கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ஸ்டாலினால் தி.மு.கவைக் காப்பாற்ற முடியுமா? - ஓ பக்கங்கள்-ஞாநி

“அடுத்த ஆட்சியை தி.மு.க அமைப்பதை  விரும்புகிறேனா என்றால் நிச்சயம் இல்லை.  தி.மு.க, அ.இ.அ.தி.மு.க இரு கட்சிகளுமே மீண்டும்  ஆட்சிக்கு வருவதை நான் விரும்பவில்லை. அதே சமயம் மக்கள்  தி.மு.கவை ஆள்வதற்குத் தேர்ந்தெடுப்பார்களானால், தி.மு.கவின் முதலமைச்சராக ஸ்டாலின் வருவதையே நான் விரும்புகிறேன். அப்பாவின் எல்லா பாவங்களுக்கும் இல்லாவிட்டாலும் பல  பாவங்களுக்குப் பரிகாரம் செய்யக்கூடியவராக செயல்படும் வாய்ப்புள்ள ஒரே வாரிசு அந்தக் குடும்பத்தில் அவர் ஒருவர்தான்.”
ஆகஸ்ட் 2010ல் நான் எழுதிய இந்த வரிகளைத்தான் இப்போதும் திரும்பச் சொல்ல விரும்புகிறேன். ஒரு வழியாக கலைஞர் கருணாநிதி தான் ஓய்வெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதைத் தாமதமாகவேனும்  உணர்ந்து, அடுத்த தி.மு.க தலைவர் பதவிக்கு ஸ்டாலினைத்தான் முன்மொழிவேன் என்று பகிரங்கமாக உறுதியாக சொல்லிவிட்டது எனக்கு மகிழ்ச்சியைத்தருகிறது. இதை அவர் 1996ல் தி.மு.க தேர்தலில் ஜெயித்தபோதே செய்திருக்க வேண்டும். அப்போதே அவருக்கு வயது 72. ஸ்டாலினுக்கு அன்று வயது 43. கருணாநிதி 45 வயதில் முதலமைச்சரானவர். அந்த வாய்ப்பை அன்றே  மகனுக்குக் கொடுத்துவிட்டு தான் கட்சித் தலைவர் பதவியை மட்டும் வைத்திருந்தால், மூப்பனார் மறுத்ததால்,  தேவ கவுடாவுக்கு சென்ற பிரதமர் பதவியைக் கூடக் கலைஞர்  அடைந்திருக்கலாம்.
ஸ்டாலினை தி.மு.கவின் தலைவராக்குவதற்கோ, முதலமைச்சராக்குவதற்கோ  தி.மு.க கட்சிக்குள்ளிருந்து பெரும் எதிர்ப்பு எப்போதும் வந்ததில்லை. ஒரே எதிர்ப்பு வைகோவுடையது. அதைக் கையாளத் தெரியாமல் கலைஞர் கையாண்டதில் வைகோவை ஸ்டாலினுக்கு சமமான தலைவராக்காமல் தனக்கு சமமான தலைவர் அந்தஸ்துக்கு உயர்த்திவிட்டார். (அந்த வாய்ப்பைக் கையாளத் தெரியாமல் வைகோவும் வீணடித்தது இன்னொரு தனிக் கதை.)அப்படியே ஸ்டாலினுக்கு சம்மான தலைவர்தான் ஜெயலலிதா  என்று ஆக்கும் வாய்ப்பையும் நழுவவிட்டு தன்னை ஜெயலலிதாவுக்கு சம்மாக தானே கலைஞர் குறுக்கிக் கொண்டார்.
ஸ்டாலினுக்கு வந்த எதிர்ப்பெல்லாம் கருணாநிதியின் குடும்பத்துக்குள்ளேயிருந்து அழகிரி வடிவில் வந்த எதிர்ப்பு மட்டும்தான். கட்சித் தலைவராக பல சிக்கல்களை சமாளிக்கத் தெரிந்த கலைஞர் குடும்பத் தலைவராக எப்போதுமே ஒரு ஃபெயிலியர்தான். அவரது மருமகன் முரசொலி மாறன் ஒரு மிடில் க்ளாஸ் வங்கி அதிகாரி குடும்பதில் செய்வது போல தன் பிள்ளைகளை நன்றாகப் படிக்கவைத்து பத்திரிகைத்தொழிலைக் கற்றுக் கொடுத்து தொழிலதிபர்களாக வருவதற்கு ஊக்குவித்தது போல கருணாநிதி தன் பிள்ளைகளை வளர்க்கவில்லை. முத்து முதல் அழகிரி, ஸ்டாலின், தமிழரசு வரை எல்லாரையும் தன் அரசியல் பணிக்கு ஊழியர்களாகப் பயன்படுத்தியதைத் தாண்டி அவரால் சிந்திக்க முடியவில்லை.
எம்.ஜிஆருக்கெதிராக முத்துவை நடிகனாக வளர்த்து எம்.ஜிஆரை ஒழித்துக் கட்ட முயற்சித்தார். முத்துவின் பலம் நடிப்பு அல்ல. இசைதான். பாடுவதுதான். தன் தாய்மாமா இசைச் சித்தர் சிதம்பரம்  ஜெயராமனைப் போல கர்நாடக இசையில் பேர் எடுக்காவிட்டாலும், முத்து சினிமா இசையில் ஒரு பி.பி. ஸ்ரீநிவாஸ், ஏ.எம்.ராஜா,எஸ்.பி.பி,  வரிசையில்  போல வந்திருக்க முடியும்.  கலைஞர் அவரை எம்ஜிஆரின் க்ளோனாக்க முயற்சித்துத் தோற்றதில் அவர் வாழ்க்கையே வீணாகிப் போயிற்று.
அந்த காலகட்டத்தில் ஸ்டாலினை விட மூத்தவரான அழகிரியோ, இளையவரான தமிழரசோ அரசியலில் ஆர்வம் காட்டவில்லை. சொந்தமாக தொழில் செய்யும் முயற்சிகளில் இருந்தார்கள். ஸ்டாலின்தான் மாணவராகவே கட்சியில் இறங்கி வேலை செய்தவர். அதனால்தான் 1976ல் நெருக்கடி நிலையின்போது மிசாவில் கைது செய்யும்போது கலைஞர் குடும்பத்தில் அவரை மட்டுமே கைது செய்தது அன்றைய அரசியல் எதிரியான காங்கிரஸ்.
ஸ்டாலின்தான் அடுத்த கட்டத்தில் கலைஞரின் இடத்துக்குக் கட்சியில் வரக்கூடியவர் என்ற நிலை எண்பதுகளிலேயே வந்துவிட்டது. அதை முரசொலி மாறனும் ஆதரித்தார். அவர் தன் மகன்களை கட்சிப் பதவிகளுக்குக் கொண்டு வர முயற்சித்ததே இல்லை.பேராசிரியர் அன்பழகனும் ஸ்டாலினை ஆதரித்தார். கட்சிக்குள் ஸ்டாலின் ஆதரவு நிலைதான் பெரும்பான்மை.
ஆனால் சொந்த தொழில் முயற்சிகளில் தோற்றுப் போன அழகிரி அரசியலுக்குள் தாமதமாக நுழைந்தார். குடும்பத்துக்குள் இருந்துவந்த இந்த நெருக்கடியைத்தான் கலைஞரால் சுமார் 15 வருடங்களாக சமாளிக்க முடியாமல் இருந்திருக்கிறது.  அழகிரி அரசியலுக்குள் நுழையாமல் இருந்திருந்தால் கனிமொழி கூட நுழையாமல் இருந்திருக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லலாம். கலைஞரின் இலக்கிய கலாசாரத்துறை ஆர்வங்களுக்கு குடும்பத்தில் ஒரே வாரிசான கனிமொழி அதே துறையில் தொடர்ந்திருக்கக் கூடும். அழகிரிக்கு அரசியல் செல்வாக்கு, கட்சி, ஆட்சி பதவிகள் தரப்படவேண்டுமென்று கலைஞரின் ஒரு குடும்பத்துக்குள்ளிருந்து நிர்பந்தங்கள் தொடங்கியபிறகு கனிமொழிக்காகவும் இன்னொரு குடும்பத்தின் நிர்ப்பந்தங்களை கலைஞர் சந்திக்க வேண்டியதாயிற்று.
தங்கள் பிள்ளைகளுக்காக அன்பால் செய்த நிர்பந்தங்கள் இரு பிள்ளைகளுக்கும் உண்மையில் பயன் தரவில்லை. தி.மு.கவின் மத்திய அமைச்சர்களிலேயே கட்சிக்கு மோசமான பெயரை டெல்லியில் சம்பாதித்துக் கொடுத்திருப்பது அழகிரிதான். நிர்வாகத் திறமையற்றவர் என்று அவர் பழிக்கப்படுவதுதான் மிச்சம். கனிமொழியோ ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்குப் போக வேண்டியதாயிற்று.
குடும்ப நிர்ப்பந்தங்களை நம்பியிராமல் சொந்த அரசியல் செயல்பாட்டால் கட்சிக்குள் தன் செல்வாக்கைப் பெருக்கிக் கொண்டு இன்று இருக்கும் இடத்தை அடைந்த கலைஞரின் ஒரே பிள்ளை ஸ்டாலின்தான். ஆனால் கட்சித் தலைவர் கலைஞர் அவரை ஆதரித்தபோதும் குடும்பத் தலைவர் கருணாநிதியின் பலவீனங்களால் தனக்கான இடத்தை அடைய முடியாமல் ஸ்டாலினுக்கு சுமார் 14 வருடங்கள் வீணாகியிருக்கின்றன.
எழுபதுகளிலும் எண்பதுகளிலும் ஸ்டாலினுக்குப் பொது மக்களிடம் பெரிய நற்பெயர் இருந்ததாக சொல்ல முடியாது.  பணக்கார வீட்டுப் பிள்ளைகளின் ஆடம்பரமும், ஷோக்கும் அதிகார மையத்தில் இருப்பதால் வரும் அகங்காரமும் உடையவராகவே அவர் அன்று  கணிக்கப்பட்டார். அப்போது அவர் தன்னை டிவி நடிகராக இலக்கிய கலையார்வம் உடையவராக காட்ட எடுத்த முயற்சிகளெல்லாம் படு தோல்வி அடைந்தன.
ஆனால் ஸ்டாலின் அதே பாதையைத் தொடராமல், வெளியே வந்து தப்பித்துவிட்டார்.  தொண்ணூறுகளின் இறுதியில் சென்னை மேயர் பதவிக்கு வந்தபோது புதிய இமேஜ் அவருக்கு உருவாயிற்று. நகரப் பிரச்சினைகளில் நேரடி அக்கறை காட்டி நடுத்தர வர்க்கத்தின் கவனத்தைக் கவர்ந்து நல்ல நிர்வாகியாக இவர் இருப்பார் என்ற நம்பிக்கையை அப்போது அவர் ஏற்படுத்த முயற்சித்தார்.
இப்போது ஒரு வழியாக அவரைத்தான் தி.மு.கவின் அடுத்த தலைவராகத் தானே முன்மொழிவேன் என்று கலைஞர் சொல்லிவிட்டதால், அவர்தான் இனி தி.மு.க ஆட்சிக்கு வந்தால் முதல்வராகவும் இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. உட்கட்சி ஜனநாயகம் உள்ள இயக்கம், ஸ்டாலினை எதிர்த்து யாரும் போட்டியிடலாம் என்றெல்லாம் கலைஞரும் அன்பழகனும் சொன்னாலும்,  தி.மு.கவில் இதுவரை கலைஞரை எதிர்த்து யாரும் வேட்பு மனு கூட தாக்கல் செய்ததில்லை. அதே நிலைதான் தொடரும்.
அழகிரி எதிர்த்துப் போட்டியிட்டால், கட்சி இன்று இருக்கும் நிலையில் அவருக்குத்தான் அது அவமானமாக முடியும். அந்தத் தப்பை அவர் செய்ய மாட்டார் என்று எதிர்பார்க்கலாம்.  ஸ்டாலினுடன் சமரசம், அல்லது அதிரடியாக் அ.தி.மு.கவுக்குப் போய் ஜெயலலிதாவின் வாரிசாக இடம் பிடிக்க முயற்சிப்பது என்ற இரு வழிகளைத் தவிர அவருக்கு வேறு சாய்ஸ் இனி இல்லை. அழகிரி செகண்ட் சாய்சை எடுப்பதை, கலைஞருக்குப் பின் தி.மு.கவை பலவீனப்படுத்த விரும்பும் டெல்லி காங்கிரஸ் தலைமையும் உளவுத்துறையினரும் நிச்சயம் விரும்புவார்கள். எழுபதுகளில் எம்.ஜி.ஆரைப் பயன்படுத்திய மாதிரி இப்போது அழகிரியைப் பயன்படுத்த முடியுமா என்று முயற்சிக்கலாம். ஆனால் அழகிரி எம்.ஜி.ஆர் அல்ல. எனவே சினிமாவில் முத்துவுக்கு ஏற்பட்ட கதியே அவருக்கும் அரசியலில் ஏற்படும்.  குடும்பத்துக்குள் சமரசம் என்பதுதான் ஒரே தீர்வு.
கலைஞர் இனி தன் முடிவை வீட்டு நிர்ப்பந்தங்களால் மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. இதுவரை தன் மரணத்தைப் பற்றி பேசாத அவர் முதன்முறையாக இப்போது பேசியிருக்கிறார்.  அடுத்த உட்கட்சி தேர்தல் எப்போது? அதில் ஸ்டாலினை முன்மொழிவாரா, யாரேனும் எதிர்த்தால் என்ன செய்வார் என்ற நிருபர்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லும்போது கட்சி தேர்தல் எப்போது நடக்கிறதோ “அப்போது நான் உயிரோடு இருந்தால்” ஸ்டாலினையே முன்மொழிவேன் என்று சொல்லியிருக்கிறார்.
தன் காலம் முடிவதற்கு முன் இந்த பிரச்சினைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்துவிட்டே தான் விடை பெறவேண்டும் என்ற மன உறுதி அவருக்கு இப்போது வந்திருப்பதையே இது  காட்டுகிறது.
எனவே தி.மு.கவின் அடுத்த தலைவர் ஸ்டாலின்தான். அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்தால் அடுத்த முதல்வரும் அவர்தான்.
இப்போது முக்கியமான கேள்விக்கு வருவோம். ஸ்டாலினால் தி.மு.கவைக் கட்டிக் காப்பாற்ற முடியுமா?
“தி.மு.க முடிந்து போன கதை” என்று அண்மையில் ஜெயலலிதா தன் கட்சிப் பொதுக் குழுவில் அலட்சியமாக அறிவித்தார். அது அவரது ஆசை. ஆனால் அவ்வளவு சுலபத்தில் தி.மு.க முடிந்த கதையாகாது. வலுவான கட்சி அமைப்பும் மீடியா பலமும், சுமார் 25 சதவிகித ஓட்டு ஆதரவும், சமூகத்தில் காலத்தின் தேவையால் உருவான சரித்திரப் பின்னணியும் உள்ள அமைப்பு அது.
அண்ணா 1949ல் தி.மு.கவை ஆரம்பித்தபோது அவருக்கு வயது 40தான். கட்சியின் அடுத்த நிலைத் தலைவர்கள் பெரும்பாலோரின் வயது 30 லிருந்து 40க்குள் இருந்தது. அத்தனை இளமையான இயக்கமாக அது தொடங்கியது. ஆனால் 88 வயது வரை பதவியை விட்டு இறங்க மறுத்த பிடிவாதத்தால், கலைஞர் இன்று அந்த கட்சியை முதியோர் இல்லமாக மாற்றிவிட்டார். கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர்கள் வயது 75. அடுத்த நிலையினருக்கு வயது 60க்கு மேல். ஸ்டாலின் தலைவராகும்போது அவருக்கும் வயது 60ஐக் கடந்துவிட்டிருக்கும்.
இன்றைய 20லிருந்து 35 வயது வரையிலான இளைஞர்களைக் கட்சிக்குள்ளும் அதற்கு ஆதரவாகவும் ஈர்க்க ஸ்டாலினால் இயலுமா என்பதே கேள்வி.  இன்றைய தமிழ் இளைஞர்களில் பெரும்பாலோர் ஈழத் தமிழர் பிரச்சினையில் தி.மு.க பெரும் துரோகம் செய்த கட்சி என்ற கருத்திலேயே இருக்கிறார்கள். நடு வயதினர் ஊழலை விஞ்ஞானப்பூர்வமாகச் செய்ய எல்லா கட்சிகளுக்கும் வழிகாட்டிய கட்சி என்றே கருதுகிறார்கள்.
இந்தச் சூழலில் கடுமையான மாற்றங்களைச் செய்யவும் தன்னையும் கட்சியையும் சுயவிமர்சனம் செய்துகொள்ளவும் ஸ்டாலின் முன்வந்தால்தான் தி.மு.கவை பழையபடி இளைஞர் கட்சியாக, கோட்பாடுகள், லட்சியங்களுக்கான இயக்கமாகப் புதுப்பிக்கமுடியும். அதற்கான ஆற்றல் அவரிடம் இருக்கிறதா?
கலைஞரிடம் இருக்கும் பல ஆற்றல்கள் – பேச்சுத் திறமை, எழுத்துத் திறமை, அரசியல் வீயூகம் கட்டுவது போன்றவை ஸ்டாலினிடம் இல்லை. அதே போல கலைஞரின் பல பலவீனங்களும் ஸ்டாலினுக்கு இல்லை. வாராவாரம் பாராட்டு விழாக்கள், சினிமா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது, பத்திரிகை நிருபர்களிடம் எரிந்து விழுவது, இதழாசிரியர்களுக்கு போன் செய்து கடிந்துகொள்வது, நேரடி பதில் சொல்லாமல் மழுப்புவது, வார்த்தை விளையாட்டு எல்லாம் இல்லை. கலைஞர் அளவு புகழாரம், ஆடம்பர கட் அவுட் கலாசாரம் ஆகியவற்றில் ஸ்டாலின் அதிக ஈடுபாடு காட்டவில்லை. கலைஞர் காலத்துக்குப் பின் அதிலிருந்து முற்றாக வெளியே வந்தால் கூட நல்லது.
எம்.ஜி.ஆர் காலத்திலேயே தொடங்கி ஜெயலலிதா காலத்தில் உச்சத்துக்கு சென்ற கலைஞரின் விரோத பாவம், நேரில் சந்திப்பதைத் தவிர்ப்பது போன்றவை ஸ்டாலினிடம் இல்லை. நேரில் ஜெயலலிதாவை சந்திக்க அவர் தயங்கியதில்லை.
தி.மு.க என்ற பழைய ஜமீன் வீடு ஸ்டாலின் கைக்கு வந்துவிட்டது. அதை ஒட்டடை அடித்து, சுத்தப்படுத்தி விரிசல்களுக்கு ஒட்டு போட்டு கூரை ஓட்டைகளை அடைத்து வைத்து பயன்படுத்தப் போகிறாரா, அல்லது இது உதவாது, இது இருக்கும் திராவிட இயக்க சுயமரியாதை மனை மட்டும்தான் தேறும், முற்றாக இடித்துவிட்டு புது வீடாகக் கட்டுவோம் என்று கட்டப் போகிறாரா என்பது ஸ்டாலின் கையில்தான் இருக்கிறது.
கல்கி 12.1.2013

>>>ஆலிஸ் - லூயிஸ் கரோல்

 
கதை கேட்பது எல்லாருக்கும் பிடித்த விஷயம் இல்லையா? அதிலும் நமக்கு ரொம்பவே பிடித்த ஒரு கதை, கேட்க கேட்க சலிப்பே தராத அந்த கதை தான் 150 வது வருடத்தில் அடியெடுத்து வைக்கபோகிறது. எந்த கதை அது? வாட்ச் கட்டி கொண்டு ஓடும் முயல், சீட்டு கட்டு சிப்பாய்கள், கிடு கிடு பள்ளங்கள், பேசும் மிருகங்கள், கண்ணீரில் உண்டாகும் வெள்ளம்...

இப்போது ஞாபகம் வந்துடுச்சா? நம்ம செல்லத் தோழி ஆலிஸின் அற்புத உலகமே அது. இந்தக் கதையை எழுதிய லூயிஸ் கரோல் ஒரு தேவலாயத்தில் ஃபாதராக இருந்தார். அவர் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலை.யில் கணித விரிவுரையாளராக இருந்து இருக்கிறார். அவர் இறுதி வரை திருமணமே செய்து கொள்ளவில்லை. ஆனால் குட்டிஸ் என்றால் அவருக்கு கொள்ளை ஆசை. அதனால் அவர்களுக்கு பிடித்த மாதிரி கதை சொல்வதை வழக்கமாக வைத்து இருந்தார்.

அதிலும் ஆலிஸ் லிடெல் என்கிற சுட்டி அவருக்கு ரொம்பவே செல்லம். ஆலிஸ் மற்றும் அவளின் இரு சகோதரிகள் என மூவரையும் ஒரு குட்டி படகில் உட்கார வைத்து அழகான ஆற்றில் அப்படியே சவாரி செய்வார் அவர். இரண்டரை மணி நேரம் படகில் போகிறபொழுது ஆலிஸ் ஏகத்துக்கும் படுத்தி எடுத்த விடுவாள். ஆலிஸின் வார்த்தைகளிலே அதை கேட்போம்...

"எப்போதும் வெயில் சுள்ளென அடிக்கிற மதிய வேளையில்தான் எங்கள் பயணம் இருக்கும். அங்கிளை கதை சொல்ல சொல்லி நச்சரிப்போம். அவரும் விதவிதமாக சொல்வார். நாங்கள் கண்கள் விரய கேட்டுகொண்டே இருக்கும் பொழுது, "இன்னைக்கு இது போதும்... வீட்டை நெருங்கி விட்டோம் என முடித்து விடுவார்" அப்படி முடிக்கிற இடம் ரொம்பவே சுவாரசியமான கட்டமாக இருக்கும். ஆனால் பின் மீண்டும் அதை கேட்கலாம் என அடுத்த சவாரியில் முயன்றால் தூங்குகிற மாதிரி நடித்து ஏமாற்றி விடுவார். எழுப்பினால் எழுந்திருக்கவே மாட்டார் ! ஆனால் கதைகள் மாறி கொண்டே இருக்கும்," என்கிறாள்.

கரோல், ஆலிஸ் இன் அற்புத உலகம் கதையை முதலில் சொல்கிற தருணங்களில் அதை நூலாக ஆக்க வேண்டும் என நினைக்கவில்லை. ஆலிஸ் அக்கதைகளை எழுதித்தர சொல்ல கிறிஸ்துமஸ் பரிசாக அவற்றை தொகுத்து தந்தார். கணித பேராசிரியரான இவரின் கதையில் வரும் வரிகளே சார்பியல் தத்துவத்தை ஐன்ஸ்டீன் உருவாக்க ஊக்கம் தந்ததாம். நல்ல கவிஞர், புகைப்பட நிபுணர் என பல முகம் இருந்தாலும், குழந்தைகளின் கதைசொல்லியாக அவர் பெருமைப்பட்டார்.

"ஆலிஸின் கனவுகளின் தோளின் மீது ஏறிக்கொண்டு நான் கதை சொன்னேன். அது மறையும் சூரியன் போல அன்றன்றைக்கு மறைந்து போகும்" என சொன்ன அவரின் நினைவு நாள்  - ஜன.14.

>>>விக்கிப்பீடியா தினம்!

 
ஜன.15: அறிவை எளிய மக்களுக்கும் இலவசமாக திறந்துவிடுகிற சாதனையைச் செய்த விக்கிப்பீடியா பிறந்த தினம் இன்று. என்சைக்ளோபீடியாதான் அறிவுக்களஞ்சியம் என பலருக்கு தெரியும்; ஆனால், அந்த மொழி புரிந்துக்கொள்ள கடினமாக, எல்லாருக்கும் கிடைப்பதாக இல்லாமல் இருந்த குறையை இது போக்கியது.

கடந்த 2001 இல் ஜிம்மி வேல்ஸ் மற்றும் லாரி சாங்கர் தொடங்கிய தளமிது. எந்த விளம்பரங்களும் இல்லாமல் அறிவை எல்லாரும் பகிர்ந்து கொள்வதே இதன் நோக்கம். ஒரு பக்கத்தை நீங்கள் நான் யார் வேண்டுமானாலும் துவங்கலாம், அதை மேலும்மேலும் தகவல்களை சேர்த்து விரிவுபடுத்தலாம்; சந்தேகம் வருமென்றால் அங்கேயே கேள்விகள் எழுப்பலாம். ஒரு ரூபாய்கூட பெறாமல் இது செயல்படுத்தப்படும் என்கிற கான்செப்டில் தொடங்கியது இது.

இன்றைக்கு 285 மொழிகளில் ஒரு லட்சம் பேரின் உழைப்போடு 24 மில்லியன் கட்டுரைகள் எளிய நடையில் புரிந்துகொள்ளும் வகையில் இலவசமாக கிடைக்கின்றன. இதன் தாக்கத்தில் பிரிட்டானிக்கா என்சைக்ளோபீடியா தன் அச்சுப் பதிப்பை நிறுத்திக்கொண்டது. விக்கி என்றால் ஹவாய் மொழியில் வேகமான என்று அர்த்தம். ஆமாம் வேகமான தகவல்களை இலவசமாக கொண்டுபோய் சேர்க்கிற வேலையை செய்திருக்கும் இந்தக் கட்டுரைகூட விக்கிபீடியா உதவியுடனே அடிக்கப்பட்டது. என்றாலும், விக்கிப்பீடியா தரும் தகவல்களை சரிபார்த்து கொள்ளுதல் நல்ல அணுகுமுறையாக இருக்கும்.

>>>மார்டின் லூதர் கிங்...

 
மார்டின் லூதர் கிங்... இணையற்ற போராளி. வெள்ளையர்கள் அமெரிக்காவை பிடித்த பின்பு அங்கே வேலை செய்ய எண்ணற்ற ஆப்ரிக்க மக்களை கொண்டுவந்தனர். அவர்களை மிகவும் கொடுமைப்படுத்தினர். ஆடு, மாடுகளை விற்பதை போல அடிமை விற்பனை பல இடங்களில் இருந்தது. கொல்லபட்டாலும் கேட்பதற்கு ஆளில்லாமல் இருந்த அவர்களுக்கு அடிமைமுறையில் இருந்து விடுதலை கொடுத்து லிங்கன் கொடுத்த அறிவிப்பில் நாடே இரண்டுபட்டது. உள்நாட்டுப்போருக்கு பின் ஒன்று சேர்ந்தது. சட்டரீதியாக அவ்வாறு சொல்லப்பட்டாலும் கொடுமைகள் தொடர்ந்தன. அப்பொழுது தான் மார்டின் லூதர் கிங் வந்தார்.

ஆயுதம் ஏந்தி போராடிய தன்னின மக்களை அன்பாயுதம் ஏந்த சொன்னார். நன்னெறியை கேடயமாக கொள்ள சொன்னார் கருப்பு கேவலம் என்கிற எண்ணம், பலூன் கடைகாரரின் நிறத்திற்கும் சாதனைக்கும் சம்பந்தமில்லை என்கிற சொல்லில் பறந்தது. பாதிரியாராக மாறிய இவர் இயேசுவின் போதனைகளை அமெரிக்காவின் மனசாட்சியை எழுப்ப பயன்படுத்திக் கொண்டார். அன்பால் யாவும் சாத்தியம் என முழங்கினார்.

அவரின் எனக்கொரு கனவிருக்கிறது பேச்சை படித்து பாருங்கள் மெய்சிலிர்த்து போவீர்கள். தன் வீட்டில் குண்டுவீசப்பட்ட பொழுதுகூட அன்பையே போதித்தவர். ரோசா பார்க்ஸ் எனும் கறுப்பின பெண்ணுக்கு பேருந்தில் உட்கார இடம் மறுக்கப்பட்ட பொழுது ஒரு வருடம் முழுக்க அத்தனை கறுப்பின மக்களையும் அலபாமா மாகாணத்தில் பேருந்தில் போகாமல் நடந்து அல்லது டேக்ஸியில் போக வைத்து உரிமையை மீட்டெடுத்தவர்.

எங்கேயும் எப்பொழுதும் கொல்லப்படலாம் என தெரிந்தும் தீர்க்கமாக வெள்ளை வெறியர்களில் அன்பை விளைவிக்க முயன்ற அன்புக்காரர். குண்டுகள், தாக்குதல்கள் என எல்லாமும் சுற்றி தாக்கிய பொழுதும் "என் தலையில் இரண்டு காளைகள் மோதுகின்றன - ஒன்று அன்பு; இன்னொன்று அராஜகம் - இதில் எது ஜெயிக்கிறது தெரியுமா? எதற்கு நான் அதிக உணவிடுகிறேனோ அதுவே ஜெயிக்கிறது! அன்பே போதும் எனக்கு!" என்றார் முப்பத்தைந்து வயதில் நோபல் பரிசை பெற்றவர் அவர். அந்த பணத்தை முழுக்க கறுப்பர்களின் உரிமை மீட்டெடுப்பு பணிகளுக்கு செலவு செய்தார். இறுதியில் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியானார். அவரின் கனவை அத்தேசம் நிறைவேற்றியது அதைவிட பெரிய மரியாதை வேறென்ன இருக்க முடியும்?

( ஜன.15 : மார்டின் லூதர் கிங் பிறந்தநாள்.)

>>>மே மாதத்தில் சேர்க்கை: மெட்ரிக் பள்ளிகளுக்கு உத்தரவு

தமிழகத்தில், அனைத்து மெட்ரிக் பள்ளிகளிலும், 2013-14ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை, மே மாதம் முதல் மேற்கொள்ள வேண்டும் என, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் வசுந்தராதேவி (பொறுப்பு) உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகத்திற்கு உட்பட்டு செயல்படும் அனைத்து மெட்ரிக் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 2013-14ம் கல்வியாண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை, மே மாதத்திற்கு முன் மேற்கொள்ளக் கூடாது.
சில பள்ளிகள் டிசம்பர் முதல் சேர்க்கை நடத்துவதாக தெரிகிறது. இதுகுறித்து ஏற்கனவே அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகங்கள், இந்த உத்தரவை செயல்படுத்த வேண்டும்.
விதிமுறைக்கு முரணாக செயல்படும் பள்ளிகள் மீது நேரடி கவனம் செலுத்தி ஆய்வு மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அலுவலகத்திலும் இதுதொடர்பான அறிவிப்பு வைக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>>காற்று இல்லாமலே மின்சாரம் தயாரிப்பு: கிராமத்து இளைஞர் அசத்தல்

"காற்று இருந்தால்தான், காற்றாலை இயங்கும். காற்று இல்லாமலே தன்னால் காற்றாலையை இயக்கி மின்சாரம் தயாரிக்க முடியும்," என பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள கிராமத்து இளைஞர் கூறுகிறார்.
சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரத்தை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி விஸ்வநாதன், 38. இவர், பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். காற்றாலையை, காற்று இல்லாமல் இயக்க முடியும் என்பதை, இவர், சமீபத்தில் கண்டுபிடித்துள்ளார். தான் கண்டுபிடித்த தொழில் நுட்பத்தை, சென்னை கிண்டியில், மத்திய அரசுக்கு சொந்தமான காப்புரிமை நிறுவனத்தில் பதிவு செய்து, காற்றாலை செயல்படுவது குறித்து விளக்கமளித்துள்ளார். இதற்காக, இவர் காப்புரிமை பெற்றுள்ளார்.
இரண்டு ஆண்டாக இதற்கான முயற்சியில் ஈடுபட்டதாக கூறும் அவர், மேலும் கூறியதாவது: சேலம் மாவட்டம், மேச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு வரை படித்தேன். குடும்ப சூழ்நிலை காரணமாக, மேலும் படிக்க முடியாமல், விசைத்தறி தொழிலில் ஈடுபட்டு வருகிறேன்.
தற்போது காற்றாலையை, காற்று இல்லாமலே இயக்க முடியும் என கண்டுபிடித்துள்ளேன். இரண்டு ஆண்டாக இதற்காக முயற்சி எடுத்து, அதில் வெற்றியும் பெற்றுள்ளேன். நாகர்கோவில், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
காற்று வீசும் காலத்தில் மட்டுமே, காற்றாலையில் இருந்து, மின்சாரம் பெற முடியும். மற்ற காலங்களில் காற்றாலையில் உள்ள இறக்கைகள் சுற்றாது. தற்போது, காற்றாலையில், மூன்று இறக்கைகள் உள்ளது. என்னுடைய தொழில்நுட்பப்படி, காற்றாலையில் நான்கு இறக்கைகள் பொருத்த வேண்டும். மேலும், கீழும் உள்ள இரண்டு இறக்கையின் நடுவில், ஹீலியம் வாயுவை நிரப்ப வேண்டும்.
காற்றாலையின் இரு பக்கமும் உள்ள இரண்டு இறக்கைகளின் அளவு ஒரே சீராக இருக்கும்படி வைத்துக் கொள்ள வேண்டும். ஹீலியம் வாயு நிரப்பப்பட்டுள்ள ஒரு இறக்கையில் இருந்து, கீழுள்ள இறக்கைக்கு வாயு செலுத்தப்படும் போது, எடை தாங்காமல், கீழுள்ள இறக்கை மேல் நோக்கி தள்ளப்படும். இதனால், இறக்கைகள் ஒன்றன் பின் ஒன்றாக சுழலத்தொடங்கும்.
ஹீலியம் வாயு, தானியங்கி சென்சார் மூலம், இரண்டு இறக்கைகளிலும் மாறி மாறி செலுத்தப்படுவதால், இறக்கைகள் தொடர்ந்து சுழன்று கொண்டே இருக்கும். இதனால் காற்று இல்லாமலும், மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். ஹீலியம் வாயு ஆபத்து இல்லாதது.
நான் கண்டுபிடித்த தொழில் நுட்பத்தை, சென்னை, கிண்டியில் உள்ள மத்திய அரசின் காப்புரிமை நிறுவனத்தில், வரை படங்களின் மூலமும், எழுதியும் காண்பித்தேன். என் கண்டுபிடிப்புக்கு, மத்திய அரசு காப்புரிமை கொடுத்துள்ளது. ஓராண்டுக்குள், நான் அவர்களுக்கு செய்முறை பயிற்சி அளித்து காட்ட வேண்டும்.
நான் விசைத்தறி தொழிலாளியாக இருப்பதால், போதிய பணம் என்னிடம் இல்லை. காற்றாலை அதிபர்கள் என்னை நாடினால், காற்றாலையை காற்று இல்லாமல் இயக்கும் முறையை விளக்கிக் காட்டுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

>>>இலவச பொருட்களை பள்ளிகளுக்குஅனுப்ப ஒதுக்கிய நிதியில் முறைகேடு

இலவச பொருட்களை பள்ளிகளுக்கு அனுப்ப ஒதுக்கிய நிதியை, பள்ளிகளுக்கு வழங்காமல், கல்வித் துறை அதிகாரிகள், முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களுக்கு ஆண்டிற்கு நான்கு முறை சீருடைகள், மூன்று முறை நோட்டு, புத்தகங்கள், கலர் பென்சில்கள், செருப்பு, கணிதவியல் பெட்டி உட்பட பொருட்களை, அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அரசு வழங்கி வருகிறது.

இப்பொருட்களை மாவட்டத்திற்கு கொண்டு வருவதில் இருந்து, பள்ளிகளுக்கு கொண்டு சேர்க்கும் வரை, அனைத்து செலவுகளையும், கல்வித் துறை ஏற்றுக் கொள்கிறது. இதற்காக, ஒவ்வொரு உதவி தொடக்க கல்வி அலுவலகங்களில் இருந்தும், ஒவ்வொரு பள்ளியும் எவ்வளவு தொலைவில் உள்ளது என, வரைபடம் தயாரித்து, கல்வித்துறைக்கு அனுப்பப்படுகிறது. அதன் அடிப்படையில், இலவச பொருட்களை பள்ளிகளுக்கு கொண்டு போய் சேர்ப்பதற்கு தேவையான நிதியை, உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு, அரசு வழங்கி விடுகிறது.அவர்கள், இந்நிதியை பள்ளிகளுக்கு வழங்குவதில்லை.

பொருட்களையும், பள்ளிகளுக்கு கொண்டு போய் சேர்ப்பதில்லை.மாறாக, அனைத்து பள்ளிகளுக்கும் போன் மூலம் தகவல் தெரிவித்து, உதவி தொடக்க கல்வி அலுவலகத்திற்கு வந்து பொருட்களை எடுத்துச் செல்லுமாறு, கூறி விடுகின்றனர். பள்ளி நிர்வாகங்கள், தங்கள் சொந்த செலவில் இந்த பொருட்களை எடுத்துச் சென்று, மாணவர்களுக்கு வழங்குகின்றனர். அதிகாரிகள், பள்ளிகளுக்கு கொண்டுபோய், பொருட்களை வழங்கியதாக கணக்கு காட்டி, நிதி முறைகேடு செய்கின்றனர். இதனால், கல்வித்துறை அதிகாரிகள் மீது, பள்ளி நிர்வாகங்கள் அதிருப்தியில் உள்ளன.பள்ளிகளுக்கு அரசு நேரடியாக நிதி வழங்க வேண்டும் என, பள்ளி நிர்வாகங்கள் வலியுறுத்தி உள்ளன.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Magizh Mutram - House System Handbook Manual - Tamil Nadu Government School Education Department Released

மகிழ் முற்றம் - கையேடு - தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை வெளியீடு - தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மகிழ் முற்றம் சார்ந்து அமைக்கப்பட...