வாட்ஸ் ஆப் கால்களை மத்திய அரசு ரெக்கார்ட் செய்கிறதா? இணையத்தில் பரவும் பொய்யான வதந்தி...
வாட்ஸ் ஆப் கால்கள் அனைத்தையும் மத்திய அரசு ரெக்கார்ட் செய்வதாக இணையத்தில் பொய்யான தகவல்கள் ஒன்று பரவி வருகிறது.
இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும் புதிய ஐடி விதிகளுக்கு எதிராக பல்வேறு சமூக வலைதள நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்கு எதிராக வாட்ஸ் ஆப் நிறுவனம் டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளது. இந்தியாவில் மத்திய தகவல்கள் தொழில்நுட்ப துறை மூலம் சமூக வலைத்தளங்களுக்கும், ஓடிடி தளங்களுக்கும் புதிய விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த விதியின்படி இனி வாட்ஸ் ஆப்பில் ஒரு தகவல் பரவுகிறது என்றால், அதை முதலில் யார் அனுப்பினார் என்று வாட்ஸ் ஆப் நிறுவனம் மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும். அதாவது மத்திய அரசுக்கு எதிராக ஒரு பார்வேர்ட் மெசேஜ் பரவுகிறது என்றால், அதை மத்திய அரசு விசாரிக்கும் பட்சத்தில், மத்திய அரசு கோரிக்கை வைத்தால், அதை முதலில் யார் அனுப்பினார் என்று வாட்ஸ் ஆப் நிறுவனம் சொல்ல வேண்டும்.
அதோடு இந்த புதிய ஐடி விதிகள் மூலம், சமூக வலைதள நிறுவனங்கள், ஓடிடி தளங்கள் கண்டெண்ட்கள் குறித்த புகார்களை விசாரிப்பதற்காக இந்தியர் ஒருவர் அதிகாரியாக நியமிக்க வேண்டும். இதை பேஸ்புக், கூகுள் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் வாட்ஸ் ஆப், டிவிட்டர் இன்னும் முழுமையாக ஏற்கவில்லை.
இதன் காரணமாக வாட்ஸ் ஆப் டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளது. இந்த நிலையில் வாட்ஸ் ஆப் கால்கள் அனைத்தையும் மத்திய அரசு ரெக்கார்ட் செய்வதாக இணையத்தில் பொய்யான தகவல்கள் ஒன்று பரவி வருகிறது. உங்கள் வாட்ஸ் ஆப் கால்களை ரெக்கார்ட் செய்வதோடு, நீங்கள் அனுப்பும் மெசேஜ்களை வாட்ஸ் ஆப் படிக்கிறது என்றும் தகவல் பரவுகிறது.
அதோடு மத்திய அரசு உங்கள் மெசேஜை படித்தால் அதில் மூன்று டிக் இருக்கும். அதோடு இரண்டு ப்ளூ டிக், ஒரு ரெட் டிக் இருந்தால் அரசு உங்கள் மெசேஜை குறிப்பெடுத்துக் கொண்டது, மூன்று ரெட் டிக் இருந்தால் உங்கள் மெசேஜ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆனால் இது முழுக்க முழுக்க தவறான செய்தியாகும். இணையத்தில் இப்படி உலவி வரும் செய்தி பொய்யாகும். மத்திய அரசோ, மாநில அரசோ, உங்களின் மெசேஜ்களை படிப்பதும் இல்லை, கால்களை ரெக்கார்ட் செய்வதும் இல்லை. தற்போது வரை வாட்ஸ் ஆப்பில் நாம் பேசும் விஷயங்கள் எல்லாம் எண்ட் - டூ எண்ட் என்கிரிப்ஷன் மூலம் பாதுகாக்கப்படுகிறது. அதாவது நாம் அனுப்பும் மெசேஜ்களை நம்மையும், மெசேஜை பெறுபவரையும் தவிர வேறு யாரும் பார்க்க முடியாது. வாட்ஸ் ஆப் நிறுவனம் கூட பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.