( தினமலர் செயதி)
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் தபால் ஓட்டுகள், குடும்ப ஓட்டுகளை கைப்பற்ற, அ.தி.மு.க.,வினர் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர்.
தமிழக சட்டசபைக்கான தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் தபால் ஓட்டுகளை பெறவும், அவர்கள் குடும்பத்தினர் ஓட்டுகளை கவரவும், அ.தி.மு.க.,வினர் தனி ஆட்களை நியமித்துள்ளனர்.
இதுகுறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:
எம்.ஜி.ஆர்., காலத்தில் இருந்தே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அ.தி.மு.க.,வுக்கு பெரும்பாலும் ஓட்டளிக்க மாட்டார்கள். அவர்களின் தபால் ஓட்டுகளும், பெரும்பாலும், தி.மு.க.,வுக்குதான் விழும். மேலும், ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர், அ.தி.மு.க., அரசுக்கு எதிராக கடந்த, நான்கு ஆண்டுகளாக பல போராட்டங்களை நடத்தினர். அவர்கள் மீது கைது மற்றும் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அவர்களது ஓட்டுகள் வரும் தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணிக்கு எதிராக விழ வாய்ப்புள்ளது.
எனவே, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் தபால் ஓட்டுகளை பெற வீடு தேடி செல்ல வேண்டும் என, தலைமை உத்தரவிட்டுள்ளது. அதற்காக, தனியாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தொகுதி வாரியாக, தபால் ஓட்டுகள் குறித்த விபரம் உள்ளது. அதை வைத்து கொண்டு, அவர்கள் வீட்டுக்கு செல்ல உள்ளோம். தபால் ஓட்டளிக்க உதவி செய்வதுடன், குடும்ப உறுப்பினர்களின் ஓட்டுகளையும் சேகரிக்க, 'கிப்ட் பாக்ஸ்' வழங்கவும் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்