தஞ்சை, நெல்லை மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள, புதிய கால்நடை
மருத்துவக் கல்லூரிகளை முதல்வர் ஜெயலலிதா, வீடியோ கான்பரன்சிங் மூலம்,
சென்னையில் இருந்தபடி திறந்து வைத்தார். கால்நடைகளுக்கு தரமான மருத்துவ
வசதிகளை அளிக்க, தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டிலும், நெல்லை மாவட்டம், ராமையன்
பட்டியிலும் புதிய கால்நடை மருத்துவ கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிலையம்
கட்ட முதல்வர் உத்தரவிட்டார். ஒரத்தநாட்டில், 177.92 ஏக்கர் அரசு நிலம் ஒதுக்கப்பட்டது. கட்டமைப்பு
வசதிகளுக்காக, 16.34 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டது. இக்கல்லூரிக்கு,
முதல்வர் மற்றும், 38 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், நெல்லை
மாவட்டம் ராமையன் பட்டியில், மருத்துவக் கல்லூரிக்காக, 139.21 ஏக்கர்
நிலமும், கட்டமைப்பு வசதிகளுக்காக, 12.59 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டது. இந்த கல்லூரிக்கு, முதல்வர் மற்றும், 32 ஆசிரியர்கள்
நியமிக்கப்பட்டுள்ளனர். இரண்டு கல்லூரிகளிலும், தலா, 40 மாணவ, மாணவியர்
முதலாண்டில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த இரு கல்லூரிகளையும், "வீடியோ
கான்பரன்சிங்" மூலம், முதல்வர் ஜெயலலிதா நேற்று சென்னை கோட்டையில்
நடந்த நிகழ்ச்சியில், திறந்து வைத்தார்.
கால்நடை மற்றும் மீன் வளத் துறையினருக்கு, 3.99 கோடி ரூபாயில், 61 புதிய
வாகனங்களையும் முதல்வர் வழங்கினார். ஆவின் நிறுவனத்தில், பணியின்போது
உயிரிழந்த ஊழியர்களின், 56 வாரிசுதாரர்களுக்கு, கருணை அடிப்படையிலான பணி
நியமன ஆணைகளும் வழங்கப்பட்டன.