கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

5 ரூபாய் டிபன்; 30 ரூபாயில் மருத்துவம் - `கோவை சாந்தி சமூக சேவை' சுப்பிரமணியம் காலமானார்...

உண்டி கொடுத்தோர்... உயிர் கொடுத்தோரே.... என்கிறது புறநானூறு...

சாந்தி சோசியல் சர்வீஸ் நிறுவனர் மற்றும் தலைவர் திரு.சுப்பிரமணியம் தற்போது நம்மிடம் இல்லை...

ஒரு சாதாரண கூலி தொழிலாளியாக தன் வாழ்வை தொடங்கி சாந்தி கியர்ஸ் என்னும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர்...

ஆனால் அதுவரை அவரை ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்...

சாந்தி சோசியல் சர்வீஸ் என்ற நிறுவனத்தை அவர் தொடங்கிய பின் அவரை தெரியாதவர்களே இல்லை...

பிணியில் கொடியது பசிப்பிணி...

அந்த பசியை முதலில் போக்கினார்...

அதை ஒரு தவமாகவே செய்தார்...தரமான உணவை மிகமிக குறைவான விலையில் சுகாதாரமான இடத்தில் வழங்கினார்...

மருத்துவப் பணியை தொட்டார்... உடல் பரிசோதனை போன்ற பணிகளை சாமானியனும் செய்ய முடியும் என்ற நிலையை உருவாக்கினார்...

ஒருமுறை உணவகம் மூலமாக சிறிது லாபம் வந்ததை அறிந்து உடனடியாக விலைகளை குறைத்த மகராசன்...

எத்தனையோ மாநில அரசாங்கங்கள் உணவை எப்படி மக்களுக்கு வழங்கலாம் என்பதை இவர் மூலமாகத்தான் அறிந்து கொண்டன..

கோவை நகரம் எத்தனையோ சாதனையாளர்களை உருவாக்கி இருந்தாலும், முதலிடம் என்பது அன்னாருக்கு தான் என்பது கருத்து...

கடைசி வரை தன் புகைப்படம் கூட எதிலும் வரக்கூடாது என்பதில் உறுதியாக வாழ்ந்த ஒரு பொக்கிஷம்...

தன் இறுதி ஊர்வலத்தில் யாரும் பங்கேற்க வேண்டாம். விடுமுறை வேண்டாம். வெறும் ஜந்து நபர்கள் மட்டும் போதும். சுவரொடிகளோ புகைப்படங்களோ அச்சடிக்க கூடாது... என்றெல்லாம் எழுதி வைத்து விட்டு போயிருக்கிறார் இந்த மாமனிதர்..

கோயம்புத்தூரில் ஒரு மனித சேவை செம்மல்- திரு பி.சுப்ரமணியம் அவர்கள் 

கோவை ஒண்டிப்புதூர்-ஐ சேர்ந்த திரு பி.சுப்ரமணியம் என்னும் இளைஞர் – 1960 களில் தனது டிப்ளமோ படிப்பை கோவையின் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான PSG பாலிடெக்னிக்-ல் படித்து முடித்து சிலவருடங்கள் அந்த நிறுவனத்திலேயே ஆசிரியராக பணி புரிகிறார். அவருக்கு இது எனது வேலை இல்லை என்ற எண்ணம் மனதில் ஓடியதின் விளைவு  1969-ல் சாந்தி இன்ஜினியரிங் அண்ட் டிரேடிங் கம்பெனி என்றொரு நிறுவனத்தை ஏற்படுத்தி இயந்திரங்களுக்கு தேவையான  கியர் பாகங்களை உற்பத்தி செய்யும் தொழிலை துவங்குகிறார்.

அப்பொழுது இந்த உலகத்துக்கு தெரியாது, தனது  தொலைநோக்கு பார்வையால் தொழில் உச்சம் தொட போகிறார்,  இந்த உலகத்தை தன்பக்கம் திருப்பப் போகிறார் என்பது. 1969 இல் துவங்க பட்ட இந்த சிறிய நிறுவனம், மிகப்பெரும் வகையில் வளர்ச்சியடைந்து, ஒரு காலகட்டதில்  கியர் உதிரிபாக உற்பத்தியில் இந்தியாவில் முதல் இடத்தை பிடித்தது, பின்னர் உதிரிபாகத்தில் இருந்து முழுமைபெற்ற கியர் பாக்ஸ் தயாரிப்பில் இறங்கி உலகின் முன்னணி நிறுவனமாக திகழ்கிறது.

2016 ஆம்  வருடம் சுமார் 172 கோடி ரூபாய்களை விற்பனையாக பதிவு செய்துள்ளது. கியர் பாக்ஸ் தயாரிப்பில் ஜெர்மனியர்களையும், இத்தாலி நாட்டவரையும் வியக்க வைக்கும் வகையில் வளர்ச்சி அடைந்துள்ளது.  இன்றைக்கு கோவையில் கியர் மற்றும் கியர் பாக்ஸ்  தயாரிக்கும் நிறுவனங்கள் நிறைந்துவழிவதற்கு மூல கர்த்தாவே திரு பி.சுப்ரமணியம் தான். ஒன்று இவரிடம் வேலை பழகி வெளியில் சென்று தொழில் துவங்கி இருப்பார்கள் அல்லது இவரால் தொழில் அமைத்து கொடுக்கப்பட்டவர்களாக இருப்பார்கள்.

இன்றைக்கும் படித்து தொழில் துவங்கும் பொறியாளர்கள், சுயமாக துவங்கி இருந்தாலும், சாந்தி கியர் என்கிற மாபெரும் நிறுவனத்தில் ஒரு சில ஆண்டுகளாவது பணியாற்றி இருப்பார்கள் அல்லது அங்கு பணிபுரிந்த திறமையான தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருப்பார்கள்  என்பதில் சந்தேகம் இல்லை.

திரு பி. சுப்பிரமணியத்தை பற்றி சொல்லவேண்டும் என்றால், அன்றைய காலகட்டத்தில்  ஒரு இயந்திரத்தை வாங்கி அதன் கியர் பாக்ஸ் கெட்டுப்போய் விட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள், நீங்கள் அந்த இயந்திரத்தை தயாரித்த நிறுவனத்தை தொடர்புகொள்கிறீர்கள், அவர்களது பதில் கியர் பாக்ஸ் வேண்டும் என்றால் மூன்று மாதங்கள் ஆகும் என்பதுதான்.

திரு பி. சுப்பிரமணியத்தை தொடர்பு கொண்டு தங்கள் நிலையை எடுத்துக்கூறி, இந்த இயந்திரம் இயங்காவிட்டால் மிகப்பெரும் நட்டம் ஏற்படும், தொழிலாளர்  வேலை இழப்பார்கள் என்றால்,  அந்த இயந்திரத்திற்கான கியர் பாக்ஸ் பத்து நாட்களில்  தயாரித்து வழங்கப்படும்,  இதுதான் திரு பி.சுப்ரமணியம்.

சமீப வருடங்களில் புகழ் பெற்ற முருகப்பா குரூப் இந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கி தனது குடையின் கீழ் கொண்டு சென்றுள்ளது.

சரி தொழில் துவங்கினர்,  உழைத்தார்,  வளர்ந்தார்.. அது ஊக்கம் உள்ளவர்கள் எல்லோரும் செய்யும் செயல்தான்,  இதில் என்ன இருக்கிறது என்கிறீர்களா?

வாருங்கள் அவரது மறுபக்கத்தை பார்ப்போம்...

1996 ஆம் ஆண்டு தனது லட்சியமான சாந்தி சோசியல் சர்விஸ் (கோவை மக்களுக்கு சுருக்கமாக SSS ) என்கிற ஒரு தொண்டு நிறுவனத்தை தனது மனைவியார் திருமதி சாந்தி அவர்களது பெயரில் ஆரம்பிக்கிரார். இந்த நிறுவனம் என்ன செய்யப்போகிறது, என்பதை மிகவும் தெளிவாகவும், ஒரு தேர்ந்த தொழில்முறை வல்லுனரைப்போன்று SSS-ன்  சேவைகளை வடிவமைத்துள்ளார்.


1. சாந்தி பெட்ரோல் பங்க்: ( April 14th, 2005.)

2005 - இல் வாடிக்கையாளர்களுக்கு முழுமையான சேவை வழங்கவேண்டும் என்ற நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டது. இங்கு மற்ற நிறுவனங்கள் வழங்க  யோசித்த சேவைகள் 2005 இல் இருந்து இன்றுவரை தொடர்ந்து வழங்குகிறார்கள்.

1. வாகனங்களுக்கு இலவச காற்று (இந்த சேவைக்காக ஒவ்வொரு கற்று நிரப்பும் இயந்திரத்திற்கும் தனி பணியாளர் நியமிக்க பட்டுள்ளார் )

2. நான்கு சக்கர வாகனங்களுக்கு, முன் பின் கண்ணாடிகள் இலவசமாக சுத்தம் செய்யப்படுகிறது.

3. HEADLIGHT ஸ்டிக்கர்ஸ் இலவசமாக ஓட்டுவது

4. இரு  சக்கர வண்டிகளுக்கு ஆயில் மீதான சேவை வரி கிடையாது

5. சுத்திகரிக்கப்பட்டகுடி தண்ணீர்

6. மிக சுத்தமான கழிவறைகள்

7. ஷு துடைக்கும் இலவச இயந்திரசேவை

இது மட்டும் இல்லை,  மிக துல்லியமான, கலப்படம் அற்ற பெட்ரோல் மற்றும் டீசல் வழங்கப்படுகிறது.  கோவை மாநகரின் மிகசிறந்த  எரிபொருள்  நிரப்பும் நிறுவனமாக நாள் ஒன்றுக்கு 15000 வாகனங்களுக்கு தனது சேவையை வழங்குகிறது.

இந்திய அரசு உயர் பணமதிப்பு இழப்பு அறிவித்த நாட்களில் நபர் ஒருவருக்கு  ரூபாய்  2000 வரை தக்க ஆவணத்தோடு பழைய ரூபாய் நோட்டுகளை, புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவித்து சிறந்த சேவையை ஆற்றியது.  வங்கிகளில் தங்கள் பணத்தை மாற்றுவதற்கு நாள் முழுவதும் வரிசையில் நின்றவர்களுக்கு சென்ற 15வது நிமிடம் புதிய நோட்டுகளாக மாற்றிவிட்டு போக முடித்து. இந்த சேவை இரவு ஒன்பது மணிவரை நடந்தது.


2. சாந்தி மருந்தகம்  - October 4th, 2006.

தரம் வாய்ந்த கம்பனிகளின் மருந்துகள் மட்டுமே விற்பனை செய்ய படுகிறது. அனைத்து மருந்துகளுக்கும் 15 சதவீத தள்ளுபடி , மேலும் விற்பனை வாரியான 5 சதவீதத்தை நிறுவனமே செலுத்தும். நீங்கள் தொடர்ந்து வாங்குபவர் என்றால் , உங்களுக்கு இலவசமாக தேவையான மருந்துகள் உங்கள் இல்லம் தேடிவரும். டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு களுக்கு சேவை வரி கிடையாது. நிறுவனமே ஏற்றுக்கொள்ளும்.


3. பரிசோதனை நிலையம் - November 22nd, 2007.

எக்ஸ் ரே , இசிஜி , ஸ்கேன், ரத்த பரிசோதனை, மாஸ்டர் ஹெல்த் செக்-அப் போன்றவை மற்ற மருத்துவமனைகளை விட 50 இல் இருந்து 70 சதவீதம் வரை குறைவான கட்டணத்தில் செய்யப்படுகிறது. CT   ஸ்கேன் போன்ற சேவை ரூபாய் 750 இல் இருந்து ஆரம்பிக்கிறது. காலை 6 மணியில் இருந்து இரவு 9 மணிவரை இந்த சேவையை பயன்படுத்த முடியும்.


4. சாந்தி மெடிக்கல் சென்டர்  - April 14th, 2010.

1. ஏறக்குறைய 63 மருத்துவர்கள் பணிபுரிகிறார்கள் அதில் 36 மருத்துவர்கள் MD பட்டம் பெற்றவர்கள்.

2. மருத்துவரை சந்திப்பதற்கான ஒருமுறை பதிவு கட்டணமாக முப்பது ரூபாயும், மருத்துவருக்கான கட்டணமாக ரூபாய் முப்பதும் செலுத்தவேண்டும்.   ( 10 நாட்கள் நீங்கள் இலவசமாக மருத்துவரை பார்க்கலாம்) 

3. காலை மணி 8 இல் இருந்து மாலை 9 மணிவரை இந்த சேவை வழங்க படுகிறது.

4. இலவச ஆம்புலன்ஸ் சேவை வழங்க படுகிறது

5. இரத்த அழுத்தம் இலவசமாக சோதனை செய்யப்படுகிறது


5. சாந்தி கேன்டீன் -  20th August 2010

முழுவதும் சேவை நோக்கத்தோடு செயல்படும் ஒரு நிறுவனம்.  இந்த நிறுவனத்தின் சுத்தத்தை பார்த்தால் அசந்து போவீர்கள். சென்னை சரவணபவனுக்கு நிகரான ஒரு சுத்தத்தை பார்க்கமுடியும். காலை 7 மணிக்கு ஆரம்பிக்கும் உணவு சேவை இரவு 9.30 மணி வரை எல்லா நாட்களிலும் செயல் படுகிறது. இரண்டு இட்லிகளின் விலை ஐந்துரூபாய் , தோசை ஐந்துரூபாய், பூரி 2 கொண்டது பத்துருபாய் இப்படி மிக குறைந்த விலையில் தரமான, ருசியான,சுகாதாரமான உணவு சேவை . சாப்பிட வருபவர்கள் யாராக இருந்தாலும் டோக்கன் பெற்றுக்கொண்டு வரிசையில்  சென்று சாப்பிட வேண்டும். இன்றைய மதிய சாப்பாட்டின் விலை ருபாய் 20 மட்டுமே. அளவுகிடையாது (விலை 5 ருபாய் குறைத்துவிட்டார்கள் ), சப்பாத்தி, குருமா, சாதம், சாம்பார், புளிக்குழம்பு,  ரசம், தயிர்,பொரியல், கீரை, ஊறுகாய்  இவை அனைத்தும் சுத்தமான தட்டுகளில் சுத்தமான மேசையில் அமர்ந்து சாப்பிடலாம். 

இட்லி, தோசை வகைகள், கிச்சடி, சாதவகைகள் , பூஸ்ட், ஹார்லிக்ஸ், பால் போன்றவையும் இரவுநேரத்தில் மிக குறைந்த விலையில் வழங்கப்படுகிறது, இதை தவிர மூலிகை சூப், டீ, காப்பி பழச்சாறு போன்றவையும் வழங்க படுகிறது. இங்கு தினசரி உணவு உண்பவர்களின் எண்ணிக்கை சுமாராக 15000- தை தாண்டுகிறது. இந்த அமுத சேவையை எப்படி பாராட்டலாம் நண்பர்களே? உங்களுக்கு வாய்ப்புக்கிடைத்தால் ஒருமுறை கோவை SSS -கு வருகைபுரிந்து உண்மையான சேவையை புரிந்து கொள்ள அழைக்கிறேன்....

6. சாந்தி இலவச எரிவாயு தகன மேடை :(March 16th, 2011.)

இறந்தவர்களை தகனம் செய்ய இலவசமாக அமைத்து கொடுத்துள்ளார்கள்.

7. Dialysis Services -16th August 2013.

'இங்கு டயாலிசிஸ் - செய்துகொள்ள ஒரு முறைக்கு 350 முதல் 450 ரூபாய் வரை மட்டுமே வசூலிக்கப்படுகிறது. காலை 8 மணியில் இருந்து மாலை 6 மணிவரை இந்த சேவைகளை பயன்படுத்திக்கொள்ள முடியும். 

இதை தவிர ரத்த வாங்கி, கண் பரிசோதனை மற்றும் கண்ணாடி விற்பனையும் மிக குறைத்த செலவில் செய்கிறார்கள். கண் பரிசோதனைக்கு ரூபாய் 30 மட்டுமே வாங்கப்படுகிறது. கண்ணாடி நீங்கள் வெளியில் வாங்கும் விலையில் 60 சதவீத தள்ளுபடியில் வாங்கலாம்

இத்தனை சேவைகளையும் செய்யும் திரு பி. சுப்பிரமணியம் அவர்களை 'மனித சேவை செம்மல்' என்று அழைத்தால் தகும் தானே..

இப்பொழுது கூறுங்கள் திரு பி. சுப்பிரமணியம் போன்று சேவை உணர்வோடு, எத்தனை தொழில் அதிபர்கள் இருக்கிறார்கள்...? இவை வெளியில் தெரிந்து அவர் செய்த சேவை, வெளியில் தெரியாமல் பல லட்சக்கணக்கில் இன்று வரை சேவை செய்துவருகிறார்... பல கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலைகள் இலவசமாக அமைத்து கொடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியர் தகுதி தேர்வு (TET) தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள் உடனான ஆலோசனைக்கு பின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்கள் பேட்டி

  மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் செய்தியாளர் சந்திப்பு.. தைரியமாக இருங்கள், எல்லாவற்றிற்கும் தீர்வுகள் உண்டு...