கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனத்தை தமிழக அரசு எடுத்து நடத்த நடவடிக்கை' - அமைச்சர் மா.சுப்பிரமணியன்...



 கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்களிடம் ஆர்வம் அதிகரித்து வருவதால் அடுத்த ஆறு மாதங்களில் தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களே இல்லை என்ற நிலை உருவாகும் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.



நெல்லை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். சபாநாயகர் அப்பாவு, நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் விஷ்ணு மற்றும் அதிகாரிகள் ஆய்வில் பங்கேற்றனர்.



கூடங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வள்ளியூர் அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு நடந்தது. கூடங்குளத்தில் உள்ள 130 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, உணவு உள்ளிட்டவை குறித்து காணொலி வாயிலாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டறிந்தார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,``தமிழகம் முழுவதும் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகம் முழுவதும் 2,53,000 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை தமிழகத்தில் 75 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.



18 முதல் 44 வயது உடையவர்களுக்குத் தடுப்பூசி போடுவதற்காகத் தமிழக அரசின் சார்பில் 85.47 கோடி செலவில் 25 லட்சம் டோஸ் தடுப்பூசி பெறப்பட்டுள்ளது. அதனால் கிராமப்புறங்களில் உள்ள மக்களும் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன். இது தவிர, அடுத்த 6 மாதங்களில் 3.5 கோடி தடுப்பூசிகள் பெறுவதற்கான டெண்டர் நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டு விட்டன. இன்னும் ஆறு மாத காலத்தில் தடுப்பூசி போடாதவர்களே தமிழகத்தில் இல்லை என்ற நிலை உருவாகும்.



சுகாதாரத் துறையில் கடந்த பத்து வருடங்களில் இல்லாத வகையில், மருத்துவர்கள் அவர்கள் விரும்பிய இடங்களுக்கு கவுன்சிலிங் மூலம் இடமாறுதல் பெறுவதற்கு வகை செய்யப்பட்டுள்ளது. வெளிப்படையாகக் கலந்தாய்வு நடத்தி மருத்துவர்களுக்கு இடமாறுதல் அளிக்கப்பட்டு வருவதற்கு மருத்துவத் துறையினர் வரவேற்புத் தெரிவித்து வருகிறார்கள். முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கும் இதே முறையில் இடமாறுதல் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.



கூடங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டபோது அங்கு ஏற்கெனவே செயல்பட்ட மகப்பேறு சேவைப் பிரிவு வேறொரு கிராமத்துக்கு மாற்றப்பட்டு விட்டதாகவும் அதனால் தங்களுக்கு மகப்பேறு சேவை தேவை என்றும் மக்கள் தெரிவித்தனர். அதனால் கூடங்குளம் மருத்துவமனையில் மகப்பேறு சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



கூடங்குளம் அரசு மருத்துவமனையில் தற்போது 86 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அந்த மருத்துவமனையில் பேரிடர் கால சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதால் கூடுதல் படுக்கை வசதி மட்டுமல்லாமல் மருத்துவமனையிலேயே ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதற்கான வசதியும் உருவாக்கப்படும்.



ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் செயல்பட்டு வந்த சுகாதாரத்துறை இணை இயக்குநர் அலுவலகம் தற்போது தென்காசி மாவட்டத்துக்குச் சென்றுவிட்டதால் நெல்லை மாவட்டத்தில் உள்ள வள்ளியூரில் சுகாதாரத்துறை இணை இயக்குநர் அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.



தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் கொரோனா பாதித்த மாவட்டங்களுக்கு கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசின் தொடர் நடவடிக்கைகள், தடுப்பூசி மற்றும் தளர்வில்லா ஊரடங்கு காரணமாக நோய்த் தொற்று படிப்படியாகக் குறைந்து வருகிறது.



செங்கல்பட்டில் செயல்பட்ட தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் கடந்த 10 வருடங்களாக சட்டச் சிக்கல் காரணமாக மூடப்பட்டுக் கிடந்தது. அதை முதல்வர் நேரில் ஆய்வு செய்து சட்டப் பிரச்னைகளை தீர்த்து தமிழக அரசே அதை கையில் எடுத்து மத்திய அரசின் அனுமதியுடன் தடுப்பூசி தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அது நிறைவேறுமானால் தமிழகத்துக்கு கூடுதல் வரப்பிரசாதமாக அமையும்” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...