எரியூட்டும் களமாக அமைத்துக்கொடுத்ததோடு, 30 ஆயிரம் மதிப்புள்ள அந்நியத் துணிகளையும் எரியூட்ட வழங்கினார். 1921 அக்டோபர் 9 - ஆம் தேதியும் அந்நியத் துணிகளை எரியூட்டும் மற்றொரு நிகழ்ச்சி உமர் சுப்ஹானியின் பஞ்சாலையில் நடைபெற்றது.

அந்நியத் துணி பகிஷ்கரிப்பு போராட்டத்திற்கு களம் அமைத்துக் கொடுத்ததற்காக உமர் சுப்ஹானிக்கு பிரிட்டீஷ் அரசு கொடுத்த இன்னல்கள் ஏராளம்! தேச விடுதலைக்காக கொடுத்தும் இழந்தும் பொருளாதார தியாகங்களைச் செய்த உமர் சுப்ஹானியின் பெயரை இனியாவது இந்திய விடுதலை வரலாறு உச்சரிக்குமா?

(சிந்தனைச்சரம் நவம்பர் 1997. புத்தகம் )

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Don't trust DEEP FAKE videos circulating like RBI Governor speaking in support of some investment schemes - RBI appeals to public

 ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் முதலீட்டு திட்டங்கள் குறித்து அறிவுரைகள் வழங்குவது போல பரவும் DEEP FAKE வீடியோக்களை நம்பிவிட வேண்டாம்...