கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 ஓய்வுக்காலத்தில் பென்ஷனைக் குறைக்கும் கம்யூடேஷன்..! - அரசு ஊழியர்கள் உஷார்!

ஓய்வுக்காலத்தில் பென்ஷனைக் குறைக்கும் கம்யூடேஷன்..! - அரசு ஊழியர்கள் உஷார்!

முகைதீன் சேக் தாவூது . ப (நன்றி : விகடன்.com)


இன்றைக்கு குடும்பச் செலவுக்கு ரூ.20,000 தேவையெனில், 20 ஆண்டுகள் கழித்து ரூ.64,140 தேவை!

பத்து மாதங்களுக்கு முன் அரசுப் பணியில் இருந்து ஓய்வுபெற்ற ஒருவர், 10 வருடங்களுக்கு முன், அதே பதவியிலிருந்து ஓய்வு பெற்றிருந்த தன் நண்பரிடம், தற்போது எவ்வளவு ஓய்வூதியம் பெறுகிறீர்கள் என்று கேட்டார்.

மூத்த ஓய்வூதியதாரர் தனது மாதாந்தர ஓய்வூதியத் தொகையைச் சொல்லக் கேட்டதும் சமீபத்தில் ஓய்வுபெற்றவர் மயங்கி விழாத குறை. காரணம், மூத்த ஓய்வூதியதாரர் வாங்கிய தொகை மிக மிக அதிகமாக இருந்தது.

“அதெப்படி? உங்களைவிட இரண்டரை மடங்கு சம்பளம் வாங்கியவன் நான். என்னைவிட 10 வருடத்துக்கு முன் ரிட்டையரான உங்களது மாதாந்தர பென்ஷன் ரூ.4,200 அதிகமாக இருக்கிறதே!’’ என வியப்புடன் கேட்டார். “நீங்கள் என்னைவிட அதிகமாக கம்யூடேசன் தொகை வாங்கியிருப்பீர்கள்… அதற்கான பிடித்தமும் அதிகமாக இருக்கும். எனவே, பிடித்தம் போக நிகர பென்ஷன் உங்களுக்குக் குறைவாக இருக்கும்’’ என்று சொல்ல, இளைய ஓய்வூதியதாரருக்கு தான் செய்த தவறு என்ன என்று புரிந்தது (பார்க்க, கீழே உள்ள அட்டவணை)

அவர் மட்டுமல்ல, ஓய்வுக்காலப் பலனாகக் கிடைக்கப்போகும் பணத்தை எப்படிப் பத்திரப்படுத்துவது என்ற எந்த நிதித்திட்டமும் வகுக்காமல், வந்த பணத்தை எல்லாம் இஷ்டத்துக்குச் செலவு செய்துவிட்டு, மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய ஓய்வுக்காலத்தை மன உளைச்சலுடன் நகர்த்திக்கொண்டிருப்போர் பலர். என்ன காரணம் என்று கொஞ்சம் விளக்கமாகப் பார்ப்போம்.

ஓய்வு பலவகை

அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெறுவது பலவகைகளாக உள்ளன. வயது முதிர்வில் (Superannuation) ஓய்வு, விருப்ப ஓய்வு, உடல் இயலாமை காரணமாகப் பணியில் தொடர முடியாதவர்களுக்கு மருத்துவக்குழு பரிந்துரையின் பேரில் ‘இயலாமை’ ஓய்வு மற்றும் கட்டாய ஓய்வு.

பணப்பலன்கள் என்னென்ன?

மேற்கண்ட அனைத்து வகை ஓய்வினருக்கும், ஓய்வூதியம் பணிக்கொடை (graduity), பணிக்காலத்தில் சேர்த்து வைத்த விடுப்புக்கான சம்பளம் (leave encash) ஆகியவற்றுடன் ஊழியரின் சொந்த சேமிப்பான பிராவிடன்ட் ஃபண்ட் பணமும் தரப்படுகிறது.

இவை அல்லாமல் ‘வேண்டும்’ என்று விருப்பம் தெரிவிப்பவர்களுக்கு மட்டும் ஓய்வூதிய கம்யூடேசன் தொகை தரப்படுகிறது. அப்படி என்றால் என்ன?

கம்யூடேசன் என்பது என்ன..?

ஓய்வுபெற்ற அரசுப் பணியாளருக்கு மாநிலக் கணக்காயரால் ஏற்பளிக்கப்படும் ஓய்வூதியத்தில் மூன்றில் ஒரு பங்கை அரசிடம் ஒப்படைத்து விட்டு, ஒட்டுமொத்தமான (Lumpsum) தொகை ஒன்றைப் பெற்றுக்கொள்வதுதான் ஓய்வூதிய கம்யூடேசன். உதாரணமாக, தமிழக அரசில் ஓய்வு பெற்ற ஒருவருக்கு மாநிலக் கணக்காயர் ஏற்பளிப்பு செய்த ஓய்வூதியம் ரூ.30,000 என்றால், அந்த ஓய்வூதியதாரர் தனது ஓய்வூதியத்தில் மூன்றில் ஒரு பங்கு தொகையான 10,000 ரூபாயை ‘கம்யூட்’ செய்யலாம். அதாவது, முன்கூட்டியே பெறலாம். இது ஓய்வூதியத்தில் 33.33% (மத்திய அரசுப் பணியினருக்கு 40% ராணுவப் பணி ஓய்வினருக்கு 50% வரை கம்யூட் செய்யலாம்) ஆகும்.

ஓய்வு பெறும்போது ஒருவரது வயது 59 எனில், 10,000 ரூபாயை கம்யூடேசன் செய்து அவர் முன்கூட்டியே பெறக்கூடிய தொகை ரூ.10,04,520 ஆகும். அதாவது, ஒன்றுக்கு நூறாகத் தருகிறது அரசு. இது மிகப்பெரிய பரிசு என்றுகூட சொல்லலாம். ஆனால், இது என்றோ கிடைக்க வேண்டிய பணத்தை முன்கூட்டியே பெறுவதுதான்; ஒரு வகை முன்பணம்தான். எவ்வளவு ரூபாய் நாம் கம்யூடேசன் செய்கிறோமோ, அதைப்போல நூறு மடங்கு தொகை தரப்படுகிறது. 180 மடங்கு பிடித்தம் செய்யப்படுகிறது.

பென்ஷனை கம்யூட் செய்து முன்பணமாகப் பெற்று வீடு கட்டலாம் அல்லது நல்ல மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். வங்கி எஃப்.டி-யில் வைத்திருப்பதில் பயனில்லை!

உடனே தொடங்கும் பிடித்தம்

மொத்தத் தொகையான ரூ.10 லட்சத்தை என்றைக்கு பெறுகிறோமோ அன்று முதல் அந்தத் தொகைக்கான பிடித்தம் தொடங்கிவிடும். அதாவது, ரூ.30,000 என்றிருந்த அடிப்படை பென்ஷன் 20,000 ரூபாயாகக் குறைந்துவிடும். தொகை பெற்ற நாளிலிருந்து 180 மாதங்களுக்குப் பிடித்தம் தொடரும். எனவே, தேவை உணர்ந்து பெற வேண்டிய தொகை ‘ஓய்வூதிய கம்யூடேசன்’ ஆகும்.

ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும்?

ஊழியர் ஓய்வுபெறும் ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே ஓய்வூதியம், பணிக்கொடை, பிராவிடன்ட் ஃபண்ட் முதலானவற்றுக்கான விண்ணப்பம் மாநில கணக்காயரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுவிடுகிறது. எனவே, தனக்குக் கிடைக்கப்போகும் மாதாந்தர ஓய்வூதியம் எவ்வளவு, பணிக்கொடை எவ்வளவு என்பதெல்லாம் அப்போதே ஓய்வு பெறும் ஊழியருக்குத் தெரிந்துவிடும்.

பொதுவான கணக்கு என்னவென்றால், 33 வருடப் பணியை முழுமையாக நிறைவு செய்த ஒருவருக்குப் பணிக்கொடையாக 16.5 மாத சம்பளம் விடுப்புக்கான 11 மாத சம்பளம், பிராவிடன்ட் ஃபண்ட் இருப்பு (சுமார்) 16 மாத சம்பளம் என மொத்தம் 43.5 மாத சம்பளம் கிடைக்கும்.

தற்போதைய நிலையில், நடுத்தரமான ஒரு பணியிலிருந்து ஓய்வுபெறும் ஒருவர் ரூ.70,000 அளவில் கடைசிச் சம்பளம் பெறக்கூடும். இந்த சம்பளத்துக்குரிய அகவிலைப்படி மற்றும் வீட்டு வாடகைப்படியுடன் சுமார் ரூ.32 லட்சத்தை ஓய்வுக்கால ரொக்கப் பலனாக பெறக்கூடும். இத்துடன் அவரது மாதாந்தர ஓய்வூதியம் 35,000 ரூபாயாக இருக்கும். இந்த ஓய்வூதியத்துடன் அகவிலைப்படி, மருத்துவப் படி சேரும்.

நிதி ஆலோசனை கட்டாயம் தேவை

இந்த ரூ.32 லட்சத்துடன் முன்னதாக உள்ள கையிருப்பு, கொடுக்கல் வாங்கல் முதலான விவரங்களை விவரித்து, ஒரு நல்ல நிதி ஆலோசகரிடம் ஓய்வுக்கால நிதித் திட்டத்தைப் பெற்றுக்கொண்டு, நிச்சயமாகப் பணம் தேவைப்பட்டால் மட்டுமே ஓய்வூதிய கம்யூடேசன் பெற விண்ணப்பிக்க வேண்டும். காரணம், இன்றைக்கு குடும்பச் செலவுக்கு ரூ.20,000 தேவை எனில் 10 ஆண்டுகள் கழித்து 35,817 ரூபாயும், 20 ஆண்டுகள் கழித்து 64,140 ரூபாயும் இருந்தால்தான் நம்மால் நிம்மதியாக இருக்க முடியும். (பணவீக்கம் 6% என்ற கணக்கில்)

ஏனென்றால், முழுமையான பணிக்காலத்தை நிறைவு செய்து முறையாக பிராவிடன்ட் ஃபண்ட் கணக்கைப் பராமரித்துவரும் ஒருவருக்கு எவ்வளவு ஓய்வூதியம் தீர்மானிக்கப் படுகிறதோ, அதைப்போல் 100 மடங்கு தொகை பணிக்கொடை, விடுப்பு சம்பளம் மற்றும் பி.எஃப் ஆகியவற்றின் மூலம் ரொக்கமாகத் தரப்படும். இதைவிடவும் கூடுதலாக நிதி தேவைப்படுமேயானால் ஓய்வு பெற்ற ஒருவர் வேறு எவரையும் நாடக்கூடாது என்ற தாராள மனதுடன் தரப்படுவதுதான் ‘கம்யூடேசன்’ என்னும் முன்பணம். அதை அதிக பலன் தரக்கூடிய ஏதேனும் ஒன்றில் முதலீடு செய்து தானும் பலன் பெற்று, பிந்தைய தலைமுறைக்கும் விட்டுச் செல்லலாம். உதாரணமாக, இந்தப் பணத்துடன் கொஞ்சம் சொந்தப் பணம், கொஞ்சம் வீட்டுக் கடன் என ஒரு வீடு கட்டி விட்டால், காலத்துக்கும் நாம் அதில் இருந்து கொள்ளலாம். அல்லது சராசரியாக 10 சதவிகி தத்துக்குமேல் வருமானம் தரக்கூடிய அரசினால் அங்கீகரிக்கப்பட்ட திட்டத்தில் (உதாரணம் மியூச்சுவல் ஃபண்ட்) முதலீடு செய்யலாம். மாறாக, ‘கிடைக்கிறதே’ என்பதற்காகப் பணத்தை வாங்கி, வங்கி எஃப்.டி-யில் வைத் திருப்பதாலோ, செலவு செய்வதாலோ எந்தப் பயனும் இல்லை. பிற்பாடு மிகுந்த கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்பதை மனதில் கொண்டு அரசு ஊழியர்கள் செயல்படுவது நல்லது.

ஓய்வுக்காலத்தில் வங்கிக் கடன் சரியா?

ஓய்வுக்கால வாழ்வில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், வங்கிக் கடன். ஓய்வூதியம் தரும் வங்கிகள் தனது ஓய்வூதியர்களுக்குக் கடன் வழங்கி வருகிறது. இது நல்ல விஷயம்தான். ஆனால், ஓய்வூதியத்தை ஏற்கெனவே கம்யூட் செய்து முன்பணமாகப் பெற்றவர்கள், குறைவான பென்ஷன் தொகையே பெறுவார்கள். இந்த நிலையில், மேலும் கடன் வாங்கினால், அந்தக் கடனைத் திரும்பச் செலுத்த பென்ஷனிலிருந்து இன்னொரு பகுதியைத் தர வேண்டியிருக்கும். ஆக, பென்ஷனாகக் கிடைக்க வேண்டிய பணத்தில் மூன்றில் ஒருபங்குதான் கிடைக்கும். அதாவது, கடைசியாக வாங்கிய சம்பளத்தில் ஆறில் ஒரு பங்குதான் ஓய்வூதியமாகக் கிடைக்கும். இந்தப் பணத்தை வைத்து அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியவில்லையெனில், பலவிதமான கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருக்கும். எனவே, பென்ஷன் காலத்தில் வங்கியில் கடன் வாங்க வேண்டுமா என்பதை நன்கு யோசித்து வாங்குவது அவசியத்திலும் அவசியம்!

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...