மக்களை ஒன்றிணைப்பேன்; பிளவுப்படுத்த மாட்டேன் என்று உறுதியளிப்பதாக அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பிடன் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபா் தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த 77 வயதாகும் ஜோ பிடன், அந்த நாட்டின் 46-ஆவது அதிபராக வரும் ஜனவரி மாதம் அவா் பொறுப்பேற்கிறார். ஜோ பிடன், பராக் ஒபாமா அதிபராக பதவி வகித்தபோது துணை அதிபராக இருந்தவர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்பை கடுமையாகப் போராடி தோற்கடித்த ஜோ பிடன் நாட்டு மக்களுக்கு ஆற்றிய வெற்றி உரையில், அமெரிக்க மக்கள் தெளிவான மகத்தான வெற்றியை தந்துள்ளனர்.
"மக்களை பிளவுப்படுத்தாமல், ஒன்றிணைக்க முற்படும் அதிபராக நான் இருப்பேன் என்று உறுதியளிக்கிறேன்; சிவப்பு மாகாணங்கள், நீல மாகாணங்கள் என பிரித்துப் பார்க்கமாமல், ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் சேவை செய்வோம். இனி நிற பேதமில்லா அமெரிக்காவை மட்டுமே பார்க்கப்போகிறோம்" என்று உறுதியளிக்கிறேன்.
"அமெரிக்காவை குணப்படுத்தப்பட வேண்டிய நேரம் இது." அமெரிக்காவுக்கு புதிய நாள் பிறந்துள்ளது. "நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையினால் நான் வெற்றி பெற்றுள்ளேன். இந்த வெற்றியின் மூலம் தங்களது குரலை வெளிப்படுத்தியுள்ளனர். இதுவரை பெறாத வெற்றியை பெற்றிருக்கிறோம். அமெரிக்க அதிபர் தேர்தலிலேயே அதிக வாக்குகள் பதிவான இந்த தேர்தலில் வெற்றிப் பெற்றதற்காக பெருமைக்கொள்கிறோம். இதைவிட சிறந்நாள் வரும் என்று நம்பிக்கையுடன் தனக்கு வாக்கு அளித்திருக்கிறீர்கள்.
"" அமெரிக்காவின் ஆத்மாவை மீட்டெடுப்பதற்கும், இந்த தேசத்தின், நடுத்தர வர்க்கத்தின் முதுகெலும்பை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும், உலக அரங்கில் மீண்டும் அமெரிக்காவின் மரியாதையை உயர்த்துவதற்கும் உழைப்போம்".
அதிபர் டிரம்பிற்கு வாக்களித்த அனைவருக்கும், இன்றிரவு ஏமாற்றத்தை நான் புரிந்துகொள்கிறேன். இப்போது நாம் அனைவரும் கடுமையான சொல்லாட்சியைத் தள்ளி வைத்துவிட்டு, நோய்த்தொற்றை விரட்டவும், தேசத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், வெப்பநிலையைக் குறைக்கவும், மீண்டும் ஒருவரை ஒருவர் சந்தித்து உரையாடுவதற்கான இந்த தருணத்திற்காக ஒற்றுமையாக உழைப்போம் என்று ஜோ பிடன் கூறினார்.