கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>முருங்கை - Moringa oleifera

 
தனது சத்துக்களின் வீரியத்தை கொஞ்சம் கொஞ்சம் ஆக இழந்து வரும் பூமியில் முருங்கை மாதிரி கீரை வகைகள் ஏழைகளின் அமிர்தம் எனலாம். அணைத்து ஜீவ சத்துக்களும் அடங்கிய இந்த கீரை ஒரு இயற்கையின் அற்புதம் தான். இறைவனின் கொடை .
இதன் அனைத்து பாகங்களும் உபயோகம்ஆனது . இதன் விதை காய்,இலை, இலையின் ஈர்க்கு , மரம் ,வேர் ,பூ அனைத்துமே பயனுள்ளவை.. இதன் விதையில் இருந்து பயோ டீசல் எடுக்கலாம் ,சமையல் எண்ணெய்எடுக்கலாம்
மேலும் மேனி எழிலுக்கு , சுகதாரத்திற்கு ,இயந்திரத்திற்கு மசக்கு எண்ணெய், இன்னும் என்னவோ உபயோகம் . ஆரஞ்சை போல் 7 மடங்கு வைட்டமின் c அடங்கியது .

பாலில் இருப்பதை போல் 4 மடங்கு சுண்ணாம்பு சத்து அடங்கியது

காரட்டில் இருப்பதைப் போல் 4 மடங்கு வைட்டமின் A அடங்கியது

வாழை பழததை போல் 3 மடங்கு பொட்டாசியம் அடங்கியது

தயிரில் இருப்பதை விட 2 மடங்கு புரோட்டின் அடங்கியது

இரும்பு சத்து அமரிமிதமாக உள்ளது .எந்த கீரையையும் விட 75 மடங்கு இரும்பு சத்து அதிகம்.

முருங்கையின் இலை, பூ, பிஞ்சு, காய், விதை, பட்டை, வேர் என அனைத்து பாகங்களும் அளவற்ற மருத்துவக் குணங்களைக் கொண்டவை. இந்தியாவில் இமயமலையில் தொடங்கி குமரி வரை எங்கும் காணப்படும் மரங்களில் முருங்கை முக்கியமானது .

இலங்கை, மியான்மர், மலேசியா போன்ற நாடுகளில் இதனை அதிகம் பயிர்செய்கின்றனர். இதில் காட்டு முருங்கை, கொடிமுருங்கை, தவசு முருங்கை என பலவகையுண்டு. முருங்கைக் கீரையைப் போலவே பூவிலும் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன.
முருங்கை பூவின் மருத்துவ மகிமையை பல நூல்களில் சித்தர்கள் எழுதியுள்ளனர்.

விழிகுளிரும் பித்தம்போம் வீறருசி யேகும்
அழிவிந் துவும்புஷ்டி யாகும் - எழிலார்
ஒருங்கையக லாககற் புடைவா ணகையே
முருங்கையின் பூவை மொழி

- அகத்தியர் குணபாடம்

வெண்மை நிறங்கொண்ட சிறிய பூக்கள் கொத்து கொத்தாக காணப்படும். கண்களைப் பாதுகாக்க முருங்கையின் பூவை மொழி முருங்கைப் பூவுடன் பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து, கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும். முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை மாலை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும்.

முருங்கைப் பூவை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும். நீரிழிவு நோயாளிகளின் நிலையும் இதுபோல்தான். இவர்கள் முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும். இவர்கள் முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும். இதை இயற்கையின் வயகரா எனக்கூறலாம். இதன் பிசின் கூட மோகத்தை கூட்டவல்லது .பாலில் இட்டு இரவில் சாப்பிடலாம். இதன் காயை பற்றித்தான் பாக்கியராஜ் சினிமா மூலம் முன்பே பிரபலம் ஆக்கிவிட்டார் . காய் கறிகளில் முருங்கை சுவையானது அனைவரும் விரும்புவது .அதிக சத்துள்ளதும் கூட வீட்டுக்கொரு முருங்கை இருந்தால் வைத்தியருக்கும் வேலையில்லை. சாப்பாட்டிற்கும் கவலையில்லை..

>>>உபரியாகக் காட்டப்பட்ட இடங்களில் புதிய நியமனம்...!

நியமன விதிகளுக்கு முரணாகவும், ஏற்கெனவே பணியாற்றி வந்த ஆசிரியர்களின் நலனுக்கு எதிராகவும் உபரியெனக் காட்டப்பட்டு, பணி நிரவல் செய்யப்பட்ட இடங்களில் புதிதாக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் கழகம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் நாமக்கல் மாவட்டத் தலைவர் ம.பொ.ஜெயச்சந்திரன் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பிய மனு:

"உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 2012, ஜூலை மாதம் நடைபெற்ற ஆசிரியர் பணியிட கணக்கெடுப்புப்படி உபரியென கணக்கிடப்பட்ட ஆசிரியர்கள் பணி நிரவல் அடிப்படையில் மாவட்டத்துக்குள்ளும், மாவட்டத்துக்கு வெளியேயும் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதனால், கர்ப்பிணிகள், ஓய்வுபெறும் தருவாயில் இருந்தவர்கள், கடும் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஆசிரியர்களும்கூட எந்தவித சலுகையோ, கருணையோ காட்டப்படாமல் வேறு பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டனர். அரசு உத்தரவுக்கு கட்டுப்பட்டு அவர்களும் பணியாற்றிய பள்ளியிலிருந்து வேறு பள்ளிகளில் பணியில் சேர்ந்து கொண்டனர். இந்த நிலையில், தற்போது ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பல இடங்களில் உபரியென கணக்குக் காட்டப்பட்டு ஏற்கெனவே பணியாற்றி வந்த ஆசிரியர்கள் வெளியேற்றப்பட்ட இடத்திலேயே அதே பாடத்துக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக,

எர்ணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் ஜூலை மாதம் உபரியென காட்டப்பட்டு, சம்பந்தப்பட்ட ஆசிரியர் பணி நிரவல் மூலம் வேறு பள்ளிக்கு அனுப்பப்பட்டார். டிசம்பர் மாதம் அதே பள்ளியில் தமிழாசிரியர் தேவையென காட்டப்பட்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற புதிய ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு உபரியென காட்டப்பட்ட பணி நிரவல் செய்யப்பட்ட இடங்களில் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருப்பது விதிகளுக்கு முரணானது. ஏற்கெனவே பணியாற்றி வந்த ஆசிரியர்களின் நலனுக்கு எதிரானதுமாகும். இத்தகைய தவறு நிகழக் காரணமானவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், உபரியென கணக்குக் காட்டப்பட்டு தற்போது புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ள பணியிடங்களில் வெளியேற்றப்பட்ட ஆசிரியர்களையே பணியமர்த்தவும் வேண்டும். மாவட்டம் முழுவதும் பணி நிரவல் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்குக் கலந்தாய்வு நடத்திய பிறகு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களை பணி நியமனம் செய்யவும், இந்தக் குறைகளை நிவர்த்தி செய்யும் வரை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் புதிதாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களைப் பணியில் அமர்த்துவதை தாற்காலிகமாக நிறுத்தி வைத்து புதிய பணியிட ஆணை வழங்க வேண்டும்"
என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

>>>டிசம்பர் 16 [December 16]....

நிகழ்வுகள்

  • 1431 - இங்கிலாந்தின் ஆறாம் ஹென்றி பிரான்ஸ் மன்னனாக பாரிசில் முடிசூடினான்.
  • 1497 - வாஸ்கொடகாமா முன்னர் பர்தலோமியூ டயஸ் சென்றடைய முடியாத தென்னாபிரிக்காவின் அட்லாண்டிக் கரையோரத்தில் உள்ள நன்னம்பிக்கை முனையை சுற்றி வந்தார்.
  • 1598 - கொரிய, ஜப்பானியக் கடற்படைகளுக்கிடையே இடம்பெற்ற சமரில் கொரியா வெற்றி பெற்றது.
  • 1653 - சேர் ஒலிவர் குரொம்வெல் இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, அயர்லாந்து நாடுகள் அடங்கிய பொதுநலவாயத்தின் தலைவரானார்.
  • 1707 - ஜப்பானின் ஃபூஜி மலை கடைசித் தடவையாக வெடித்தது.
  • 1773 - அமெரிக்கப் புரட்சி: பாஸ்டன் தேநீர் கொண்டாட்டம் - அமெரிக்கர்கள் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியின் கப்பல்களில் ஏறி தேநீர் பெட்டிகளை பாஸ்டன் துறைமுகத்தில் எறிந்தனர்.
  • 1835 - நியூயோர்க் நகரத்தில் இடம்பெற்ற பெருந்தீயில் 530 கட்டிடங்கள் சேதமடைந்தன.
  • 1857 - இத்தாலியின் நேப்பில்சில் இடம்பெற்ற 6.9 நிலநடுக்கம் 11,000 பேரைக் கொன்றது.
  • 1920 - சீனாவில் 8.6 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 200,000 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1922 - போலந்து அரசுத்தலைவர் கேப்ரியல் நருடோவிச் சுட்டுக் கொல்லப்பட்டார்.
  • 1925 - இலங்கை வானொலியின் வானொலி சேவை கொழும்பில் ஆரம்பம்.
  • 1941 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியர்கள் சரவாக்கீன் மிரி நகரைக் கைப்பற்றினர்.
  • 1960 - ஐக்கிய அமெரிக்க விமானம் நியூயோர்க்கை அண்மிக்கும் போது மோதியதில் 134 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1971 - வங்காளதேச விடுதலைப் போரில் பாகிஸ்தான் இராணுவம் சரணடைந்து போர் முடிவுக்கு வந்தது.
  • 1971 - பாஹ்ரேன் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.
  • 1991 - கசக்ஸ்தான் சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

பிறப்புக்கள்

  • 1770 - லுடுவிக் ஃவான் பேத்தோவன், ஜெர்மனிய மேற்கத்திய இசை இயற்றுநர் (இ. 1827)
  • 1866 - வசிலி கண்டின்ஸ்கி, ரஷ்ய ஓவியர் (இ. 1944)
  • 1917 - ஆர்தர் சி. கிளார்க், ஆங்கில எழுத்தாளர்

இறப்புகள்

  • 1916 - கிரிகோறி ரஸ்புட்டீன், ரஷ்ய மதகுரு, (பி. 1869)
  • 1999 - ஜோசப் ஆனந்தன், தமிழ் நாடக எழுத்தாளர்

சிறப்பு நாள்

  • பாஹ்ரேன் - தேசிய நாள் (1971)
  • வங்காள தேசம் - வெற்றி நாள் (1971)
  • கசக்ஸ்தான் - விடுதலை நாள் (1991)
  • நேபாளம் - அரசியலமைப்பு சட்ட நாள் (1962)

,>>>ஓ போடு – ஒரு சமூக விழிப்புணர்வு இயக்கம் - - -ஞாநி.....

கடந்த சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களின்போது நானும் சில நண்பரகளும் சம கருத்துள்ளவர்களுமாக சேர்ந்து ஓ போடு என்ற பிரசார இயக்கத்தை நடத்தினோம். எல்லா அரசியல் கட்சிகளும் மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும்போது தேர்தலில் ஒரு வாக்காளர் என்ன செய்யலாம் என்பதற்கு நமது சட்டம் அளித்துள்ள வழிமுறைதான் 49 ஓ பிரிவு. இன்றும் அர்த்தமுள்ள முழக்கம் ஓ போடு என்பதாகும். அப்போது வெளியிட்ட பிரசுரத்திலிருந்து இதோ:
ஓ போடு என்றால் என்ன ? ஓட்டு போடு என்று அர்த்தம். ஓட்டு போடுவது மக்களின் உரிமையும் கடமையும் ஆகும்.
ஆனால் சராசரியாக எந்தத் தேர்தலிலும் வாக்காளர்களில் நூற்றுக்கு 45 பேர் ஓட்டு போடுவதில்லை.
ஏன் ஓட்டு போடுவதில்லை என்று கேட்டால் பல பேர் சொல்லும் காரணம் இதுதான். “எந்த வேட்பாளரும் சரியில்லை; இருப்பதில் ஒருத்தருக்கு ஓட்டு போட எனக்கு பிடிக்கவில்லை,” என்று சொல்லுகிறார்கள்.
அப்படி நினைப்பவர்களும் கூட போய் ஓட்டு போட முடியும். சட்டத்தில் அதற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது.
அதுதான் 49 ஓ.
எல்லா வேட்பாளர்களையும் நிராகரிக்கும் உரிமையை நமக்கு இந்தப் பிரிவு கொடுத்திருக்கிறது. வாக்குச் சாவடிக்கு சென்று ஓட்டு போடுவதற்காக விரலில் மை வைக்கபட்ட பிறகு, எந்த வேட்பாளருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை என்று நாம் தெரிவிக்கலாம். அதை ஓட்டுச் சாவடி அதிகாரி பதிவு செய்தாக வேண்டும். இதுதான் தேர்தல் விதிகள் (1961)ன் 49 (ஓ) பிரிவு. வாக்காளர் இதற்காக எந்த விண்ணப்பத்தையும் நிரப்பத் தேவையில்லை. ஓட்டுச் சாவடி அதிகாரியிடம் சொன்னால் போதும். அவர் தன்னிடம் உள்ள பாரம் 17 ஏ என்ற பதிவேட்டில் இதை எழுதிக் கொள்வார். அதில் நாம் கையெழுத்திட்டால் போதும்.
எந்த வேட்பாளரும் ஏற்கத் தகுந்தவராக இல்லை என்றால் அதை அரசியல் கட்சிகளுக்கு நாம் உணர்த்தவேண்டும். அதற்கு சிறந்த வழி ஓட்டு போடாமல் இருப்பது அல்ல. 49 ஓவின் கீழ் பதிவு செய்வதே சரியான முறையாகும். அரசியலே சரியில்லை என்று அலுத்துக் கொண்டு நாம் ஓட்டு போடாமல் இருந்தால், அதனால் அரசியல் கட்சிகளுக்கு எந்த நஷ்டமும் கிடையாது. ஆனால் 49 ஓவின் கீழ் நம்முடைய ஓட்டைப் பதிவு செய்தால் நமது அதிருப்தியை அவர்களுக்குத் தெரியப்படுத்த முடிகிறது.
ஒரு தொகுதியில் ஜெயிக்கிற வேட்பாளரை விட , 49 ஓவுக்கு அதிக ஓட்டு விழுந்தால், எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அப்போது ‘இனி நேர்மையான அரசியல் செய்ய வேண்டும், நல்ல வேட்பாளர்களை நிறுத்த வேண்டும்; இல்லாவிட்டால் மக்கள் தரவு கிடைக்காது’ என்பது அரசியலில் உள்ளவர்களுக்கு உறைக்கும். மக்களுடைய அதிருப்தியை அரசியல்வாதிகளுக்கு தெரியப்படுத்த சிறந்த வழி – 49 ஓ.
ஓட்டு போடாமல் இருப்பது, நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும்.
49 ஓ போடுவது, நம்மை இனி ஏமாற்ற முடியாது என்று அறிவிப்பதாகும்.
ஓட்டு போடுங்க. 49 ஓ போடுங்க.
ஓ’ போடு இயக்கம் கீழ் வரும் கோரிக்கைகளை வலியுறுத்துகிறது.
1. எல்லா வாக்காளர்களும் ஓட்டு போட வேண்டும். ஓட்டு போடாமல் இருப்பது அரசியலின் தரத்தை மேம்படுத்த விடாமல் தடுப்பதாகும்.
2. எந்த வேட்பாளரும் ஏற்கத் தகுந்தவராக இல்லை என்றால் அதை அரசியல் கட்சிகளுக்கு உணர்த்துவதற்கான சிறந்த வழி ஓட்டு போடாமல் இருப்பது அல்ல. 49 ஓவின் கீழ் பதிவு செய்வதே சரியான முறையாகும்.
3. ரகசிய ஓட்டு என்பது அரசியல் சட்டப்படி வாக்காளருக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமையாகும். ஆனால் 49 ஓவை ரகசியமாகப் போடமுடியாமல் தேர்தல் ஆணையம் வைத்திருப்பது சட்டப்படி தவறாகும். இதையும் ரகசிய வாக்காக அளிக்கும் விதத்தில் மின் வாக்கு இயந்திரத்தில் 49 ஓவுக்கு ஒரு தனி பட்டனை வரும் தமிழக சட்ட மன்றத் தேர்தலிலேயே தேர்தல் ஆணையம் ஏற்படுத்த வேண்டும்.
4. ஓட்டுச் சாவடி அதிகாரிகளுக்கு வகுப்பு நடத்தும்போது தவறாமல் 49 ஓ பிரிவு பற்றி கற்றுத் தருவது தேர்தல் ஆணையத்தின் கடமையாகும். ஓட்டுச் சாவடிக்கு வந்து 49 ஓ பிரிவின் கீழ் பதிவு செய்ய விரும்பும் எந்த வாக்காளரையும், அது பற்றி எனக்குத் தெரியாது என்று சாவடி அதிகாரி திருப்பி அனுப்புவது தவிர்க்கப்பட வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி ‘ஓ’ போடு இயக்கம் பிரசாரம் செய்யும்.
இந்தப் பிரசுரத்தை இயன்ற அளவுக்கு பரப்புங்கள். இந்தக் கருத்தை நண்பர்களுடன் விவாதியுங்கள்.

>>>கல்வியாளர்களுக்கு இரண்டு ப/பாடங்கள்…. ஓ பக்கங்கள் - ஞாநி...

இந்திய சினிமாவில் புரட்சிகரமாக எதுவும் நிகழ்வதில்லை. கொஞ்சம் வித்யாசமாக ஏதாவது நடந்தாலே அதை மகாபெரிய புரட்சி என்று ஊதிக் காட்டுவது மட்டும்தான் நடக்கும்.
ஹிந்தி சினிமாவில் மல்ட்டிப்ளெக்ஸ் படங்கள் என்று ஒரு வகையேனும் அண்மைக் காலத்தில் உருவாகியிருக்கிறது. வெகுஜன அளவில் செல்ல முடியாவிட்டாலும் படித்த நடுத்தர உயர் நடுத்தர வகுப்புப் பார்வையாளரை மட்டும் நம்பி எடுக்கப்படும் படங்கள் இவை. ஹிந்தி சினிமாவின் பெரிய ஹீரோக்களாகக் கருதப்படும் ஆமீர் கான், ஷாருக் கான், அபிஷேக் பச்சன் போன்றவர்கள் கூட இந்த படங்களில் நடிக்க முன்வருகிறார்கள். ஆமீர்கான் தானே அப்படிப்பட்ட படங்களைத் தயாரிக்கிறார்.
தமிழில் இப்படிப்பட்ட முயற்சிகள் சாத்தியப்படவில்லை. இங்கே மல்ட்டிப்ளெக்ஸ் எனப்படும் பல திரைக் கொட்டகைகள் இன்னும் பரவவில்லை. எனவே அவற்றை மட்டும் நம்பிப் படம் எடுப்பது இயலாது. வெகுஜன அளவில் வித்யாசமான முயற்சிகளை செய்ய முற்படும்போது, வணிகம் சார்ந்த ரசனைக்கும், படத்தின் கருத்து சார்ந்த அழகியலுக்கும் சமரசம் செய்யவேண்டிய சிக்கல் ஏற்படுகிறது. இந்த சமரசத்தைத் தயாரிப்பாளருக்குப் புரியவைத்து படம் எடுக்கச் செய்ய இயக்குநர் மிகவும் சிரமப்படவேண்டியிருக்கும். அப்படி எடுத்த படத்தை பார்வையாளர்களில் எல்லா பிரிவினரும் ஆதரித்தால்தான் வசூலில் தப்பிக்கும் என்ற சிக்கலை சந்தித்தாகவேண்டும். மிக முக்கியமாக இங்கே ஆமீர்கான், ஷாருக் கான்களுக்கு நிகரான அந்தஸ்தில் இருக்கும் ஹீரோ நடிகர்கள் ஒருபோதும் அப்படிப்பட்ட படங்களில் நடிக்க ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள்.
இந்தப் பின்னணியில்தான் அண்மையில் வந்த சாட்டை பட முயற்சியை நான் முக்கியமான முயற்சியாகப் பார்க்கிறேன். சமூகத்தின் எரியும் பிரச்சினைகளை படத்தின் கருவாக எடுத்துக் கொள்ள எப்போதுமே தமிழ் சினிமா மிக மிகத் தயங்கும். தண்ணீர் தண்ணீர் மூலம் மறைந்த கோமல் சுவாமிநாதன் நாடகத்தில் கொஞ்சம் முயற்சி செய்ததை பாலசந்தர் படமாக்கினார். அதன்பின்னர் அப்படிப்பட்ட படங்கள் கூட அபூர்வமாகிவிட்டன. அண்மையில் அப்படிப்பட்ட முயற்சிகளாக வந்த படங்களில் அங்காடித்தெரு, வாகை சூடவா வரிசையில் சாட்டையை வைக்கலாம்.
சாட்டை இதுவரை வந்த படங்களிலிருந்து முற்றிலும் விலகி நிற்பது அது எடுத்துக் கொண்ட பொருளில்தான். பேசாப் பொருளை பேச நான் துணிந்தேன் என்பான் பாரதி. அவனுடைய மேற்கோளோடே தன் படத்தைத் தொடங்கும் இயக்குநர் அன்பழகன் முதல் படத்திலேயே முக்கியமான சமூகப் பிரச்சினையை எடுத்துக் கொண்டிருக்கிறார். படத்தை தயாரிக்க முன்வந்த இயக்குநர் பிரபு சாலமன் தன் இயக்குநர் மீது வைத்த நம்பிக்கையும் கொடுத்த ஆதரவுமே இதை சாத்தியமாக்கியிருக்கிறது.
லட்சக்கணக்கான ஏழை மாணவர்கள் படிக்கும் அரசுப் பள்ளிகளில் பெரும்பான்மையான ஆசிரியர்கள் தங்கள் பொறுப்பைச் செய்யாமல், அந்த மானவர்களின் எதிர்காலத்தையே வீணாக்கிக் கொண்டிருப்பதைப் பற்றி எந்த அரசியல் கட்சியும் வாயைத் திறப்பதில்லை. அந்த ஆசிரியர்களின் ஊதிய உயர்வுக்கும் இடமாற்றல் கோரிக்கைகளுக்கும் குரல் எழுப்பும் சங்கங்கள் , அவர்கள் தன் அடிப்படைக் கடமைகளையே செய்யாமல் திரிவதை சரி செய்ய முயற்சிப்பதே இல்லை. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்தப் பிரச்சினையை தீர்க்க முன்வருவதே இல்லை. எல்லாவற்றுக்கும் காரணம் ஓட்டு பற்றிய பயம்தான். எதிர்காலமே பாழாக்கப்படும் ஏழை மாணவர்களின் குடும்ப ஓட்டுகளை, இலவசங்கள் மூலம் கைப்பற்றிக் கொள்ளலாம்.ஆனால் ஆசிரியர்கள் மீது கை வைத்தால் சிக்கல். ஓட்டுக்கும் ஆபத்து.தேர்தல் வாக்குச் சாவடிகளை நிர்வகிப்பதிலும் அவர்களுக்குக் கணிசமான பங்கிருக்கிறது என்ற பயம் அரசியல்வாதிகளை ஆட்டுகிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் அன்பழகனின் சாட்டை வீசப்பட்டிருக்கிறது. குட்டிச் சுவராக இருக்கிற ஓர் அரசுப் பள்ளியை , மனசாட்சியும் கடமை உணர்ச்சியும், சிறுவர்கள் மீது அன்பும் உடைய ஒரு நல்லாசிரியர் எப்படி மாற்றி அமைக்கிறார் என்பதை சுவாரஸ்யமாக சொல்ல முற்பட்டிருக்கிறார். அவருக்கு பெரிய பலமாக அமைந்திருப்பது அந்த பாத்திரத்தை நடித்திருக்கும் இயக்குநர் சமுத்திரக்கனி. கூடவே வெவ்வேறு ஆசிரியர் பாத்திரங்களை ஏற்ற ஒவ்வொரு நடிகரும், மாணவர்களாக நடித்த ஒவ்வொரு இளம் நடிகரும் ஒளிப்பதிவாளரும், எடிட்டரும், கலை இயக்குநரும் கச்சிதமாகத் தங்கள் வேலையை செய்திருக்கிறார்கள். ( இது பட விமர்சனம் அல்ல என்பதால் நான் ஒவ்வொரு அம்சத்தைப் பற்றியும் இங்கே எழுதவில்லை.)
படத்தில் சின்னச் சின்னதாகப் பல குறைகள் இருக்கின்றன – பள்ளியின் மொத்த ஆசிரியர்களும் பொறுப்பற்றவர்கள் என்ற மிகை உட்பட. ஆசிரியர்களின் தவறுகளை சொல்லும் படம் அடுத்த நிலையில் அதற்குப் பொறுப்பான கல்வித்துறை, அரசு பற்றி சொல்லவில்லை என்பது ஒரு குறை. வெகுஜன பார்வையாளருக்காக வைத்திருக்கும் பாடல்கள், ஆட்டங்கள் எல்லாம் இந்தக் கதைக்கு ஒட்டாமல் இருக்கின்றன. அரசுப் பள்ளிகளை நம்பி இன்னமும் வரும் லட்சக்கணக்கான குழந்தைகளின் சமூகப் பொருளாதார நிலை அசலாக இருப்பதை விட சற்றே மேலாக இந்தப் படத்தில் சித்திரிக்கப்பட்டிருப்பது ஒரு குறை. இந்தக் குறைகளை மீறிப் படம் எடுத்துக் கொண்ட செய்தியை உரக்க அழுத்தமாக நம் மனதில் பதியவைக்கிறது என்பதுதான் முக்கியம்.
இன்று ஒவ்வொரு பள்ளியிலும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று வளர் இளம் பருவத்தினரிடையே சினிமாக்களின் தாக்கத்தால் ஊட்டி வளர்க்கப்பட்ட பொய்யான காதல் உணர்ச்சி. இயக்குநர் அன்பழகன் அதை இந்தப் படத்தில் சுட்டிக் காட்டி விவாதித்திருக்கிறார். மோதல், சண்டை, ஒருதலைக் காதல், வீட்டார் எதிர்ப்பு போன்ற பிரச்சினைகளுக்குப் பிறகு இளம் டீன் ஏஜ் ஜோடியை சேர்த்து வைக்கும் வழக்கமான தமிழ் சினிமா களவாணித்தனத்தை செய்யாமல், படிக்கும் வயதில் படிப்புதான் முக்கியம் என்பதை மாணவர்கள் உணரும் விதத்தில் அன்பழகன் சொல்லியிருக்கிறார்.
இந்தப் படத்தை தமிழ்நாட்டுக் கல்வியாளர்கள் பார்க்க வேண்டும். கல்வித்துறை அதிகாரிகள் பார்க்க வேண்டும். ஆசிரியர் சங்கங்களின் தலைவர்கள் பார்க்க வேண்டும். இதில் காட்டியிருப்பதில் அது தவறு, இது இப்படியில்லை, இது கற்பனை என்றெல்லாம் சொல்லித் தங்கள் தரப்பை நியாயப்படுத்திக் கொள்வதற்கு பதிலாக, இந்தப் படம் சுட்டிக் காட்டும் பிரச்சினைகளை, அவற்றுக்கு முன்வைக்கும் தீர்வுகளை திறந்த மனதுடன் விவாதிக்க முன்வரவேண்டும். ஏனென்றால் இந்தப் படம் முன்வைக்கும் பிரச்சினை, கற்பனை அல்ல. அசலானது. லட்சக்கணக்கான தமிழ்க் குழந்தைகளின் எதிர்காலம் பற்றியது.
சாட்டை படத்தில் ஒரு காட்சியில் குறிப்பிடப்படும் பிரச்சினையே ஹிந்தியில் ஒரு முழுப்படமாக வந்திருக்கிறது. அதுதான் இங்கிலீஷ் விங்கிலீஷ். இது சாட்டை முயற்சியிலிருந்து வேறுபட்டது. மல்ட்டிப்ளெக்ஸ் பார்வையாளர்களை நம்பி எடுக்கப்பட்டிருக்கும் படம். சுமார் 14 வருடங்களுக்குப் பிறகு ஸ்ரீதேவி நடிக்கிறார் என்பதே இந்தப் படத்துக்கான பெரிய பப்ளிசிட்டி.
இந்தப் படமும் இயக்குநருக்கு முதல் படம்தான். இயக்குநர் கௌரி விளம்பரப் படங்கள் எடுத்துவந்தவர். அவர் கணவரான தமிழர் பால்கியும் விளம்பரப் பட இயக்குநர். இதற்கு முன் பால்கி எடுத்த இரு படங்களிலும் கௌரியும் பணியாற்றினார். அந்தப் படங்களும் வித்யாசமான கருப் பொருள் உடையவை. சீனி கம், முதிர் வயதில் காதல்வசப்படுவது பற்றியது. அடுத்த படம் ‘பா’ சிறு வயதிலேயே வயது ஏறாமலே உடல் மட்டும் முதுமையாகிவிடும் அபூர்வமான நோயால் தாக்கப்பட்ட சிறுவனைப் பற்றியது. இரண்டிலும் அமிதாப் பச்சன்தான் ஹீரோ. பாதிக்கப்பட்ட சிறுவனாக அமிதாப் அற்புதமாக நடித்திருந்தபோதும் அவருக்கு அதற்காக சிறந்த நடிகர் விருது தரப்பட்டது வட இந்திய அரசியல் என்றும் மம்மூட்டிக்கே விருது தரப்பட்டிருக்கவேண்டும் என்றும் கேரளத்தில் குரல்கள் எழுந்தன.
கௌரி எடுத்திருக்கும் படத்திலும் அமிதாப் நட்புக்காக இரண்டு சீனில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் தமிழ் வடிவத்தில் அந்த ரோலில் அஜீத். ( நியாயமாக ரஜினி நடிக்க முன்வந்திருக்க வேண்டும்.)
இங்கிலீஷ் விங்கிலீஷ் படம் மேல்தட்டு குடும்பத்தில் ஆங்கிலம் தெரியாத குடும்பத் தலைவி சசியைப் பற்றியது. அம்மாவுக்கு ஆங்கிலம் தெரியாது என்பதை அவள் மகளே அவமானமாகக் கருதுகிறாள். அம்மா சுவையான லட்டுகளை வீட்டிலேயே தயாரித்து விற்று கணிசமாக பணம் சம்பாதிக்கும் பெருமையை விட அவளுக்கு ஆங்கிலம் தெரியாது என்பதுதான் மேட்டுக் குடி குடும்பத்திற்கு உறுத்தலாக இருக்கிறது.
ஒரு முக்கியமான உறவினர் திருமணத்தில் உதவுவதற்காக முன்கூட்டியே சசி தனியாக அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. அங்கே சசி நான்கு வாரங்களில் ஆங்கிலம் பேசக் கற்றுத் தரும் வகுப்பில் ரகசியமாகச் சேர்ந்து ஆங்கிலம் கற்றுக் கொண்டு திருமண விழாவில் ஆங்கிலத்தில் பேசி தன் கணவன், உறவினர்கள் எல்லாரையும் அதிரவைப்பதுதான் முடிவு.
ஸ்ரீதேவியின் திறமையை ஹிந்தி சினிமாவும் தமிழ் சினிமாவும் பெருமளவில் வீணடித்திருக்கின்றன என்பதை இந்தப் படம் அதைப் பயன்படுத்தியதன் மூலம் இன்னொரு முறை பளிச்சென்று சொல்ல்யிருக்கிறது. எவ்வளவு நல்ல பாத்திரங்களையெல்லாம் ஸ்ரீதேவிக்கு அவர் இளமையாக இருந்தபோதே கொடுத்திருக்கலாம் என்ற ஏக்கம்தான் வருகிறது. பால்கி தயாரிப்புகள் அனைத்திலும் இருக்கும் செய் நேர்த்தி இந்தப் படத்திற்கும் ஒரு பலம்.
இயக்குநர் கௌரி இந்தப் படத்தில் இரண்டு நுட்பமான விஷயங்களை அலசியிருக்கிறார். மேல்தட்டுக் குடும்பங்களில் ஆங்கில மோகம் எந்த அளவு ஊறியிருக்கிறது என்பதை சுட்டிக் காட்டுகிறார். ஆங்கிலம் அறியாத ஒரு பெண்ணின் இதர திறமைகள் என்னவாக இருந்தாலும் புகுந்த வீட்டில் அவை மதிக்கப்படாததைப் பேசுகிறார். ஒரு பெண்ணுக்கு அன்பு மட்டுமல்ல, மரியாதையும் தரப்படவேண்டும் என்பதே செய்தி.
நம் சமூகத்தில் ஆங்கிலம் தெரியாதவர்களின் நிலை என்ன என்பதை நாம் விவாதிப்பதற்கான ஒரு வாய்ப்பாக இந்தப் படத்தைக் கருதவேண்டும். படத்தை எடுத்தவர்கள் ஆங்கிலம் பேசத் தெரிந்த மேட்டுக்குடி பார்வையாளர்களுக்காக இதை எடுத்திருப்பது ஒரு கிண்டல்தான். வெகுஜன அளவிலும் இதே போல இன்னொரு படம் எடுப்பதற்கான அவசியமும் சாத்தியமும் இருக்கிறது. மேட்டுக்குடியல்லாத சாமான்யக் குடும்பத்தை சேர்ந்த ஒரு இளைஞனோ யுவதியோ ஆங்கிலம் தெரியாததால் படும் அல்லல்கள் இன்று நம் சமூகத்தில் நம் கவனத்துக்குரியவை. அந்தப் பற்றாக்குறை அவர்களின் இதர திறமைகள் எல்லாவற்றையும் மறைத்தும் வீணடித்தும் விடுகின்றது. இந்த நிலை எங்கிருந்து தொடங்கி எப்படி மாற்றப்படவேண்டும் என்பதும் நம் கல்வியாளர்கள் விவாதிக்க வேண்டிய விஷயங்களாகும்.
இரண்டு படங்கள் நம் கல்வியாளர்களுக்கான இரண்டு பாடங்களாக வந்திருக்கின்றன. இந்தப் பாடங்களைப் படிக்காமல் விட்டால் இழப்பு சமூகத்துக்குத்தான்.
———
உங்களுக்குத் தெரியுமா?
தங்கள் வீட்டுப் பிள்ளையை இரண்டு மாதங்களாகக் காணவில்லை என்றால் துளிக் கூடப் பதறாமல், போலீசில் புகார் செய்யாமல் இருக்கும் அப்பாவையும் தாத்தாவையும் உங்களுக்குத் தெரியுமா?
அப்பா பெயர்: மு.க .அழகிரி
தாத்தா பெயர்: கலைஞர் கருணாநிதி
பிள்ளையோ பிள்ளை: துரை தயாநிதி
இந்த வாரப் பூச்செண்டு
கோவில்களை விடக் கழிப்பறைகள் முக்கியம் என்று அதிரடியாக சொல்லி ஒரு முக்கியப் பிரச்சினையை விவாதத்துக்கு கொண்டு வந்ததற்காக மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷுக்கு இ.வா.பூ
இந்த வார வருத்தமும் ஆறுதலும்
அடுத்த சபாநாயகரைத் தேர்வு செய்யும் உரிமை ஆளும் கட்சிக்கு உண்டென்றாலும், எதிர்க் கட்சிகளுடன் ஆலோசிக்கும் ஜனநாயக மரபை முதலமைச்சர் ஜெயலலிதா பின்பற்றாமல் கட்சி விஸ்வாசி தனபாலுக்கு பதவியைக் கொடுத்துவிட்டது வருத்தம். முதல் தலித் சபாநாயகர் என்ற விஷயம் மட்டும்தான் ஒரே ஆறுதல்.
————–
கல்கி 13.10.2012
(பா படத்துக்கு அமிதாபுக்கு விருது தரப்படவில்லை என்று தவறாகக நான் கல்கியில் நான் எழுதியிருந்ததை ஃபேஸ்புக்கர் சந்தோஷ்ராஜ் சுட்டிக் காட்டியதையடுத்து அந்த வரி இங்கே திருத்தப்பட்டுள்ளது.)

>>>மருத்துவ மாணவர்கள் வருகைப்பதிவேடு : துணைவேந்தர் திட்டவட்டம்

"மருத்துவ மாணவர்களின் வருகைப்பதிவேட்டை, 75 சதவீதமாக குறைக்க, பல்கலை நிர்வாகம் மறுத்துவிட்டது' என, தமிழ்நாடு மருத்துவ மாணவர் கூட்டமைப்பு தலைவர் காமராஜ் கூறினார். மருத்துவ மாணவர்கள், நேற்று, பல்கலை துணைவேந்தர் சாந்தாராமை சந்தித்து, தங்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதுகுறித்து, காமராஜ் கூறியதாவது: எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., ஆண்டு தேர்வுகளின், விடைத்தாள் நகல்களை வழங்கவும், தேர்வு நேரத்தில், ஒரு பாடத்திற்கும், மற்றொரு பாடத்திற்கும் இடையே, விடுமுறை அளிக்கவும், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என, துணைவேந்தர் தெரிவித்தார். தேர்வு விடைத்தாள்கள், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கு அனுமதி அளிப்பது குறித்து, பல்கலை ஆட்சிமன்ற குழுவில் முடிவு செய்யப்படும் எனக் கூறிய துணைவேந்தர், மருத்துவ மாணவர்களின் வருகைப்பதிவேட்டை, தற்போதுள்ள, 90 சதவீதத்தில் இருந்து, 75 சதவீதமாக குறைக்க மறுத்துவிட்டார். இவ்வாறு, காமராஜ் கூறினார்.

>>>பத்தாம் வகுப்பு பொது தேர்வில் அரசு பள்ளிகள் சாதிக்க 6ம் வகுப்பிலிருந்து தயார்படுத்த வேண்டும் : கல்வி துறை இணை இயக்குனர் அறிவுரை

"தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில், அரசு பள்ளிகள் தேர்ச்சி அதிகரிக்க, ஆறாம் வகுப்பிலிருந்தே மாணவர்களை தயார்படுத்த வேண்டும்'', என அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட இணை இயக்குனர் நரேஷ் பேசினார்.
ராமநாதபுரத்தில் நடந்த தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது: ஒவ்வொரு பள்ளியிலும், பத்தாம் வகுப்பில் மட்டும், மாணவர்களை தேர்ச்சிக்கு தயார்படுத்தினால் சாதிக்க முடியாது. ஆறாம் வகுப்பிலிருந்தே, மாணவர்களை படிப்பில் சிறந்து விளங்க தயார் செய்ய வேண்டும். இதற்காக ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்களை ஒருங்கிணைத்து கூட்டம் நடத்தி, தேர்ச்சி விகிதத்தை படிப்படியாக உயர்த்த வேண்டும்.
தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் இடையே தகவல் தொடர்பு இல்லாவிட்டால், சாதிப்பது கடினம். முதல்வர் கல்வி துறையின் மீது தனி கவனம் செலுத்தி வருகிறார். எனவே அரசு பள்ளி ஆசிரியர்கள், பொது தேர்வில் மாணவர்களை அதிக மதிப்பெண் எடுக்க வைப்பதுடன், நூறு சதவீத தேர்ச்சிக்கு முயற்சி எடுக்க வேண்டும். ஒரு பள்ளியில் 90 சதவீதம் வெற்றி என்றால், அங்கு, 10 சதவீத தோல்விக்கு, தலைமை ஆசிரியர் பொறுப்பேற்க வேண்டும். எனவே நூறு சதவீதம் என்பதை சவாலாக எடுத்து, மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டும், என்றார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கனமழை விடுமுறை அறிவிப்பு - 20.11.2024

  கனமழை காரணமாக 20-11-2024 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools on 20-11-2024 d...