கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல!

மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் கவிதை , 
ஆனந்த விகடன் இதழிலிருந்து....

மாட்டுக் கொட்டகை ஒரு வருடம்
கோயில் திண்ணை மறு வருடம்
கோணிப் பையே குடையாக
செருப்பே இல்லா நடைப் பயணம்
என்றே வளர்ந்தது என் கல்வி

முழுதாய் கற்றது கோவையில் தான்
எல்லாம் அரசுப் பள்ளியில்தான்
இருந்தும் நிலவில் நீர் கண்டேன்
எப்படி என்று பலர் கேட்டார்
தாய்மொழிக் கல்வியின் பலனென்று
வாய்மொழி கொண்டு நானுரைத்தேன்

அந்ததோ இன்று எனதூரில்
ஆங்கோர் தாயும் மடிந்தாளே
அவளது மகனை பள்ளியிலே
ஆங்கிலக் கல்வியில் கற்பிக்க
அவளது ஏழ்மை துரத்தியதால்
தீயில் கருகிச் செத்தாளாம்
சேதியைக் கேட்டு நான் நொந்தேன்.

ஏழ்மை என்பது பணத்தாலா?
அறியா மனத்தின் நிலையாலா?

அரசுப் பள்ளி பாழல்ல
அன்னைத் தமிழும் பாழல்ல
அறியா மனமே பாழென்பேன்

இதை அனைவரும் உணரும் வகையாக
வீடுகள் தோறும் சேர்த்திடுவோம்

இனியொரு தாய் வேகும் முன்னே
அறியா நிலையைத் தீயிட்டழிப்போம்!

>>>படித்த பள்ளியை தத்து எடுத்த எம்.எல்.ஏ.! - ஆற்காடு அசத்தல்

னியார் பள்ளிகளுக்கு இணையாக தரம் உயர்த்திக் காட்டவேண்டும் என்ற நோக்கோடு எங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.கே.ஆர்.சீனிவாசன் ஆற்காட்டில் உள்ள‌ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை தத்து எடுத்து இருக்கிறார்’ 
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரிடம் பேசியபோது, 'இந்தப் பள்ளி 85 ஆண்டு பழைமை வாய்ந்தது. இந்தப் பள்ளியின் பழைய மாணவர்தான், எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற்று இருக்கும் வி.கே.ஆர்.சீனிவாசன். வெற்றி பெற்றதும் இந்தப் பள்ளிக்கு முதல் விசிட் செய்து, இந்தப் பள்ளியை தத்து எடுத்துக்கொள்வதாக அறிவித்தார். மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கொடுத்திருக்கிறார். இப்போது பள்ளியின் சுற்றுச் சுவர் அமைக்கும் பணி, நபார்டு திட்டத்தின் மூலமாக செயல்படுத்தப்படுகிறது. வகுப்பறைகள், மீட்டிங் ஹால் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் மின் இணைப்பு கொடுக்கும் வேலைகள் முடிந்துவிட்டன.
எங்கள் கழகத்தின் மூலமாக நியமிக்கப்பட்டிருக்கிற ஆசிரியர், காவலாளி மற்றும் துப்புரவுப் பணியாளருக்கான  மாதச் சம்பளத்தை எம்.எல்.ஏ. தன் சொந்தப் பணத்தில் வழங்குகிறார். மேலும் மாணவர்களின் கல்வி ஆர்வத்தை ஊக்குவிக்கும் பரிசுகளும் அறிவித்து இருக்கிறார்'' என்று பட்டியல் போட்டார்கள்.
பள்ளியின் சார்பில் பேசியவர்கள், ''ப‌ள்ளியின் சுற்றுச் சுவ‌ர் முழுமையாக‌ அமைக்க‌ப்படுவது நல்ல பாதுகாப்பு. வெளி ஆட்களால் பள்ளிக்குள் சமூகக் குற்றம் நிகழாமல் தடுக்கப்படும். இதுவ‌ரை ப‌ள்ளிக்கு காவ‌லாளி மற்றும் துப்புரவுப் ப‌ணியாள‌ர் இல்லாத குறையும் தீர்ந்துபோனது. சுகாதாரமான கழிப்பறை, சுத்தமான குடிநீர் என முக்கியத் தேவைகளை செய்து கொடுத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்றார்கள்.
சீனிவாச‌னைத் தொடர்புகொண்டபோது, ''அம்மாவின் ந‌ல்லாட்சியில் ம‌க்க‌ளின் தேவைக‌ள் அனைத்தும் நிறைவேற‌ வேண்டும் என்ற‌ நோக்கோடுதான் எனது பணிகளை சேவை ம‌ன‌ப்பான்மையோடு செய்துவ‌ருகிறேன். அம்மாவின் ஆட்சியில் மாண‌வ‌ மாண‌விக‌ளுக்கென‌ அரிய‌ ப‌ல‌ திட்ட‌ங்க‌ள் அம‌ல்ப‌டுத்த‌ப்ப‌ட்டு வ‌ருகின்றன. சிற‌ந்த‌ க‌ல்விச் சேவை செய்ய‌ வேண்டும் என்ற ஆர்வ‌த்தால்தான் ஆற்காடு அர‌சு ஆண்க‌ள் மேல்நிலைப் ப‌ள்ளியை த‌த்து எடுத்தேன். ஏழை மாண‌வ‌ர்களுக்கு வ‌றுமையாலோ வ‌ச‌தி வாய்ப்பு இன்றியோ அவ‌ர்க‌ளின் க‌ல்வி பாதிக்க‌ப்ப‌ட்டுவிட‌க் கூடாது என்ற‌ எண்ண‌த்தில் அவர்களுக்கு மறுப்பின்றி உதவிகள் செய்து வருகிறேன். ‌ஐந்து ஆண்டுகளுக்கு என்று மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் முதன்மைக் கல்வி அதிகாரி ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தம் செய்து இப்பள்ளியை தத்து எடுத்திருக்கிறேன். இந்த ஒப்பந்த காலங்களுக்குள் அம்மாவின் ஆசியோடு எந்த தரத்துக்கும் குறை இல்லாத பள்ளியாக இதனை உருவாக்கிக் காட்டுவேன்'' என்றார்.
நாமும் பாராட்டுவோம்.

>>>பள்ளிக்கு ஒரே ஆசிரியர்: பாடம் நடத்துவதில் சிக்கல்

வால்பாறை அருகே, பள்ளிக்கு ஒரே ஆசிரியர் இருப்பதால், ஐந்து வகுப்பு மாணவர்களுக்கும் பாடம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வால்பாறை அடுத்துள்ளது சின்கோனா உபாசி(ஈட்டியார்). இங்குள்ள அரசு நலப்பள்ளியில் 42 மாணவர்கள் படிக்கின்றனர். ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரையுள்ள இந்த பள்ளியில் ஒரே ஒரு தலைமை ஆசிரியர் மட்டும் பணியில் உள்ளார்.
ஐந்து வகுப்புகளுக்கும் இவர் ஒருவரே பாடம் நடத்த வேண்டியுள்ளது. இப்பள்ளியில், எஸ்.எஸ்.ஏ.,சார்பில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை திறக்கப்படவில்லை. போதிய கட்டட வசதி இருந்தும், ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும் தலைமை ஆசிரியர் எஸ்.எஸ்.ஏ.,பயிற்சிக்காக சென்றாலோ, விடுப்பில் சென்றாலே பள்ளிக்கு விடுமுறை விடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் ஜெயந்தியிடம் கேட்ட போது,""உபாசி அரசு நலப்பள்ளியில் ஆசிரியர் பணியிடம் காலியாக இருப்பது குறித்து, தலைமை ஆசிரியரிடம் இருந்து கடிதம் பெறப்பட்டு, மாவட்ட கலெக்டருக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும். விரைவில் புதிய ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

>>>அலறல்! மாணவர்களை கண்டு பள்ளி ஆசிரியர்கள்...

"வகுப்புக்கு நோட்டு, புத்தகம், எடுத்து வராமல், பாடம் நடத்தும்போது, குலுக்கல் சீட்டு விளையாடுவதும், மொபைல் ஃபோனில் படம் காட்டியும், மாணவர்கள் அட்டகாசம் செய்கின்றனர்' என, பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தில், ஆசிரியர்கள் குமுறினர்.
சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், தமிழ் வழி கல்வியில், 1,410 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். ப்ளஸ் 1, ப்ளஸ் 2 மாணவர்கள், மது போதையில் பள்ளிக்கு வந்து, கத்தி, கட்டை, இரும்பு பைப் ஆகியவற்றால், ஒருவரையொருவர் தாக்கி, கோஷ்டி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து, 17ம் தேதி, "காலைக்கதிர்' நாளிதழில் விரிவான செய்தி வெளியானது. அதையடுத்து, பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று மாலை, பள்ளியில், பெற்றோர், ஆசிரியர்கள் கழக கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், பள்ளி ஆசிரியர்கள் பேசியதாவது:
பெண் ஆசிரியைகளை, மாணவர்கள் பாட்டு பாடி, கேலி, கிண்டல் செய்கின்றனர். ஒரு வகுப்பில், ஐந்து மாணவர்கள் செய்யும் அடாவடியால், 50 மாணவ, மாணவியரின் படிப்பு கெடுகிறது. பாடம் நடத்தும் சமயத்தில், மாணவர்கள் குரூப்பாக அமர்ந்து கொண்டு குலுக்கல் சீட்டு ஆடுகின்றனர்.
அரசு, இலவசமாக புத்தகம் வழங்கினாலும், மாணவர்கள், ஒரு புக் மட்டும் எடுத்து வருகின்றனர். பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது, வகுப்பில் இருந்து, சொல்லாமல் மாணவர்கள் எழுந்து செல்கின்றனர்.
பாடம் நடக்கும் சமயத்தில், மொபைல் ஃபோன் மூலம் பாட்டு, படம் பார்க்கின்றனர். ஹான்ஸ், குட்கா பாக்கு போட்டுக்கொண்டு போதையில் மாணவர்கள் உள்ளதால், நாங்கள் எதுவும் பேசமுடிவதில்லை. பல மாணவர்கள், தமிழில் படிக்க, எழுத தெரியாத நிலையில் உள்ளனர். இம்மாணவர்களால், மாணவியர் பள்ளிக்கு வர தயங்குகின்றனர். மாணவர்களுக்கு, பெற்றோர்கள் அறிவுரை கூறி ஒழுக்கத்தை கற்றுத் தரவேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் கூறியதாவது:
பள்ளி நேரத்தில், மது அருந்திய மாணவர்கள், அடிதடியில் இறங்கியவர் என, ஒன்பது மாணவர்களுக்கு, டி.சி., கொடுத்து, பள்ளியை விட்டு வெளியேற்ற முடிவு செய்துள்ளோம். பொதுத்தேர்வு காரணமாக, அடிதடியில் இறங்கிய ப்ளஸ் 2 மாணவர்களை, "சஸ்பெண்ட்' செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளியில் ஒழுங்கீனமாக நடக்கும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

>>>ஒரு ஆசிரியை மனது வைத்தால்... மெட்ரிக்குலேஷன் பள்ளியை மிஞ்சும் அரசுப் பள்ளி!

தொடக்கக்கல்வி ஆசிரியர்களான எங்களுக்கு, ஒவ்வொரு மாணவனின் வாழ்க்கையிலும் 'பிள்ளையார் சுழி!' போட்டுவிட்ட திருப்தி வாழ்க்கை முழுவதும் இருக்கும். எங்களோட மாணவர்கள் எல்லாம் எதிர்காலத்துல பெரிய ஆட்களா வரும்போது, அவங்க ஏணியோட முதல் படியா நாங்க இருந்தோம்ங்கற சந்தோஷம், ரொம்ப அற்புதமானது இல்லையா?!"
- வார்த்தைகள் மிக அழகாகவும், கம்பீரமாகவும் ஒலிக்கின்றன சரஸ்வதியிடமிருந்து!
திண்டுக்கல் மாவட்டம், பழநியிலிருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் மானூர் ஊராட்சி தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியை சரஸ்வதி. தான் இந்தப் பள்ளிக்கு மாற்றலாகி வந்த ஐந்தே வருடங்களில், மாவட்டத்தின் 'சிறந்த தொடக்கப்பள்ளி'யாக தனது பள்ளியைத் தரம் உயர்த்தியவர். அதற்கு அங்கீகாரமாக, பழனி கல்வி மாவட்டத்தின் தொடக்கல்வித் துறை, மாவட்டத்தின் '2010-11 கல்வியாண்டின் சிறந்த தொடக்கப்பள்ளி'க்கான அரசு விருதுக்காக பரிந்துரைத்துள்ளது. கூடவே, மாவட்டத்திலுள்ள அனைத்து ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளும், தங்களின் பயிற்சி பட்டறைக்காக இந்தப் பள்ளியையே நாடுகின்றன.
'ஏய் வாத்திம்மா... எங்களையே அடிக்க வர்றியா...' என்று குருவுக்கான மரியாதையைக்கூட கொடுக்கத் தெரியாத முரட்டு கிராமப்புற மாணவர்கள்... சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் சமூக விரோத கூடாரமாகிப் போகும் பள்ளி... 'இந்த ஸ்கூலெல்லாம் லாயக்கில்ல... இங்கிலீசு மீடியத்துக்கு அனுப்புவோம்...' என்ற பெற்றோர்களின் மனநிலை... இத்தகைய சூழலில் இங்கே பொறுப்பேற்ற சரஸ்வதி, அத்தனைக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
"என்னோட பணிபுரியற ஆசிரியைகளும், ஆசிரியரும் இணைந்து செயல்பட்டதுக்கான பலன் இது!" என்று எல்லோருக்குமான அங்கீகாரத்தோடு ஆரம்பித்த சரஸ்வதி,
"2005-ம் வருஷம் இங்கே வந்தேன். விடுமுறை தினங்கள்ல வகுப்பறைகளை சமூகவிரோதிகள் பயன்படுத்திக்கிட்டிருந்தாங்க. பொருட்களும் திருட்டுப் போயிக்கிட்டிருந்துது. ஆசிரியர்கள், ஊர் மக்கள், பஞ்சாயத்து தலைவர்னு எல்லாரும் ஒண்ணு சேர்ந்து அதை எல்லாம் சரி செஞ்சோம்.
அடுத்ததா, மாணவர்கள் பக்கம் கவனத்தை திருப்பினோம். 'டிரெஸ்'கூட சரியா போட்டுட்டு வராத நிலைமையில இருந்தவங்ககிட்ட, பள்ளி பத்தின மரியாதையான, ஆர்வமான பிம்பத்தை ஏற்படுத்தினோம். 'நல்லா படிக்கணும், ஆசிரியர்களை மதிக்கணும்'ங்கற அடிப்படை புரிதலை அவங்களுக்கு ஏற்படுத்தவே ரொம்ப மெனக்கெட வேண்டி இருந்தது.
அடுத்தக் கட்டமா, யூனிஃபார்ம் கலர், டிசைன் இதையெல்லாம் கல்வித்துறை ஒப்புதலோடு மாத்தினோம். ஒரு கட்டத்துல, மாணவர்கள் எங்க வட்டத்துக்குள்ள வந்தாங்க, வளர்ந்தாங்க. இப்போ அதுக்கான பலனை மனதார உணர்றோம்" என்று பூரித்த சரஸ்வதி, பள்ளியின் செயல்வழிக் கற்றல் (ஏ.பி.எல்) முறை வகுப்புகளுக்கு நம்மை அழைத்துச் சென்றார்.
ஒவ்வொரு வகுப்புக்கும் வெளியேயும் மாணவர்கள் வரிசைப்படுத்தி அடுக்கியிருந்த ஸ்கூல் பேக்குகளும், காலணிகளும் அவ்வளவு நேர்த்தி! பள்ளி வளாகத்தில் எங்குமே குப்பைகளைக் காணமுடியவில்லை. எல்லாவற்றையும்விட ஹைலைட்... பள்ளியில் அவர்கள் நடத்தும் 'மாதிரி அமைச்சரவை'!
"எங்க பள்ளியில ஒவ்வொரு ஆசிரியையும் ஒவ்வொரு துறைக்கு 'அமைச்சரா' பொறுப்பேற்று வேலைகளைப் பகிர்ந்துக்கறோம். துறை சார்ந்த விஷயங்களை மாணவர்களோட மனசுலயும் பசுமரத்தாணி போல பதிய வைக்கிறோம்" என்றபடியே, "சுகாதாரத்துறை 'அமைச்சர்' ரேணுகா, சுகாதாரத்துறை 'இணை அமைச்சர்' சுகன்யாதேவி, வெளியுறவுத்துறை மற்றும் மின்துறை 'அமைச்சர்' கதிரவன், உணவுத்துறை 'அமைச்சர்' விஜயராணி, நீர்வளத்துறை 'அமைச்சர்' ரஸியா பேகம், விளையாட்டு மற்றும் நூலகத் துறை 'அமைச்சர்' சுமதி, பாதுகாப்புத்துறை 'அமைச்சர்' சாரதா, தோட்டக் கலைத் துறை 'அமைச்சர்' ஈஸ்வரி" என்று 'அமைச்சர்'களை நமக்கு அறிமுகப்படுத்தினார் சரஸ்வதி.
அவரைத் தொடர்ந்த சுகாதாரத்துறை 'இணை அமைச்சர்' சுகன்யாதேவி, "தர்மபுரி மாவட்டம், பெண்ணாகரம் யூனியன்ல இருக்கற மலை கிராமமான மழையூர்ல ஈராசிரியர் பள்ளியில வேலை பார்த்தவ நான். அதனால பின் தங்கின கிராமத்துப் பள்ளிகளோட நிலைமை எனக்கு ஏற்கெனவே பரிச்சயம். 'இதை எல்லாம் எப்படி சரிசெய்யப் போறோம்?'ங்கற மலைப்பு இல்லாம, முழு மனசோட அதுக்கான வேலைகள்ல என்னையும் இணைச்சுக்கிட்டேன்.
தமிழ் எழுத்துக்களையே சரியா எழுத தெரியாத நிலையில இருந்த பிள்ளைங்க, இன்னிக்கு ஆங்கில அறிவுலயும் சிறந்து விளங்கறதப் பார்க்கும்போது, ரொம்ப பெருமையா இருக்கு. எங்க ஹெச்.எம். வேலை நாட்கள்ல தினமும் மதியம் 1 - 2 மணி மற்றும், மாலை 4.30 - 5.30 மணிக்கு 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' வகுப்புகளை எடுக்கறாங்க. அதனால்தான் ஒரு 'மெட்ரிக்' பள்ளியோட தரத்தை எங்க பள்ளியில் கொண்டுவர முடிஞ்சுது!" என்று பெருமையோடு சொன்னார்.
இங்கே படிக்கும் மாணவர்களின் படிப்பு நின்று போவதற்கு, பொருளாதாரம் ஒரு தடையாக இருந்துவிடக் கூடாது என்பதற்காக அக்கறையோடு பல ஏற்பாடுகளை செய்திருக்கிறார் சரஸ்வதி. அதில் ஒன்று... வசதி, வாய்ப்புகளோடு இருக்கும் பழைய மாணவர்களை சேர்த்துக் கொண்டது. அந்த வகையில் இன்றைய மாணவர்களுக்கு இலவசமாக நோட்டு, புத்தகங்கள் வழங்கி வருகிறார் பழைய மாணவர் செந்தில்.
"இருபது வருஷத்துக்கு முன்ன இந்த ஸ்கூல்ல படிச்சேன். அன்னிக்கு ஸ்கூலோட நிலைமை ரொம்பவே மோசம். இப்போ ஆசிரியர்களால அங்க மிகப் பெரிய மாற்றங்கள் நடந்திருக்கு. அந்த சந்தோஷத்துல நானும் பங்கெடுத்துக்க என்னால ஆன பொருளாதார உதவிகளைச் செய்றேன்..." என்றார் செந்தில் அடக்கமான வார்த்தைகளில்.
மெட்ரிக்குலேஷன் பள்ளியிலிருந்து இடம் மாறி இங்கே சேர்ந்திருப்பவர்களில் ஒருவர் சாராதஸ்ரீன். அவருடைய தந்தை சம்சுதீன் நம்மிடம், "எங்க பூர்வீகமே இந்த ஊர்தான். பத்து பதினைஞ்சு வருஷத்துக்கு முன்ன இருந்ததைவிட இப்ப இந்த ஸ்கூல் நல்லாயிருக்கு. அதனாலதான் 'மெட்ரிக்' ஸ்கூல்ல படிச்சுட்டிருந்த எம்பொண்ண, இந்த ஸ்கூல்ல சேர்த்தோம்" என்று சொன்னார்.
மொத்தம் 345 மாணவ, மாணவியர் இங்கே படிக்கிறார்கள். "எங்க ஸ்கூல் சூப்பர் ஸ்கூல்தானே!" என்று அவர்கள் கேட்பதைப் போலவே... தமிழகத்தில் இருக்கும் அனைத்து பள்ளி மாணவர்களும் கேட்க முடியாதா என்ன? என்ன, கூட்டணி பலமாக இருக்கவேண்டும்... மானூர் ஆசிரியர் கூட்டணியைப் போல!

>>>குழந்தைகளுக்குப் பாடம் எடுக்கும் குழந்தைகள்!

'மவுஸைத் தரையில எல்லாம் வெச்சுத் தேய்க்கக் கூடாது. பேடுல வெச்சுத்தான் நகர்த்தணும்...’, 'கன்ட்ரோல் பட்டன்ல விரலை வெச்சுக்கிட்டே இஜெட்டைத் தட்டுப் பார்க்கலாம்...’ 'அறம் செய்ய விரும்பு... ஆறுவது சினம்...’, 'ஏ ஃபார் ஆப்பிள்’ - இப்படி, மலை கிராமத்துக் குழந்தைகளுக்குப் பாடம் எடுப்பது பொறுப்பு மிக்க ஆசிரியர்கள் அல்ல... மாணவர்களே! எங்கே..?
 இன்றைய மாணவர்களுக்குப் படிப்புச் சுமை அதிகம். அவர்கள் தங்களுடையப் பாடங்களைப் படிப்பதே பெரிய விஷயம். ஆனால், கரூரைச் சேர்ந்த குருதேவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், நாமக்கல் மாவட்டம் கொல்லி மலையில் உள்ள கிராமங்களுக்குச் சென்று அங்கு கல்வியில் பின்தங்கியுள்ள குழந்தைகளுக்கு வாரம்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கல்வி புகட்டுகிறார்கள்.
பள்ளி அட்டவணைபோலத் தெளிவாக இருக்கிறது இவர்களுடைய அட்டவணை. காலை 10 மணி முதல் 11 வரை தமிழ், 11 முதல் 12 வரை ஆங்கிலம், 12 முதல் 1 வரை கணிதம், 1 முதல் 2 வரை உணவு இடைவேளை, 2 முதல் 3 வரை கம்ப்யூட்டர், 3 முதல் 4 வரை சமூக அறிவியல், 4 முதல் 5 வரை அறிவியல். கிராமத்து மாணவர்களும் கூச்சல், ரகளை இல்லாமல் கட்டுப்பாடாக அமர்ந்து கவனிக்க, தேர்ந்த ஆசிரியர்களைப்போல அதேசமயம் நட்பு உணர்வுடன் சொல்லித்தருகிறார்கள் குருதேவர் மெட்ரிக் பள்ளி மாணவர்கள்.
''எங்க ஸ்கூல்ல கம்ப்யூட்டரு இருக்குங்ணா. ஆனா, அந்த ரூமையேத் தொறக்க மாட்டாங்க. நெறைய நாளு ஸ்கூலையே தொறக்க மாட்டாங்க. இந்த அண்ணனுங்க வந்த பின்னாடிதான் கம்ப்யூட்டரையே முதல்முதலா தொட்டுப் பார்த்து கத்துக்கிறோம்'' என்கிறார்கள் கிராமத்துப் பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன்.
குருதேவர் பள்ளியின் முதல்வர் பாப்பம்மாள், ''எங்கள் பள்ளி சார்பாக ஆண்டுதோறும் ஆடி 18 அன்று இங்கு உள்ள அறப்பள்ளீஸ்வரர் கோயிலில் அன்னதானம் வழங்குவோம். இதனால், இந்தக் கிராம மக்களுடன்  எங்களுக்கு நல்லப் பரிச்சயம் உண்டு. இந்தப் பகுதியில் உள்ள பெரும்பான்மை அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதி கிடையாது. மாணவர்களுக்குச் சரியான கல்வி கிடைப்பதும் இல்லை. பொருளாதாரத்திலும் கல்வியிலும் பின்தங்கிய இவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தபோதுதான், இந்தத் திட்டம் தோன்றியது.
ஆசிரியர்களைவைத்துப் பாடம் எடுப்பதில் பல நடைமுறைச் சிக்கல்கள். மேலும், கிராமத்து மாணவர்கள் ஆசிரியர்களைப் பார்த்தாலே நடுங்கி ஓடுகிறார்கள். அதனால், எங்கள் பள்ளியில் நன்றாகப் படிக்கும் மாணவர்களைக்கொண்டே பாடம் நடத்தத் தீர்மானித்தோம். இந்தத் திட்டம் நன்றாக வேலை செய்தது. கிராமத்துக் குழந்தைகள் பயப்படாமல், நட்பு உணர்வுடன் வருகிறார்கள். தயக்கம் இல்லாமல் தங்கள் சந்தேகங்களைக் கேட்டுத்  தெளிவுபடுத்திக்கொள்கிறார்கள்.
நகரங்களில் நம் குழந்தைகளுக்கு எப்படிப்பட்ட வசதிகளுடன் கல்வி கிடைக்கிறதோ அதேபோல, இங்கு உள்ள குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் 'காட்சி வழிக் கற்றல்’ முறையில் கம்ப்யூட்டர்களை  சொந்தமாக வாங்கிவைத்துள்ளோம்...'' என்கிறார்.
குருதேவர் பள்ளியின் ஆசிரியர் ஜோதி, ''இந்தத் திட்டம் கடந்த மூன்று மாதங்களாக நடந்துவருகிறது. மலை கிராம மக்களுக்கு கல்வி, பள்ளிக்கூடம் என்றாலே கசக்கிறது. நிறைய பெற்றோர் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதையே விரும்புவது இல்லை. குழந்தைகளைத் தங்களோடு காட் டுக்குச் சுள்ளி பொறுக்கவும் தேன் எடுக்கவும் அழைத்துச் சென்றுவிடுகிறார்கள். இதைக் காரணம் காட்டியே இங்குள்ள அரசு பள்ளிகளும் பாதி நாட்கள் பூட்டிக் கிடக்கின்றன.
நாங்கள் முதலில் இங்கு பாடம் எடுக்கவந்தபோது படாதபாடு பட வேண்டி இருந்தது. முதலில் பெற்றோர்களிடம் சொல்லிப் புரியவைத்தோம். பின்பு அவர்களே கொண்டுவந்து விட்டாலும், குழந்தைகள் மிரண்டு காட்டுக்குள் ஓடி ஒளிந்துகொண்டார்கள். அனைத்தையும் சமாளித்து இப்போது நகரத்துக் குழந்தைகளே ஆச்சர்யப்படும் வகையில் இந்தக் குழந்தைகள், ஒழுக்கமாகவும் நேரம் தவறாமலும் எங்களிடம் வந்து பாடம் கற்கிறார்கள். சொல்லப்போனால், அந்தக் குழந்தைகள் சனிக்கிழமைகளை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.
எங்கள் பள்ளி மாணவர்களில் வாரம் 10 பேரை இங்கு அழைத்து வருகிறோம். இங்கு படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டேவருகிறது. மாணவர்களுக்கு மாணவர்களே பாடம் சொல்லிக்கொடுப்பது மனதளவில் அவர்களுக்குள் உள்ள தாழ்வு மனப்பான்மையை நீக்கவும் உதவும்’ என்கிறார் உற்சாகமாக.
ஏட்டுக் கல்வி மட்டுமல்ல இயற்கைக் கல்வியும் அவர்களுக்குத் தேவை என்று, இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரும் வாரந்தோறும் இங்கு வந்து இயற்கை விஞ்ஞானம்பற்றி மாணவர்களுக்குப் பாடம் எடுக்கிறார். காடுகளின் தேவை, மழை நீர் சேகரிப்பு, கானுயிர்ப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல், இயற்கை விவசாயம் குறித்து ஒவ்வொரு வாரமும் அவர் அளிக்கும் விளக்கங்களை ஆர்வமுடன் கேட்கிறார்கள் குழந்தைகள்.
''உலகத்தின் எந்தப் பல்கலைக்கழகத்துக்குச் சென்று பாடம் எடுத்தாலும் இப்படி ஒரு மன நிறைவு கிடைக்காது. சொல்லப்போனால், மலைவாழ் குழந்தைகளிடம் நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. இந்த மக்கள், காட்டை அழிப்பது இல்லை. ரசாயனங்களைக்கொண்டு மண்ணை நாசப்படுத்துவது இல்லை. இயற்கையை தெய்வமாக வணங்குகிறார்கள்; நேசிக்கிறார்கள். நான் இங்குள்ள மாணவர்களுக்குப் பாடம் சொல்லித்தருவது இல்லை; மாறாக அந்தப் பிள்ளைகள்தான் எனக்குப் பாடம் சொல்லித்தருகிறார்கள்!'' என்கிறார் நம்மாழ்வார்.
சத்தியமான வார்த்தைகள்!

>>>பிளஸ் 2 மாணவர்களின் விவரம் குறித்து ஆன்-லைனில் திருத்தம் செய்ய உத்தரவு

அரசு பொது தேர்வு எழுதும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, தவறில்லாத மதிப்பெண் பட்டியல் வழங்க, தேர்வுத்துறை வெளியிட்டுள்ள, "ஆன்-லைன்' பட்டியலில், மாணவரின் விவரங்களை சரி பார்த்து, அந்தந்த தலைமையாசிரியரே திருத்தம் செய்து கொள்ள, தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும், பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கொடுத்த தகவலின் அடிப்படையில், பள்ளி தேர்வு துறை சரிபார்த்து, பட்டியல் தயாரித்துள்ளது. இதில், ஆன்-லைன் மூலம், ஒவ்வொரு பள்ளிக்கும் தரப்பட்டிருக்கும், "ரகசிய சொல்லை' தலைமையாசிரியர்கள் பயன்படுத்தி, திருத்தம் செய்து கொள்ளலாம்.

இது தொடர்பாக, தேர்வுத்துறை கூறியிருப்பதாவது: தேர்வு எழுதுபவரின் பெயர், பிறந்த தேதி, இனம், மொழி, தேர்வு எழுதும் மொழி ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். மாணவரின் புகைப்படம், மாறாமல் இடம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு எழுதுவோரின் குரூப் எண், பாட எண் வரிசையாக உள்ளதா என்பதை, தலைமையாசிரியர்கள் சரிபார்க்க வேண்டும். இதில் தவறு இருப்பின், ஆன்- லைனில் வெளியிடப்பட்டுள்ள சரிபார்ப்பு பட்டியலில் திருத்தங்கள் செய்து கொள்ளலாம். மையத்தின் பெயர், எண் மற்றும் பள்ளி எண் ஆகிய மூன்றில், எவ்விதமான திருத்தங்களை செய்ய கூடாது. இதன் மூலம், மாணவர்களுக்கு தவறில்லா மதிப்பெண் பட்டியல் வழங்க முடியும். இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...