கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவுகளுக்கு காப்பீடு கிடையாது - மாநிலங்களவையில் தகவல்...
(பிப்ரவரி 10, 2021 தகவல்)
மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி அஸ்வினி சவுபே
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கும், இனிமேல் போடப்போகிறவர்களுக்கும் பக்கவிளைவுகளுக்காக காப்பீடு வசதி செய்யப்பட்டுள்ளதா என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது ஒரு கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி அஸ்வினி சவுபே கூறியதாவது:-
பக்கவிளைவுகளுக்காக தடுப்பூசி பயனாளிகளுக்கு காப்பீடு வழங்க விதிமுறையில் இடம் இல்லை. கொரோனா தடுப்பூசி என்பது விருப்பத்தின்பேரில்தான் போடப்படுகிறது. அது கட்டாயம் அல்ல.
இருப்பினும், பக்கவிளைவுகள் ஏற்படுகிறதா என்று கண்காணிக்க தடுப்பூசி மையத்திலேயே பயனாளிகளை 30 நிமிட நேரம் அமர வைக்கிறோம். மருத்துவ உபகரணங்கள் அடங்கிய பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. பக்கவிளைவுகள் ஏற்படுகிறவர்களுக்கு பொது சுகாதார மையத்தில் இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. கோவிஷீல்டு தடுப்பூசியால் 8 ஆயிரத்து 402 பேருக்கும், கோவேக்சின் தடுப்பூசியால் 81 பேருக்கும் லேசான பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளன.(பிப்ரவரி 10, 2021 தகவல்)
இவ்வாறு அவர் கூறினார்.