கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

எங்களுக்கு பாராட்டு தேவையில்லை; பிளஸ் 2 தேர்வு நிச்சயம் நடக்கும்!’ - அமைச்சர் அன்பில் மகேஷ்...

 அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவித்தால். மாணவர்களுக்கு வேண்டுமானால் சந்தோஷத்தைக் கொடுக்கலாம், ஆட்சியாளர்களைப் பாராட்டலாம். அந்த பாராட்டுக்களும், ஆதரவும் எங்களுக்குத் தேவையில்லை. அவர்களுடைய எதிர்காலம் தான் எங்களுக்கு முக்கியம். கண்டிப்பாக பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகள் நடக்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை" என்று கூறுகிறார் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.




சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பொறுப்பேற்றதும் கொரோனா நிவாரண தொகை வழங்குதல், உள்ளூர் பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் உள்ளிட்ட ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதன்படி 2 கோடியே 7 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்குப் பயன்படும் வகையில் கொரோனா பாதிப்பு நிவாரண உதவிகளை முதல் தவணையாக 2,000 ரூபாய் வழங்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் நிவாரண உதவித் தொகைகளை விநியோகித்து வருகிறார்கள்.



இந்நிலையில், கொரோனா நிவாரண உதவித்தொகை வழங்கும் திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வரகனேரி நியாய விலை கடைகளில் தொடங்கி வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு 2,000 ரூபாய் நிவாரண உதவித் தொகையை வழங்கினார்.



பின்பு பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், ”முதல்வர் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார். அந்தவகையில் கொரோனா நிவாரணம் முதல் தவணை வழங்கும் பணியை தற்போது தொடங்கியிருக்கிறோம். இரண்டாவது தவணையும் முழுமையாக வழங்கப்படும். இதில் எந்த மாற்றமும் இல்லை” என்றார்.



பொதுத் தேர்வு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, `` பன்னிரெண்டாம் வகுப்பிற்கான தேர்வு கண்டிப்பாக நடைபெறும். இதுகுறித்து பெற்றோர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், கல்வித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலரிடமும் வீடியோ கான்பரன்சிங் மூலம் கருத்துக் கேட்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அனைவருமே பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு நிச்சயம் நடத்த வேண்டும் என்ற கருத்தைப் பதிவு செய்கிறார்கள்.



இன்றைய நிலையில் தேர்வு என்பது அவசியம் எனக் கருதப்படுகிறது. ஆனால் கொரோனா தொற்று தாக்கத்தின் விளைவாக இனி வரும் காலங்களில் எப்படி இருக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு இந்த முடிவுகளில் மாற்றம் ஏற்படலாம். ஆனால் நிச்சயம் பன்னிரெண்டாம் வகுப்புக்கான தேர்வு நடத்துவதில் உறுதியாக இருக்கிறோம்.



ஏனென்றால் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பிறகு கல்லூரிக்குள் நுழையும் போது மாணவ - மாணவிகள் எந்த துறையைத் தேர்ந்து எடுப்பார்கள் என்பது மிக முக்கியமானதாகவும், அவசியமானதாகவும் உள்ளது. அவர்களது வாழ்க்கையின் அடுத்தகட்டத்திற்குச் செல்வதற்கு பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு தான் முக்கியமான ஒன்று.



இங்கு நல்ல தேர்ச்சி பெற்றால் அண்ணா பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஒருவேளை அனைவரும் தேர்ச்சி என அரசு அறிவித்தால் அந்த அறிவிப்பு மாணவர்களுக்கு வேண்டுமானால் சந்தோஷத்தைக் கொடுக்கலாம். ஆட்சியாளர்களைப் பாராட்டலாம். அந்த பாராட்டுக்கள் எங்களுக்குத் தேவையில்லை. அவர்களுடைய எதிர்காலமே எங்களுக்கு ரொம்ப முக்கியம். தேர்வு நடத்தி அதன் மூலம் நல்ல மதிப்பெண்களைப் பெற்று மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்து நல்ல கல்வியைப் பெற வேண்டும் என்பது தான் இந்த அரசின் நோக்கம்" என்றார்.


நன்றி: விகடன்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Promotion counseling for 87 BEOs vacancies to be held soon

  விரைவில் 87 வட்டாரக் கல்வி அலுவலர் காலிப் பணியிடங்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு Promotion counseling for 87 vacant posts of Block Educati...