கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>சேவைக்கு மறுபெயர் டாக்டர் -இன்று டாக்டர்கள் தினம்

நாம் உயிர் வாழ்வதற்கு, டாக்டர்களின் பணி அவசியம். நோயாளிகள், டாக்டர்களின் சேவைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், டாக்டர்கள் மருத்துவத் துறைக்கு செய்யும் அர்ப்பணிப்பை நினைவுபடுத்திக் கொள்ளும் வகையிலும் ஜூலை 1ம் தேதி, டாக்டர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
டாக்டர்கள் தினம் கொண்டாடும் வேளையில், இந்த 21ம் நூற்றாண்டிலும் இந்தியாவில் பல கிராமங்கள், ஆரம்ப சுகாதார வசதிகள் கூட இல்லாமல் இருப்பது வருத்தத்துக்குரியது. முதலுதவி சிகிச்சை பெறுவதற்கு கூட, கிராம மக்கள் 10 கி.மீ.,க்கும் மேல் செல்ல வேண்டி இருக்கிறது. எனவே அரசு நாட்டின் அனைத்து பகுதிகளிலும் குறிப்பிட்ட இடைவெளியில் ஒரு சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். டாக்டர்களும் கிராமப்புறங்களில் பணி செய்ய முன் வரவேண்டும். நோயாளிகள், டாக்டர்கள் விகிதம் இந்தியாவில் குறைவாகவே உள்ளது. மாணவர்கள் அதிகளவில் மருத்துவத் துறையை தேர்ந்தெடுக்க வசதியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேற்கு வங்கத்தின் 2வது முதல்வராக பதவி வகித்தவர் டாக்டர் பி.சி. ராய். சுதந்திர போராட்ட வீரராக மட்டுமல்லாமல், சிறந்த டாக்டராகவும் பணியாற்றிய இவர் பிறந்ததும், மறைந்ததும் ஜூலை முதல் தேதியில் தான். மருத்துவம், அரசியல், நிர்வாகம், கல்வி என தான் பங்கெடுத்த அனைத்து துறைகளிலும் பிறருக்கு முன்மாதிரியாக திகழ்ந்தார். இவரது சேவைகளை போற்றும் வகையில், இவரது பிறந்த தினம் தேசிய டாக்டர்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
1882ல் பீகாரில் உள்ள பான்கிபூரில் பி.சி.ராய் பிறந்தார். பாட்னா கல்லூரியில் பி.ஏ., முடித்துவிட்டு கோல்கட்டாவிலும், பிரிட்டனிலும் மருத்துவப் படிப்பை மேற்கொண்டார். இந்தியாவுக்கு திரும்பியதும் பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் ஆசிரியராக பணியாற்றினார்.
சுதந்திரம் எனும் கனவு நிறைவேற இந்தியர்களுக்கு வலிமையான உடலும், மனமும் தேவை என்பது பி.சி.ராயின் நம்பிக்கை. இதனால் ஏழைகளுக்காக, பல மருத்துவமனைகளை தொடங்கினார். 1948ல் மேற்கு வங்க முதல்வரானார். இவருக்கு 1961ம் ஆண்டு "பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டது. இவரது நினைவை போற்றும் வகையில் மருத்துவம், அறிவியல், கலை, இலக்கியம் போன்ற துறைகளில் சாதனை செய்பவர்களுக்கு "பி.சி.ராய் தேசிய விருது' வழங்கப்படுகிறது.
நோயாளிகளின் வாழ்த்துக்களைப் பெறும் "கடவுளின் பிரதிநிதிகள்'டாக்டர்கள் தினத்தில் "நெகிழும்' டாக்டர்கள்
மதுரை:இருட்டு உலகில் நீதியை வெளிச்சமாக்குவது... கருப்பு அங்கி என்றால், உயிரைப் பறிக்க வரும் எமனை, சிகிச்சையின் மூலம் துரத்துவது... வெள்ளை அங்கி அணிந்த டாக்டர்கள் தான். "நீங்களும், உங்க குடும்பமும் நல்லா இருக்கணும்' என தினமும், நோயாளிகளின் வாழ்த்துக்களை வாங்கும், வரம் பெற்றவர்கள். இன்று தேசிய டாக்டர்கள் தினம். மனித சேவைக்கு மதிப்பளித்து, உயிர்காக்கும் கடவுளின் பிரதிநிதிகள் இவர்கள். தங்களது மருத்துவ அனுபவங்களையும், அதுதரும் பாடங்களையும் மனம் நெகிழ்ந்து பேசுகின்றனர்.
என் ரத்தம் கொடுத்து, அவளை காப்பாற்றினேன்:
டாக்டர் ரேவதி ஜானகிராம் (மகப்பேறு மருத்துவ நிபுணர், ரேவதி பெண்கள் நல சிறப்பு மருத்துவமனை, மதுரை): மகப்பேறு மருத்துவர் என்பதற்காக பெருமைப்படுகிறேன். இரண்டு உயிர்களை பிரித்து கொடுத்து, சந்தோஷத்தை இரட்டிப்பாக்குகிறோம். எங்களது சேவைக்கு ஓய்வும் இல்லை. அப்போது மதுரை அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தேன். கிராமத்திலிருந்து ஒரு பெண்ணை, பிரசவத்திற்காக அழைத்து வந்தனர். பரிசோதித்தபோது, அந்தப் பெண்ணுக்கு கர்ப்பப்பை வெடித்து, குழந்தை இறந்திருந்தது தெரியவந்தது. அதிகமான உதிரப்போக்கு ஏற்பட்டு, மிக ஆபத்தான நிலையில் இருந்தார். கணவரிடம் சென்று, நிலைமையை எடுத்துக் கூறி, ரத்ததானம் செய்யுமாறு கூறினேன். "நான் ஒருத்தன் தான் வேலைக்குப் போறேன். ரத்த தானம் செய்ய முடியாது,' என்றார். ரத்தம் ஏற்றாவிட்டால், உன் மனைவி இறந்து விடுவாள் என்றதும்," ஏற்கனவே பொம்பளைப் பிள்ளைய பெத்திருக்கா. இப்ப கர்ப்பப்பை வெடிச்சுருச்சு. இனிமே அவ மூலமா, ஆம்பளைப் புள்ள கிடைக்காது. அவ இருந்தா என்ன... செத்தா என்ன' என்று, இரக்கமற்று கூறிவிட்டு சென்றார்.
வேறுவழியில்லாமல், என் ரத்தத்தை (ஓ பாசிட்டிவ்) கொடுத்து, நானே சிகிச்சை அளித்து, அப்பெண்ணை காப்பாற்றினேன். வார்டிலிருந்த அவளை, மூன்று நாட்கள் கழித்து பார்க்கச் சென்றேன். என்னை கையெடுத்து கும்பிடுவாள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் காலில் விழுந்து "என்னை ஏன் காப்பாத்துனீங்க. என் புருஷன் விட்டுட்டு போய்ட்டான். இனிமே என்னையும், என் புள்ளையும் யாரு காப்பாத்துவாங்க' என்றழுதார். என் மனம் வெறுத்து விட்டது. படிச்சாலும், படிக்கலைனாலும் ஒரு பொண்ணு, சொந்தக்கால்ல நிக்கணும். அதுதான் நல்லது. அந்தப் பெண்ணுக்கு புத்தி சொல்லிவிட்டு வந்தேன். பெண்களுக்கு சொல்லும் நீதி இதுதான். சொந்தக் காலில் நிற்கப் பழகுங்கள்.
(இவரை வாழ்த்த:94430 40355).
கோயிலில் என் பெயரில் அர்ச்சனை செய்தாள்
எஸ்.மீனாட்சிசுந்தரம்(நரம்பியல் நிபுணர், அப்போலோ மருத்துவமனை, மதுரை): இந்தக் காலத்தில் நாம் நமக்காக மட்டுமே வேண்டிக் கொள்கிறோம். ஆனால் ஒரு பெண், நான் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக, கோயிலில் என்பெயரில் அர்ச்சனை செய்தாள். அவளது கணவரும், அதை ஏற்றுக் கொண்டார். நான் அளித்த சிகிச்சைக்கும், சேவைக்கும் இவ்வளவு பெரிய மரியாதையா என, விம்மினேன். அந்தப் பெண்ணுக்கு 26 வயதிருக்கும். பெற்றோருடன் வந்தார். காக்காவலிப்பு இருப்பது, கணவனுக்கு தெரிந்து விட்டதால், அவளுடன் வாழமாட்டேன் என்றாராம். கணவனை அழைத்து வரச் செய்து, பேசினேன். வலிப்பு நோயுள்ளவர்கள் கல்யாணம் செய்யலாம், குழந்தைப் பெறலாம் என்பதை கூறினேன். "உங்க பொண்டாட்டிக்கு இப்படி வந்தா... நீங்க என்ன செய்வீங்க' என்றார். எவ்வளவு சொல்லியும் விவாகரத்தில் பிடிவாதமாக இருந்தார். இத்தனைக்கும் திருமணமாகி, ஆறு மாதம் தான் ஆகியிருந்தது.கடைசியாக பெண், பெற்றோரிடம், "இவர் திருந்தமாட்டார். விவாகரத்து செய்துவிடுங்கள். வேறு நல்ல வாழ்க்கை கிடைக்கும்' என்று சொன்னேன். அதேபோலவே விவாகரத்துக்குப் பின், நல்ல துணை வந்தது. என்னிடம் அழைத்து வந்தார்கள். வலிப்பு நோயால் பிரச்னையில்லை என எடுத்துக் கூறியபோது, அவர் சந்தோஷமாக சம்மதித்தார். சந்தோஷத்திற்கு சாட்சியாக குழந்தையுடன், கோயிலுக்கு வந்து, என் பெயரில் அர்ச்சனை செய்தார்கள். என்னைப் பார்க்கவில்லை. நானும் என்னை வெளிக்காட்ட வில்லை. அந்த அன்பில் நெகிழ்ந்து விட்டேன். வலிப்பு என்பது மனநோயல்ல. அது நரம்புடன் தொடர்புடைய ஒருநோய். அதற்காக விவாகரத்தும் வாங்க முடியாது. முறையான மருத்துவத்தின் மூலம், இரண்டாண்டுகளில் பெரும்பாலும் குணப்படுத்தி விடலாம். சிகிச்சை பெற வரும் பெண்ணின் உறவினர்களுக்கு தொடர்ந்து கூறி வருகிறேன். அவர்களுக்கு "கவுன்சிலிங்' தருகிறேன். சிகிச்சை மட்டுமல்ல... சேவையும் தான் எங்களது தொழில், என்றார்.
இவரை வாழ்த்த:98421 80211.
நோயாளிகளுக்கு "இருதய மசாஜ்' செய்வது முக்கியம்:
ஜி.துரை ராஜ் (இருதய நோய் நிபுணர், மதுரை): இருதய நோயாளிகளுக்கு, அவர்களின் ஒவ்வொரு நிமிடமும் மிக முக்கியம். மாரடைப்பு ஏற்பட்ட உடனேயே, மசாஜ் செய்து, "ஷாக்' கொடுத்தால், 90 சதவீதம் பேர் பிழைத்து விடுவர். 30 வயது ஆண், அவருக்கு இரண்டு குழந்தைகள். திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. குடும்பத்தினருடன், அவரே ஆட்டோவில் ஏறி அமர்ந்து, வேறொரு மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். அங்கே செல்லும் போது நாடித்துடிப்பு இறங்கி விட்டதால், என்னிடம் அனுப்பினர். ஆட்டோவுக்குள் சென்று பார்த்தபோது, "பல்ஸ், பிரஸர்' இரண்டும் இல்லை. துடிப்பு நின்று எவ்வளவு நேரம் ஆனது என, உறவினரிடம் விசாரித்தேன். ஐந்து நிமிடம் தான் ஆனது என்றனர். உடனடியாக ஆட்டோவுக்குள் இருந்தபடியே, ஸ்ட்ரெச்சர் கொண்டு வரும் வரை, மசாஜ் செய்தேன். ஸ்ட்ரெச்சரிலும் மசாஜை தொடர்ந்தேன். மூன்று முறை விட்டு, விட்டு "ஷாக்' கொடுத்தபோது, பிழைத்துக் கொண்டார். அவரது குடும்பமும் பிழைத்துக் கொண்டது. குடும்பத்தை காப்பாற்றிய திருப்தியும் எனக்கு ஏற்பட்டது.கீழ்த்தாடையிலிருந்து தொப்புள் வரை, தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் வலி இருந்தால், அதை அலட்சியப் படுத்தாதீர்கள். வலியை பொருட்படுத்தினால், இன்னும் நன்றாக வாழலாம். ஆம்புலன்சில் நோயாளி வந்தால், அவர்களே முதலுதவி செய்துவிடுவர். ஆட்டோ அல்லது காரில் வரும் போது, உறவினர்கள், ஒரு நிமிடத்திற்கு நூறு முறை மசாஜ் செய்ய வேண்டும். கையால், ஒன்றரை இஞ்ச் ஆழத்திற்கு இருதயத்தின் மேல், அழுத்தம் கொடுத்து, மசாஜ் செய்தால், நோயாளி பிழைத்து கொள்ள வாய்ப்புண்டு. வாயுத்தொல்லை என நீங்களாகவே முடிவுசெய்து, உயிரை அலட்சியப் படுத்தாதீர்கள்.
இவரை வாழ்த்த:98421 05000.
மருத்துவர், நோயாளியின் இலக்கணம்:இன்று டாக்டர்கள் தினம்
சித்த மருத்துவம் ஒரு பாரம்பரிய மருத்துவம். தற்போது கவுரவமாக அழைக்கப்படும் மருத்துவர்களின் முந்தைய
பரிமாணமே, வைத்தியர்கள். வைத்தியர்கள் உடல், மன நோய்களை தீர்ப்பதில் வல்லுனர்கள். அகத்தியர், வைத்தியர்களின் இலக்கணம் பற்றி குறிப்பிடும் போது, "உடல் கூறு, உடல் செயல்பாடு மற்றும் பல்வேறு மருத்துவ நூல்களில் வல்லவராக இருப்பதுடன், தீரும், தீரா நோய்களை அறிந்து சொல்வதுடன், ஜோதிடம், மருத்துவம், தொழில் சார்ந்த நோய்களை தெரிந்திருக்க வேண்டும்,' என்கிறார். கொடுமை, திருட்டு, நம்பிக்கையின்மை, பொய் சொல்லுதலை மருத்துவர்கள் தவிர்த்து, சிகிச்சைக்கு வரும் ஆண், பெண்களை சகோதர, சகோதரி மற்றும் தாய், தந்தையாக கருத வேண்டும் எனவும் குறிப்பிடுகிறார். சுரநோய், கட்டி, பவுத்திரம், தோல் நோய்களுக்கு 10 பொற்காசுகளும், காசநோய், நீரிழிவுக்கு 30, பால்வினை, புற்றுநோய்க்கு 15, அல்சர் நோய்க்கு 25 பொற்காசுகளும் கட்டணம் பெறலாம், என தேரையர் குறிப்பிட்டுள்ளார். முக்கால் பங்கு பணத்தை, மருந்து வாங்கும் போதும், கால்பங்கு பணத்தை, நோய் தீர்ந்தபின்பும் மருத்துவர் பெற்றுக் கொள்ள வேண்டும். அரசனே நோயாளியாக இருந்தாலும், மருத்துவரை உபசாரத்துடன் வரவேற்று, வணங்கி, விரும்பும் இருக்கை, வேண்டும் பொருளை கொடுத்து, பணிவுடன் மருந்தை வாங்கி, பத்தியம் தவறாமல் உட்கொள்ள வேண்டுமென, மருத்துவர் மற்றும் நோயாளியின் இலக்கணங்களாக பண்டைய சித்த மருத்துவ நூல்களில் குறிப்பிட்டுள்ளன.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

USA - Wildfires in California & Los Angeles - Hundreds of homes in ashes

அமெரிக்கா - கலிபோர்னியா & லாஸ் ஏஞ்சல்ஸில் காட்டுத் தீ - சாம்பலான நூற்றுக்கணக்கான வீடுகள் - காணொளி USA - Wildfires in California & Lo...