எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை, நரம்பியல் தொடர்பான மருத்துவப் பரிசோதனை குறித்து, மூன்றாண்டு பட்டப் படிப்பை அறிமுகப்படுத்தி உள்ளது.
"பி.எஸ்சி., - நியூரோ எலக்ட்ரோ பிசியாலஜி" என்ற, இந்த புதிய மூன்றாண்டு
பட்டப் படிப்பை, தமிழகத்தில் முதன்முறையாக, எம்.ஜி.ஆர்., மருத்துவப்பல்கலை
துவக்குகிறது. மூளை நரம்பியல் செயல்பாட்டை, துல்லியமாக அறிவது; முதுகுத்
தண்டுவடப் பகுதி மற்றும் முக்கியப் பகுதிகளில் உள்ள தசைப் பகுதிகளை ஆய்வு
செய்வது தொடர்பாக, இந்த பாடத்திட்டம் வடிவமைக்கப் பட்டு உள்ளது.
தசைப் பகுதிகளின் பலவீனத்தை அறிவது, தூக்கத்தில் திடீரென வலிப்பு
ஏற்படுவது உள்ளிட்ட பிரச்னைகளை, இந்தப் படிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
இந்தப் படிப்பு, முன்னணி மருத்துவமனை வழியாக, மாணவ, மாணவியருக்கு
வழங்கப்படும் என, பல்கலை தெரிவித்துள்ளது.
பொதுவான நரம்பியல் மருத்துவம் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை குறித்த
பிரச்னைகள் குறித்தும், மாணவ, மாணவியருக்கு பயிற்சி அளிக்கப்படும்.
ஆபத்தான நேரங்களில், நோயாளிகளை எப்படி கையாள்வது என்பது குறித்தும்,
பயிற்சி அளிக்கப்படும். படிப்பை முடித்ததும், உடனடியாக வேலை வாய்ப்புகள்
கிடைக்கும் எனவும், பிளஸ் 2வில், உயிரியல், இயற்பியல்மற்றும் வேதியியல்
பாடங்களை படித்த மாணவ, மாணவியர், இந்தப் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்
என்றும், பல்கலை தெரிவித்துள்ளது.
சென்னையில், விஜயா மருத்துவமனையில் உள்ள, விஜயா கல்வி அகடமி மூலம்,
இந்தப் படிப்பு வழங்கப்படுகிறது. இங்கு, அக்., 15ம் தேதி வரை,
விண்ணப்பங்கள் வழங்கப்படும்.