04.12.2020 ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் தலையங்க பக்கத்தில் வந்துள்ள கட்டுரை:
கரோனாவைத் தடுக்கும் குடல் நலம்...
——-டாக்டர் கு. கணேசன், இராஜபாளையம்.
கரோனா பெருந்தொற்று கடந்த பத்து மாதங்களாக மக்களுக்கும் மருத்துவர்களுக்கும் பலதரப்பட்ட பாடங்களைக் கற்றுத் தந்திருக்கிறது. இது சுவாச நோய் என்ற அளவில், விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில், முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளி காப்பது, கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்வது ஆகிய மூன்று முழக்கங்கள் ஆரம்பத்திலிருந்தே இடம் பெறுகின்றன.
இதைத் தொடர்ந்து, நோய்த் தடுப்பாற்றல் சரியாக இருப்பவர்களுக்குக் கரோனா தொற்று கடுமையாவதில்லை எனத் தெரிந்து, தடுப்பாற்றலைக் கூட்டும் ஆரோக்கிய வழிகளைச் செய்தி ஊடகங்கள் உரக்கக் கூறின.
இதன் மருத்துவ அணுகுமுறையிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இப்போது புதிதாக, நம் குடல் நலனைக் காப்பதன் மூலம் கரோனாவைத் தடுக்கலாம் என்கிறது மருத்துவ உலகம்.
கரோனாவுக்கும் குடலுக்கும் என்ன தொடர்பு?
மூக்கு வழியாக உடலுக்குள் நுழையும் கரோனா வைரஸ் குடலுக்கும் வருகிறது. இந்த வைரஸ் நம் செல்களுக்குள் புக வேண்டுமானால், அங்கு ‘ஏசிஇ2’ (ACE2) புரத ஏற்பிகள் இருக்க வேண்டும்.
சுமார் 6 மீட்டர் நீளமுள்ள குடலில் பல கோடிப் புரத ஏற்பிகள் இருக்கின்றன. கரோனா கிருமிகள் குடலுக்குள் நுழைவதற்கு இது வசதியாகிவிடுகிறது.
குடலின் ஆரோக்கியத்தைப் பொறுத்து நோயின் அறிகுறிகள் தோன்றுகின்றன. கரோனா தொற்றாளர்களில் 30% பேருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுவது இதனால்தான்.
குடலின் ஆரோக்கியத்தைப் பேணுவது அங்குள்ள நல்ல பாக்டீரியாக்கள் என்றால் நம்புவீர்களா?
மொத்தமுள்ள உடல் செல்களின் எண்ணிக்கையைவிட 10 மடங்கு அதிகமாக இந்தப் பாக்டீரியாக்கள் நம் குடலில் வாழ்கின்றன. உணவுச் செரிமானத்தில் தொடங்கி, சத்துகளை உறிஞ்சுதல், கழிவுகளை அகற்றுதல் உள்ளிட்ட பல பணிகளில் இவை பங்கேற்கின்றன;
அத்தோடு, நோய்த் தடுப்பாற்றலையும் மேம்படுத்துகின்றன.
உடலில் 70% தடுப்பாற்றல் அணுக்கள் குடல் செல்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டிருப்பதால், இதுவும் சாத்தியப்படுகிறது. இப்படிப் பல நன்மைகள் செய்யும் பாக்டீரியாக்களுக்கு நாம் வஞ்சகம் செய்கிறோம் என்பதைப் புரிந்திருக்கிறோமா?
குடலுக்கு எதிரிகள்
செயற்கைநிற உணவுகளும் துரித உணவுகளும்தான் நம் குடலுக்குப் பிரதான எதிரிகள். குடலுக்கு வலு சேர்க்கும் நார்ச்சத்து இவற்றில் துப்புரவாக இல்லை என்பது ஒருபுறமிருக்க, செயற்கை நிறம் கொடுக்கும் தாலேட், நைட்ரேட் உள்ளிட்ட பல வேதிப்பொருள்கள் நல்ல பாக்டீரியாக்களுக்கு விஷமாகின்றன.
மைதாவும் அஜினோமோட்டோவும் துரித உணவுகளின் மீதேறி வரும் எமன்கள்.
தொடர்ந்து மைதா உணவுகளைச் சாப்பிடும்போது அதிலுள்ள பென்சோயில் பெராக்சைடும், அலெக்சானும் இயற்கையான குடல் பாக்டீரியாக்களைக் கொன்றுவிடுகின்றன.
ஒரு நோய்த்தொற்று ஏற்படும்போது வழக்கமாக நாம் எடுத்துக்கொள்ளும் நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகள், நோய் பரப்பும் பாக்டீரியாவை மட்டும் அழிப்பதில்லை; குடலில் குடியிருக்கும் நல்ல பாக்டீரியாக்களையும் சேர்த்தே அழித்துவிடுகின்றன.
அந்த மருந்துகளை அளவோடு எடுத்துக்கொள்ளும்போது 4 வாரங்களுக்குள் மறுபடியும் நல்ல பாக்டீரியாக்கள் வளர்ந்துவிடும்.
அவற்றைத் தேவையில்லாமல் சாப்பிட்டாலோ, சுயமாக அடிக்கடி எடுத்துக் கொண்டாலோ சூழல் மாறி குடல் தளம் கெட்டுவிடும். குடல் புண்கள் குடலுக்கு அடுத்த தாக்குதல்கள்.
புகையும் மதுவும் அதன் எதிரிகள்.
இதையும் சொல்ல வேண்டும். உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்யாமல், பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் துரித உணவுகளையும் அதிகம் சாப்பிட்டோமானால் குடலைச் சுற்றி கொழுப்பு கூடுகட்டும்; உடற்பருமன் சுமை கூட்டும்.
உடற்பருமன் உள்ள கரோனா தொற்றாளர்களுக்கு நோய் பல மடங்கு கடுமையாவதை அறிவீர்கள்தானே? என்ன காரணம்?
கொழுப்புத் திசுக்களில் ‘ஏசிஇ2’ நொதிகள் அதிகம். இவற்றைச் சாப்பிட்டுக்கொண்டு கரோனா கிருமிகள் அதிக காலம் அங்கு வசிக்கின்றன; தொடர்ந்து கிருமிகளை உடலுக்குள் அனுப்பி நோய் அறிகுறிகளைத் தீவிரப்படுத்துகின்றன; நோய்த் தடுப்பாற்றலைக் குறைத்துவிடுகின்றன
. 'சைட்டோகைன் புயல்' எனும் தடுப்பாற்றல் மிகைச் செயல்பாடு கரோனா நோயாளிகளை ஆபத்தான நிலைமைக்குக் கொண்டு செல்கிறதல்லவா? இதைத் தூண்டும் அழற்சிப் புரதங்களும் கொழுப்புத் திசுக்களில்தான் மிக அதிகம்.
மரபு உணவின் மேன்மை
ஆஸ்திரேலியாவில் நியூ சௌத் வேல்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள்தான் குடலுக்கும் கரோனாவுக்குமான தொடர்பை முதன் முதலில் ஆய்வு செய்தவர்கள்.
அந்தக் குழுவின் தலைவர் கலாண்டர் ஜேடி (Kalantar - Zade), ‘தெற்கு ஆசிய நாடுகளில், குறிப்பாக இந்தியாவில், கரோனா தொற்றின் வீரியமும் இறப்பு விகிதமும் ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதற்கு இந்தியப் பாரம்பரிய உணவுகளே முக்கியக் காரணம்’ என்கிறார்.
மேலும் அவர், 'இந்தியாவில் மேல்தட்டினரும் மத்தியமரும்தான் துரித உணவுகளை அதிகம் நாடுகின்றனர். ஏழைகள் நார்ச்சத்து நிறைந்த சிறுதானிய உணவுகளையே அதிகம் உண்கின்றனர்.
நார்ச்சத்து குடலுக்கு வலு சேர்க்கிறது. இவர்கள் உணவில் தயிரும் மோரும் அதிகம் இடம்பெறுகின்றன. இவை இரண்டும் 'ப்ரிபயாட்டிக்' உணவுகள். இவற்றில் 'லேக்டோபேசில்லஸ்' எனும் நல்ல பாக்டீரியா கோடிக்கணக்கில் இருக்கிறது.
இவர்கள் புரதம் நிறைந்த பருப்பு, பயறுகளையும் உண்கின்றனர். வைட்டமின் - சி அதிகமுள்ள சர்பத் எனும் எலுமிச்சைச் சாறு அருந்துகின்றனர்.
துத்தநாகச் சத்து நிரம்பியுள்ள மீன் உணவும் பிரபலம். ஊட்டச்சத்துகள் நிரம்பியுள்ள பால், முட்டை, நாட்டுக்காய்கள், கீரை, பழங்கள், வெங்காயம், வெந்தயம், வெள்ளைப்பூண்டு, இஞ்சி, மிளகு, மஞ்சள், சீரகம், கொத்தமல்லி போன்றவை இந்திய உணவில் பிரதானம்.
இவர்கள் வெயிலில் வேலை செய்வதால் சூரிய ஒளியிலிருந்து வைட்டமின் - டி கிடைத்துவிடுகிறது. இவற்றின் கூட்டுப் பலனாக நல்ல பாக்டீரியாக்கள் வளர்வதற்குரிய குடல் தளத்தை இந்தியர்கள் இயல்பாகவே பெற்றுவிடுகின்றனர்.
குடலோடு இணைந்த தடுப்பாற்றல் இவர்களுக்குக் கூடுதலாகிவிடுகிறது. ஆக மொத்தத்தில் கரோனாவின் பாய்ச்சல் அடங்கிவிடுகிறது' என்கிறார்.
இன்றைய நகர்ப்புறத்துத் துரித வாழ்க்கையில், பன்னாட்டு உணவு நிறுவனங்களின் வணிக உத்தியில் மயங்கி, நம்முடைய மரபு உணவின் மேன்மைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து வருகிறவர்களும் இருக்கின்றனர்.
இந்த கரோனா காலம் நம் அன்றாட வாழ்க்கையில் எண்ணற்ற மாற்றங்களை முன்வரிசைக்குக் கொண்டுவந்திருக்கிறது.
இனியாவது செயற்கைநிற உணவுகள், செயற்கை பானங்கள், துரித உணவுகள் ஆகியவற்றை ஒதுக்க வேண்டும். தொன்றுதொட்டு நாம் உண்டுவரும் உணவுகளுக்கு முன்னுரிமை கொடுத்தால், குடல் நலம் காக்கப்படுவதோடு, கரோனாவின் கொடுமையிலிருந்தும் தப்பிக்கலாம் என்பதே தற்போதைய அறிவியல் கற்பிக்கும் புதிய பாடம்.
கற்றுக்கொள்வதும் கடைப்பிடிக்க வேண்டியதும் நம்மிடம்தான் உள்ளது.
- டாக்டர் கு. கணேசன், பொதுநல மருத்துவர்,
தொடர்புக்கு: gganesan95@gmail.com