''ஒன்பது, 11ஆம் வகுப்பு மாணவர்களை, பள்ளிகளுக்கு வரவழைப்பது குறித்து, பெற்றோர்களிடம் கருத்து கேட்டபின் முடிவு அறிவிக்கப்படும்,'' என, பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடில், நேற்று அவர் கூறியதாவது:
பள்ளிகளில், ஒன்பது மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கு, வகுப்புகளை துவங்குவது குறித்து, கல்வியாளர்கள், பெற்றோர்களிடம் ஆலோசித்து, கருத்து கேட்டு, அதன் பின் முடிவு அறிவிக்கப்படும்.பத்து மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, வகுப்புகள் நடத்தப்படும் நிலையில், மாணவியர், ஆசிரியருக்கு கொரோனா தொற்று வந்ததாக வதந்தி பரப்பப்படுகிறது. இரண்டு ஆசிரியர்களுக்கு தொற்று சந்தேகம் ஏற்பட்டு பரிசோதித்த போது, இல்லை என, உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த விஷயத்தில், ஆசிரியர்கள், மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு, பெற்றோரின் மனநிலையை புரிந்து தகவல் வெளியிட வேண்டும்.தமிழகத்தில், 82 ஆயிரம் ஆசிரியர்கள், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. தற்போது, ஆசிரியர்கள் தேவையின் அடிப்படையில், அப்போது, தேர்ச்சி பெற்றவர்களை பணியில் நியமிக்கவும், கூடுதலாக தேவைப்படும் ஆசிரியர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தவும் வழிகாட்டப்பட்டுள்ளது. இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்