>>>துப்பாக்கி! * வெள்ளி வென்றார் விஜய் * இந்தியாவுக்கு 2வது பதக்கம்


லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கம் கிடைத்தது. துப்பாக்கி சுடுதலில் விஜய் குமார் (25 மீ., ரேபிட் பயர் பிஸ்டல்) வெள்ளிப் பதக்கம் வென்று சாதித்தார். இதன்மூலம் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்ற நான்காவது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார்.
லண்டனில் 30வது ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. நேற்று நடந்த ஆண்களுக்கான 25 மீ., "ரேபிட் பயர் பிஸ்டல்' துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா சார்பில் விஜய் குமார் பங்கேற்றார். நேற்று முன்தினம் நடந்த முதலாவது தகுதிச் சுற்றில் 292 புள்ளிகள் பெற்ற விஜய் குமார், இரண்டாவது தகுதிச் சுற்றுக்கு முன்னேறினார். நேற்று நடந்த இரண்டாவது தகுதிச் சுற்றில் 293 புள்ளிகள் பெற்றார். இதன்மூலம் மொத்தம் 585 புள்ளிகள் (292 + 293) பெற்ற விஜய் குமார் 4வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினார்.
வெள்ளி பதக்கம்:
முக்கியமான பைனலில் துவக்கத்தில் இருந்தே அபாரமாக ஆடிய விஜய் குமார், 30 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடம் பிடித்தார். இதன்மூலம் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கத்தை பெற்றுத் தந்தார்.
* இது, ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு கிடைத்த நான்காவது பதக்கம். முன்னதாக 2004ல் நடந்த ஏதென்ஸ் ஒலிம்பிக் "டபுள் டிராப்' பிரிவில் இந்தியாவின் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் வெள்ளிப் பதக்கம் வென்றார். கடந்த 2008ல் நடந்த பீஜிங் ஒலிம்பிக் 10 மீ., "ஏர் ரைபிள்' பிரிவில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றார். லண்டன் ஒலிம்பிக் 10 மீ., "ஏர் ரைபிள்' பிரிவில் இந்திய வீரர் ககன் நரங் வெண்கலப் பதக்கம் வென்றார்.
* இது, ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவுக்கு கிடைத்த 22வது பதக்கம்.
* தவிர இது, தனிநபர் பிரிவில் இந்தியாவுக்கு கிடைத்த 9வது பதக்கம். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 1900ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பிரிட்டன் வம்சாவளியை சேர்ந்த நார்மன் பிரிட்சர்ட் பங்கேற்றார். இவர் 200 மீ., ஓட்டம் மற்றும் 200 மீ., தடை ஓட்டத்தில் தலா ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்மூலம் தனிநபர் பிரிவில் இந்தியாவுக்கு மொத்தம் 11 பதக்கம் கிடைத்துள்ளது.
இப்போட்டியில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கத்தை முறையே கியூபாவின் புபோ (34 புள்ளி), சீனாவின் பெங் டிங் (27) கைப்பற்றினர்.
யார் இந்த விஜய் குமார்
இமாச்சல பிரதேசத்தின் ஹமிர்புர் மாவட்டத்தின் ஹர்சவுர் கிராமத்தை சேர்ந்தவர் விஜய் குமார், 27. இந்திய ராணுவத்தில் சுபேதாராக பணிபுரிகிறார். 25 மீ., "ரேபிட் பயர் பிஸ்டல்' பிரிவில் 2006 காமன்வெல்த் போட்டியில், 2 தங்கம் வென்றார். பின், 2010 டில்லி காமன்வெல்த் போட்டியில் 3 தங்கம், ஒரு வெள்ளி கைப்பற்றினார். 
* லண்டன் ஒலிம்பிக்கில் 10 மீ., "ஏர் பிஸ்டல்' பிரிவில் பங்கேற்ற இவர், 31வது இடம் பிடித்திருந்தார்.
* துப்பாக்கிசுடுதலைத் தவிர, குத்துச்சண்டை, டேபிள் டென்னிசில் அதிக ஆர்வம் கொண்டவர்.
* இவருக்கு ரஷ்யாவின் பாவெல் ஸ்மிர்நாக், தனிப்பட்ட பயிற்சியாளராக உள்ளார்.
காலிறுதியில் விஜேந்தர்:
ஆண்களுக்கான குத்துச்சண்டை "மிடில் வெயிட்' 75 கி.கி., எடைப்பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் விஜேந்தர் சிங், அமெரிக்காவின் டெரல் கவுஷாவை சந்தித்தார். இதில் விஜேந்தர் சிங் 16-15 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். ஆக., 6ம் தேதி நடக்கவுள்ள காலிறுதியில் விஜேந்தர் சிங், உஸ்பெகிஸ்தானின் அபாஸ் அடோயிவை சந்திக்கிறார்.
ஜாய்தீப் ஆறுதல்:
ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 50 மீ., "ரைபிள் புரோன்' பிரிவு பைனலுக்கான தகுதிச் சுற்றில் இந்தியா சார்பில் ஜாய்தீப் கர்மகர், ககன் நரங் பங்கேற்றனர். இதில் ஜாய்தீப் கர்மகர் 595 புள்ளிகள் பெற்று 7வது இடம் பிடித்தார். இதன்மூலம் பைனலுக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீரர் ககன் நரங் 593 புள்ளிகளுடன் 18வது இடம் பிடித்து பைனல் வாய்ப்பை இழந்து வெளியேறினார்.
பைனலில் இந்திய வீரர் ஜாய்தீப் கர்மகர் 104.1 புள்ளி பெற்றார். மொத்தம் 699.1 (595+104.1) புள்ளிகள் பெற்ற ஜாய்தீப் கர்மகர் 4வது இடம் பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.
லீக் சுற்றில் 600 புள்ளிகள் பெற்ற பெலாரஸ் வீரர் செர்ஜி மார்டினோவ், பைனலில் 105.5 புள்ளிகள் பெற்றார். மொத்தம் 705.5 புள்ளிகள் பெற்ற மார்டினோவ் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். தவிர இவர், புதிய <உலக சாதனை படைத்தார். வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கத்தை முறையே பெல்ஜியத்தின் லியோனல் காக்ஸ் (599 + 102.2 = 701.2), சுலோவேனியாவின் ராஜ்மண்டு டெபிவச் (596 + 105.0 = 701.0) கைப்பற்றினர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

01-04-2025 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் - UPS - Unified Pension Scheme இன் முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் - தமிழில்...

எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - அலகு 1 - பாடக்குறிப்பு - ஜூன் முதல் வாரம் (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Unit 1 - Notes of Lesson - June 1st Week)...

2023-24 ஆம் நிதியாண்டு & 2024-25 ஆம் கணக்கீடு ஆண்டு - புதிய மற்றும் பழைய முறை வருமான வரி விகிதங்கள் மற்றும் வருமான வரி அடுக்குகள் குறித்த தகவல்கள் (Income Tax Slabs FY 2023-24 & AY 2024-25 - New & Old Regime Tax Rates)...