ஒரே நேரத்தில் இரு கைகளாலும் எழுதும் ஆதி ஸ்வரூபா
மங்களூருவை சேர்ந்த 15 வயது மாணவியும், இளம் எழுத்தாளருமான ஆதி ஸ்வரூபா ஒரே நேரத்தில் தன் இரு கைகளாலும் இரு மொழிகளில் மின்னல் வேகத்தில் எழுதுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் தக்ஷன கன்னட மாவட்டம் மங்களூருவை சேர்ந்தவர் கோபாட்கர். தனியார் பள்ளி ஆசிரியரான இவரது மகள் ஆதி ஸ்வரூபா. 15 வயதான இவர் சிறுவயதிலே பாடல், நடனம், ஓவியம் உள்ளிட்டவற்றை ஆர்வமுடன் கற்று சிறந்து விளங்கினார். அதே வேளையில் படிப்பிலும் முதல் வகுப்பில் தேர்வாகினார்.
ஆதி ஸ்வரூபா சிறு வயதில் வலது, இடது ஆகிய இரு கைகளிலும் எழுதி பழகியுள்ளார். இந்த வித்தியாசமான திறமையை கண்ட தாய் சுமத்கர், அவரை ஊக்குவித்துள்ளார். இதன் விளைவாக ஒரு நிமிடத்தில் இரு கைகளாலும் 45 வார்த்தைகளை எழுதி சாதனை படைத்துள்ளார். ஆதி ஸ்வரூபாவின் மின்னல் வேக எழுதும் ஆற்றலை பாராட்டி உத்தர பிரதேசத்தை சேர்ந்த பரேலி லதா நிறுவனம் அண்மையில் 'இளம் சாதனையாளர் விருது' வழங்கியுள்ளது.
இதுகுறித்து ஆதி ஸ்வரூபா கூறியதாவது:
சிறுவயதில் இருந்தே என் தாயும் தந்தையும் என்னை ஊக்குவித்து வந்தனர். இதனால் பரத நாட்டியம், இந்துஸ்தானி இசை, யாக் ஷ கானா என்ற கன்னட நாடக கலை, ஓவியம் உள்ளிட்டவற்றை முறைப்படி கற்றுக் கொண்டேன். இணையதளம் மூலம் பல குரலில் பேசும் கலை, அனிமேஷன், குறும்பட இயக்கம் ஆகியவை பயின்றேன். கன்னடத்தில் ஒரு சிறுகதை தொகுப்பும், ஆங்கிலத்தில் ஒரு நாவலும் எழுதி வெளியிட்டு இருக்கிறேன். இப்போது இரு மொழிகளிலும் எனது இரண்டாவது நாவலை எழுதி வருகிறேன்.
சிறுவயதில் இருந்தே இரண்டு கைகளையும் பயன்படுத்தி எழுதி வந்தேன். பின் என் அம்மா சுமத்கர் அளித்த பயிற்சியின்படி ஒரு கையில் கன்னடமும், மறு கையில் ஆங்கிலமும் எழுதினேன். தொடர்ந்து பயிற்சி செய்ததன் விளைவாக இப்போது இரு கைகளிலும் இரு மொழிகளிலும் ஒரே சமயத்தில் வேகமாக எழுத முடிகிறது.
என் மீதும் என் திறமைகள் மீதும் என் பெற்றோர் மிகுந்த நம்பிக்கை வைத்தனர். அதனால் என்னை 2 ஆண்டுகளுக்கு முன்பே பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்திவிட்டனர். வீட்டில் இருந்தவாறு படித்து, கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு தேர்வை இரு கைகளாலும் எழுதி முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றேன். சர்வதேச அளவில் நடக்கும் இரு கைகளால் எழுதும் போட்டிகளில் பங்கேற்பதற்காக தயாராகி வருகிறேன். அதே வேளையில் சிறந்த எழுத்தாளராக வேண்டும் என்பதே என் லட்சியம்.
இவ்வாறு ஆதி ஸ்வரூபா கூறினார்.
நன்றி: தமிழ் இந்து...