கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>மாணவர்களை அதிகம் ஏற்றினால் நடவடிக்கை : கோர்ட் உத்தரவுப்படி அறிவுறுத்தல்

ஆட்டோக்களில் அதிகளவு பள்ளி மாணவர்களை ஏற்றி செல்லும், டிரைவர்கள் உரிமம் மீது, கோர்ட் உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்க, வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்களில் பள்ளிக் குழந்தைகளை, ஆட்டோக்களில் அதிக அளவில் ஏற்றிச் செல்வதால், விபத்துக்கள் ஏற்படுகிறது. இது குறித்து, டிராபிக் ராமசாமி, சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம்,"" போலீசார், வட்டார போக்குவரத்து துறை இணைந்து, ஆட்டோக்களில் எத்தனை குழந்தைகளை அனுமதிக்கலாம் என்பது குறித்து, அனைவருக்கும் தெரியும் விதமாக,விளம்பரபடுத்த வேண்டும்.
இதை மீறுபவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அதிகமான மாணவர்கள் செல்லும் ஆட்டோக்களில் தங்களது குழந்தைகளை அனுப்புவதை தவிர்க்கும்படி, பெற்றோர்களை அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்,'' என, தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து, போக்குவரத்து கமிஷனர் பிரபாகர்ராவ், பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் ஆட்டோக்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க, அனைத்து வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகளையும் அறிவுறுத்தியுள்ளார். விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலர் கருப்பசாமி ,"" அனுமதித்த அளவை விட அதிக மாணவர்களை ஆட்டோக்களில் ஏற்றினால், ஆட்டோ உரிமத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

>>>பி.எட்., ஆசிரியர் நியமனம்: 2வது இடத்திற்கு வந்த தமிழ்

பி.எட்., ஆசிரியர் நியமனத்தில் தமிழுக்கு 2ம் இடம் ஒதுக்கியதால், தமிழ் பாட ஆசிரியர்கள் நியமனம் அதிகரித்துள்ளது. இந்த புதிய உத்தரவால், தமிழ் பாடங்களுக்கு காலியாக உள்ள 2,080 ஆசிரியர் பணியிடங்களில், 1,550 தமிழ் ஆசிரியர்கள், டி.இ.டி.,தேர்வு மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில், அரசு உயர், மேல்நிலைப் பள்ளிகளில் 360 மாணவர்களுக்கு, ஒரு கூடுதல் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அறிவியல், ஆங்கிலம், கணிதம், சமூக அறிவியல், தமிழ் என்ற வரிசைப்படி, பி.எட்., ஆசிரியர்களை நியமித்தனர்.
இந்த நடைமுறைக்கு, தமிழாசிரியர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, டி.இ.டி.,தேர்வில், 360 மாணவர்களுக்கு மேற்பட்ட பள்ளிகளில், கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கும் வரிசையில், இரண்டாவது தமிழ் பி.எட்., ஆசிரியர்களை நியமிக்கலாம் என அரசு உத்தரவிட்டது. 2வது இடத்தில் இருந்த ஆங்கில பாடம் கடைசி நிலைக்கு சென்றது.
தமிழ் ஆசிரியர் கழக மாநில நிர்வாகி இளங்கோவன் கூறுகையில், "அரசின் இந்த புதிய உத்தரவால், தமிழ் பாடங்களுக்கு காலியாக உள்ள 2,080 ஆசிரியர் பணியிடங்களில், 1,550 தமிழ் ஆசிரியர்கள், டி.இ.டி.,தேர்வு மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர். இது வரவேற்கத்தக்கது," என்றார்.

>>>பிளஸ் 2 படிக்காமல், பட்டப்படிப்பு படித்தவர்கள் அரசு வேலைக்கு ஏற்பு: அரசு உத்தரவு

பிளஸ் 2 படிக்காமல், நேரடியாக திறந்தநிலை மற்றும் தொலைதூர கல்வி நிறுவனங்களில், பட்டப்படிப்பு படித்தவர்கள், அரசு வேலைக்கு தகுதியானவர்களாக ஏற்று, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு வேலைவாய்ப்புகளை பெற, 10ம் வகுப்பு, பிளஸ் 2, அதன்பின், பட்டப்படிப்புகள் என்ற வரிசையில், கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலானோர், பிளஸ் 2 படிக்காமல், நேரடியாக, திறந்தநிலை பல்கலையில், பட்டப்படிப்புகளை முடித்து, அரசுப் பணிகளில் உள்ளனர்; அதேபோல் பலர், அரசுப் பணிக்காக, காத்திருக்கின்றனர். நிர்ணயித்த கல்வி வரிசையில் இல்லாமல், மாறி, மாறி, பல்வேறு கல்வித்தகுதிகளை பெற்றவர்களும், அதிகளவில் இருக்கின்றனர். பத்தாம் வகுப்பிற்குப் பின், பிளஸ் 2 படிக்காமல், இரண்டு ஆண்டு ஆசிரியர் பட்டயப் பயிற்சி பெற்றவர்கள், இடைநிலை ஆசிரியர் பணிக்கு தகுதியில்லாதவர்களாக உள்ளனர். இதுபோன்ற நிலையில், மேற்கண்ட வரிசையில், கல்வி தகுதிகளை பெற்றவர்களை, முறையான வரிசையில், கல்வி தகுதி பெற்றவர்களுக்கு இணையாக ஏற்று, அரசு வேலை வாய்ப்பு பெறவும், பதவி உயர்வு பெறவும் வழிவகை செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நேற்று முன்தினம், உயர்கல்வித்துறை பிறப்பித்த உத்தரவு:
* பத்தாம் வகுப்பிற்குப் பின், மூன்று ஆண்டு பட்டயப் படிப்பு படித்து, பின், திறந்தவெளி பல்கலை, தொலைதூர கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகள் மூலம் பட்டப் படிப்பு படித்தவர்கள்...
* பழைய எஸ்.எஸ்.எல்.சி., (11ம் வகுப்பு) படித்து, அதன்பின், இரண்டு ஆண்டு, ஆசிரியர் பட்டயப் பயிற்சி படித்து, பின், தொலைதூர கல்வி நிறுவனம் மூலம், இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள்...
* பத்தாம் வகுப்பு - ஐ.டி.ஐ., - தொலைதூர கல்வி நிறுவனம் மூலம், இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள்...
* பத்தாம் வகுப்பு, மூன்று ஆண்டு பட்டயப்படிப்பு, பின், இரண்டு ஆண்டு பட்டப்படிப்பு படித்தவர்கள்...
மேற்கண்ட படிப்பை படித்தவர்கள், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பின், 3 ஆண்டு பட்டப்படிப்பு பெற்றவர்களுடன் இணையாக கருதி, அரசு வேலை வாய்ப்பு மற்றும் பதவி உயர்வுக்கு அங்கீகரித்து, தமிழக அரசு உத்தரவிடுகிறது.இவ்வாறு, அரசாணையில் கூறப்பட்டுள்ளது.இந்த உத்தரவின் மூலம், அரசுப் பணிகளில் ஏற்கனவே இருப்பவர்கள், பதவி உயர்வு பெற, பெரிதும் வழிவகுக்கும். மேலும், பிளஸ் 2 படிக்காமல், ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள், டி.இ.டி., தேர்வில் பங்கேற்று, இடைநிலை ஆசிரியர் வேலை பெறவும் வழி பிறந்துள்ளது

>>>கல்வி வளர்ச்சியில் அக்கறை காட்டுங்கள்: முதல்வர் அறிவுறுத்தல்

வேளாண்மை, கல்வி, சுகாதாரத்தில் அக்கறை செலுத்தி, வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்தி, நாட்டின் முதன்மை மாநிலமாக தமிழகத்தை கொண்டுவர வேண்டும் என்று கலெக்டர்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா அறிவுரை வழங்கினார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில், மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி.,க்கள் பங்கேற்கும், மூன்று நாள் மாநாடு நேற்று முன்தினம் துவங்கியது. முதல் நாள், துறை செயலர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள், கலெக்டர்கள், எஸ்.பி.,க்கள் மாநாடு நடந்தது.
நேற்று, கலெக்டர்கள், துறை செயலர்கள் மாநாட்டை துவக்கி வைத்து, முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: வளர்ச்சித் திட்டங்களின் மூலம், தமிழகத்தையும் மக்களையும் வளம் பெறச் செய்வது தான், இம்மாநாட்டின் நோக்கம். மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி என்பது உள்ளிட்ட முக்கிய விஷயங்களை, இதில் விவாதிக்க வேண்டும்.
வேளாண்மை, தொழில், சேவைப் பிரிவு மற்றும் கல்வி, சுகாதரம், கட்டமைப்பு வளர்ச்சியில் பலமான அடித்தளம் அமைத்தல் உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்தி, தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்ற வேண்டும்.
இந்த நோக்கம் பயன்பாட்டிற்கு வந்தால், அரசின் கொள்கை திட்டங்கள் யாவும், அந்தந்த களங்களில், நடைமுறைக்கு வரும் என நம்புகிறேன். மாவட்ட கலெக்டர்கள் தங்கள் அதிகாரங்கள் மூலம், இதற்கான பொறுப்புகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, இன்று, போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட எஸ். பி.,க்கள் மாநாடு நடக்கிறது.இன்று மாலை, 5:00 மணிக்கு, முதல்வர் ஜெயலலிதா, மாநாட்டு நிறைவுரையாற்றுகிறார்.

>>>பார்வையற்ற மாணவி இன்று அரசு பள்ளி ஆசிரியை

 
"நம்பிக்கை, நெஞ்சில் வை, தித்திக்கும் வாழ்க்கை' என்ற பாடல் வரிக்கேற்ப, உழைப்பும், திறமையும் இருந்தால், நாமும் ஜெயிக்கலாம் என, சாதித்து காட்டியிருக்கிறார், ரஞ்சனா என்ற, பார்வையற்ற பெண். தமிழக அரசு நடத்திய, டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்று, சேலம் மாவட்டம், வலசையூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்ஆசிரியையாகச் சேர்ந்துள்ளார்.

பி.எட்., படித்து தேர்ச்சி:

"வேண்டாம் இந்த பிள்ளை' என, உறவுகள் கூறியபோது, "நானிருக்கிறேன்' என, அந்த குழந்தையை வளர்த்து, ஆசிரியை பணியில் அமர வைத்ததில், அவருடைய தாய்க்கு முக்கிய பங்கு உண்டு. பார்வையற்ற நிலையில், பி.எட்., வரை படித்து, ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று, தற்போது பணியில் சேர்ந்துள்ளார், ரஞ்சனா.சேலம், அஸ்தம்பட்டி, மணக்காடு பகுதியைச் சேர்ந்த சதாசிவம், புஷ்பலதா தம்பதிக்கு மூத்த மகளாக பிறந்தவர் ரஞ்சனா, 23. இரண்டரை வயது வரை, தலை தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு, "இந்த குழந்தை தேறாது' என, உறவுகள் ஒதுக்கியபோது, "10 மாதம் சுமந்த மகளை, மண்ணுக்கு அனுப்ப மாட்டேன்' என, மருத்துவமனைக்கு அலைந்து மீட்டெடுத்தார் அவருடைய தாய். ரஞ்சனாவுக்கு பின் பிறந்தவர்கள் பிரவீணா, விஜயன்.ஒன்றாம் வகுப்பு முதல், ஏழாம் வகுப்பு வரை, சேலம் சாரதா வித்யா மந்திர் பள்ளியில், ஆர்வமுடன் படித்த ரஞ்சனாவால், கல்வியை தொடர முடியாதவாறு, கண்ணில் ஏற்பட்ட வலி கொடுமைப்படுத்தியது. அதன்பின், செவ்வாய்பேட்டையில் உள்ள அரசு விழியிழந்தோர் பள்ளியில், "பிரெய்லி' முறையில் தன்னுடைய படிப்பை தொடர்ந்தார். ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, மதுரையில் உள்ள இந்திய பார்வையற்ற மாணவர்களுக்கான பள்ளியில் படித்தார். பத்தாம் வகுப்பில், 338 மதிப்பெண்களும், பிளஸ் 2வில், 954 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்தார். பிளஸ் 2வில், அதிக மதிப்பெண் பெற்று, அப்பள்ளியின் முதல் மாணவியாக வந்தார். சிறு வயதில் இருந்தே ஆசிரியை கனவு ரஞ்சனாவை துரத்த, சேலம் சாரதா கல்லூரியில், பி.ஏ., பட்டம் பெற்று, பின், குமாரபாளையம் அரசு பி.எட்., கல்லூரியில், கவுன்சிலிங்கில் வெற்றி பெற்று, சேர்ந்தார். ஆங்கிலப் பாடப் பிரிவு எடுத்து படித்து, பட்டத்தையும் வாங்கினார். சாதித்து விட்டோம் என்ற மகிழ்ச்சியில் தொடர்ந்து அவர், அடுத்த இலக்கை நோக்கி முன்னேறினார்.பி.ஏ., - பி.எட்., முடித்த நிலையில், தமிழக அரசின் அறிவிப்பு, நாமும் ஆசிரியையாகி விடுவோம் என்ற நம்பிக்கையை, ரஞ்சனாவுக்கு ஏற்படுத்தியது. இதற்காக, சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள தனியார் அகடமியில், பயிற்சி பெற்றார். முதல் கட்டமாக நடத்தப்பட்ட தேர்வில் தோல்வியடைந்த போதும், இரண்டாம் கட்டமாக நடந்த தேர்வில், 150 மதிப்பெண்ணுக்கு, 95 மதிப்பெண் வாங்கி வெற்றி பெற்றார். தன்னுடைய ஆசிரியை கனவு நிறைவேறிய மகிழ்ச்சி, இழந்த கண்கள் மீண்டும் வந்தது போல், அவருக்கு புதிய தெம்பை ஏற்படுத்தியது. தற்போது, வலசையூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஆங்கில ஆசிரியையாக, மாணவியரும், சக ஆசிரியர்களும் பாராட்டு வண்ணம், பணியாற்றி வருகிறார். நேற்று வரை மாணவியாக இருந்தவர், இன்று ரஞ்சனா டீச்சர் என பெருமை பெற்றுள்ளார்!
"முடியாதது எதுவுமில்லை' ரஞ்சனா கூறியதாவது:
அம்மா இல்லை என்றால், இங்கு நான் இல்லை. சிறு வயதிலேயே கண் பார்வை குறைபாடு ஏற்பட்டு மிகவும் கஷ்டப்பட்டேன். கண் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சென்ற போதும், "முடியாது' என, கைவிரித்து விட்டனர்.முழுமையாக தெரியாத போதும், ஓசை வரும் திசையை வைத்து, அங்கு ஆட்கள் நிற்பதை தெரிந்து கொள்வேன். பிரெய்லி முறையில், பி.எட்., வரை படித்து, ஆடியோ மூலமாக, தகுதித் தேர்வுக்கு தயாராகி, தேர்வு எழுதினேன்.இரண்டாவது முறையாக நடந்த தகுதி தேர்வில், 95 மதிப்பெண்கள் பெற்றேன். கவுன்சிலிங்கிலும் வெற்றி பெற்று, வலசையூர் அரசு பள்ளியில், ஆங்கில ஆசிரியையாக உள்ளேன். என்னுடைய அம்மா, தம்பி, தங்கை, தோழிகள் அனைவருக்கும், நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
நம்மால் முடியாது என்று நினைக்காமல், முடிந்தவரை முயற்சிக்கும் பழக்கத்தை, மாற்றுத்திறனாளியான ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, ரஞ்சனா கூறினார். காலத்தையும், நேரத்தையும் வீணடித்துக் கொண்டு, சோம்பித் திரியும் இன்றைய இளைஞர் கூட்டத்துக்கு, பார்வையிழந்த நிலையிலும், ஆசிரியையாக உயர்ந்துள்ள ரஞ்சனா போன்றோர் வழிகாட்டி என்றால் மிகையாகாது.

>>>காலியாகும் அரசு பணியிடங்கள் - முறையான ஊழியர் நியமனம் நடக்குமா?

தமிழக அரசுத்துறைகளில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களில், இந்த ஆண்டு மட்டும், 1.27 லட்சம் பேர் ஓய்வு பெறுகின்றனர். இதில், 52 ஆயிரம் ஆசிரியர்களும் அடங்குவர். இதனால் அரசுத்துறைகளில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிரடியாக அதிகரிக்கிறது.
தமிழகத்தில் மொத்தம், 142 அரசுத் துறைகள் உள்ளன. கடந்த, 1996ம் ஆண்டு, ஜனவரி 1ம் தேதி எடுக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கான கணக்கெடுப்பின்படி, 6 லட்சம் ஆசிரியர்கள், 3 லட்சம் அரசு ஊழியர்கள், 1 லட்சம் சீருடை பணியாளர்கள் மற்றும் 2 லட்சம் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தொழிலாளர்கள் என, மொத்தம் 12 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
2001 முதல் 2005 வரை அதிகரிப்பு
கடந்த, 2001ம் ஆண்டு முதல், 2005ம் ஆண்டு வரை, தமிழகத்தில் வேலை நியமன தடைச்சட்டம் அமலில் இருந்தது. இதனால், தமிழகத்தில் ஐந்து ஆண்டுகளாக, புதிய பணியாளர்கள் நியமனம் செய்யப்படவில்லை. அதேசமயம், அரசுப்பணிகளில் இருந்து, ஓய்வு பெறும் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்தே வந்தது.
இந்திய தலைமை கணக்காய்வு நிறுவனத்தின், தமிழக பிரிவில், பணியாற்றும் அதிகாரி ஒருவர் கூறியதாவது: எங்களது அலுவலகத்தின் சார்பில், ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்கும் ஆணை எண் வழங்கப்படும். அதன்படி, தமிழகத்தில் கடந்த, 1993ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை ஆண்டுதோறும், 25 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றனர்.
2011ல் 40 ஆயிரம் பேர் ஓய்வு
இந்த எண்ணிக்கை சற்று அதிகரித்து, 2007ம் ஆண்டு முதல், 2011ம் ஆண்டு வரை, ஆண்டுதோறும், 40 ஆயிரம் பேர் ஓய்வு பெற்றனர். இந்நிலையில், 2012-13ம் நிதியாண்டில் மட்டும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என ஒட்டுமொத்தமாக, 1.27 லட்சம் பேர் ஓய்வு பெறுகின்றனர். இதில் 52 ஆயிரம் ஆசிரியர்களும் அடங்குவர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடந்த, 1991ம் ஆண்டுக்கு முன்பு வரை, மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், அரசுத் துறைகளுக்கு பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் தொகைக்கு ஏற்ப, அரசின் நலத் திட்டங்கள், சரியான முறையில் சென்றடைய வேண்டுமானால், அதற்கு எந்த அளவுக்கு ஊழியர்கள் தேவை; அந்த ஊழியர்களின் பணிகள் என்னென்ன என்பதுஉள்ளிட்ட, பல விஷயங்கள் ஆய்வு செய்யப்பட்டு, அதற்கேற்ப அரசுத்துறைகளில், புதியதாக ஆட்கள் நியமனம் செய்யப்பட்டனர். ஆனால், இந்த நடைமுறை, 1991ம் ஆண்டுக்கு பின்னர் பின்பற்றப்படுவதில்லை. ஒவ்வொரு துறைக்கும், தோராயமாகவே ஆட்களை நியமனம் செய்கின்றனர்.
ஊழியர்களுக்கு பணி சுமை
அவர்களின் பணிகளும் வரைமுறைப்படுத்தப்படுவது இல்லை. இதனால் அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமையும், பொதுமக்களுக்கு அலைச்சலும் ஏற்படுகிறது. மத்திய அரசின், 13 வது நிதி ஆணைக்குழு, தமிழக அரசுக்கு சில பரிந்துரைகளை, 2011ம் ஆண்டு அக்டோபர் மாதம் வழங்கியது.
அதில், "தமிழகம் வளர்ந்த மாநிலமாக உள்ளது. எனவே மத்திய அரசின் தொகுப்பில் இருந்து, தமிழகத்துக்கு போதிய அளவில் நிதி வழங்க முடியாது. எனவே தங்களது சொந்த நிதியில் இருந்தே செலவினங்களை தமிழக அரசு கவனித்து கொள்ள வேண்டும்" என தெரிவித்திருந்தது. மேலும், "ஓய்வு பெறும் அரசு ஊழியர் பணியிடங்களுக்கு, ஒப்பந்த அடிப்படையில் புதியதாக ஆட்களை நியமனம் செய்யலாம். இதனால் அரசுக்கும் செலவினங்கள் குறையும்" என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து, அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் தலைமை நிலைய செயலர் சீனிவாசனிடம் கேட்டபோது, "நிதி நிலையை காரணம் காட்டி, அரசுப்பணியிடங்கள் குறைக்கப்பட்டு வருகின்றன. ஆசிரியர் பணியிடங்களை உடனுக்குடன் நிரப்புவதில் கவனம்செலுத்தும் அரசு, மற்ற அரசுத் துறைகளிலும் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
ஓய்வுக்கு பிறகும் வேலை
அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பின்னரும், மீண்டும் அவர்களுக்கே ஒப்பந்த அடிப்படையில், பணிகள் வழங்கப்படுகிறது. கருவூல கணக்கு துறையில் பணியாற்றி வந்த, 300 உதவி கருவூல அலுவலர்கள், சமீபத்தில் ஓய்வு பெற்றனர். ஆனால், இந்த பணியிடங்களுக்கு புதியதாக ஆட்கள் நியமனம் செய்யப்படவில்லை.
மாறாக, ஓய்வு பெற்றவர்களே ஒப்பந்த அடிப்படையில், பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் புள்ளியல் துறையில், சமீபத்தில் ஓய்வு பெற்ற, 120 பேருக்கு, ஒப்பந்த அடிப்படையில், மீண்டும் பணி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் வேலைவாய்ப்பு அலுவலகங்களில், பதிவு செய்து வைத்து, அரசு வேலைக்காக காத்திருக்கும், 75 லட்சம் பேரின் கனவு கேள்விக்குறியாகி உள்ளது.

>>>பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரமாகும் டெல்லி...!!

 
நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரமாக டெல்லி திகழ்கிறது. கடந்த வருடம் மட்டும் டெல்லியில் 572 பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர் என்று அதிர்ச்சியளிக்கிறது தேசிய குற்றப் புலனாய்வு அமைப்பின் புள்ளிவிபரம். பாலியல் பலாத்கார நிகழ்வில் டெல்லி முதலிடத்தில் இருப்பதாகவும் அந்த அமைப்பு எச்சரிக்கிறது.

அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் பலாத்காரக் குற்றங்களில் மிக மோசமாக இருக்கும் மாநிலம் டெல்லிதான் என்கிறது அந்த அறிக்கை. டெல்லியைவிட மும்பையானது சுமார் 2 மில்லியன் மக்கள் தொகையை அதிகம் கொண்டிருந்தாலும் டெல்லியை ஒப்பிடுகையில் மும்பையில் பாதி அளவே கற்பழிப்பு குற்றங்கள் நிகழ்வதாகவும் அது தெரிவிக்கிறது. மும்பையில் 239 பெண்களுக்கு இதே கொடுமை நேர்ந்துள்ளது என்று தேசிய குற்றப் புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்திய நாட்டின் பெருமைமிகு தலைநகரம் என்ற பெருமையை டெல்லி படிப்படியாக இழந்து வருகிறது. 2011ம் ஆண்டு மட்டும் டெல்லியில் 572 பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர் என்கிறது ஒரு புள்ளிவிபரம். கடந்த 5 ஆண்டுகளாக டெல்லி மட்டும் பலாத்கார குற்றங்களில் முதலிடம் வகித்து வருகிறது.

மும்பையில் கடந்த ஆண்டு 239 பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர் என்று தேசிய குற்றப் புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. இத்தனைக்கும் டெல்லியைவிட மும்பையானது சுமார் 2 மில்லியன் மக்கள் தொகையை அதிகம் கொண்டிருக்கிறது.

பெங்களூரில் 96 பலாத்கார குற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தவிர கடந்த ஆண்டு சென்னையில் 76 குற்றங்களும், கொல்கத்தாவில் 47 பாலியல் குற்றங்களும் நிகழ்ந்துள்ளதாக அந்த தகவல் தெரிவித்துள்ளது. மெட்ரோபாலிடன் நகரங்களிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக கொல்கத்தா திகழ்கிறது.

அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் பாலியல் குற்றங்களில் மிக மோசமாக இருக்கும் மாநிலம் டெல்லிதான். ஹரியானாவில் 6 பெண்களும், ராஜஸ்தானில் 5 பெண்களும், உத்தர பிரதேசத்தில் 2 பெண்களும் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி உள்ளனர்.

டெல்லியில் ஒரு லட்சம் பெண் மற்றும் சிறுமிகளில் 7 பேர் பலாத்காரத்திற்கு ஆளாகின்றனர். இதோடு ஒப்பிடுகையில், மும்பையில் 3 பெண்களும், பெங்களூர் மற்றும் சென்னையில் 2 பெண்களும் பாதிக்கப்படுவதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. ஆனால் கொல்கத்தாவைப் பொறுத்தவரை 3 லட்சம் பெண்களில் 2 பேர் மட்டுமே பாலத்காரத்திற்கு ஆளாகின்றனர்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் டெல்லியில் அதிகரிக்க அதன் அண்டை மாநில மக்களின் போக்குவரத்து அதிகரிப்பும் இதற்கு ஒரு காரணம் என தேசிய குற்றப்புலனாய்வு அமைப்பு கூறுகிறது.

இந்த சூழ்நிலையில் ஞாயிறு இரவில் டெல்லியில் நடைபெற்ற சம்பவம் மாணவிகளிடையே அச்சத்தை அதிகரித்துள்ளது. இதனையடுத்து வீதியில் இறங்கி அவர்கள் போராடத் தொடங்கியுள்ளனர். மறியலில் ஈடுபட்ட அவர்கள், குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர்கள் டெல்லியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

An unprecedented 41 cm Rain in Rameswaram - Cloud burst in Pamban - Chennai Met Office

ராமேஸ்வரத்தில் வரலாறு காணாத 41 செ.மீ. மழை  - பாம்பனில்  மேக வெடிப்பு நிகழ்ந்துள்ளது - சென்னை வானிலை மையம்  ராமேஸ்வரத்தில் 41 செ.மீ. மழை   கா...