கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>கனவுகளைத் துரத்துங்கள்! - ஜெஃப்ரி பெசொஸ்...

 
அமேசான்.காம் எனும் இணையத்தில் நடைபெறும் வர்த்தகத்தில் டாப் ஹீரோவாக இருக்கும் நிறுவனத்தை உருவாக்கிய ஜெஃப்ரி பெசொஸ் பிறந்த தினம் ஜன.12.

அப்பா க்யூபாவில் இருந்து வந்த அகதி என்றாலும் அம்மாவின் அப்பா வழியில் ஏகப்பட்ட சொத்து இருந்தது. சின்ன வயதில் இருந்தே எதையாவது துறுதுறு என்று பண்ணிக்கொண்டிருக்கும் குணம் இவரிடம் இருந்தது.தொல்லைக்கொடுக்கும் சுட்டிகளை பயமுறுத்த எலெக்ட்ரானிக் அலாரம் தயாரித்தார்.

தாத்தாவின் கேரேஜில் எப்பொழுது பார்த்தாலும் ஆய்வுகள் செய்து கொண்டும், எதையாவது உருவாக்கி கொண்டும் இருந்த இவர் ஆசைப்பட்டது ஒரு விண்வெளி வீரனாக ஆகவேண்டும் என்றே. ஆனால், வேறு விஷயங்கள் அவருக்காக காத்திருந்தன. கல்லூரி போனதும் இயற்பியலில் இருந்து அவர் காதல் கணினி பக்கம் திரும்பியது. கணினி மற்றும் மின்னணு அறிவியல் துறையில் பட்டம் பெற்று வெளியே வந்தார். மிகப்பெரிய நிறுவனங்களில் வேலைபார்த்து லட்சக்கணக்கில் சம்பாதித்தார்.

இளவயதில் மிகப்பெரிய நிதி நிறுவனம் ஒன்றின் துணைத் தலைவர் ஆனார். அதோடு நின்று இருக்கலாம்; வருடத்திற்கு 2300 சதவிகிதம் இணைய பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை உயர்கிறது என்பதை பார்த்தார். அந்நேரம் இணையத்தில் வர்த்தகம் செய்பவர்கள் சேவை வரி செலுத்த தேவையில்லை என அமெரிக்க சுப்ரீம் கோர்ட் சொல்ல வேலையை தூக்கி கிடாசிவிட்டு கிளம்பினார் மனிதர். இணையத்தில் புத்தகங்களை ஆர்டர் செய்தால் போதும், வீட்டுக்கே கொண்டுவந்து டெலிவரி என்பதுதான் கான்செப்ட். அதுவும் விலை குறைவாக தருவது தான் போனஸ்.

ஆரம்பிக்கிற பொழுது மிகக்குறைந்த எண்ணிக்கையில்தான் ஆட்கள் இருந்தார்கள். அமோக வரவேற்ப்பு உண்டானது; சில வாடிக்கையாளர்கள் ஏன் நீங்கள் எலெக்ட்ரானிக் சாதனங்கள் விற்க கூடாது என கேட்க அதையும் ஆரம்பித்தார். டிவிடிகளும் சேர்ந்துகொண்டன. புத்தகங்களை விட எலெக்ட்ரானிக் சாதனங்கள் சக்கை போடு போட்டன. இப்பொழுது ஷு, நகைகள் கூட ஆன்லைனில் விற்கிறது அமேசான். அதோடு நின்று விடவில்லை, சாதாரண மக்கள் பயணிக்கும் வகையில் விண்வெளி பயணத்திட்டத்தை ஆரம்பித்தார்.

அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? மூச்சை பிடித்துக்கொள்ளுங்கள்... 23 பில்லியன் டாலர்! எப்படி இது சாத்தியம் எனக் கேட்ட பொழுது, "பெரிதாக கனவுகள் எனக்கு; என் கனவுகளை துரத்திக்கொண்டே இருந்தேன்; இருப்பேன். மற்றவர்கள் புரிந்துகொள்ளாவிட்டலும் பரவாயில்லை. கனவுகளோடு ஓடி சாதிப்பது சுகமானது!"

>>>எட்மண்ட் பர்க்...

 
எட்மண்ட் பர்க்... அயர்லாந்தில் பிறந்த இவர் தன் மாற்று சிந்தனைகளால் கவனம் பெற்றார். பத்திரிக்கை துறையை நான்காவது தூண் என அழைத்தவர் இவரே. 1765 இல் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நுழைந்தார். அவர் பேசிய முதல் பேச்சே எல்லாரையும் மெய்மறக்க செய்தது. அமெரிக்காவின் சுதந்திர போருக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்தார்; அதே சமயம் பிரெஞ்சு புரட்சி ஐரோப்பா முழுக்க பரவி குழப்பத்தை உண்டாக்கும் என்றார் - அவ்வாறே நடந்தது.

இந்தியாவின் மீது தனிக்கரிசனம் அவருக்கு இருந்தது; வாரன் ஹாஸ்டிங்க்ஸ் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்து எண்ணற்ற ஊழல்கள் செய்தார். நிர்வாகத்தில் மக்களை பற்றி கவலைப்படவில்லை. அவரை நாடாளுமன்றத்தில் ராஜா துரோக குற்றத்துக்காக நிற்க வைத்தார் பர்க். அப்பொழுது அவர், இந்தியாவின் கர்நாடகத்தில் வறண்ட பூமியை அம்மக்கள் நீர்த்தேக்கங்கள் கட்டி பசுமை பூமியாக்கினர்; அவர்களை முட்டாள் என நினைத்து அவற்றை சீரழிய விட்டு தினமும் பஞ்சத்தொடு இரவுணவு அருந்தப்போனார் ஹாஸ்டிங்க்ஸ் என பின்னி எடுத்தார்; ராஜா துரோக குற்றம் நிரூபிக்கப்பட்டது இந்த உரையை பதினாறு முறை திருத்தி எழுதி தயாரானார் அவர்.

மிகவும் அதிகமாக வாசிக்கும் பழக்கம் கொண்ட அவர், உலக வரலாற்றை நாற்பதாண்டு கால உழைப்பில் எழுதினார். ஒரு கொலை அவர் வீட்டருகில் நடந்தது. பார்த்த பலரும் பல விதமாக அதை விவரிக்க தன் உழைப்பை எல்லாம் தீயிட்டு கொளுத்திவிட்டு, "இயேசுவை புத்தரை பற்றி இவர்கள் பதிவு செய்தது உண்மை என நான் எப்படி நம்புவது? புத்தக அறிவு மட்டும் போதாது!" எனக் கம்பீரமாக சொல்லிவிட்டு நடந்தார்.

"நல்லவர்கள எதுவும் செய்யாமல் இருப்பதே தீமையை செழிக்க வைக்கும்" என்று சொன்ன தலைசிறந்த மனிதர் அவர்.

இன்று - ஜன.12: உலகின் தலைசிறந்த பேச்சாளர்கள் மற்றும் சிந்தனையாளர்களில் தனிப்பெரும் இடம் பெற்றிருக்கும் எட்மண்ட் பர்க் பிறந்தநாள்.

>>>இந்திய விண் நாயகன்!

 
ஜன.13 : ராகேஷ் ஷர்மா எனும் விண்வெளிக்கு பயணம் போன முதல் இந்தியர் பிறந்த நநள்.

பாட்டியாலாவில் பிறந்த இவர் தன்னுடைய பதினேழு வயதில் பாதுகாப்பு அகாடமியில் சேர்ந்தார். இந்திய விமானப் படையில் சேர்ந்து சிறப்பாக பணியாற்றினார். குறிப்பாக, 1971 இந்திய - பாகிஸ்தான் போரில் மிக் ரக விமானங்களை மிகத்திறமையாக போர்களத்தில் இயக்கினார். 1982 இல் இந்தியா ரஷ்யாவின் சோயூஸ் 11 விண்கலத்தில் இரண்டு ரஷ்யர்களுடன் இந்தியர் ஒருவரை அனுப்பவது என முடிவெடுக்கப்பட்டதும் ராகேஷ் ஷர்மா அதற்கு தேர்வானார்.

பதினெட்டு மாதம் கடுமையான பயிற்சிகள் வழங்கப்பட்டன. ஈர்ப்பு விசையே இல்லாத சூழலில் செயல்பட வேண்டும் என்பதால் காலை தொட்டவாறு தலை பலமணிநேரம் இருக்குமாறு எல்லாம் பெண்டு வாங்கினார்கள்; ஃபிட்டாக இருக்க பல உடற்பயிற்சிகள் சொல்லித்தரப்பட இவரோ யோகா மட்டும் செய்தார்.

விண்வெளிக்கு போனதும், "இந்தியா அங்கிருந்து பார்க்க எப்படி இருக்கிறது?" என இந்திரா காந்தி கேட்க, "சாரே ஜஹான் சே ஹச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா!" என்றார் (உலகில் உள்ளவற்றிலே மிக அழகானது என் இந்தியா!). அதை தொலைக்காட்சியில் பார்த்து இந்தியர்கள் மெய்சிலிர்த்து போனார்கள். அவரும் நாயகன் ஆனார். மீண்டும் தரையிறங்கும் பொழுது தீப்பிடித்து கொள்ள பாராசூட்டில் குதித்து தப்பித்தார்.

கல்பனா சாவ்லா கொலும்பியா ஓடத்தில் இறந்த பொழுது, நீங்கள் இன்னுமா விண்வெளிக்கு போக விரும்புகிறீர்கள் என கேட்டபொழுது, "பரந்த அந்த விண்வெளியின் மீதான என் காதல் அப்படியே உள்ளது; சாகசத்துக்காக காத்திருக்கிறேன் இன்னமும் - கண்டிப்பாக போவேன் நான்!" என்றார் - அதுதான் ராகேஷ் ஷர்மா.

ஹாப்பி பர்த்டே ஹீரோ!

>>>முதல் வானொலி ஒலிபரப்பு...

 
இன்றைக்கு நம்மில் பலரது காதுகளை ஏதோ ஒரு எஃப்.எம் நிறைத்துக் கொண்டு இருக்கிறது. முதன்முதலில் வானொலி ஒலிபரப்பு எப்படி இருந்திருக்கும்?

ரொம்பவே சுவாரசியமான சம்பவம் அது.

ஜன.13, 1910 ஆம் ஆண்டு நியூயார்க் நகரத்தில் அந்த நிகழ்வு நடந்தது. ஆஸ்திரியாவில் நுஸ்பாமேர் எனும் பேராசிரியர் ஆறு வருடங்களுக்கு முன்னேயே அடுத்த அறைக்கு வானொலி ஒலிபரப்பை நிகழ்த்தி இருந்தாலும், பொதுமக்கள் கேட்கிற அளவுக்கு நடந்த முதல் வானொலி ஒலிபரப்பு இதுதான்.

இத்தாலிய இசைக்குழு ஒன்றின் இசையே முதலில் ஒலிபரப்பப்பட்டது. அப்பதிய மைக்குகள் ரொம்பவும் துல்லியமானவை அல்ல. அதனால், மேடையில் தூரத்தில் வைக்கப்பட்ட மைக்கில் விழுந்த இசை அரைகுறையாகவே கேட்டது. மேடைக்கு கீழே பாடிய பாடகர்களின் குரல் கொஞ்சம் சிறப்பாக கேட்டது. நியூயார்க் நகரில் இருந்து தூரத்தில் போன கப்பல்களில் இசையை மக்கள் கேட்டார்கள். டைம்ஸ் சதுக்கத்திலும் கேட்டு பூரித்தார்கள். ஒரு மைல் தூரத்துக்கு ஒபரா இசை கேட்டதாக செய்திதாள்களில் விளம்பரங்கள் வந்தன.

>>>ஆல்பர்ட் ஷுவைட்சர்...

 
ஆல்பர்ட் ஷுவைட்சர்... அமைதிக்கான நோபல் பரிசை பெற்றவர். இவருக்கு மருத்துவர், பாதிரியார், இசை வல்லுநர், தத்துவ நிபுணர், சமூக சேவகர் என பல முகம் உண்டு. ஜெர்மனியில் பிறந்த இவர் அடிப்படையில் தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றார். தொடர்ந்து தத்துவ வகுப்புகள் எடுத்து வந்தார்.

பல்வேறு மதங்களின் கருத்துக்களை தொடர்ந்து படித்துவந்த இவர், இன்றைய வாழ்க்கைக்கு எப்படி அறம் சார்ந்த வாழ்வை இவற்றின் மூலம் கொண்டு வரமுடியும் என தொடர்ந்து யோசித்தார்; வாசித்தார். உலகப்போர் சமயத்தில் ஆப்ரிக்காவில் சேவை செய்ய வேண்டும் என்பதற்காக, மருத்துவம் பயின்றார். அங்கே போர்கைதியாக மனைவியோடு சிலகாலம் கஷ்டப்பட்டார்.

மனித வாழ்க்கையில் அறம் குறைந்து வருவதைகண்டு மனம் துடித்தார். சமண மதத்தின் உயிர்களை கொல்லாமை என்கிற கருத்து அவரை ஈர்த்தது; உயிர் என்பது காக்க, அழிக்க அல்ல வாழ்தலின் அறம் உயிர்களை காத்தலும், பிற உயிரை முடிந்தவரை காயப்படுத்தாமலும், கொல்லாமலும் இருக்க வேண்டும் என்ற அவரது, "reverence of life" தத்துவம் ஆப்ரிக்காவில் காண்டாமிருக கூட்டத்துக்கு நடுவில் போகும் பொழுது உதித்தது. அதை அங்கே ஆப்ரிக்காவில் லம்பாரனே எனும் இடத்தில் மருத்துவமனை தொடங்கி எண்ணற்ற உயிர்களை காக்க ஆரம்பித்தார், அங்கே தன் தத்துவத்தை செயல்படுத்தினார். அவ்வூரின் மக்களுக்கு அதை விளக்கினார். அன்பை பரப்பினார்.

அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. அந்த பணத்தை தொழுநோய் சிகிச்சை மையத்தை அங்கே அமைக்க பயன்படுத்தி கொண்டார்.இன்று உலகம் முழுக்க அவர் காட்டிய தத்துவ பாதையில் பல்வேறு அமைப்புகள் உயிர்களை காத்து வருகின்றன. ஜன.14 - அவரது பிறந்தநாள்.

>>>ஸ்டாலினால் தி.மு.கவைக் காப்பாற்ற முடியுமா? - ஓ பக்கங்கள்-ஞாநி

“அடுத்த ஆட்சியை தி.மு.க அமைப்பதை  விரும்புகிறேனா என்றால் நிச்சயம் இல்லை.  தி.மு.க, அ.இ.அ.தி.மு.க இரு கட்சிகளுமே மீண்டும்  ஆட்சிக்கு வருவதை நான் விரும்பவில்லை. அதே சமயம் மக்கள்  தி.மு.கவை ஆள்வதற்குத் தேர்ந்தெடுப்பார்களானால், தி.மு.கவின் முதலமைச்சராக ஸ்டாலின் வருவதையே நான் விரும்புகிறேன். அப்பாவின் எல்லா பாவங்களுக்கும் இல்லாவிட்டாலும் பல  பாவங்களுக்குப் பரிகாரம் செய்யக்கூடியவராக செயல்படும் வாய்ப்புள்ள ஒரே வாரிசு அந்தக் குடும்பத்தில் அவர் ஒருவர்தான்.”
ஆகஸ்ட் 2010ல் நான் எழுதிய இந்த வரிகளைத்தான் இப்போதும் திரும்பச் சொல்ல விரும்புகிறேன். ஒரு வழியாக கலைஞர் கருணாநிதி தான் ஓய்வெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதைத் தாமதமாகவேனும்  உணர்ந்து, அடுத்த தி.மு.க தலைவர் பதவிக்கு ஸ்டாலினைத்தான் முன்மொழிவேன் என்று பகிரங்கமாக உறுதியாக சொல்லிவிட்டது எனக்கு மகிழ்ச்சியைத்தருகிறது. இதை அவர் 1996ல் தி.மு.க தேர்தலில் ஜெயித்தபோதே செய்திருக்க வேண்டும். அப்போதே அவருக்கு வயது 72. ஸ்டாலினுக்கு அன்று வயது 43. கருணாநிதி 45 வயதில் முதலமைச்சரானவர். அந்த வாய்ப்பை அன்றே  மகனுக்குக் கொடுத்துவிட்டு தான் கட்சித் தலைவர் பதவியை மட்டும் வைத்திருந்தால், மூப்பனார் மறுத்ததால்,  தேவ கவுடாவுக்கு சென்ற பிரதமர் பதவியைக் கூடக் கலைஞர்  அடைந்திருக்கலாம்.
ஸ்டாலினை தி.மு.கவின் தலைவராக்குவதற்கோ, முதலமைச்சராக்குவதற்கோ  தி.மு.க கட்சிக்குள்ளிருந்து பெரும் எதிர்ப்பு எப்போதும் வந்ததில்லை. ஒரே எதிர்ப்பு வைகோவுடையது. அதைக் கையாளத் தெரியாமல் கலைஞர் கையாண்டதில் வைகோவை ஸ்டாலினுக்கு சமமான தலைவராக்காமல் தனக்கு சமமான தலைவர் அந்தஸ்துக்கு உயர்த்திவிட்டார். (அந்த வாய்ப்பைக் கையாளத் தெரியாமல் வைகோவும் வீணடித்தது இன்னொரு தனிக் கதை.)அப்படியே ஸ்டாலினுக்கு சம்மான தலைவர்தான் ஜெயலலிதா  என்று ஆக்கும் வாய்ப்பையும் நழுவவிட்டு தன்னை ஜெயலலிதாவுக்கு சம்மாக தானே கலைஞர் குறுக்கிக் கொண்டார்.
ஸ்டாலினுக்கு வந்த எதிர்ப்பெல்லாம் கருணாநிதியின் குடும்பத்துக்குள்ளேயிருந்து அழகிரி வடிவில் வந்த எதிர்ப்பு மட்டும்தான். கட்சித் தலைவராக பல சிக்கல்களை சமாளிக்கத் தெரிந்த கலைஞர் குடும்பத் தலைவராக எப்போதுமே ஒரு ஃபெயிலியர்தான். அவரது மருமகன் முரசொலி மாறன் ஒரு மிடில் க்ளாஸ் வங்கி அதிகாரி குடும்பதில் செய்வது போல தன் பிள்ளைகளை நன்றாகப் படிக்கவைத்து பத்திரிகைத்தொழிலைக் கற்றுக் கொடுத்து தொழிலதிபர்களாக வருவதற்கு ஊக்குவித்தது போல கருணாநிதி தன் பிள்ளைகளை வளர்க்கவில்லை. முத்து முதல் அழகிரி, ஸ்டாலின், தமிழரசு வரை எல்லாரையும் தன் அரசியல் பணிக்கு ஊழியர்களாகப் பயன்படுத்தியதைத் தாண்டி அவரால் சிந்திக்க முடியவில்லை.
எம்.ஜிஆருக்கெதிராக முத்துவை நடிகனாக வளர்த்து எம்.ஜிஆரை ஒழித்துக் கட்ட முயற்சித்தார். முத்துவின் பலம் நடிப்பு அல்ல. இசைதான். பாடுவதுதான். தன் தாய்மாமா இசைச் சித்தர் சிதம்பரம்  ஜெயராமனைப் போல கர்நாடக இசையில் பேர் எடுக்காவிட்டாலும், முத்து சினிமா இசையில் ஒரு பி.பி. ஸ்ரீநிவாஸ், ஏ.எம்.ராஜா,எஸ்.பி.பி,  வரிசையில்  போல வந்திருக்க முடியும்.  கலைஞர் அவரை எம்ஜிஆரின் க்ளோனாக்க முயற்சித்துத் தோற்றதில் அவர் வாழ்க்கையே வீணாகிப் போயிற்று.
அந்த காலகட்டத்தில் ஸ்டாலினை விட மூத்தவரான அழகிரியோ, இளையவரான தமிழரசோ அரசியலில் ஆர்வம் காட்டவில்லை. சொந்தமாக தொழில் செய்யும் முயற்சிகளில் இருந்தார்கள். ஸ்டாலின்தான் மாணவராகவே கட்சியில் இறங்கி வேலை செய்தவர். அதனால்தான் 1976ல் நெருக்கடி நிலையின்போது மிசாவில் கைது செய்யும்போது கலைஞர் குடும்பத்தில் அவரை மட்டுமே கைது செய்தது அன்றைய அரசியல் எதிரியான காங்கிரஸ்.
ஸ்டாலின்தான் அடுத்த கட்டத்தில் கலைஞரின் இடத்துக்குக் கட்சியில் வரக்கூடியவர் என்ற நிலை எண்பதுகளிலேயே வந்துவிட்டது. அதை முரசொலி மாறனும் ஆதரித்தார். அவர் தன் மகன்களை கட்சிப் பதவிகளுக்குக் கொண்டு வர முயற்சித்ததே இல்லை.பேராசிரியர் அன்பழகனும் ஸ்டாலினை ஆதரித்தார். கட்சிக்குள் ஸ்டாலின் ஆதரவு நிலைதான் பெரும்பான்மை.
ஆனால் சொந்த தொழில் முயற்சிகளில் தோற்றுப் போன அழகிரி அரசியலுக்குள் தாமதமாக நுழைந்தார். குடும்பத்துக்குள் இருந்துவந்த இந்த நெருக்கடியைத்தான் கலைஞரால் சுமார் 15 வருடங்களாக சமாளிக்க முடியாமல் இருந்திருக்கிறது.  அழகிரி அரசியலுக்குள் நுழையாமல் இருந்திருந்தால் கனிமொழி கூட நுழையாமல் இருந்திருக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லலாம். கலைஞரின் இலக்கிய கலாசாரத்துறை ஆர்வங்களுக்கு குடும்பத்தில் ஒரே வாரிசான கனிமொழி அதே துறையில் தொடர்ந்திருக்கக் கூடும். அழகிரிக்கு அரசியல் செல்வாக்கு, கட்சி, ஆட்சி பதவிகள் தரப்படவேண்டுமென்று கலைஞரின் ஒரு குடும்பத்துக்குள்ளிருந்து நிர்பந்தங்கள் தொடங்கியபிறகு கனிமொழிக்காகவும் இன்னொரு குடும்பத்தின் நிர்ப்பந்தங்களை கலைஞர் சந்திக்க வேண்டியதாயிற்று.
தங்கள் பிள்ளைகளுக்காக அன்பால் செய்த நிர்பந்தங்கள் இரு பிள்ளைகளுக்கும் உண்மையில் பயன் தரவில்லை. தி.மு.கவின் மத்திய அமைச்சர்களிலேயே கட்சிக்கு மோசமான பெயரை டெல்லியில் சம்பாதித்துக் கொடுத்திருப்பது அழகிரிதான். நிர்வாகத் திறமையற்றவர் என்று அவர் பழிக்கப்படுவதுதான் மிச்சம். கனிமொழியோ ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்குப் போக வேண்டியதாயிற்று.
குடும்ப நிர்ப்பந்தங்களை நம்பியிராமல் சொந்த அரசியல் செயல்பாட்டால் கட்சிக்குள் தன் செல்வாக்கைப் பெருக்கிக் கொண்டு இன்று இருக்கும் இடத்தை அடைந்த கலைஞரின் ஒரே பிள்ளை ஸ்டாலின்தான். ஆனால் கட்சித் தலைவர் கலைஞர் அவரை ஆதரித்தபோதும் குடும்பத் தலைவர் கருணாநிதியின் பலவீனங்களால் தனக்கான இடத்தை அடைய முடியாமல் ஸ்டாலினுக்கு சுமார் 14 வருடங்கள் வீணாகியிருக்கின்றன.
எழுபதுகளிலும் எண்பதுகளிலும் ஸ்டாலினுக்குப் பொது மக்களிடம் பெரிய நற்பெயர் இருந்ததாக சொல்ல முடியாது.  பணக்கார வீட்டுப் பிள்ளைகளின் ஆடம்பரமும், ஷோக்கும் அதிகார மையத்தில் இருப்பதால் வரும் அகங்காரமும் உடையவராகவே அவர் அன்று  கணிக்கப்பட்டார். அப்போது அவர் தன்னை டிவி நடிகராக இலக்கிய கலையார்வம் உடையவராக காட்ட எடுத்த முயற்சிகளெல்லாம் படு தோல்வி அடைந்தன.
ஆனால் ஸ்டாலின் அதே பாதையைத் தொடராமல், வெளியே வந்து தப்பித்துவிட்டார்.  தொண்ணூறுகளின் இறுதியில் சென்னை மேயர் பதவிக்கு வந்தபோது புதிய இமேஜ் அவருக்கு உருவாயிற்று. நகரப் பிரச்சினைகளில் நேரடி அக்கறை காட்டி நடுத்தர வர்க்கத்தின் கவனத்தைக் கவர்ந்து நல்ல நிர்வாகியாக இவர் இருப்பார் என்ற நம்பிக்கையை அப்போது அவர் ஏற்படுத்த முயற்சித்தார்.
இப்போது ஒரு வழியாக அவரைத்தான் தி.மு.கவின் அடுத்த தலைவராகத் தானே முன்மொழிவேன் என்று கலைஞர் சொல்லிவிட்டதால், அவர்தான் இனி தி.மு.க ஆட்சிக்கு வந்தால் முதல்வராகவும் இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. உட்கட்சி ஜனநாயகம் உள்ள இயக்கம், ஸ்டாலினை எதிர்த்து யாரும் போட்டியிடலாம் என்றெல்லாம் கலைஞரும் அன்பழகனும் சொன்னாலும்,  தி.மு.கவில் இதுவரை கலைஞரை எதிர்த்து யாரும் வேட்பு மனு கூட தாக்கல் செய்ததில்லை. அதே நிலைதான் தொடரும்.
அழகிரி எதிர்த்துப் போட்டியிட்டால், கட்சி இன்று இருக்கும் நிலையில் அவருக்குத்தான் அது அவமானமாக முடியும். அந்தத் தப்பை அவர் செய்ய மாட்டார் என்று எதிர்பார்க்கலாம்.  ஸ்டாலினுடன் சமரசம், அல்லது அதிரடியாக் அ.தி.மு.கவுக்குப் போய் ஜெயலலிதாவின் வாரிசாக இடம் பிடிக்க முயற்சிப்பது என்ற இரு வழிகளைத் தவிர அவருக்கு வேறு சாய்ஸ் இனி இல்லை. அழகிரி செகண்ட் சாய்சை எடுப்பதை, கலைஞருக்குப் பின் தி.மு.கவை பலவீனப்படுத்த விரும்பும் டெல்லி காங்கிரஸ் தலைமையும் உளவுத்துறையினரும் நிச்சயம் விரும்புவார்கள். எழுபதுகளில் எம்.ஜி.ஆரைப் பயன்படுத்திய மாதிரி இப்போது அழகிரியைப் பயன்படுத்த முடியுமா என்று முயற்சிக்கலாம். ஆனால் அழகிரி எம்.ஜி.ஆர் அல்ல. எனவே சினிமாவில் முத்துவுக்கு ஏற்பட்ட கதியே அவருக்கும் அரசியலில் ஏற்படும்.  குடும்பத்துக்குள் சமரசம் என்பதுதான் ஒரே தீர்வு.
கலைஞர் இனி தன் முடிவை வீட்டு நிர்ப்பந்தங்களால் மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. இதுவரை தன் மரணத்தைப் பற்றி பேசாத அவர் முதன்முறையாக இப்போது பேசியிருக்கிறார்.  அடுத்த உட்கட்சி தேர்தல் எப்போது? அதில் ஸ்டாலினை முன்மொழிவாரா, யாரேனும் எதிர்த்தால் என்ன செய்வார் என்ற நிருபர்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லும்போது கட்சி தேர்தல் எப்போது நடக்கிறதோ “அப்போது நான் உயிரோடு இருந்தால்” ஸ்டாலினையே முன்மொழிவேன் என்று சொல்லியிருக்கிறார்.
தன் காலம் முடிவதற்கு முன் இந்த பிரச்சினைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்துவிட்டே தான் விடை பெறவேண்டும் என்ற மன உறுதி அவருக்கு இப்போது வந்திருப்பதையே இது  காட்டுகிறது.
எனவே தி.மு.கவின் அடுத்த தலைவர் ஸ்டாலின்தான். அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்தால் அடுத்த முதல்வரும் அவர்தான்.
இப்போது முக்கியமான கேள்விக்கு வருவோம். ஸ்டாலினால் தி.மு.கவைக் கட்டிக் காப்பாற்ற முடியுமா?
“தி.மு.க முடிந்து போன கதை” என்று அண்மையில் ஜெயலலிதா தன் கட்சிப் பொதுக் குழுவில் அலட்சியமாக அறிவித்தார். அது அவரது ஆசை. ஆனால் அவ்வளவு சுலபத்தில் தி.மு.க முடிந்த கதையாகாது. வலுவான கட்சி அமைப்பும் மீடியா பலமும், சுமார் 25 சதவிகித ஓட்டு ஆதரவும், சமூகத்தில் காலத்தின் தேவையால் உருவான சரித்திரப் பின்னணியும் உள்ள அமைப்பு அது.
அண்ணா 1949ல் தி.மு.கவை ஆரம்பித்தபோது அவருக்கு வயது 40தான். கட்சியின் அடுத்த நிலைத் தலைவர்கள் பெரும்பாலோரின் வயது 30 லிருந்து 40க்குள் இருந்தது. அத்தனை இளமையான இயக்கமாக அது தொடங்கியது. ஆனால் 88 வயது வரை பதவியை விட்டு இறங்க மறுத்த பிடிவாதத்தால், கலைஞர் இன்று அந்த கட்சியை முதியோர் இல்லமாக மாற்றிவிட்டார். கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர்கள் வயது 75. அடுத்த நிலையினருக்கு வயது 60க்கு மேல். ஸ்டாலின் தலைவராகும்போது அவருக்கும் வயது 60ஐக் கடந்துவிட்டிருக்கும்.
இன்றைய 20லிருந்து 35 வயது வரையிலான இளைஞர்களைக் கட்சிக்குள்ளும் அதற்கு ஆதரவாகவும் ஈர்க்க ஸ்டாலினால் இயலுமா என்பதே கேள்வி.  இன்றைய தமிழ் இளைஞர்களில் பெரும்பாலோர் ஈழத் தமிழர் பிரச்சினையில் தி.மு.க பெரும் துரோகம் செய்த கட்சி என்ற கருத்திலேயே இருக்கிறார்கள். நடு வயதினர் ஊழலை விஞ்ஞானப்பூர்வமாகச் செய்ய எல்லா கட்சிகளுக்கும் வழிகாட்டிய கட்சி என்றே கருதுகிறார்கள்.
இந்தச் சூழலில் கடுமையான மாற்றங்களைச் செய்யவும் தன்னையும் கட்சியையும் சுயவிமர்சனம் செய்துகொள்ளவும் ஸ்டாலின் முன்வந்தால்தான் தி.மு.கவை பழையபடி இளைஞர் கட்சியாக, கோட்பாடுகள், லட்சியங்களுக்கான இயக்கமாகப் புதுப்பிக்கமுடியும். அதற்கான ஆற்றல் அவரிடம் இருக்கிறதா?
கலைஞரிடம் இருக்கும் பல ஆற்றல்கள் – பேச்சுத் திறமை, எழுத்துத் திறமை, அரசியல் வீயூகம் கட்டுவது போன்றவை ஸ்டாலினிடம் இல்லை. அதே போல கலைஞரின் பல பலவீனங்களும் ஸ்டாலினுக்கு இல்லை. வாராவாரம் பாராட்டு விழாக்கள், சினிமா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது, பத்திரிகை நிருபர்களிடம் எரிந்து விழுவது, இதழாசிரியர்களுக்கு போன் செய்து கடிந்துகொள்வது, நேரடி பதில் சொல்லாமல் மழுப்புவது, வார்த்தை விளையாட்டு எல்லாம் இல்லை. கலைஞர் அளவு புகழாரம், ஆடம்பர கட் அவுட் கலாசாரம் ஆகியவற்றில் ஸ்டாலின் அதிக ஈடுபாடு காட்டவில்லை. கலைஞர் காலத்துக்குப் பின் அதிலிருந்து முற்றாக வெளியே வந்தால் கூட நல்லது.
எம்.ஜி.ஆர் காலத்திலேயே தொடங்கி ஜெயலலிதா காலத்தில் உச்சத்துக்கு சென்ற கலைஞரின் விரோத பாவம், நேரில் சந்திப்பதைத் தவிர்ப்பது போன்றவை ஸ்டாலினிடம் இல்லை. நேரில் ஜெயலலிதாவை சந்திக்க அவர் தயங்கியதில்லை.
தி.மு.க என்ற பழைய ஜமீன் வீடு ஸ்டாலின் கைக்கு வந்துவிட்டது. அதை ஒட்டடை அடித்து, சுத்தப்படுத்தி விரிசல்களுக்கு ஒட்டு போட்டு கூரை ஓட்டைகளை அடைத்து வைத்து பயன்படுத்தப் போகிறாரா, அல்லது இது உதவாது, இது இருக்கும் திராவிட இயக்க சுயமரியாதை மனை மட்டும்தான் தேறும், முற்றாக இடித்துவிட்டு புது வீடாகக் கட்டுவோம் என்று கட்டப் போகிறாரா என்பது ஸ்டாலின் கையில்தான் இருக்கிறது.
கல்கி 12.1.2013

>>>ஆலிஸ் - லூயிஸ் கரோல்

 
கதை கேட்பது எல்லாருக்கும் பிடித்த விஷயம் இல்லையா? அதிலும் நமக்கு ரொம்பவே பிடித்த ஒரு கதை, கேட்க கேட்க சலிப்பே தராத அந்த கதை தான் 150 வது வருடத்தில் அடியெடுத்து வைக்கபோகிறது. எந்த கதை அது? வாட்ச் கட்டி கொண்டு ஓடும் முயல், சீட்டு கட்டு சிப்பாய்கள், கிடு கிடு பள்ளங்கள், பேசும் மிருகங்கள், கண்ணீரில் உண்டாகும் வெள்ளம்...

இப்போது ஞாபகம் வந்துடுச்சா? நம்ம செல்லத் தோழி ஆலிஸின் அற்புத உலகமே அது. இந்தக் கதையை எழுதிய லூயிஸ் கரோல் ஒரு தேவலாயத்தில் ஃபாதராக இருந்தார். அவர் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலை.யில் கணித விரிவுரையாளராக இருந்து இருக்கிறார். அவர் இறுதி வரை திருமணமே செய்து கொள்ளவில்லை. ஆனால் குட்டிஸ் என்றால் அவருக்கு கொள்ளை ஆசை. அதனால் அவர்களுக்கு பிடித்த மாதிரி கதை சொல்வதை வழக்கமாக வைத்து இருந்தார்.

அதிலும் ஆலிஸ் லிடெல் என்கிற சுட்டி அவருக்கு ரொம்பவே செல்லம். ஆலிஸ் மற்றும் அவளின் இரு சகோதரிகள் என மூவரையும் ஒரு குட்டி படகில் உட்கார வைத்து அழகான ஆற்றில் அப்படியே சவாரி செய்வார் அவர். இரண்டரை மணி நேரம் படகில் போகிறபொழுது ஆலிஸ் ஏகத்துக்கும் படுத்தி எடுத்த விடுவாள். ஆலிஸின் வார்த்தைகளிலே அதை கேட்போம்...

"எப்போதும் வெயில் சுள்ளென அடிக்கிற மதிய வேளையில்தான் எங்கள் பயணம் இருக்கும். அங்கிளை கதை சொல்ல சொல்லி நச்சரிப்போம். அவரும் விதவிதமாக சொல்வார். நாங்கள் கண்கள் விரய கேட்டுகொண்டே இருக்கும் பொழுது, "இன்னைக்கு இது போதும்... வீட்டை நெருங்கி விட்டோம் என முடித்து விடுவார்" அப்படி முடிக்கிற இடம் ரொம்பவே சுவாரசியமான கட்டமாக இருக்கும். ஆனால் பின் மீண்டும் அதை கேட்கலாம் என அடுத்த சவாரியில் முயன்றால் தூங்குகிற மாதிரி நடித்து ஏமாற்றி விடுவார். எழுப்பினால் எழுந்திருக்கவே மாட்டார் ! ஆனால் கதைகள் மாறி கொண்டே இருக்கும்," என்கிறாள்.

கரோல், ஆலிஸ் இன் அற்புத உலகம் கதையை முதலில் சொல்கிற தருணங்களில் அதை நூலாக ஆக்க வேண்டும் என நினைக்கவில்லை. ஆலிஸ் அக்கதைகளை எழுதித்தர சொல்ல கிறிஸ்துமஸ் பரிசாக அவற்றை தொகுத்து தந்தார். கணித பேராசிரியரான இவரின் கதையில் வரும் வரிகளே சார்பியல் தத்துவத்தை ஐன்ஸ்டீன் உருவாக்க ஊக்கம் தந்ததாம். நல்ல கவிஞர், புகைப்பட நிபுணர் என பல முகம் இருந்தாலும், குழந்தைகளின் கதைசொல்லியாக அவர் பெருமைப்பட்டார்.

"ஆலிஸின் கனவுகளின் தோளின் மீது ஏறிக்கொண்டு நான் கதை சொன்னேன். அது மறையும் சூரியன் போல அன்றன்றைக்கு மறைந்து போகும்" என சொன்ன அவரின் நினைவு நாள்  - ஜன.14.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஓய்வூதிய இயக்குநரகம் மற்றும் அரசு தகவல் மையம் ( Directorate of Pension & Govt. Data Centre) ஆகியவற்றை கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையரகத்தின் கட்டுப்பாட்டில் இணைத்து அரசாணை G.O. Ms. No. 343, Dated : 12-11-2024 வெளியீடு

    ஓய்வூதிய இயக்குநரகம் மற்றும் அரசு தகவல் மையம் ( Directorate of Pension & Govt. Data Centre) ஆகியவற்றை கருவூலம் மற்றும் கணக்குத் துறை...