கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>உலகசாதனை புத்தகம் உருவான வரலாறு..!




1951ம் வருடம் ஒரு நாள் மாலைப்பொழுது, அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ‘கின்னஸ் வாட் சாலைஎன்ற அமைப்பிற்கு நிர்வாக இயக்குநராக இருந்தவர் ‘சர்க்யூ பீவர்’. இவர் வேட்டையாடுவதற்காக ஒரு நதிக் கரையோரம் சென்று கொண்டிருந்தார்
அப்போது ஆகாயத்தில் ஒரு நீண்ட கோடு போல ஏராளமான பறவைகள் பறந்து சென்று கொண்டிருந்தன. அவர், உடனே அவற்றை சுட எண்ணி, குனிந்து தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்தார்.

எடுத்து நிமிர்ந்தவர் அந்தப் பறவைக்கூட்டம் கண்ணுக்கே தெரியாத தொலைவுக்குச் சென்று விட்டதை அறிந்தார். வியப்பில் உறைந்து போனார். என்ன ஒரு வேகம்! ‘கோல்டன் பிளவர்’ என்ற பறவையினம் அவை.

அப்போதுதான் அவருக்கு ஒரு சிந்தனை பளிச்சிட்டது. ஒருவேளை உலகிலேயே மிகவும் வேகமாகப் பறக்கும் பறவையினம் இவையாகத்தான் இருக்குமோ என்று எண்ணினார். பலரிடம் பல புத்தகங்களிலும் விடை தேடினார்.

பலன்தான் இல்லை. இது குறித்து நாமே ஒரு புத்தகம் வெளியிட்டால் என்ன என்று யோசித்தார். அவர் உடனே லண்டன் சென்றார். அங்கு அரசாங்கத்திற்காக புள்ளி விவரங்கள் சேகரிக்கும் நோரிஸ் மைக் வைக்ட்டர், ரோஸ் மைக் வைக்ட்டர் என்ற இரட்டைச் சகோதரர்களைச் சந்தித்தார்.

தனது புதிய புத்தக யோசனையை தெரிவித்தார். அவர்களும் ஒத்துழைப்புதர முன்வந்தனர். மூவரின் உழைப்பில் பிறந்ததுதான் கின்னஸ் புத்தகம். முதல் கின்னஸ் புத்தகம் 1955ம் ஆண்டு ஆகஸ்ட் 27ல் 198 பக்கங்களுடன் அவர்களால் வெளியிடப்பட்டது.

உலகிலேயே மிகவும் பெரியது. மிகவும் சிறியது ஆகிய விவரங்கள் இதில் அடங்கியிருந்தன. மேலும் அவ்வாண்டு வெளியான புத்தகங்களில் அமோக விற்பனையான புத்தகம் என்ற பெருமையும் கின்னஸ் புத்தகத்திற்குக் கிடைத்தது.

அன்று தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது சாதனை புரிந்தவர்களைப் பற்றிய செய்திகளோடு புத்தகம் வெளிவந்தது. தொடர்ந்து ஆண்டுதோறும் வெளிவரும் கின்னஸ் புத்தகம் இடையில் 1957, 1959 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மட்டும் வெளிவரவில்லை.

இதற்கான காரணம் தெரியவில்லை. தனிப்பட்ட நபரின் எந்த ஒரு புதிய சாதனையையும் கின்னஸ் புத்தகத்திற்கு அனுப்பலாம். இதற்கான தகுந்த ஆதாரங்களைக் காட்டவேண்டும் எப்படி? என பார்ப்போம்.

சாதனையாளரின் சாதனை பற்றிய பத்திரிகை செய்திகள், பார்வையாளர்களாக இருந்த பொறுப்பானவர்களின் கையெழுத்துத் தொகுப்பு, இவை உண்மைதான் என்று ஒரு பொறுப்பான நிறுவனத்தின் தலைவர் வழங்கும் உறுதிமொழி.

இவ்வளவும் அனுப்ப வேண்டும். புதிய சாதனை முந்தைய சாதனையை முறியடிப்பதற்காக இருந்தால் அந்தச் செய்தியும் சாதனையாளர் பற்றிய தகவலும் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும்.

கின்னஸ் புத்தகத்தில் சாதனை நிகழ்ச்சிகளை வெளியிடுவார்களே தவிர, யாரையும் சாதனைபுரியத் தூண்டமாட்டார்கள். கின்னஸ் புத்தகம் பற்றிக் கூட கின்னஸ் புத்தகத்தில் 1974ல் இடம் பெற்றது. அது உலகிலேயே அதிகமாக விற்பனையான புத்தகம் என்ற வரிசையில்தான்.

முதலில் ஆங்கிலத்தில் மட்டுமே வெளிவந்த புத்தகம் விரைவிலேயே 35 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

>>>கருவேல மரங்கள்....

 
"நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர். அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஓர் இடத்தில் கூட காண முடியாது. சில ஆண்டுகளுக்குமுன் ஒரு திட்டமிடலுடன் செயல்பட்டு இந்த மரத்தை அவர்கள் தேடி தேடி அழித்து இருக்கிறார்கள். வெட்டி போட்டு கொளுத்தி விட்டு சுற்றி நின்று கூத்தாடி இருக்கிறார்கள். அதனால் தான் இன்று கேரளா நீர் வளத்தில் அபரிமிதமான நாடாக இருக்கிறது. கேரளா 'கடவுளின் சொந்த நாடு' என்கிற விதமாய் அங்கே நீரானது பூத்துக் குலுங்குகிறது. இப்போதும் இந்த மரத்தை அவர்கள் எங்கேயாவது கண்டு விட்டால் சாத்தானை கண்டு விட்டது போல் அலறி, அதை வெட்டி தீயிலிட்டு கொளுத்தி விட்டு தான் அப்பால் நகருகிறார்கள்."

சீமைக் கருவேல மரங்கள்... இந்த மரத்தினை பார்க்காத ஒரு தமிழன் தமிழ் நாட்டில் இருக்க முடியாது. தமிழ்நாட்டின் எல்லா மாநிலங்களிலும் வளர்ந்துக் கொண்டு இருக்கிற ஒரு மரம். எந்த ஒரு வறண்ட நிலத்திலும் எந்த ஒரு தட்ப வெப்பத்திலும் இது தழைத்து வளர்ந்து கொண்டு இருப்பதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். சாலை ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் இது . தமிழகத்தின் இன்றைய வறட்சியான நிலைக்கு இந்த மரங்கள் தான் காரணம் என்று உறுதியாக சொல்ல முடியும்.

இந்த கருவேல மரங்கள் எந்தவித வறட்சியிலும், கடும் கோடையிலும் நன்கு வளரக்கூடியது. மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலைப்படாது. ஏனெனில் ஒரு கருவேலமரம் தனது வேர்களை பூமியின் ஆழத்தில் நாற்பது அடி, அகலத்தில் நாற்பது அடி வரையில் அனுப்பி மண்ணின் நீரை உறிஞ்சி, தன் இலைகளை வாடவிடாமல் பார்த்துக் கொள்கிறது. இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது.

இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி இருக்கும் காற்றில் இருக்கும் ஈரப்பதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது.காற்றில் ஈரப்பதம் இருந்தால் கூட உறிஞ்சி விடுகிற இம்மரம், மனிதர்களையும் விட்டு வைப்பதில்லை. தன்னை சுற்றி இருக்கிற மனிதர்களின் உடலில் இருக்கிற ஈரப்பசையையும்,எண்ணெய்ப்பசையையும் கூட உறிஞ்சி விடுவதால் இந்த மரத்தின் அருகமையில் வசிக்கிறவர்களின் உடல் தோல்கள் வறண்டு போய் விடுகிறது.
தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம். கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது யாருக்கும் இதுவரை புரியவில்லை.

ஆனால் இதை அறியாமல் தமிழ் மக்கள் இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள். தங்கள் வீடுகளுக்கும், வயல்களுக்கும் வேலியாக இம்மரத்தை நட்டு வைகிறார்கள். வணிக ரீதியாகவும் இதை நம் தமிழ்நாட்டில் விறகிற்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர். இது பேராபத்தை இந்த மண்ணுக்கு செய்கிறது என்பதை அவர்கள் அரியது இருக்கிறார்கள்.

இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது, ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும், அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்.
ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு எந்த செடியும் வளராது, தவிர இம்மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை. காரணம் என்னவென்றால் இந்த சீமைக் கருவேல மரங்கள், பிராணவாயுவை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது, ஆனால் கரியமிலவாயுவை மிக அதிக அளவில் வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுத்தன்மையாக மாறிவிடுகிறது.

நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர். அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஓர் இடத்தில் கூட காண முடியாது. சில ஆண்டுகளுக்குமுன் ஒரு திட்டமிடலுடன் செயல்பட்டு இந்த மரத்தை அவர்கள் தேடி தேடி அழித்து இருக்கிறார்கள். வெட்டி போட்டு கொளுத்தி விட்டு சுற்றி நின்று கூத்தாடி இருக்கிறார்கள். அதனால் தான் இன்று கேரளா நீர் வளத்தில் அபரிமிதமான நாடாக இருக்கிறது. கேரளா 'கடவுளின் சொந்த நாடு' என்கிற விதமாய் அங்கே நீரானது பூத்துக் குலுங்குகிறது. இப்போதும் இந்த மரத்தை அவர்கள் எங்கேயாவது கண்டு விட்டால் சாத்தானை கண்டு விட்டது போல் அலறி, அதை வெட்டி தீயிலிட்டு கொளுத்தி விட்டு தான் அப்பால் நகருகிறார்கள்.

மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம். அமெரிக்க தாவரவியல் பூங்கா, வளர்க்க கூடாத நச்சு மரங்கள் என்று ஒரு தனிபட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பதுதான் இந்த சீமை கருவேல மரம் தான். அந்த மரத்தை வெட்டினால்தான் நம் மண்ணின் மாண்பைக் காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் செய்தி ! ஆகவே கருவேலமரங்களை ஒழிப்போம் ! நம் மண்ணின் மாண்பை காப்போம்

>>>பப்பாளிப்பழம்....

 
17_ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்குள் வந்தது பப்பாளி. இதன் பூர்வீகம் மெக்சிகோ மற்றும் மேற்கிந்தியத் தீவுகள். ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா முதலான நாடுகளிலும் பப்பாளி விளைகிறது.பப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள், சிவப்பு நிற பழங்களாகவும், சில சமயம் பச்சை கலந்த நிறத்திலும் உள்ளது.

வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்ட மின் …ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப் பாளி சாப்பிட்டால் போதும். மேலும்- நரம்புகள் பலப் படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்.

மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டி ருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும். அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை.

மருத்துவக் குணங்கள்:

பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.

பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.

பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.

நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.

பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.

பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.

பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.

பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.

பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.

பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.

பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.

பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.

100 கிராம் பச்சைக் காயான பப்பாளியில் 32 மில்லி கிராமும், சற்றே பழுத்த பப்பாளியில் 40 முதல் 72 மில்லி கிராமும், பாதிக்கு மேல் பழுத்ததில் 53 முதல் 95 மில்லி கிராமும், நன்றாகப் பழுத்ததில் 68 முதல் 136 மில்லி கிராமும், வைட்டமின் ‘சி’ இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள் வெளியேறும்.

கல்லீரல் கோளாறுகளுக்கும் பப்பாளி மருத்துவரீதியாக உதவி சரிசெய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி உண்பது சரியான வழி.

அடிவயிற்றுப் பிரச்னைகளுக்கு பப்பாளியே மிகச் சிறந்த மருந்து.

வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை, மலச்சிக்கல் இவற்றுக்கெல்லாம் அருமருந்து பப்பாளி.

முகப்பரு உள்ளவர்கள், பப்பாளிக்காயின் நறுக்கிய உட்பகுதித் துண்டுகளை மென்மையாக முகத்தில் தேய்க்கவேண்டும்.இது முகப்பருக்களைப் போக்கி, முகச் சுருக்கங்களையும் நீக்கி, பொலிவு கூட்டும்

பப்பாளிப்பழம் விலை குறைவு ஆனால் அது தரும் பயன்களோ ஏராளம்.பப்பாளிப் பழத்தை தேனில் கலந்து சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.

>>>போர்க்கள புகைப்படக்கலைஞர் ராபர்ட் கபே...

1938ம் ஆண்டு பிக்சர் போஸ்ட் என்ற உலகப்புகழ் பெற்ற பத்திரிகை பின் வருமாறு ஒரு அறிவிப்பு வெளியிட்டது. புகழ்பெற்ற புகைப்படக்கலைஞர் ராபர்ட் கபே எடுத்த வியட்நாம் போர்க்களகாட்சிகள் நாளை முதல் பிரசுரமாகிறது என்பதுதான் அந்த அறிவிப்பு. ஒரு புகைப்படக்கலைஞருக்கு நட்சத்திர அந்தஸ்து கொடுத்து வெளியான இந்த அறிவிப்பு, யார் அந்த புகைப்படக்கலைஞன் என்பதை அறிந்துகொள்ளும் ஆவலை அவரை அறியாதவர்களுக்கு ஏற்படுத்தியது.
யார் அந்த ராபர்ட் கபே; வாழ்வையும், சாவையும் போர்க்களமாக்கிக்கொண்ட புகைப்படக் கலைஞர். உலகை உலுக்கிய போர்ப்புகைப்படங்கள் எடுத்தவர்களின் பட்டியலில் முதலில் இருப்பவர். நாற்பது வயதில் மரணத்தை தொட்டவர். அந்த நாற்பதாவது வயதிலும் கேமிராவுடன் போர்களத்தில் நின்றவர். இதனால் உலகம் முழுவதும் உள்ள புகைப்பட ஆர்வலர்களின் மனதை வென்றவர்.

ஹங்கேரியில் பிறந்த இவரது இயற்பெயர் என்ட்ரி ப்ரைடுமேன். பட்டப்படிப்பு முடிப்பதற்கு முன்பே எழுத்தாளராக வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் சந்தர்ப்பம் இவரை புகைப்படக் கலைஞராக்கியது. எழுத்தில் வார்க்க நினைத்த உணர்வுகளை புகைப்படங்களில் கொண்டுவர முடிவு செய்தார்.புகைப்படக்கலைக்கு தீவிரமானதொரு முகத்தை தருவது போர் புகைப்படங்களே என்பதை உணர்ந்து போர் புகைப்படங்களை எடுக்க துணிந்தார். போர் வீரர்களுக்கு இணையான வீரமும், துணிச்சசலும், சாகசமும் இருந்தால் மட்டுமே போர்க்கள புகைப்பட கலைஞனாக இருப்பது சாத்தியம். இதெல்லாம் கூடுதலாகவே கொண்டிருந்த என்ட்ரி ப்ரைடுமேன், ராபர்ட் கபே என்ற புனைப்பெயருடன் போர்ப்படங்கள் எடுக்க ஆரம்பித்தார்.

போர்க்கள புகைப்படங்கள் என்றாலே வீரர்கள் அணிவகுப்பு, பீரங்கிகளின் முன்னேற்றம், குண்டு துளைத்த கட்டிடங்கள், பிணக்குவியல்தான் காட்சி படுத்தப்படும். அந்த மாதிரியான சூழலில் ஸ்பானிஷ் போரின் போது ஸ்பானிஷ் வீரர் ஒருவர் குண்டடிபட்டு சாய்ந்து விழும் படம் ஓன்றை ராபர்ட் கபே எடுத்தார். சாவின் எஞ்சியிருந்த கடைசி நொடியினை பதிவு செய்த அந்த படம் வு என்ற பிரெஞ்சு பத்திரிகையில் முதலில் வெளிவந்தது. அப்போது கூட அந்த படம் அதிகம் பேசப்படவில்லை. ஆனால் அதற்கு பிறகு அந்த படத்தை லைப் பத்திரிகை உணர்ச்சிகரமான குறிப்புகளுடன் சரியும் போர்வீரன் என்று தலைப்பிட்டு பெரிதாக வெளியிட்டதும் உலகமே அதிர்ச்சிக்குள்ளாகியது. உலகம் முழுவதும் உள்ள பத்திரிகைகள் தத்தம் கண்ணோட்டத்துடன் அந்த படத்தை மறுபிரசுரம் செய்தன.

இதன் பிறகு ராபர்ட் கபேயின் பெயர் உச்சத்திற்கு சென்றது. இவரை ஒப்பந்தம் செய்து போர்க்களத்திற்கு புகைப்படம் எடுக்க அனுப்புவதற்கு புகழ் பெற்ற செய்தி ஸ்தாபனங்கள் போட்டியிட்டன. அவரும் இரண்டாம் உலகப்போர், ஜப்பானியப் போர், அரபு- இஸ்ரேல் உள்ளிட்ட ஐந்து போர்களங்களில் புகைப்படக்கலைஞராக பணியாற்றி ஆயிரக்கணக்கான சாகவரம் பெற்ற படங்களை பதிவு செய்தார். இவர் போர்க்களத்தில் பெற்றதைவிட இழந்தது அதிகம். தான் உயிருக்கு உயிராய் காதலித்த ஹெரா டேராவையும் போர்க்களத்திற்கு கூட்டிச் சென்று காதலையும், புகைப்படக்கலையும் ஒரு சேரக் கற்றுக் கொடுத்தார். இரண்டிலுமே பிரமாதமாக பரிணமிக்கும் நேரத்தில் குண்டுக்கு பலியாகி காதலி டேரா அநியாயமாக செத்துப்போனார்.

ரொம்பவே மனது பாதிக்கப்பட்டாலும் விரைவில் அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்ட ராபர்ட் கபே தனது நண்பர் துணையுடன் மேக்னம் போட்டோஸ் என்ற ப்ரீலென்ஸ் புகைப்பட அமைப்பை ஏற்படுத்தினார். இன்றைக்கும் உலகம் முழுவதும் உள்ள இளைய தலைமுறை புகைப்படக்கலைஞர்களின் வாழ்விற்கு, வளர்ச்சிக்கு அக்கறையுடன் செயல்பட்டுக்கொண்டு இருக்கும் நிறுவனம்தான் மேக்னம் போட்டோஸ் நிறுவனம்.

ஜார்ஜ் ஆக்ஸல், எர்னஸ்ட் ஹெமிங்வே போன்ற பிரபல எழுத்தாளர்களுடனும், நோபல் பரிசு பெற்ற ஜான் ஸ்டெப்பெக்கருடனும் இணைந்து போர்க்களங்களில் பணியாற்றினார். இவர்களின் எழுத்தும், வர்ணனைகளும் ராபர்ட் கபேயின் படங்களுக்கு மிகவும் உணர்ச்சியூட்டி மிகுந்த உயிரோட்டத்தை உண்டாக்கியது.

பிரபல டைம் பத்திரிகைக்காக இந்தோசீனா போரை படமெடுக்க களமிறங்கியவர், 1954ம் வருடம் மே மாதம் 25 ம்தேதி ராணுவ வீரர்களுக்கு முன்பாக வேகமாக ஒடிச்சென்று படமெடுக்கும் போது கண்ணிவெடியில் சிக்கி தூக்கியெறியப்பட்டார். அலறியடித்து அனைவரும் ஒடிச்சென்று பார்த்த போது அவரது கால்கள் சிதறி சி்னாபின்னமாகியிருந்தது. மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு ஒடினார்கள். ஆனால் அங்கே அனைவரது கண்முன்னாலும் அவரது உயிர் கொஞ்சம், கொஞ்சமாக பிரிந்தது. கடைசிவரை பிரியாமல் இருந்தது அவரது கையில் இருந்த கேமிரா மட்டுமே.

>>>மிதாலி ராஜ்!

 
'உலகின் நம்பர் 1 பேட்ஸ்உமன்' என்ற பெருமையுடன் மகளிர் உலகக் கோப்பையில் களம் காண்கிறார், இந்தியக் கேப்டன் மிதாலி ராஜ்!

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வியாழக்கிழமை மும்பையில் தொடங்குகிறது. முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகளை எதிர்கொள்கிறது இந்திய அணி.

இந்த நிலையில், உலக மகளிர் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலின் பேட்ஸ்உமன் பிரிவில், இந்தியக் கேப்டன் மிதாலி ராஜ் 767 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

ஆல் தி பெஸ்ட் மிதாலி மேடம்!

>>>நாகேஷ்....

'பள்ளி நாடகத்தில் அந்தத் துறுதுறு சிறுவனுக்கு எமன் வேஷம். வசனம் பேசிக்கொண்டே பாசக் கயிற்றினை வீச வேண்டும். அச்சிறுவன் வீசிய பாசக் கயிறு எசகுபிசகாக ஒருவர் கழுத்தில் போய் விழுந்தது. பள்ளித் தலைமை ஆசிரியரின் கழுத்து அது!'

அந்தச் சிறுவன் நாகேஷ். மாறும் உடல் மொழி... ஏறி இறங்கும் குரல் ஜாலம்... தமிழர்களின் 40 ஆண்டு கால சாயங்காலச் சந்தோஷம். ஈர்க்குச்சி உடம்பால், சிரிப்புத் தீக்குச்சி கிழித்தவர்!

இன்று : ஜன.31 - இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ் என்று அழைக்கப்பட்ட நாகேஷ் நினைவு தினம்.

>>>தன்னம்பிக்கை விதைக்கும் விஷால்!

'கேமராவைக் கிளிக் செய்தால் அதில் இருந்து வரும் ஒளி, கேமராவின் லென்ஸ் வழியே சென்று, பிறகு எடுக்க வேண்டிய பகுதியில் புகைப்படமாக மாறுகிறது. இதுதான் லா ஆஃப் மோஷன் இன் லைட் எனர்ஜி (Law of Motion in Light Energy).

'ஒரு கல்லைக் கிணற்றுக்குள் போட்டால், அது மூழ்கிவிடும். காரணம், ஒரு பொருளைத் தண்ணீரினுள் போடும்போது, அது காற்று மண்டலத்தில் இருந்து காற்றைத் தள்ளி, பின்பு நீரின் மேலே ஒரு அழுத்தத்தை உண்டாக்கும்.’

இவற்றை எல்லாம் 6-ம் வகுப்பு இயற்பியல் புத்தகத்தில் படிப்பதுபோல இருக்கா? ஆனால், இதை எல்லாம் சொல்லி ஆச்சரியத்தில் மூழ்கச்செய்வது 8 வயது விஷால். 'சங்கல்ப்’ பயிற்சி மையத்தில் இரண்டாம் வகுப்புப் படிக்கும் இவர், ஆட்டிஸம் (AUTISM) சுட்டி...

... ஓவியம், ஸ்கேட்டிங் போன்றவற்றில் கலக்கும் விஷால், அறிவியலின் காதலன். கடந்த டிசம்பர் மாதம் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சயின்ஸ் கிளப்பில் பங்கேற்றார். அங்கே கேட்ட கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில்களை டைப்செய்து காண்பித்து எல்லோரையும் வியப்படையச் செய்தார்.

இதுவரை 10 வீடியோ கேம்ஸ்களை வடிவமைத்து இருக்கிறார். இவற்றுக்கு எல்லாம் சிகரமாக, மெடோ ஆஃப் மூட்ஸ் (MEADOW OF MOODS) என்ற புத்தகத்தை எழுதி இருக்கிறார் விஷால். இந்தப் புத்தகத்தில், இதுவரை தான் உணர்ந்த மன நிலைகளைப் பற்றி எழுதி இருக்கிறார். இந்தப் புத்தகத்தை சென்னையில் உள்ள லேண்ட்மார்க் அல்லது ஃபிலிப்கார்ட் கடைகளில் பெறலாம்.

'இந்தப் புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு வரியும் என்னுடைய உணர்வுகள். ஒவ்வொரு பக்கமும் என்னுடைய ஓவியங்களை அடிப்படையாகவைத்து வடிவமைத்தது. என்னைப் போன்ற சிறுவர்களின் உணர்வுகளை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இதை எழுதினேன். எங்களாலும் சாதனைபுரிய முடியும்’ என்று எழுதிக் காண்பித்து புன்னகைக்கிறார் விஷால்.

அந்தப் புன்னகையில் மின்னுகிறது 24 கேரட் தன்னம்பிக்கை!

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Water Bell திட்டத்தைப் பற்றி Cuteஆ சொல்லிட்டாங்க 😍😍 - பள்ளிக் குழந்தைக்கு அமைச்சர் பாராட்டு

 Water Bell திட்டத்தைப் பற்றி Cuteஆ சொல்லிட்டாங்க 😍😍 - பள்ளிக் குழந்தையின் பதிலுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் பாராட்டுப் பதிவு    ...