அரசு கல்லூரி பேராசிரியர்களிடம், ஆராய்ச்சி திறனை வளர்க்கும் வகையில்,
"சிறிய ஆய்வு திட்டத்தை" அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்தின்
மூலம், 50 பேராசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். ஆய்வுக்கு, 1 லட்ச
ரூபாய் நிதி அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள, அரசு கல்லூரி
பேராசிரியர்கள், புதிய ஆய்வுகளை மேற்கொண்டு, கண்டுபிடிப்புகளை வெளிக்கொணர,
சிறிய ஆய்வு திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தில், சேர
விரும்பும் ஆசிரியர்கள் குறித்து, தகவல்களை அனுப்ப, தமிழ்நாடு மாநில உயர்
கல்வி மன்றம், கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இதில், பேராசிரியர்கள் மேற்கொள்ளும் ஆய்வு தலைப்பு மற்றும் விவரங்கள்,
ஆய்வினால் சமுதாயத்திற்கு ஏற்படும் பயன் உள்ளிட்ட, தகவல்களை அனுப்ப
அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் தங்களின், எம்.பில்.,-பி.எச்டி.,
படிப்பின் ஆய்வு தலைப்புகளை, இத்திட்டத்தில் பயன்படுத்த கூடாது. ஒரு
ஆண்டிற்குள் ஆய்வை முடிக்க வேண்டும். ஆய்வுக்காக, 1 லட்சம் ரூபாய்
வழங்கப்படுகிறது.
முடிக்காத நிலையில், ஆறு மாதங்கள் அவகாசம் அளிக்கப்படும். அதிலும்
முடிக்கவில்லையெனில், சம்பளத்தில் இருந்து, ஆய்வு தொகை பிடித்தம்
செய்யப்படும் எனவும், கூறப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், அரசு கல்லூரி பேராசிரியர், தங்கள் ஆய்வு தகவல்களை
அனுப்பி வருகின்றனர். இதுவரை, 100க்கும் மேற்பட்ட, விண்ணப்பங்கள்
பெறப்பட்டுள்ளன. மூவர் குழு இந்த விண்ணப்பங்களிலிருந்து, சிறந்த ஆய்வு
தலைப்பை தேர்ந்தெடுக்க, மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழு, இத்தலைப்பில் ஆய்வுகள் வந்துள்ளதா, ஆய்வு மக்களுக்கு உதவுமா
உள்ளிட்டவை குறித்து, ஆராய்ந்து தேர்ந்தெடுக்கிறது.இதுகுறித்து, தமிழ்நாடு
மாநில உயர் கல்வி மன்ற துணை தலைவர் சிந்தியா பாண்டியன் கூறியதாவது:
அரசு கல்லூரி ஆசிரியர்களிடம், ஆய்வுகளை ஊக்குவிக்கும் வகையில்,
இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம், அரசு கல்லூரிகளின் கல்வி,
ஆராய்ச்சி தரம் உயரும்; தனியார், அரசு உதவி பெறும் கல்லூரிகளை போல, அரசு
கல்லூரிகளும் மேம்படும். இவ்வாறு, சிந்தியா பாண்டியன் கூறினார்.