கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பேராசிரியர்கள் கல்லூரிக்கு வந்து மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு பொதுத் தெர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. முன்னதாக 1 முதல் 11ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு தேர்வில்லாமல் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக மட்டுமே பாடங்கள் நடத்தப்படும் என பல்கலைக்கழகங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளன.
மதுரை உயர் கல்வி அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடத்த அரசு அனுமதி அளிக்கவில்லை. எனவே, கல்லூரி பேராசிரியர்கள், கல்லூரி ஊழியர்கள் மட்டுமே கல்வி நிறுவனங்களுக்கு வந்து ஆன்லைன் வகுப்புகளை நடத்த வேண்டும்.
அரசு அனுமதி வழங்கினால் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்துவது குறித்த அறிவிப்புகள் வெளியாகும். தற்போது உள்ள சூழ்நிலையில் ஆன்லைன் வழியே தேர்வுகளும் நடத்தப்படும். அரசு நெறிமுறைகளை மீறி மாணவர்களை கல்லூரிகளுக்கு வரவழைத்தால் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.