கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>மருத்துவரும் மெக்கானிக்கும்...

ஒரு முறை மெக்கானிக் கடைக்கு ஒரு பிரபல இதய அறுவை சிகிச்சை மருத்துவர் தனது காரை சரி செய்ய வந்திருந்தார்.

தனது காரை கடையில் விட்டுவிட்டு காத்திருந்தார்.

அப்போது மற்றொரு கார் ஒன்றை சரி பார்த்துக் கொண்டிருந்த ஒரு மெக்கானிக், அந்த மருத்துவரை அழைத்து ஒரு நிமிடம் பேச வேண்டும் என்றார்.

மருத்துவரும் மெக்கானிக் அருகில் வந்தார்.

மெக்கானிக் தான் சரி செய்து கொண்டிருந்த கார் எஞ்சினைக் காண்பித்து, பாருங்கள் நாங்களும் காரின் இதய‌ம் போ‌ன்ற எ‌ஞ்‌சினை திறந்து அதில் உள்ள வால்வுகளை சரி செய்து கொடுக்கிறோம். அதுவும் புதிது போல் இயங்குகிறது. இதையேத் தான் நீங்களும் செய்கின்றீர்கள். ஆனால் உங்களுக்கு நிறைய பணம், புகழ், பெயர் கிடைக்கிறதே என்றார்.

அதற்கு அந்த மருத்துவர், மிகவும் நிதானமாகவும், அமைதியாகவும், புத்திசாலித்தனமாகவும் பதிலளித்தார்.

இருவருக்கும் வித்தியாசம் இருக்கிறது. நாங்கள் இதயம் இயங்கிக் கொண்டிருக்கும்போது செய்கிறோம். உ‌ங்களா‌ல் அது முடியுமா என்றார்.

>>>ஹேப்பி பர்த்டே ஃபேஸ்புக்!

 
ஃபேஸ்புக்... உலகில் நூறு கோடி பேருக்கு மேல் பயன்படுத்தும் சமூக வலைத்தளம் இதுதான். முதமுதலில் இது ஆரம்பிக்கப்பட்ட வரலாறு சுவையானது.

ஹார்வர்ட் பல்கலையில் படித்துக்கொண்டிருந்த பொழுது மார்க் ஸக்கர்பர்க் ஃபேஸ்மாஷ் எனும் தளத்தை உருவாக்கினார். ஒரேசமயத்தில் இரண்டு நபர்களின் படங்களை தளத்தில் வெளியிட்டு யார் இதில் கவர்ச்சியாக இருக்கிறார் எனத் தேர்வு செய்யசொல்லி ஆரம்பித்தது இந்த தளம். இதற்கு வேண்டிய புகைப்படங்களைப் பெற ஹார்வர்ட் பல்கலையின் பாதுகாப்பு மிகுந்த தளத்திலிருந்து தனிநபர் புகைப்படங்களை லவட்டிக்கொண்டு வந்தார் மார்க். ஒரு நான்கு மணி நேரத்தில் 22,000 பேரால் புகைப்படங்கள் பார்க்கப்பட்டு இருந்தன. அதற்கு பிறகு விஷயம் தெரிந்து தளம் மூடப்பட்டது.

கல்லூரியின் பத்திரிக்கையான ஹார்வர்ட் க்ரிம்சனில் இந்த சம்பவம் வரவே ஆர்வம் தொற்றிக்கொள்ள, தி ஃபேஸ்புக்கை இதே தினத்தில் தொடங்கினார் ஸக்கர்பர்க். அதே சமயம் கேமரூன், டைலர், திவ்யா நரேந்திரா எனும் மூன்று ஹார்வர்ட் மாணவர்கள் HarvardConnection.com எனும் தளத்தை தொடங்க தங்களிடமிருந்து திட்டங்களை பெற்றுக்கொண்டு அதைக்கொண்டு ஃபேஸ்புக் எனும் தளத்தை வெளியிட்டு விட்டார் என கோர்ட் படியேறினார்கள். பின் ஒருவழியாக அவர்களை சரிக்கட்டினார் ஸக்கர்பர்க்.

முதலில் ஹார்வர்ட் மாணவர்களுக்கு என மட்டும் ஆரம்பிக்கப்பட்டு பின் அங்குள்ள பிரபலமான கல்லூரிகள் அளவில் விரிவடைந்து உலகம் முழுக்க பிரபலமானது. பேபால் நிறுவனர் இதில் முதலீடு செய்தபின்பு தி பேஸ்புக். ஃபேஸ்புக் என்று ஆனது.

உங்களுக்கு 13 வயது நிரம்பி இருந்தால் நீங்களும் இங்கே கணக்கு துவங்கலாம். சில நாடுகளில் தடையும் செய்யப்படுகிற அளவுக்கு இதன் தாக்கம் அதிகரித்து உள்ளது. ஏன் இந்தச் சிறு கட்டுரையை நீங்கள் படித்து லைக் பண்ணப்போவதும் இதிலேயேதான்.

ஹாப்பி பர்த்டே ஃபேஸ்புக்!

>>>விடுதலைப் போரின் தாய் ரோசா பார்க்ஸ் ...

 
மார்டின் லூதர் கிங் எனும் பெயருக்கு இணையாக உலக வரலாற்றில் கறுப்பின மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிரான போரில் உச்சரிக்கபட வேண்டிய இன்னொரு பெயர் ரோசா பார்க்ஸ்.

மாண்டிகோமேரி பேருந்தில் டிக்கெட் எடுத்து இருக்கையில் அமர்ந்தவண்ணம் போய்க்கொண்டு இருந்தார் ரோசா பார்க்ஸ். பிறப்பால் ஆப்பிரிக்க அமெரிக்கர் அவர். வெள்ளையர்கள் நிற்கவே இவரை கறுப்பர்களுக்கு என ஒதுக்கப்பட்ட அவரின் இருக்கையை விட்டு எழச்சொன்னார் நடத்துநர்.

‘‘முடியாது!’’ என இவர் மறுக்க, ‘‘மறுத்தால் கைது செய்வோம்’’ என கண்டக்டர் பயமுறுத்த, ‘‘செய்யுங்கள்’’ என கம்பீரமாக சொல்லிவிட்டு அமர்ந்துவிட்டார் அவர். கைது செய்யப்பட்டார்; கறுப்பின மக்கள் கொதித்தெழுந்தார்கள். லூதர் கிங் பின் அணி திரண்டார்கள்; நடந்தே போனார்கள், டாக்சியில் போனார்கள். குழந்தைகள் கூட பள்ளிக்கு நடந்து போனார்கள். முதியவர்கள் தள்ளாத நிலையிலும் தங்கள் இனம் தலை நிமிர ஒரு வாய்ப்பு என இன்னல்களை பொறுத்துக்கொண்டார்கள்.

ரோசாவுக்கு நீதி கிடைக்கும் வரை பேருந்தில் ஏறமாட்டோம் என ஒரு மாகாணமே தீர்க்கமாக நின்றது வரலாறு. ஒரு நாள் இரண்டு நாளில்லை ஒரு வருடம் முழுக்க தீராத நெஞ்சுரத்தோடு (சரியாக 381 நாட்கள்) அப்படியே போராடி வென்றார்கள் அவர்கள். இதில் ஓர் அவலம்... கீழ்கோர்ட் ஒன்று ரோசாவை கைது செய்தது செல்லும் என்றது தான். சமமான இருக்கை வசதி உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு பின் அவர்களுக்கும் கிடைத்தது.

தன் கணவர், பிள்ளை,சகோதரர், தாய் என அனைவரையும் கேன்சருக்கு இழந்து தனிமையில் இருந்த பொழுதும் தனக்கிருந்த புகழை பொருள் சம்பாதிக்க அவர் பயன்படுத்திக்கொள்ளவில்லை.

மக்களின் உரிமைக்காக பேசி அதில் கிடைத்த வருமானத்தை கறுப்பின மக்களின் நலனுக்கே செலவிட்டார்.

‘‘விடுதலைப் போரின் தாய்!’’ என அழைக்கப்படும் அவரின் 100வது பிறந்தநாள் இன்று (பிப்.4).

"அன்று அவர் எழ மறுத்ததால்தான் இன்று நாங்கள் தலைநிமிர்ந்து நடக்கிறோம்!’’ என அவரின் மரணத்தின் பொழுது கண்ணீரோடு குறித்தார்கள் கறுப்பின பெண்கள்!

>>>பஞ்சாப் நாடோடிக் கதை....

 
ஒரு நரி ஆற்றுப் பக்கம் தண்ணீர் குடிக்கப் போனது. எதிர்க்கரையில் இருந்த ப்ளம் மரங்களில் நிறைய பழங்கள் பழுத்துக் குலுங்கிக்கொண்டு இருந்தன. என்ன செய்வது, அந்த நரிக்கு நீச்சல் தெரியாதே.... ஏக்கத்தோடு பழங்களைப் பார்த்துக்கொண்டு இருந்தது நரி.

அந்தப் பக்கமாக ஒரு முதலை வந்தது. ‘‘முதலைக் கண்ணு, இங்கே வாயேன்’’ என்றது நரி.


‘‘அந்த ப்ளம் பழம் எவ்வளவு அழகா இருக்கு பாத்தியா? என்னை உன் முதுகிலே தூக்கிட்டுப் போனா நாம ரெண்டு பேரும் அந்தப் பழங்களைச் சாப்பிடலாம்’’ என்றது நரி.

‘‘அச்சச்சோ! எங்க அம்மா திட்டுவாங்க. என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறவர் கூடத்தான் நான் சேர்ந்து போகணும்னு சொல்லி இருக்காங்க’’ என்றது முதலை.


நரிக்கோ ப்ளம் பழத்தின் மீது உள்ள ஆசை அடங்கவில்லை. ‘‘நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்’’ என்று முதலையிடம் சொன்னது. முதலைக்கு வெட்கமாக, சந்தோஷமாக இருந்தது.


‘‘கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணு’’ என்றது.


‘‘செய்யறேன். ஆனா, இப்போ எனக்கு பசி மயக்கம். உடனடியா ப்ளம் பழம் சாப்பிடணுமே...’’


‘‘சரி, என் முதுகிலே ஏறிக்கோ. உன்னை அக்கரையிலே விடறேன்’’ என்றது முதலை.


அக்கரைக்குப் போய் ஆசை தீருமட்டும் ப்ளம் பழங்களைச் சாப்பிட்டது நரி.


மீண்டும் முதலையின் முதுகில் சவாரி செய்து இக்கரைக்கு வந்தது நரி. கரையில் இறங்கி, ‘‘நான் போய் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டு வர்றேன்’’ என்று சொல்லிவிட்டு ஓடியது.


நரி வரும் வரும் என்று ஆவலோடு காத்திருந்தது முதலை. நரி வரவில்லை. அது தன்னை ஏமாற்றிவிட்டது என்று முதலைக்குப் புரிந்தது. நரியை மீண்டும் பார்த்தால் தக்க பாடம் கற்றுத்தர முடிவு செய்தது.


சில நாட்கள் கழித்து, நரி அந்தப் பக்கமாக வருவதை முதலை பார்த்தது. நரி ஆற்றில் வாய் வைத்ததும் முதலை, நரியின் காலைக் கவ்வியது. உடனே நரி, ‘‘முதலைக் கண்ணம்மா, உன்னைத் தேடித்தான் வந்தேன். ஆனா வர்ற அவசரத்துல என் ஒரு காலை வீட்டுல வெச்சுட்டு வந்துட்டேன். அதை எடுத்துட்டு வந்துடறேன்’’ என்றது. முதலை நரியின் காலை விட்டது. நரி போய்விட்டது.


முதலை எவ்வளவு காத்திருந்தும் நரி வரவில்லை. மீண்டும் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முதலை, ஆற்றிலிருந்து புறப்பட்டு நரியின் குகைக்குள் போய் ஒளிந்துகொண்டது. வெளியே போயிருந்த நரி, குகைக்குத் திரும்பியது. வாசலில் முதலையின் காலடித் தடம்! முதலை உள்ளே இருக்கிறதா, இல்லையா என்று தெரியவில்லை. நரி, ‘‘அன்பு மனைவியே, நான் வீட்டுக்குத் திரும்பிவிட்டேன். என்னை வரவேற்றுப் பாடமாட்டியா?’’ என்றது.


குகைக்குள் இருந்து சத்தம் வரவில்லை. ‘நரி திரும்பவும், ‘‘செல்ல மனைவியே நான் வீட்டுக்கு வந்துவிட்டேன். ‘அன்புக் கணவர் ஐயாவே வீட்டுக்கு உள்ளே வந்துடுங்க. குட்டிக்கு வாங்கிட்டு வந்ததெல்லாம் குட்டி கையிலே தந்துடுங்க’னு எப்பவும் பாடுவியே, அதைப் பாடினாதான் உள்ளே வருவேன்’’ என்றது நரி.


குரலை மாற்றிக்கொண்டு முதலை அந்தப் பாட்டைப் பாடியது.


அவ்வளவுதான்... முதலை உள்ளே இருப்பதைத் தெரிந்து கொண்ட நரி ஓட்டம் பிடித்தது!

>>>மின்கட்டண அட்டவணை – ஒரு பார்வை

வீடு வீடாக சென்று மின் அளவை கணக்கீடு எடுக்கும் மின் ஊழியர்களிடம் ஒரு அட்டை எப்போதும் இருக்கும். மின் கட்ட‍ண மீட்ட‍ரில் உள்ள‍ அளவுகளை குறித்துக்கொண்டும், அந்த அளவுகளுக் கான மின் கட்ட‍ணம் எவ்வ‍ளவு என்பதனை அவரிடம் உள்ள‍ ஒரு அந்த அட்டையை பார்த்து கணக்கிட்டு, நாம் கொடுக்கும் மின் அட்டையில் மின் அளவு மற்றும் கட்ட‍ வேண்டிய தொகையினை குறித்துக் கொ டுப்பார்கள். அவர்கள் குறிப்பிடும் தொகை யை நாமும் அப்ப‍டியே கொண்டு போய் மின்வாரிய அலுவலகத்தில் செலுத்தி விட்டு வருகிறோமே! அதை ப்பற்றிய அடிப் படை அறிவு நமக்கு இருந்ததுண்டா ? ஒரு இணையத்தில் நான் கண்ட பதிவு மின் அட்டையை பற்றிய சில குறிப்புக் களை அனைவருக்கும் புரியும் வகையில் கொடுத்துள்ளார். நீங்கள் படித்து பயனுறுங்கள்.
 
வீட்டு இணைப்புகளுக்கானது:-
முதல் நிலை:-
.
1-100 யூனிட் வரை ரூபாய் 1.00
.
நிலைக்கட்டணம் இல்லை.
.
(நீங்கள் 100 யூனிட்டுக்குள் எவ்வளவு உபயோகித்தாலும் ஒரு யூனிட்டு க்கு ஒரு ரூபாய் மட்டும் தான். கூடுதலாக எந்த கட்டணமும் இல்லை.)
.
இரண்டாம் நிலை:-
.
1-200 யூனிட் வரை ரூபாய் 1.50.
.
நிலைக்கட்டணம் ரூபாய் 20.00.
.
(நீங்கள் 100 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும் சமயம் இந்த இரண்டாம் நிலைக்கு வந்து விடுவீர்கள். நீங்கள் 110 யூனிட் உப யோகி த்தால் உங்களுக்கான தொகை 165.00 + நிலைக்கட்டணம் ரூ.20.00 ஆக மொத்தம் ரூபாய் 185.00 செலுத்தவேண்டும்.)
.
மூன்றாம் நிலை:-
.
1-200 யூனிட் வரை ரூபாய் 2.00.
.
201-500 யூனிட் வரை ரூபாய் 3.00.
நிலைக்கட்டணம் ரூபாய் 30.00.
.
(நீங்கள் 200 யூனிட்டுக்கு மேல் உபயோகி க்கும் சமயம் இந்த மூன்றாம் நிலைக்கு வந்துவிடுவீர்கள். நீங்கள் 210 யூனிட் உபயோகித்தால் உங்களுக்கான தொகை 200 யூனிட் வரை 400.00+ 10 யூனிட்டுக்கு 3.00 வீதம் 30.00+ கூடுதல் கட்டணம் ரூ,30.00 ஆகமொத்தம் ரூபாய் 460.00 செலுத்தவேண்டும்.)
.
நான்காம் நிலை:-
.
1-200 யூனிட் வரை ரூபாய் 3.00.
.
201-500 யூனிட் வரை ரூபாய் 4.00.
.
500 க்கு மேல் ரூபாய் 5.75.
.
நிலைக்கட்டணம் ரூபாய் 40.00
.
(நீங்கள் 500 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும் சமயம் இந்த நான்காம் நிலைக்கு வந்துவிடுவீர்கள். நீங்கள் 510 யூனிட் உபயோகித்தால் முதல் 200 யூனிட்டுக்கு 600.00+ அடுத்த 300 யூனிட்டுக்கு 4 ரூபாய் வீதம் 1200.00+ 10 யூனிட்டுக்கு 5.75 வீதம் ரூபாய் 57.50+ கூடுதல் கட்டணம் ரூபாய் 40.00 ஆக மொத்தம் ரூ.1898.00 நீங்கள் செலுத்த வேண்டும்)
.
கடைகளுக்கானது:-
.
1-100 யூனிட் வரை ரூபாய் 4.30.
.
100 யூனிட்டுக்கு மேல உபயோகித்தால் 1 யூனிட் விலை ரூபாய் 7.00 மட்டுமே கூடுதலாக 5 சதவீதம் சர்வீஸ் சார்ஜ் மற்றும் 1 கிலோ வாட்டிறகு 120 ரூபாய் கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
.
உங்களுக்கான அட்டவணை கீழே:-
.
வீடு இணைப்புக்கானது.
 .
.
கடை இணைப்புக்கானது.
.

>>>இன்று உலக புற்றுநோய் தினம்

உயிர்க்கொல்லி நோய்களில் முதன்மையானது கேன்சர் . இதனால் ஏற்படும் பாதிப்புகள், அதன் சிகிச்சை முறைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, பிப்., 4ம் தேதி உலக கேன்சர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. நுரையீரல், மார்பகம், தோல், வயிறு, நாக்கு, தொண்டை கேன்சர் என பல வகைகள் உள்ளன. கேன்சர், உடலின் ஒரு செல்லில் இருந்து மற்றொரு செல்லுக்கு பரவுகிறது. இதை கட்டுப்படுத்த முடியாதாதல், உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. .
சிகிச்சை முறை:
கேன்சரின் வகை, அதன் நிலை, வயது, உடல்நிலை போன்றவற்றை பொறுத்து சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. ரேடியேஷன், கீமியோதெரபி, இம்மினோ தெரபி, ஹார்மோன் தெரபி, ஜென் தெரபி உள்ளிட்ட சிகிச்கைள் மேற்கொள்ளப்படுகின்றன.கேன்சரால் ஆண்டுதோறும் 76 லட்சம் பேர் இறக்கின்றனர். இது உலகில், ஆண்டுதோறும் ஏற்படும் உயிரிழப்பில் 13 சதவீதம். கேன்சரால் இறப்பவர்களில் 70 சதவீதம் பேர், ஏழை மற்றும் நடுத்தர வருமானம் உடைய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. துவக்கத்திலேயே முறையான சிகிச்சை மேறகொண்டால், 40 சதவீதத்தை தடுக்க முடியும். இதில் மார்பக கேன்சர், குடல் மற்றும் தொண்டை கேன்சர் ஆகியவையும் அடங்கும். அனைத்து நாடுகளும் கேன்சரை கட்டுப்படுத்துவற்கு 4 முறைகளை கடைபிடிக்க வேண்டும். முன்னரே தடுப்பது, ஆரம்பக்கட்டத்திலயே தடுப்பது, பரிசோதனை மற்றும் சிகிச்சை, நோய் தணிப்பு ஆகியவை மூலம் கேன்சரை வராமல் தடுக்கவும் முடியும்.

>>>பிப்ரவரி 04 [February 04]....

நிகழ்வுகள்

  • 1783 - ஐக்கிய அமெரிக்கா மீது தனது அனைத்துத் தாக்குதல்களையும் நிறுத்துவதாக ஐக்கிய இராச்சியம் அறிவித்தது.
  • 1789 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது அதிபராக ஜார்ஜ் வாஷிங்டன் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.
  • 1794 - பிரெஞ்சுக் குடியரசு முழுவதும் அடிமைத் தொழில் சட்டவிரோதமாக்கப்பட்டது.
  • 1810 - கரிபியன் தீவுகளான குவாட்லூப் (Guadeloupe) பிரித்தானியக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
  • 1834 - இலங்கையின் ஆங்கிலப் பத்திரிகை சிலோன் ஒப்சேர்வர் முதன் முதலாக வெளியிடப்பட்டது.
  • 1859 - கிரேக்க பைபிளின் 4ம் நூற்றாண்டுக் கையெழுத்துப்படி ஒன்று எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
  • 1899 - பிலிப்பீன்ஸ்-அமெரிக்கப் போர் ஆரம்பமானது.
  • 1932 - இரண்டாம் உலகப் போர்: சீனாவின் ஹார்பின் நகரை ஜப்பான் பிடித்தது.
  • 1936 - முதற்தடவையாக ரேடியம் E என்ற செயற்கைக் கதிரியக்க மூலகம் உருவாக்கப்பட்டது.
  • 1943 - இரண்டாம் உலகப் போர்: ஸ்டாலின்கிராட் போர் முடிவுக்கு வந்தது.
  • 1945 - இரண்டாம் உலகப் போர்: அமெரிக்க அதிபர் பிராங்கிளின் ரூஸ்வெல்ட், பிரித்தானிய பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சில், ரஷ்யத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் உக்ரேனில் யால்ட்டா மாநாட்டில் சந்தித்தனர்.
  • 1948 - இலங்கை ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
  • 1957 - திருகோணமலையில் கறுப்புக் கொடியைக் கட்ட முயன்ற திருமலை நடராசன் போலீசாரினால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டார்.
  • 1966 - ஜப்பான் போயிங் விமானம் டோக்கியோவில் வீழ்ந்ததில் 133 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1969 - பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவராக யாசர் அரபாத் பதவியேற்றார்.
  • 1976 - குவாத்தமாலா மற்றும் ஹொண்டுராஸ் நிலநடுக்கத்தில் 22,000 பேர் இறந்தனர்.
  • 1978 - இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிபராக ஜே. ஆர். ஜெயவர்த்தனா பதவியேற்றார்.
  • 1997 - இஸ்ரேலில் இரண்டு உலங்குவானூர்திகள் வானில் மோதியதில் 73 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1998 - ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற 6.1 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 5,000 பேர் கொல்லப்பட்டனர்.
  • 2003 - யூகொஸ்லாவியா அதிகாரபூர்வமாக "சேர்பியா மற்றும் மொண்டெனேகுரோ" எனப் பெயர் மாற்றம் பெற்றது.
  • 2007 - ஒலியை மிஞ்சிய வேகத்தில் செல்லும் ரஷ்ய-இந்திய "பிரமாஸ்" ஏவுகணை ஒரிசா ஏவு தளத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.
  • 2007 - வங்காள தேசத்தில் இடம்பெற்ற உலகின் மிகப் பெரிய கூட்டுப் பிரார்த்தனையில் 3 மில்லியனுக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

பிறப்புகள்

  • 1913 - றோசா பாக்ஸ், ஒர் ஆபிரிக்க அமெரிக்க குடியுரிமைகள் செயற்பாட்டாளர் (இ. 2005)
  • 1921 - கே. ஆர். நாராயணன், இந்தியாவின் ஜனாதிபதி (இ. 2005)

இறப்புகள்

  • 1747 - வீரமாமுனிவர், இத்தாலியத் தமிழறிஞர் (பி. 1680)
  • 1928 - ஹெண்ட்ரிக் லோரெண்ட்ஸ், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1853)
  • 1974 - சத்தியேந்திரா போஸ், இந்திய இயற்பியலாளர் (பி. 1894)

சிறப்பு நாள்

  • இலங்கை - விடுதலை நாள் (1948)

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல...