கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கு கல்விக்குழு உறுப்பினர்கள் நியமனம்

ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கு, கல்விக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உயர்கல்வித்துறை செயலர் வெளியிட்ட உத்தரவு: பல்கலை வேந்தராக உள்ள கவர்னர், ஆசிரியர் கல்வியியல் பல்கலையில், கல்விக்குழு உறுப்பினர்களை நியமனம் செய்ய அனுமதி வழங்கி உள்ளார். அரசு தரப்பில், இரு உறுப்பினர்கள், அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகள் சார்பில், தமிழக அரசின் பரிந்துரையின் படி, எட்டு உறுப்பினர்கள், கல்வி குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசு நிதியுதவி பெறாத தனியார் கல்வியியல் கல்லூரிகள் சார்பில், அரசு பரிந்துரையின்படி, ஆறு உறுப்பினர்களும், கல்விக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்படுகின்றனர். இவர்களது நியமனம், இம்மாதம், 4ம் தேதியில் இருந்து, அமலுக்கு வந்துள்ளது. இவர்கள் அனைவரும் மூன்று ஆண்டுகளுக்கு, உறுப்பினர் பதவிகளை வகிப்பர்.
கல்விக் குழுவில், கல்வியாளர்களாக, பாரதியார் பல்கலை கல்வியியல் துறைத் தலைவர் பாலசுப்ரமணியன், மதுரை காமராஜர் பல்கலை, கல்வியியல் துறை பேராசிரியர் முத்துமாணிக்கம், அழகப்பா பல்கலை, கல்வியியல் துறை பேராசிரியர் சிவக்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு, உயர்கல்வித்துறை செயலர் கூறியுள்ளார்.

>>>1,000 இளநிலை உதவியாளர்கள் கல்வி துறையில் விரைவில் நியமனம்

பள்ளி கல்வித் துறையில், 1,000 இளநிலை உதவியாளர்கள் மற்றும், 120 தட்டச்சர்கள், விரைவில், "ஆன்-லைன்' கலந்தாய்வு வழியில், நியமிக்கப்பட உள்ளனர். டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வில், பள்ளி கல்வித் துறைக்கு, சுருக்கெழுத்தர்கள், 35 பணியிடங்கள், இளநிலை உதவியாளர் பணியிடங்கள், 1,000 மற்றும் தட்டச்சர் பணியிடங்கள், 120 ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில், சுருக்கெழுத்தர்கள், சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டனர். தட்டச்சர் பணியிடங்கள் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் பெயர் பட்டியலை, ஓரிரு நாளில், பள்ளி கல்வித் துறைக்கு, தேர்வாணையம் வழங்க உள்ளது. பட்டியல் வந்ததும், "ஆன்-லைன்' கலந்தாய்வு வழியில், இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர்களை நியமனம் செய்ய, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக, அனைத்து ஏற்பாடுகளும், தயார் நிலையில் உள்ளன. பெரும்பாலான பணியிடங்கள், மாவட்டங்களில் உள்ள கல்வி அலுவலகங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில், நிரப்பப்பட உள்ளன.

>>>சி.சி.இ.,முறையில் பாடமெடுக்க புதிய ஆசிரியர்களுக்கு அறிவுரை

"தொடர், முழு மதிப்பீட்டு(சி.சி.இ.,) முறையில் மாணவர்களுக்கு பாடம் எடுக்க வேண்டும்' என, புதியதாக பணியேற்றுள்ள ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரிகள் அறிவுரை வழங்கினர். தமிழகத்தில் டி.இ.டி., தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை, பி.எட்., பட்டதாரி ஆசிரியர்களுக்கு, சென்னையில் நடந்த அரசு விழாவில், முதல்வர் ஜெயலலிதா பணி நியமன ஆணையை வழங்கினார். கிடைத்த பணியிடங்களில் பொறுப்பேற்கும் முன், முதன்மை கல்வி, மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம், மீண்டும் ஒரு முறை சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, புதிய ஆசிரியர்களுக்கு பாடமெடுப்பது, மாணவர்களிடம் நடந்து கொள்ளும் முறை போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டன.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்வி முறையான தொடர் மற்றும் முழுமதிப்பீட்டு (சி.சி.இ.,) முறையில் செயல்முறை விளக்க படங்களுடன் பாடம் நடத்த, புதிய ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அலுவலர்கள், எஸ்.எஸ்.ஏ.,திட்ட அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

>>>எலுமிச்சையின் மருத்துவப் பயன்கள்...

 
வைட்டமின் சி, சுண்ணாம்புச்சத்து, செம்புச்சத்து கொண்டுள்ள எலுமிச்சை பல்வேறு பலன்களை தருகிறது.

தேள்கொட்டினால், அந்த இடத்தில் எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி இரண்டு துண்டையும் தேய்க்க விஷம் இறங்கும். தலைவலிக்கு கடுங்காபியில் எலுமிச்சையின் சாற்றை கலந்து கொடுத்தால் உடனே குணமாகும்.

நீர் சுருக்கு, பித்தநோய், வெட்டை சூடு, மலச்சிக்கல் ஆகியவற்றுக்கு எலுமிச்சம் பழச்சாற்றுடன் சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து கலந்து குடித்து வந்தால், தகுந்த நிவாரணம் பெறலாம்.

மயக்கம், வாந்தி, வாய் குமட்டல், நீர்வேட்கை, வெறி, கண் நோய், காது வலி போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை எலுமிச்சம் பழத்திற்கு உண்டு.

கழிச்சலுக்காக மருந்துகள் உட்கொண்டு, அதனால் அடங்காத கழிச்சலும், வாந்தியும் ஏற்பட்டால், சீரகத்தை தேன் விட்டு பொன்னிறமாக வறுத்து, அதனுடன் எலுமிச்சம் பழச்சாற்றையும் சேர்த்து நீர் விட்டு காய்ச்சி, உட்கொள்ள கொடுத்தால் உடனே வாந்தியும், கழிச்சலும் நிற்கும்.

எலுமிச்சம் பழச்சாற்றை தலையில் தேய்த்து தலை முழுகி வர பித்தம், வெறி, உடல் உஷ்ணம் தணியும்.

அடிபட்டு ரத்தம் கட்டியிருந்தால் எலுமிச்சை சாற்றில் கரிய போளத்தை (கரிய போளம் என்பது கற்றாழையின் உலர்ந்த பால். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) சேர்த்து காய்ச்சி அடிபட்ட இடத்தில் பூசிவர ரத்தக்கட்டு கரையும்.

நகச்சுற்று ஏற்பட்டவுடன் எலுமிச்சை பழத்தில் துளையிட்டு விரலை அதனுள் சொருகி வைக்க வலி குறையும்.

எலுமிச்சம் பழச்சாற்றுடன் தேன் கலந்து குடிக்க வறட்டு இருமல் தீரும். இதனுடன் மோர் கலந்து குடிக்க ரத்த அழுத்தம் குறையும்.

சிலருக்கு பாதத்தில் எரிச்சல் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள், மருதாணியை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றில் கலந்து பாதத்தில் தடவி வந்தால் எரிச்சல் குணமாகும்.

சிறிதளவு எலுமிச்சை இலைகளை அரைத்து சாறு பிழிந்து, அதனுடன் சிறிது உப்பு சேர்த்து நீரில் கலந்து குடித்தால் வாந்தி நிற்கும்.

எலுமிச்சம்பழத்தின் விதைகளை நீரில் போட்டு காய்ச்சி, அதில் இருந்து எழும் ஆவியை முகத்தில் படும்படி பிடிக்க நீர்பினிசம் தீரும்.

சீமையகத்தி எனப்படும் வண்டு கொல்லி இலையை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றில் கலந்து மேலே பூசி வர படர்தாமரை குணமாகும்.

சீரகத்தை எலுமிச்சம் பழச்சாற்றில் 2 நாள் ஊற வைத்து, பின் அந்த சாற்றுடன் வெயிலில் காய வைக்கவும். நன்றாக காய்ந்ததும் மீண்டும் எலுமிச்சம் பழச்சாற்றில் ஓர் இரவு ஊற வைத்து மீண்டும் வெயிலில் காய வைக்கவும். நன்றாக உலர்ந்தபின் அதை எடுத்து பொடியாக்கி ஒரு ஸ்பூன் அளவு தேன் அல்லது தண்ணீரில் கலந்து மூன்று வேளை சாப்பிட்டுவர அஜீரணம், பித்தம் தணியும். ரத்த அழுத்தம் சீராகும்

>>>"நெட்' தேர்வு எழுதுபவரா நீங்கள்?

பல்கலை மானியக்குழுவின் "நெட்' தேர்வுகள் டிச., 30ம் தேதி நடக்க உள்ளது. மதுரையில் இத்தேர்வை 8900 பேர் எழுதஉள்ளனர். இவர்களுக்கான அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது. அனுமதிச் சீட்டு இதுவரை கிடைக்காதவர்கள், www.ugcnetonline.in, www.ugc.ac.in ஆகிய இணையதள முகவரியில் டவுன்லோடு செய்து பெறலாம். அதில் மாணவர்கள் போட்டோவை ஒட்டி, கெஜட்டட் அலுவலரின் கையொப்பம் பெற்று தேர்வு மையத்திற்கு கொண்டு வர வேண்டும். மேலும் www. mkuniversity.org என்ற முகவரியில், மாணவர்கள் தங்களுக்கான மையம், இருக்கை ஏற்பாடுகளை தெரிந்து கொள்ளலாம், என, மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் பிச்சுமணி தெரிவித்து உள்ளார்.

>>>பி.எப்.,க்கு வட்டி எவ்வளவு?ஜனவரி 15ல் முடிவாகிறது

தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி திட்ட முதலீட்டுக்கு, எத்தனை சதவீத வட்டி என்பது, வரும் 15ம் தேதி அறிவிக்கப்படுகிறது.தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில், சேர்ந்துள்ளோருக்கு, ஆண்டுதோறும், வட்டி வழங்கப்படும். இந்த நிதியை,தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு நிர்வகித்து வருகிறது. இதிலுள்ள, உயர்மட்ட அமைப்பான, அறங்காவலர்கள் மத்திய வாரியம் தான், முக்கிய கொள்கை முடிவுகளை எடுக்கும். இந்த திட்டத்தில் சேர்ந்துள்ளோருக்கு, எத்தனை சதவீதம் வட்டி வழங்குவது, திரட்டப்பட்டுள்ள நிதியை எதில் முதலீடு செய்யலாம் ஆகியவை குறித்து, இந்த வாரியம் தான் முடிவு செய்யும். இதற்கான, அறங்காவலர்கள் மத்திய வாரியத்தின், 201வது கூட்டம், ஜனவரி 15ம் தேதி, மும்பையில் நடக்கிறது.
பி.எப்., வட்டிவிகிதம்: இக்கூட்டத்திற்கு, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தலைமை தாங்குவார். இதில், பி.எப்., டெபாசிட்டுக்கு, இந்த நிதியாண்டிற்கான வட்டி விகிதம் குறித்து முடிவு செய்யப்படும். பின், நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும்.தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில், நாடு முழுவதும், ஐந்து கோடி பேர் உள்ளனர்.
வருங்கால வைப்பு நிதி அமைப்பின் வட்டாரங்களில் கிடைத்த தகவல் படி, 8.6 சதவீதம் வட்டி வழங்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.இருப்பினும், தொழிலாளர்கள் அமைப்புகள், 8.8 சதவீத வட்டி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன. கடந்தாண்டு, 8.25 சதவீதம் வட்டி வழங்கப்பட்டது. அறங்காவலர்கள் வாரிய குழுவில் உறுப்பினர்களாக உள்ள இந்துஸ்தான் மஸ்தூர் சபா செயலர் நாக்பால் கூறுகையில்,""வங்கிகளில் செய்யப்படும் டிபாசிட்டுகளுக்கு, தற்போது, 9 சதவீதம், 10 சதவீதம் வரை தரப்படுகிறது. இந்நிலையில், பி.எப்., சந்தாதாரர்களுக்கு, 9.5 சதவீத வட்டி வழங்க வேண்டும் என, வலியுறுத்துவோம்,'' என்றார்.

>>>நரேந்திர மோடி [Narendra Modi]....

 
நான்காவது முறையாக, குஜராத் முதல்வராக பதவியேற்க உள்ள, நரேந்திர தாமோதர் தாஸ் மோடி, குஜராத் மாநிலம், மேஹ்சனா மாவட்டத்தின் வத்நகரில், 1950 செப்., 17ல் பிறந்தார்.இவரது பெற்றோர் தாமோதர் தாஸ் முல்சந்த் மோடி - ஹூரா. பள்ளியில் படிக்கும் போதே, ஆர்.எஸ்.எஸ்., மற்றும் "அகில பாரதிய வித்யார்தி பரிஷத்' அமைப்பில் இணைந்து, ஊழல் எதிர்ப்பு போராட்டங்கள், அரசியல் தொடர்பான கூட்டங்களில் பங்கேற்றார். பின், பா.ஜ.,வில் சேர்ந்தார்.

இளம் வயதில் சகோதரருடன் இணைந்து, டீ கடை நடத்தினார். அரசியல் ஆர்வத்தால், குஜராத் பல்கலை கழகத்தில், "அரசியல் அறிவியலில்' முதுகலை பட்டம் பெற்றார். இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.

ஆரம்பமே அசத்தல்:கடந்த, 1998ல் குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச தேர்தல் பொறுப்பாளராக, அத்வானியால் நியமிக்கப்பட்டார். இப்பணியை மோடி திறம்பட செய்து முடித்தார். குஜராத் முதல்வராக இருந்த கேசுபாய் படேல், 2001 அக்., 6ம் தேதி ராஜினாமா செய்தார்.இதையடுத்து, எம்.எல்.ஏ., வாக கூட இல்லாத மோடி, அக்., 7ல், முதல்வராக பதவியேற்றார். பின், இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2002 பிப்., 27ல், "கோத்ரா ரயில் எரிப்பு' சம்பவத்தை தொடர்ந்து, குஜராத்தில் கலவரம் ஏற்பட்டது.

இதையடுத்து மோடி, ராஜினாமா செய்தார். அதே ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானார்.நீண்ட கால முதல்வர்குற்றச்சாட்டுகளை மனதில் கொள்ளாமல், மாநிலத்தின் வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்டார். குஜராத்தை பல துறைகளிலும், முன்மாதிரி மாநிலமாக மாற்றிக் காட்டினார். 2007 தேர்தலிலும் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக முதல்வரானார். குஜராத்தில், நீண்டகாலம் முதல்வராக இருந்தவர் என்ற சாதனையையும் படைத்தார்.

திட்டங்கள்:குஜராத் மின் மிகை மாநிலமாக உள்ளது. சோலார் மின் உற்பத்தியில், (2,000 மெகாவாட்) நாட்டில் முன்னணியில் உள்ளது. இளைஞர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாவதை தடுக்கும் வகையில், "குட்கா'வுக்கு தடை விதித்துள்ளார்.மும்பை தாக்குதலுக்குப் பின், குஜராத் கடலோர பாதுகாப்பை பன்மடங்கு பலப்படுத்தியுள்ளார். சமீபத்தில், ஆன் லைனில் இளைஞர்களுடன், மோடி நேரடியாக கலந்துரையாடினார். அரசியல்வாதி ஒருவர், இம்மாதிரி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வது இதுவே முதல்முறை. சமூக வலைதளமான, "டுவிட்டரில்' இவரை, 11 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.

விருதுகள்:இந்தியா டுடே நாளிதழ், "இந்தியாவின் சிறந்த முதல்வர்' என்ற விருதை, 2006ல் வழங்கி கவுரவித்தது. குஜராத்தில், கம்ப்யூட்டர் துறையில், இவர் ஏற்படுத்திய வளர்ச்சியின் காரணமாக, கம்ப்யூட்டர் சொசைட்டி ஆப் இந்தியா அமைப்பு,"இ-ரத்னா' விருதை வழங்கியது. 2009ம் ஆண்டுக்கான, "ஆசியாவின் சிறந்த எப்.டி.ஐ., பெர்சனாலிட்டி' விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

தற்போது தன் தலைமையில், மூன்றாவது முறையாக, சட்டசபை தேர்தலை எதிர்கொண்டு, "ஹாட்ரிக்' வெற்றி பெற்றுள்ளதோடு, நான்காவது முறையாக, முதல்வராக பதவியேற்க உள்ளார். 2007ல் நடந்த சட்டசபை தேர்தலின் போது, "மரண வியாபாரி' என, காங்கிரஸ் தலைவர் சோனியாவால், விமர்சிக்கப்பட்டவர்.கடந்த, 22 ஆண்டு காலமாக, குஜராத் மாநிலத்தில், ஆட்சி, அதிகாரத்தை பிடிக்க முடியாமல் தவிக்கும், காங்கிரசை மீண்டும் மண்ணைக் கவ்வச் செய்துள்ளார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...