9, 11-ம் வகுப்புகளுக்குச் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தப் பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இடப்பற்றாக்குறை காரணமாகவும், கரோனா முன்னெச்சரிக்கை காரணமாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கரோனா ஊரடங்கை அடுத்து, 10 மாதங்களுக்குப் பிறகு தமிழகத்தில் ஜனவரி 19-ம் தேதியன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. பொதுத் தேர்வு எழுதும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தற்போது வகுப்புகள் நடந்து வருகின்றன. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாணவர்களுக்குப் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு, அவற்றைப் பள்ளியில் மாணவர்கள் பின்பற்றி வருகின்றனர். கிருமிநாசினியால் கைகளைச் சுத்தம் செய்த பிறகே பள்ளி வளாகத்துக்குள் அவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். வகுப்பறையில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் 25 பேர் மட்டுமே உட்கார வைக்கப்படுகின்றனர். வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் செயல்படும். பள்ளிகள் காலை 9.30 முதல் மாலை 4.30 வரை செயல்படும். அனைவரும் வீட்டில் இருந்து கட்டாயம் குடிநீர், சாப்பாடு எடுத்துவர வேண்டும். உணவுப் பொருள் உட்பட எதையும் மற்றவர்களுடன் பகிரக் கூடாது. பிறரைத் தொட்டுப் பேசக் கூடாது. கைகுலுக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 8-ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதனால் இட நெருக்கடியைத் தவிர்க்க காலை, பிற்பகல் என ஷிஃப்ட் முறையில் வகுப்புகளைப் பிரித்து நடத்தவும், மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், சுழற்சி முறையில் வகுப்புகளை ஒருநாள் விட்டு ஒருநாள் நடத்தவும் பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. மாணவர்கள் கட்டாயம் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.