கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பேச்சுக் கலையில் வல்லவர் ஆக வேண்டுமா?

ஒரு தகவலை அனுப்புதல் என்பது, எண்ணங்களைப் பரிமாறுதல், மனோநிலை, தகவல், சிந்தனைகள், வார்த்தை அல்லது வார்த்தை வடிவத்தில் அல்லாத தகவல் தொடர்பு ஆகியவற்றை உள்ளடக்கி இருக்கும்.
பார்வையாளரை அறியுங்கள்
* உங்களின் பேச்சை கேட்கவிருக்கும் பார்வையாளர் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும்.
* திறன்வாய்ந்த பார்வையாளர்கள் எண்ணிக்கைப் பற்றிய ஒரு தோராயமான தகவலைப் பெறவும்.
* உங்களின் பேசு பொருள் குறித்து, பார்வையாளர்கள் கேள்வியெழுப்பி விடாமல் இருத்தல் முக்கியம்.
* பேச்சினூடே, பொருத்தமான நகைச்சுவையை இடம்பெற செய்தால், பார்வையாளர்களின் கவனத்தை கவர்வது எளிதாக இருக்கும்.
* பார்வையாளர்களின் நடவடிக்கையின் மூலமாக, நீங்கள் எந்த விதத்திலும், தொந்தரவு அடைந்துவிடக்கூடாது.
* பார்வையாளர்கள், தங்களின் சந்தேகங்களைக் கேட்கும் வாய்ப்பை அவர்களுக்கு வழங்க வேண்டும்.
கண்களின் வழியாக பேசுதல்
நீங்கள் பேசுகையில், உங்களது பார்வையாளர்களின் கண்களைப் பார்த்து பேசுவது மிகவும் சிறந்தது. ஏனெனில், இதன்மூலம் அவர்கள் உங்களை ஆர்வமுடன் கவனிக்கத் தொடங்குவர்.
சைகைகள்
உரையாற்றும்போது, கையசைவு மற்றும் தேவையான முக பாவனைகளை வழங்க வேண்டும். அப்போதுதான், உரை சிறப்படையும்.
உடல் மொழி
வார்த்தை ஒரு விஷயத்தை விளக்குவதை விட, உடல்மொழியானது சில சமயங்களில், நன்றாக விளக்கிவிடும். பொருத்தமற்ற உடல் மொழியானது, உங்களின் உரையையே சிதறடித்துவிடும். எனவே, சரியான உடல் மொழியை வெளிப்படுத்த பழகிக் கொள்ளுங்கள்.
உங்களின் பண்பு
பொறுமை, கண்ணியம், நேர்மறை எண்ணம், ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை போன்ற பண்புகள் உங்களின் உரையாடலில் இருப்பது மிகவும் அவசியம். அப்போதுதான், உங்களின் நன்மதிப்பு அதிகரிக்கும்.
சரியான வார்த்தைப் பிரயோகம்
சரியான அர்த்தம் விளங்காத வார்த்தைகளைப் பிரயோகிப்பதை தவிர்க்க வேண்டும். நன்கு பரிச்சயமான வார்த்தைகளை உபயோகப்படுத்துவதன் மூலமே, உங்களின் கருத்து, எளிமையாகவும், வலுவாகவும் உரியவர்களை சென்றடையும்.
சிறப்பான உச்சரிப்பு
வார்த்தைகளை சரியான முறையில் உச்சரிப்பது ஒரு தனிக்கலை. எங்கே அழுத்தம் கொடுக்க வேண்டும், எங்கே மிதமாக உச்சரிக்க வேண்டும் என்பதை முறையாக செய்தால், கேட்போர் கவரப்படுவர்.
வேகம்
கேட்பவர்கள், சரியாக புரியும்படியான வேகத்தில் பேசுவது அவசியம். எங்கே, வேகத்தை லேசாக அதிகரிக்க வேண்டும் மற்றும் எங்கே, வேகத்தை லேசாக குறைக்க வேண்டும் என்பதை தெளிவாக அறிந்துகொண்டால், வெற்றி உங்களுக்கே.
சத்தம்
உரையாற்றும்போது, எந்தளவு சத்தத்தில் பேசினால் சரியாக இருக்கும் என்பதை அறிந்திருத்தலும் முக்கியம். பேச்சுக் கலையில், தேவையான அளவு சத்தம் என்பது ஒரு முக்கியமான அம்சம்.
மேற்கூறிய காரணிகளை நீங்கள் தெளிவாக கற்றுத் தேர்ந்துவிட்டால், பேச்சுக் கலையில் நீங்கள் ஒரு வல்லவராக ஜொலிப்பீர்கள்.

>>>அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு - எவ்வாறு வெல்லலாம்?

மருத்துவப் படிப்பு மற்றும் பல் மருத்துவ படிப்புகளில், 2013ம் கல்வியாண்டு முதல் சேர விரும்பும் மாணவர்கள், தேசிய அளவிலான பொது நுழைவுத்தேர்வை எழுத வேண்டியுள்ளது. இத்தேர்வு, 2013, மே 5ம் தேதி நடத்தப்படவுள்ளது.
இத்தேர்வைப் பொறுத்தவரை, பலவிதமான மாற்றங்கள், மாநிலங்களின் பங்கேற்பு, பிராந்திய மொழிகள் தொடர்பான பிரிச்சினை மற்றும் தயாராவதற்கான குறுகிய காலம் போன்ற சிக்கல்களால், மாணவர்கள் குழப்பமடைந்துள்ளனர். ஆனால் நிலைமை ஒன்றும் அவ்வளவு மோசமல்ல.
இத்தேர்வுக்கான பாடத்திட்டமானது, பலவிதமான மாநில வாரியங்களின் பாடத்திட்டங்களை மதிப்பாய்வு செய்த பிறகே, CBSE, பள்ளிக் கல்வி வாரியங்களின் கவுன்சில் மற்றும் NCERT ஆகியவை இப்பாடத்திட்டத்தை தயாரித்துள்ளன. மருத்துவ கல்வியில், பல அம்சங்களையும் சேர்க்க வேண்டிய முக்கியத்துவம் உணர்ந்து செயல்படுத்தப்பட்டுள்ளது.
அனைவரும் ஏற்கிறார்களா?
இந்த பொது நுழைவுத்தேர்வானது(NEET), மாநில அளவிலான நுழைவுத் தேர்வுகள், அகில இந்திய பிஎம்டி தேர்வு மற்றும் தனிப்பட்ட முறையில் கல்லூரிகளால் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகள் ஆகியவற்றுக்கு பதிலாகவே நடத்தப்படுகின்றன. இத்தேர்வை ஏற்றுக்கொள்வதில், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் உடன்படவில்லை என்றாலும், பெரும்பாலான மாநிலங்கள் ஒப்புக்கொண்டு விட்டதாகவே கூறப்படுகிறது.
MCI பட்டியலிட்டுள்ள மொத்தம் 271 மருத்துவக் கல்லூரிகள், 2013ம் ஆண்டின் NEET தேர்வின்கீழ் வருகின்றன. இக்கல்லூரிகளில், மொத்தம் 31,000 இடங்கள் உள்ளன.
கலந்துகொள்ளாத கல்வி நிறுவனங்கள்
AIIMS என்ற நாட்டின் முதன்மையான மருத்துவக் கல்வி நிறுவனம், தனது உயர்தரத்தை பாதுகாக்கிறேன் என்று கூறி, இத்தேர்வில் கலந்துகொள்ள மறுத்துவிட்டது. பொதுவாக, மத்திய அரசின் உதவிபெறும் கல்வி நிறுவனங்கள், தமக்கென தனி விதிமுறைகளை வைத்துள்ளன. எனவே, அவை இதுபோன்ற பொது நுழைவுத்தேர்வு முறைகளில் பங்கேற்பதில்லை.
தயாராதல்
இந்த புதிய நுழைவுத்தேர்வுக்கு தயாராவதில், மாணவர்கள், சில பல வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டியுள்ளது. தங்களின் சில பழைய வழிமுறைகளை களைந்துவிட்டு, பல புதிய வியூகங்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. அதேசமயம், தெளிவான திட்டமிடலையும் மேற்கொள்ள வேண்டும்.
மேலும், இத்தேர்வானது, வெறும் மாணவர்கள் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. இத்தேர்வை வெற்றிகொள்ளும் வகையில், மாணவர்களை தயார்செய்யும் பொறுப்பு, கல்வி நிறுவனங்களிடமும் உள்ளது என்பதை மறக்கலாகாது.
தேர்வின் வடிவம்
உங்களின் திட்டமிடலை தெளிவாக மேற்கொள்ள, தேர்வு வடிவத்தை நன்கு அறிந்துகொண்டால்தான் முடியும். எனவே, அதைப்பற்றி இப்போது அறிந்துகொள்ளலாம். முந்தைய ஆண்டு வரை நடத்தப்பட்ட All India Pre - Medical Test -ல், மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்பட்டன. இயற்பியல், வேதியியல், விலங்கியல் மற்றும் தாவரவியல் ஆகியவற்றில் தலா 50 கேள்விகள் இடம்பெற்றிருக்கும்.
மொத்தம் 3 மணிநேரங்கள் நடைபெறும் இத்தேர்வில், 1/4 என்ற அளவில் நெகடிவ் மதிப்பெண்களும் உண்டு. இந்த நெகடிவ் மதிப்பெண் முறை, இந்த NEET தேர்விலும் தொடரும். ஆனால், இத்தேர்வில், இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் தாவரவியல் ஆகிய பிரிவுகளில், தலா 45 மதிப்பெண்கள் வீதம், மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்படும்.
ஆலோசனைகள்
இத்தேர்வை CBSE நடத்துவதால், NCERT புத்தகங்களை முழுமையாக, தெளிவாக படித்துவிட வேண்டும். கொடுக்கப்படும் எண்களை விரைவாக புரிந்துகொள்ள வேண்டும். NCERT புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து exercise -களையும் சிறப்பாக செய்து முடிக்கும் பயிற்சியைப் பெற்றிருக்க வேண்டும்.
குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வெழுதி முடிக்கும் பயிற்சியைப் பெற, மாதிரித் தேர்வுகளை எழுத வேண்டும். ஒவ்வொரு கேள்விக்கும் விடைகாண, நிமிட நேரத்திற்குள் எடுத்துக்கொள்ள வேண்டுமென்பதால், நிஜத் தேர்வை எழுதும் முன்பாக, குறைந்தபட்சம் 15-20 மாதிரித் தேர்வுகளை எடுத்துக்கொண்டு பயிற்சி பெறுவதே, உங்களின் இலக்கினை அடைய உதவும்.
NEET -யுடன் ஒப்பிடும்போது, CBSE -ல், 11 மற்றும் 12ம் வகுப்புகளின் பாடத்திட்டங்களில் சில மாற்றங்கள் இருக்கும். எனவே, பாடத்திட்டத்துடன் ஒரு நெருக்கமான ஒப்பீட்டை, கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.
பழைய AIPMT தேர்வுகளின் கேள்வித்தாள்களை எடுத்துப் பார்த்து, அதனடிப்படையில் பயிற்சி பெறுவதும் பயனளிக்கும்.
உங்களுக்கான உதவி
மாணவர்களுக்கு, NEET தேர்வை எளிதாக்கும் வகையிலான வியூகங்களுடன், பல கல்வி நிறுவனங்கள் தயாராக களத்தில் உள்ளன. உதாரணமாக, கர்நாடக தேர்வுகள் அத்தாரிட்டி, இத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில், Capacity - building programme என்ற திட்டத்தை வைத்துள்ளது. பலவிதமான புதிய வழிமுறைகள் மற்றும் சிறந்த பயிற்சியாளர்களுடன், பல கோச்சிங் நிறுவனங்களும், களத்தில் தயாராக உள்ளன.
அன்றாட தயாரிப்புகள்
எந்த செயலுக்குமே, திட்டமிட்ட கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் தேவை. பாடத்திட்டம் மிகவும் விரிவானதாக இருப்பதால், உங்களின் முயற்சிகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட வேண்டும். திட்டத்தை, ஒரு நாளுக்குரியது அல்லது ஒரு வாரத்திற்கு உரியது என்கிற ரீதியில் வகுத்துக் கொள்ளவும். அதன் முடிவில், உங்களது செயல்பாட்டின் வெற்றியை மதிப்பிட்டுக் கொள்ளவும்.
ஏதாவதொரு பாட அம்சம் உங்களுக்கு புரியவில்லை எனில், அதை உரியவர்களிடம் கேட்டுத் தெளிவுபெற தயங்க வேண்டாம். மேலும், பிரிவு வாரியாகவும் மாதிரி தேர்வைஎழுதி பயிற்சி பெறலாம். ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்கும் செல்லும் முன்பாக, உங்களின் முந்தைய நிலையின் பலவீனங்களை கண்டிப்பாக சரிசெய்து கொள்ள வேண்டும். படித்த பகுதிகளை, திரும்ப திரும்ப படித்துப் பார்ப்பது மிகவும் நல்லது. ஆலோசனைகளை சரியாக கடைபிடித்து, கடினமாக உழைத்தால், நீங்கள் மருத்துவராவது நிச்சயம்.

>>>ஸ்லெட் தேர்வு முடிவுகள் எப்போது?

கல்லூரி ஆசிரியர்களுக்கான "ஸ்லெட்" தகுதி தேர்வு முடிவு, மூன்று மாதங்களாகியும், அறிவிக்கப்படாமல் இருப்பதால், தேர்வு எழுதியோர் ஏமாற்றத்தில் உள்ளனர்.
கோவை பாரதியார் பல்கலை சார்பில், கடந்த, செப்., மாதம் கல்லூரி ஆசிரியர் தகுதி தேர்வு நடந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளை சேர்ந்த, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், தேர்வு எழுதினர். ஒரு மாதத்தில் முடிவு அறிவிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. மூன்று மாதங்கள் நிறைவடைந்தும், இன்னும் முடிவு அறிவிக்கப்படவில்லை.
வரும், 30ம் தேதி, "நெட்" என்ற தேசிய தகுதி தேர்வு நடக்கிறது. ஸ்லெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், நெட் தேர்வு எழுத வேண்டியதில்லை. ஆனால், ஸ்லெட், தேர்வு முடிவு இன்னும் வெளியிடப்படாததால், நெட் தேர்வை, எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், கல்லூரி ஆசிரியர் பணிக்கான தேர்வும், விரைவில் நடைபெற, வாய்ப்புள்ளதால், ஸ்லெட் தேர்வு முடிவை, பல்கலைக்கழகம் விரைவில் வெளியிட வேண்டும் என்பது தேர்வு எழுதியவர்களின் கோரிக்கையாக உள்ளது.
பாரதியார் பல்கலை தேர்வுத்துறை கட்டுப்பாட்டாளரை தொடர்பு கொண்டபோது, அவரது மொபைல் போன், "ஸ்விட்ச் ஆப்" செய்யப்பட்டிருந்தது. திருப்பூரை சேர்ந்த அரசு கல்லூரி பேராசிரியர் ஒருவர் கூறுகையில், "இன்னும் 10 நாட்களில், ஸ்லெட் தேர்வு முடிவு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது" என்றார்.

>>>மாம்பழம்

 
பழங்களின் ராஜா, முக்கனிகளில் ஒன்று என பல சிறப்புகளைக் கொண்டது மாம்பழம். ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரையில் மட்டுமே கிடைக்கக்கூடிய சீசன் பழ வகைகளில் ஒன்று இந்த மாம்பழம்.

மாம்பழத்தில் வைட்டமின் …ஏ உயிர்சத்து நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நமது ரத்தம் அதிகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைப்பதாக உள்ளது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது.

மாம்பழம் நாவில் நீர் ஊறவைக்கும் சுவை கொண்டது மட்டுமல்ல; உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல அருமையான குணங்களைக் கொண்டதும் கூட.

மாம்பழத்தில் ஆன்டிஆக்ஸிடென்ட்ஸ் எனப்படும் எதிர் ஆக்சிகரணிகள் நிறைய அடங்கியுள்ளன.இவை இருதய நோய்,விரைவில் முதுமை அடைவது மற்றும் புற்று நோய் போன்றவற்றிற்கு காரணமாக இருக்கும் உயிரணுக்கள் சேதமடையாமல் பாதுகாத்து, அவற்றை சீராக வைத்துக்கொள்கிறது.

மேலும் மாம்பழத்தில் இரும்பு சத்து மிக அதிகமாக அடங்கி உள்ளது.கர்ப்பிணி பெண்களுக்கு மாம்பழம் மிகவும் நல்லது.அத்துடன் ரத்த சோகை உள்ளவர்களுக்கும் இது நல்லது.ஆனால் நாளொன்றுக்கு எத்தனை சாப்பிடலாம் என்பது குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனைக் கேட்டுக்கொள்வது நல்லது.

மேலும் வறண்ட தோல் சருமம் வறட்சியாக காணப்பட்டாலோ அல்லது செதில் செதிலாக உதிர்ந்து காணப்பட்டாலோ,மாம்பழத் துண்டுகளை அந்த இடத்தில் சுமார் 10 நிமிடங்களுக்கு வைத்திருந்து பின்னர் கழுவி விட்டால், நல்ல பலன் கிடைக்கும்.

அஜீரண பிரச்சனை உள்ளவர்களுக்கு மாம்பழத்தைப் போன்று உதவுவது வேறு எதுவும் இல்லை. வயிற்றில் அமில சுரப்பு போன்றவை உள்ளவர்களுக்கும் நிவாரணம் அளிப்பதோடு, சரியான ஜீரணத்திற்கும் உதவுகிறது.

எல்லோருக்கும் பிடித்தமான பழம் மாம்பழம். மாம்பழம் சூடானது, அதிகமாக சாப்பிட்டால் உஷ்ணம் உடம்பில் ஏறி தொல்லை தரும் என்பார்கள். இதனை மருத்துவ விஞ்ஞானம் ஏற்கவில்லை.

100கிராம் மாம்பழத்தில் 12.2 முதல் 42.2 மில்லி கிராம் வரை வைட்டமின் ஏ யும், 13.2 முதல் 80.3 மில்லி கிராம் வரை வைட்டமின் சியும் உள்ளது. தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் இந்த இரண்டு வைட்டமின்களும் எளிதாக நமது உடலை வந்தடையும். பல பேர்கள் மாம்பழத்தை முழுதுமாக சாப்பிடாமல் தோல் பகுதியை தூர எறிந்துவிடுவார்கள்.

மாம்பழத்தின் மேல் தோல் பகுதியில்தான் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. மனிதர்களின் உடலுக்கு அதிக முக்கிய தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகியவைகள் நாம் சுவையாக சாப்பிடுகின்ற மாம்பழத்தில் அதிகமாக இடம் பெற்றுள்ளது. வெண்ணெயில் அளவுக்கு அதிகமான வைட்டமின் ஏ இருப்பதை நாம் அறிவோம். இதே போன்றே மாம்பழத்திலும் அளவுக்கு அதிகமான வைட்டமின ஏ இருப்பதால் விலை கூடுதலான வெண்ணெயை உண்பதைவிட விலை மலிவான மாம்பழத்தை உண்ணலாமே. நாம் சாப்பிடாமல் தூக்கி எறியும் மாங்கொட்டையிலும் கால்சிய சத்தும், கொழுப்பு சத்தும் இருக்கின்றது.

மாம்பழத்தின் பூர்வீகம் இந்தியாதான். இப்போதும் அதிகமாக இங்குதான் மாம்பழம் உற்பத்தி ஆகிறது.
உத்திரப்பிரதேசத்தில்- சப்போட்டா, துஷேரி போன்ற வகையான மாம்பழங்களும், தென்னிந்தியாவில் இமபசந்த் ,அல்போன்சா, பகனப்பள்ளி, ராஸ்புரி, நீலம், ஒட்டு, மல் கோவா, கிளிமூக்கு ,இமபசந்த் என்று பல்வேறு வகையான மாம் பழங்கள் கிடைக்கின்றது. அதிகமாக சாறும், நாறும் உள்ள பழங்களில் இருந்து பழச்சாறு, ஒருவகை சட்னி, பழ ஊறுகாய், ஜாம் ஆகியவை தயாரிக்கப்படுகிறது.

மாம்பழத்தில் உள்ள சத்துக்கள்:

நீர்=83%
மாவுப்பொருள்=15%
புரோட்டின்=0.6%
கொழுப்பு=0.4%
கால்சியம்=12 யூனிட்
தாது உப்புக்கள்=0.4%
இரும்புத் தாது=0.5 யூனிட்
நார்ச்சத்து=0.8%
வைட்டமின் C=30 யூனிட்
வைட்டமின் A=600 யூனிட்
வைட்டமின் B1=0.3 யூனிட்
வைட்டமின் B2=0.04 யூனிட்
நியாசின்=0.3 யூனிட்
இவை அனைத்தும் 100 கிராம் மாம்பழச்சாறில் உள்ள சத்துக்கள்.
 
மருத்துவக் குணங்கள்:
மனிதர்களுக்கு வைட்டமின் A தேவை தினசரி 5000 யூனிட்டுகள்.
மாம்பழம் அத்தேவையை நிறைவு செய்கிறது.
கண் பார்வை, மாலைக்கண் நோயை எதிர்க்கிறது.
வைட்டமின் C அதிகம் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி தருகிறது. நோஞ்சன் பிள்ளைகள் உடல் தெம்பும் எடையும் பெறுகின்றனர்.
இருதயம் வலிமை பெறும். பசி தூண்டும்.
உடல் தோல், நிறம் வளமை பெறுகிறது. முகத்தில் பொலிவு உண்டாகும். கல்லீரல் குறைபாடுகள் விலகும்.
புது இரத்த அணுக்கள் உற்பத்தியாகும். உடல் வளர்ச்சி பெறுகிறது.

>>>தேங்காயின் மருத்துவக் குணங்கள்..!

 
தேங்காயில் உள்ள சத்துக்கள் என்ன?

புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன.

தேங்காய் உள்பட தென்னை மரத்தின் வெவ்வேறு பாகங்களின் மருத்துவக் குணங்கள் என்ன?

1. தேங்காய்ப் பால் உடல் வன்மைக்கு நல்லது. தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது.

2.தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக்.

3.தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது.

4.மாதவிடாயின் போது ஏற்படும் அதிக உதிரப்போக்குக்கு, தென்னை மரத்தின் வேரிலிருந்து எடுக்கப்படும் சாறு நல்ல மருந்து. வெள்ளை படுதலுக்கு தென்னம் பூ மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

5.தேங்காய் எண்ணெய் தயாரிக்கும்போது கிடைக்கும் புண்ணாக்கோடு கருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

6.தேங்காய் சிரட்டையில் (வெளிப்புற ஓடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளைக் குணப்படுத்துகிறது.

7.மூல முளை, ரத்த மூலம் போன்றவற்றுக்கு தென்னங்குருத்திலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது. தேங்காய்ப் பால் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப்படுகிறது.

8. சேராங்கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போன்றவற்றுக்குத் தேங்காய்ப் பால் சிறந்த நஞ்சு முறிவு.

தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள்:

தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களுக்கு அருமருந்து.

1. தைலங்கள்;தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களைக் குணப்படுத்துகின்றன. நாள்பட்ட தீராத புண்களுக்கு மருந்தாகத் தரப்படும் மத்தம் தைலம், தோல் நோய்களுக்கான கரப்பான் தைலம், வாத வலிகளைக் குணப்படுத்தும் கற்பூராதி தைலம், தலைக்குப் பயன்படுத்தப்படும் நீலபிரிங்காதித் தைலம், சோரியாசிஸ் நோய்க்குப் பயன்படும் வெப்பாலைத் தைலம், தலையில் உள்ள பொடுகுக்கு மருந்தாகும் பொடுதலைத் தைலம் ஆகிய தைலங்களில் தேங்காய் எண்ணெய்யின் பங்கு முக்கியமானது.

2. எளிதில் ஜீரணமாகும்:
தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். குழந்தைகளுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் தேங்காய்ப் பாலில் உள்ளன. தேங்காய் பாலில் கசகச, பால், தேன் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல் மட்டுப்படும். பெரு வயிறுக்காரர்களுக்கு (வயிற்றில் நீர் கோர்த்தல்) இளநீர் கொடுத்தால் சரியாகும். தேங்காய்ப் பாலை விளக்கெண்ணெய்யில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அப்புறப்படுத்தும்.

3. வயிற்றுப் புண்கள்:
தேங்காய்ப் பாலில் காரத்தன்மை உள்ளதால், அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்களுக்கு (Ulcer) தேங்காய்ப் பால் மிகவும் சிறந்தது. உடலுக்குத் தேவையான அமீனோ அமிலங்கள் உள்ளன. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது.

தேங்காய் அல்லது தேங்காய் எண்ணெய்யை உணவில் சேர்த்தால் அது உடலில் உள்ள கொழுப்பைக் குறைப்பது எப்படி?

1. மீடியம் செயின் ஃபேட்டி ஆசிட் (Medium Chain Fatty Acid) தேங்காயில் அதிகமாக உள்ளது. உடலில் உள்ள கொழுப்புச் சத்தைக் குறைக்கும் காப்ரிக் ஆசிட் (Capric Acid)மற்றும் லாரிக் ஆசிட் (Lauric Acid) ஆகிய இரண்டு அமிலங்களும் தேங்காயில் போதிய அளவு உள்ளன. இதனால் தேங்காய் எண்ணெய் உரிய அளவு தினமும் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையும் என்று அண்மைக்கால ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளன.

2. வைரஸ் எதிர்ப்பு:தேங்காயில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட் ஆகியவை வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது. தேங்காயில் உள்ள மோனோ லாரின் (Mono Laurin) வைரஸ் செல் சுவர்களைக் கரைக்கிறது. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு வைரல் லோடைக் குறைக்கிறது. தேங்காயில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம். உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு (Metabolism)பெரிதும் உதவுகிறது. இதன் மூலம் சக்தியை அதிகப்படுத்துகிறது.

3. ஆண்மைப் பெருக்கி: முற்றிய தேங்காய் ஆண்மைப் பெருக்கியாகப் பயன்படுகிறது. அதில் உள்ள வைட்டமின் இ முதுமையைத் தடுக்கிறது. தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை ஊக்கப்படுத்துகிறது.
குழந்தை சிவப்பு நிறமாக... குழந்தைகள் நல்ல நிறமாக பிறக்கவேண்டும் என்பதற்காக குங்குமப்பூ சாப்பிடுவது வழக்கம். அதுபோல் குழந்தை நல்ல நிறமாகப் பிறக்க தேங்காய்ப் பூவை சாறாக்கி கர்ப்பிணிகளுக்குக் கொடுக்கும் வழக்கமும் உள்ளது.

இளநீரின் மருத்துவக் குணங்கள் என்ன?

1.மனித குலத்துக்கு இயற்கை தந்த பொக்கிஷம் இளநீர். சுத்தமான சுவையான பானம்.

2.இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன. இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் மருந்து இளநீர். வெப்பத்தைத் தணிக்கும். உடலில் நீர்ச் சத்து குறையும் நிலையில் அதைச் சரி செய்யும்.

3.ஜீரண சக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும். மேக நோய்களைக் குணப்படுத்தும். ஜீரணக் கோளாறால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்து. உடலில் ஏற்படும் நீர் - உப்புப் பற்றாக்குறையை (Electoral Imbalance) இளநீர் சரி செய்கிறது.

4. இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத் தன்மை வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்ல சத்து. ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருள்கள் இளநீரில் உள்ளன. அவசர நிலையில் நோயாளிகளுக்கு இளநீரை சிரை (Vein) மூலம் செலுத்தலாம்.

5.இளநீர் மிக மிகச் சுத்தமானது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப் பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருள்களை அகற்ற இளநீர் பயன்படுகிறது. இளநீரிலிருந்து தயாரிக்கப்படும் "ஜெல்' என்ற பொருள் கண் நோய்களுக்குச் சிறந்த மருந்து.

6.இளநீரில் அதிக அளவில் சத்துகள் உள்ளன. சர்க்கரைச் சத்துடன் தாதுப் பொருள்களும் நிறைந்துள்ளன. பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது.

7.இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். ஏதாவது ஆகாரம் எடுத்த பின்னரே சாப்பிடவேண்டும்.

>>>2013இல் உலக நாடுகள் பற்றிய 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்களை வெளியிட உள்ளது விக்கி லீக்ஸ்!

 
விக்கி லீக்' இணைய தளத்தின் நிறுவனர் ஜுலியன் அசாங்கே. ஆஸ்திரேலியாவை சேர்ந்த இவர் அமெரிக்காவின் ரகசிய ஆவணங்களை தனது இணைய தளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்கா அவரை கைது செய்து தண்டிக்க அவரை தேடி வந்தது.

இதை தொடர்ந்து இங்கிலாந்தில் தஞ்சம் அடைந்த அவர் மீது சுவீடனில் 2 பெண்களை கற்பழித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்காக சுவீடனுக்கு அனுப்ப இருந்த நிலையில் அவர் லண்டனில் உள்ள ஈகுவேடார் நாட்டின் தூதரகத்தில் கடந்த 6 மாதமாக தஞ்சம் புகுந்துள்ளார்.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிக்க ஈகு வேடார் தூதரகம் முன்பு ஏராளமானவர்கள் கூடினர். தூதரகத்தில் உள்ள பால்கனியில் தோன்றிய ஜுலியன் அசாங்கே தனது ஆதரவாளர்கள் மத்தியில் தோன்றி கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறினர். பின்னர் அவர்களிடம் பேசிய அவர், கற்பழிப்பு வழக்கில் என்னை சுவீடனுக்கு அனுப்ப இங்கிலாந்து முயற்சி மேற்கொண்டுள்ளது.

அது குறித்து பேச்சு நடத்த தயாராக இருக்கிறேன். ஏற்கனவே அமெரிக்கா குறித்த ரகசிய ஆவணங்கள் விக்கி லீக் வெளியிட்டது. அது போன்று அடுத்த ஆண்டில் (2013) உலக நாடுகள் பற்றிய 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்களை வெளியிடுவோம். அதில் சிரியா உள்பட பல நாட்டு ரகசியங்களும் அடங்கும் என்றார். அவரது இந்த பேச்சு சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

>>>சிக்கலான கிறுக்கல் விழுந்த சி.டி.களிலிருந்து தகவல்களை பெற !!!

 
இன்று கணினி வைத்திருப்பவர்கள் என்று இல்லாமல் அனைவருக்கும் இருக்கும் ஒரு பெரிய சிக்கல் என்ன வென்றால் சி.டி தாங்க சி.டி யில் நாம் நம்முடைய போடோக்களிலிருந்து, பிறந்தநாள் நிகழ்சிகள், திருமண நிகழ்சிகள், நமது தனிப்பட்ட விஷயங்கள் அவரைக்கும் பதிவு பண்ணி பாதுகாத்து வருகிறோம். ஆனால், இதிலும் ஒரு பெரிய சிக்கல் வந்து விடும்.

அதுதான் சி.டி.கள் மோசமாகி போவது அதாவது சி.டி களில் சிக்கல் ஏற்பட்டு விடும் உராய்வு, தூசு படித்தல் போன்ற பல காரணங்களால் சி.டியில் இருக்கும் தகவல்களை நாம் பெற முடியாத சூழல் ஏற்படும் போது தான் நாம் அதிகமாக பாதிக்கப்படிகிறோம். நாம் ஆசை ஆசையாக சேமித்து வைத்த வீடியோக்கள். அனைத்தும் வீணாகி போகும் பொது அதனால் நாம் அடையும் பாதிப்பு மிக மிக அதிகம்.

இப்படி பட்ட சிக்கல் சி.டி.க்களில் இருந்து தகவல்களை பெறும் வழிமுறைகளைப் பற்றி இன்றைக்கு பார்க்க போகிறோம்.வேறொரு சி.டி.யில் இருந்து தகவல்களை, வீடியோக்களை காப்பி செய்து கொண்டு வந்து நமது கணினியில் போட்டு பார்த்தல்,அல்லது நமது சி.டி.க்களை போட்டு பார்த்தால் cannot read from the source destination என்று கணினியில் பதில் வரும்.சி.டி.யில் நமக்கு தெரியாமல் ஏற்பட்டிருக்கும் கீறல்கள், பதிந்திருக்கும் தூசுக்களால் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

எனவே, முதலில் மெல்லிய துணி கொண்டு சி.டி.க்களை உள்ளே இருந்து வெளிப்புறமாக துடைக்க வேண்டும். சோப்பு கலந்த நீரில் போட்டு கழுவவும் செய்யலாம். அதன் பிறகும் சிக்கல்கள் ஏற்பட்டால் கீழே இருக்கும் வழிமுறைகளை கையாளலாம்.

நீங்கள் இந்த( http://isobuster.com/ ) இணையத்தளம் வழங்கும் மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். பிறகு பிறகு மென்பொருளின் ஆய்வுக்கு சி.டி.யை உட்படுத்த வேண்டும். அப்போது இந்த மென்பொருள் பாதிக்கப்பட்ட சி.டி.யிலுள்ள தகவல்களை பெற்று தரும். அல்லது அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பின் பாதிக்கப்பட்ட பகுதிகளை மட்டும் விட்டுவிட்டு மற்ற பகுதிகளில் உள்ள தகவல்களை நமக்கு பெற்று தரும்.

இதன் மூலம் நாம் சிக்கல் சி.டி.களில் இருந்தும் தகவல்களை பெறலாம். நண்பர்களே இன்னும் சிக்கல் விழுந்த சி.டி.க்களை தூக்கி வீசாமல் தகவல்களை பெற இந்த வழியில் முயற்சித்து பாருங்கள்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...