கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>'சியரா லியோனும்' வைரக் கற்களினால் ஏற்பட்ட சோகமும் !

 
'சியரா லியோனும்' வைரக் கற்களினால் ஏற்பட்ட சோகமும் !!!!

வைரக் கற்களை உற்பத்தி செய்யும் உலகின் முதல் பத்து நாடுகளில் ஒன்று. தாது பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் அதிக அந்நிய செலாவணியை ஈட்டும் நாடு. 'டைட்டானியம்', 'பாக்சைட்' மற்றும் தங்கம் ஆகியவற்றை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்று. உலகின் மூன்றாவது பெரிய இயற்கை துறைமுகத்தைக் கொண்ட நாடும் கூட...ஆனாலும் அதன் எழுபது சதவித மக்கள் வறுமையில் வாழ்கிறார்கள். அந்நாடு 'சியரா லியோன்' (Sierra Leone).

மேற்கு ஆப்பிரிக்காவில் அட்லாண்டிக் பெருங்கடலின் கடற்கரையை ஒட்டியமைந்த ஒரு சிறு நாடு. மற்ற ஆப்பிரிக்க நாடுகளைப் போலவே எல்லா இயற்கை வளங்களையும் கொண்டது. சுரங்கத் தொழிலை ஆதாரமாக கொண்ட நாடு, குறிப்பாக வைரக் கற்களை அதிகமாக தோண்டி எடுக்கும் நாடு. ஐம்பத்தி நான்கு லட்சத்திலிருந்து அறுபத்தி நான்கு லட்சம் மக்கள் தொகை கொண்டதாக கணக்கிடப்பட்டுள்ளது. அறுபது சதவிதம் முகமதியர்களும், அதிக அளவு கிருத்துவ சிறுபான்மையர்களும் வாழுகிறார்கள். பதினாறு சிறு இனக்குழுக்கள், சமவிகிதத்தில் நாட்டின் முப்பது சதவித மக்கள் தொகையாக வாழ்ந்தாலும், அவர்களிடையே இனப்பிரச்சனையோ, மதப்பிரச்சனையோ எழுவதில்லை. உலகின் 'மத சகிப்புத்தன்மை' கொண்ட நாடுகளில் ஒன்றாக சியரா லியோன் மதிப்பிடப்பட்டிருக்கிறது.

இயற்கை வாரி வழங்கி இருந்தாலும் அந்நாட்டின் இன்றைய நிலைக்கு காரணம்..நாம் நன்கு அறிந்த காலனிய ஆதிக்கமும் அந்நிய நிறுவனங்களின் கொள்ளையும் தான். 'சியரா லியோனும்' மற்ற மூன்றாம் உலக நாடுகளைப் போலவே பல அந்நிய ஆட்சிகளுக்கு உட்பட்டு, பிரித்தானியர்களின் காலனிகளில் ஒன்றாக இருந்து 27, ஏப்ரல் 1961-இல் விடுதலை அடைந்தது. அதன் முதல் பிரதமரான 'சர் மில்டன் மார்க்கே' (Milton Margai)-வில் துவங்கி அவருக்கு பின் வந்த ஆட்சியாளர்கள் யாரும் அந்நாட்டிற்கு நல்லாட்சியை வழங்கி விடவில்லை. ஊழல், நிர்வாக சீர்கேடு, தேர்தலில் வன்முறை, அதிகார கயமைத்தனம் போன்றவை நாட்டை சீர்குலைத்தது.

1968-இல் ஆட்சிக்கு வந்த 'சைக்கா ஸ்டிவன்ஸ்' (Siaka Stevens)-இன் காலத்திலேயே அந்நாட்டின் இயற்கை வளங்கள், பெரும் அந்நிய நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்பட்டன. வைரங்கள் பெரும் அளவில் கிடைக்க கூடிய வாய்ப்பே அந்நாட்டை பெரும் துயரத்திற்கு தள்ளியது எனலாம். வைரத் தொழிலில் பெரும் நிறுவனமான 'டிபியர்ஸ்' (DeBeers)-உடன் அரசாங்கம் செய்து கொண்ட உடன்படிக்கை, பெரும் கொள்ளையாக இருந்தது. ஆட்சியாளர்களின் தனிப்பட்ட வசதிகளை பெருக்கவே அவை உதவியன. 1984-இல் 'டி பியர்ஸ்' அரசாங்கத்துடனான உடன்படிக்கையை முறித்துக் கொண்டது என்றாலும் கள்ளத்தனமாக வைரங்கள் கடத்தப்பட்டன. அரசாங்கத்திற்கு வரவேண்டிய பணம் முழுவதும் தனியாரின் வசம் குவிந்தது.

இதன் தொடர்ச்சியாக நாட்டின் கருவூலம் சிதறுண்டு போனது. அரசாங்க ஊழியர்களுக்குக்கூட ஊதியம் தரமுடியாத நிலை உண்டானது. கல்வி, வேலை வாய்ப்பு என எதுவும் மக்களுக்கு கிடைக்க வில்லை. தலைநகரமான பிரிடவுனிலேயே (Freetown) எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டது. நாடு மிக மோசமான நிலையை அடைந்ததும், அதன் மேல்மட்ட வர்க்கமும், தொழில்முறை வர்க்கமும் (professional class) வெளிநாடுகளுக்கு ஓடிப்போயின. 1991-இல் 'சியரா லியோன்' உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக மாறிப்போனது.RUF நாட்டின் இந்நிலைக் கண்டு எழுந்து நின்ற இளைஞர் கூட்டம் ஒன்று, 'புரட்சிகர ஐக்கிய முன்னணி' - Revolutionary United Front'(RUF) என்ற அமைப்பின் பெயரில் அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதம் தூக்கியது. 'போடே சங்கா' (Foday Sankoh) என்பவரால் உருவாக்கப்பட்ட இவ்வமைப்பு மக்களுக்கு பெரும் நம்பிக்கையைக் கொடுத்தது.'அடிமையும் இல்லை, முதலாளியும் இல்லை, அதிகாரமும் செல்வமும் மக்களுக்கே' ('No More Slaves, No More Masters. Power and Wealth to the People') என்று 'RUF' முழங்கியது. இலவச கல்வி, சுகாதாரம் மற்றும் வைர வருமானத்தில் சரிவிகித பங்கு என்பது எல்லாருக்கும் ஏற்புடையதாக இருந்தது. மக்கள் 'RUF'-ஐ வரவேற்றார்கள், இணைந்தார்கள் இருண்ட அரசாங்கத்தை காய் அடிப்பதும், மக்கள் அரசை நிறுவுவதும் மக்களின் பெரும் கனவாகிப்போனது. அது கொடுத்த உத்வேகம் அத்தேசத்தை 'உள்நாட்டுப் போரில்' உற்சாகமாக ஈடுபட தூண்டியது.

'RUF'துவக்கி வைத்த இப்போர் பல கட்டங்களை கடந்து வர வேண்டியதாக இருந்தது. புரட்சிக்குழு அடைந்த வெற்றியும் பெற்ற ஆதரவும், அரசாங்க படைத்துறையின் ஒரு பிரிவை 'RUF'-வோடு இணைய தூண்டியது, இவ்விரண்டு படைகளை சமாளிக்க உருவான மக்கள் படை, இவற்றை அடக்க வந்த வெளிநாட்டுப்படை, அமைதிப்படை, தனியார் படை, ஐநா படை என பல பெரும் படைகள் பங்கு கொண்ட இப்போர், அம்மக்களுக்கு பெரும் இன்னல்களை கொண்டுவந்தது.மற்ற எந்த உள்ளாட்டு போரிலும் நிகழாத ஒரு கொடுமை இங்கே நடந்தது. பொது மக்களின் கை கால்களை துண்டிப்பது. ஆம்..ஒருபுறம் 'RUF' மக்கள் தேர்தலில் ஓட்டு போடாமல் இருக்க அவர்களின் கைகளை துண்டித்தது. மறுபுறம் அரசு படை 'RUF'-இல் இணையாமல் இருக்க மக்களின் கை கால்களை துண்டித்தது. மேலும் சிறுவர்களை போரில் ஈடுபத்தியதும், வைரம் தோண்ட மக்களை அடிமைப்படுத்தியதும் நிகழ்ந்தது. சிறு பிள்ளைகளின் கைகளும் வெட்டப்பட்டன. பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் போரில் ஈடுபடுத்தப்பட்டனர். இக்கொடுமைகளை விளக்க ஒரு புத்தகமே எழுதவேண்டும். இங்கே அதற்கு இடம் போதாது.

23 மார்சு 1991-இல் துவங்கிய 'சியரா லியோனின்' உள்நாட்டுப் போர், பதினோறு ஆண்டுகளுக்குப் பிறகு 18 ஜனவரி 2002-இல் முடிவுக்கு வந்தபோது அது எதிர்பார்த்த மாற்றத்தை ஏற்படுத்தி இருந்ததா என்றால்.. இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். எனில் பதினோறு ஆண்டு கால போராட்டத்தின் பயன் என்ன?..வேறன்ன.. கொல்லப்பட்ட ஐம்பதாயிரம் பேர், முழுமையாக சீர்குலைந்து போன உள்கட்டமைப்பு, இருபது லட்சம் பேர் பக்கத்து நாடுகளுக்கு இடம் பெயர்ந்தது, பல்லாயிரக்கணக்கானோர் கை கால்களை இழந்தது மற்றும் மீண்டு வர முடிய வறுமையும் தான்.நாட்டில் பாதிக்கும் மேற்பட்டோர் ஒரு நாள் வருமானம் என்பது ஒரு டாலருக்கும் கீழ்தான். போதிய ஆகாரம் இன்மையால் நான்கில் ஒரு குழந்தை ஐந்து வயதுக்குள்ளாகவே இறந்து போகிறது. இன்றும் அந்நாட்டின் வளம் அந்நியர்களின் கைகளில் தான் இருக்கிறது.இதற்கு காரணம் என்ன என்ற கேள்விக்கு பதில்..நாம் அறிந்ததுதான். அரசியல் அயோக்கியத்தனம், உலகப்பொருளாதாரம், ஐக்கிய நாட்டு சபை, உலகயமைதி, பன்னாட்டு சமூகம், துரோகம், பேராசை.. என நீண்டுக் கொண்டே போகும் காரணங்கள் பல. இப்போரில் ஈடுபட்ட 'RUF'-க்கு பணம் எங்கிருந்து வந்தது? அது அந்நாட்டின் வளங்களில் ஒன்றான வைரங்களை கள்ள சந்தையில் விற்றதில் வந்த பணம். அப்பணத்தைக் கொண்டு ஆயுதங்கள் வாங்கப்பட்டன.

இப்படி வைரங்களை கள்ள சந்தையில் விற்று போருக்கான ஆயுதங்களை வாங்கப்படுகிறது என்பது 'அங்கோலிய உள்நாட்டுப் போரின்' (Angolan Civil War) போதுதான் உலகத்தாருக்கு தெரியவந்தது. அடிமைகளால் தோண்டி எடுக்கப்பட்ட அவ்வைரங்கள் 'இரத்த வைரங்கள்' (Blood Diamond) என அழைக்கப்படுகின்றன. உலக வைரத் தொழிலில் இவ்வைரங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.2006-இல் வெளியான 'Blood Diamond' என்னும் படம் 'சியரா லியோனின் உள்நாட்டுப் போர்' நடந்த காலகட்டத்தில் நிகழும் கதை ஒன்றின் மூலமாக, 'இரத்த வைரங்கள்' பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

'RUF' படையிடம் தன் மகனை பறிகொடுத்துவிட்டு, அடிமையாக சிக்கிக் கொண்டு சுரங்கத்தில் வைரம் தோண்டும் ஒரு தகப்பன். இரத்த வைரங்களை கடத்த முயன்று மாட்டிக்கொள்ளும் கதாநாயகன். இப்போரை கட்டுரையாக்க வந்த செய்தியாளராக கதாநாயகி. மூவரும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ள வேண்டிய சூழ்நிலையை அடிப்படையாக கொண்டு அப்போரை விவரிக்கிறார் அதன் இயக்குனர்.'The Empire in Africa'(2006) என்னும் ஆவணப்படம் இப்போரை களக்காட்சிகளோடு விவரிக்கிறது. இப்போரில் அம்மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை இப்படம் பாரபட்சம் இன்றி அலசுகிறது. இரு தரப்பு படைகளும், பன்னாட்டு சமூகமும் இம்மக்களுக்கு செய்யத்தவறியதை, செய்த துரோகத்தை இப்படம் பதிவுசெய்திருக்கிறது

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Voter's Day Pledge (January 25) - CEO Proceedings

 தேசிய வாக்காளர் தின உறுதிமொழி (ஜனவரி 25) - CEO Proceedings  Voter's Day Pledge (January 25) - CEO Proceedings  >>> தரவிறக்கம் ...