தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி, 7 சதவீதம்
உயர்த்தப்பட்டுள்ளதாக, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். ஜூலை மாதம்
முதல், முன்தேதியிட்டு இந்த பணம் வழங்கப்படும்.
இதுகுறித்து, முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தாண்டு, ஜூலை மாதம்
முதல், மத்திய அரசு அலுவலர்களுக்கான, அகவிலைப்படியை, அவர்கள் அடிப்படை
மற்றும் தர ஊதியத்தில், 7 சதவீதம் உயர்த்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் அடிப்படையில், அதே ஜூலை மாதம் முதல், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும்
ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை, அவர்கள் அடிப்படை மற்றும் தர ஊதியத்தில், 7
சதவீதம் உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேபோல், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஊதியம் பெறும், அரசு ஊழியர்கள்
மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியும், உயர்த்தி வழங்கப்படுகிறது. இந்த
அகவிலைப்படி உயர்வு, ஜூலை 1ம் தேதி முதல் கணக்கிடப்பட்டு, ரொக்கமாக
வழங்கப்படும். இந்த உயர்வு, உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு மானியம்
பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்கள், ஆசிரியர்கள், கிராம
உதவியாளர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள், ஊராட்சி
உதவியாளர்கள், எழுத்தர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பொருந்தும். அகவிலைப்படி
உயர்வால், 18 லட்சம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியம் மற்றும்
குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் பயனடைவர். இதன் மூலம், அரசுக்கு, ஆண்டு
ஒன்றுக்கு, 1,500 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். இவ்வாறு அறிக்கையில்
கூறப்பட்டுள்ளது.
ஊழியர்கள் மகிழ்ச்சி: மத்திய அரசு அறிவிப்பை தொடர்ந்து, முதல்வரின்
அறிவிப்புக்காக மாநில அரசு ஊழியர்கள் காத்திருந்தனர். இந்நிலையில், நேற்று
வெளியான அறிவிப்பை அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.
முதல்வரின் இந்த அறிவிப்பிற்கு, தமிழ்நாடு அரசு அலுவலர், தமிழ்நாடு தலைமைச்
செயலக ஊழியர்கள், தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை
பணியாளர்கள், ஆசிரியர்கள், சத்துணவுப் பணியாளர்கள், ஓய்வூதியர்
சங்கத்தினர், முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.