பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் நிர்ணயம் தொடர்பாக, மூன்று பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அறிக்கை தயாரிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பிரச்னையால், பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறையை நிர்ணயிக்க, கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. கருத்துருக்கள் சமர்ப்பிப்புபள்ளி கல்வித் துறை முதன்மை செயலர் உஷா, சென்னை பல்கலை துணைவேந்தர் கவுரி மற்றும் கல்வியாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்த கமிட்டியில், மூன்று பள்ளிகளின்தலைமை ஆசிரியர்களுக்கு, இடம் அளிக்கப்பட்டு, அவர்களின் கருத்துருக்களை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, அரசு மேல்நிலைப் பள்ளி பிரதிநிதியாக, திருப்பூர் ஜெய்வாபாய் மாதிரி நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஸ்டெல்லா அமலோர்பவ மேரி, அரசு உதவி பெறும் பள்ளி பிரதிநிதியாக, திருநெல்வேலி சங்கர் நகர், சங்கர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன்; மெட்ரிக் பள்ளி தரப்பில், சென்னை ஆழ்வார் திருநகரி செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக் பள்ளி முதல்வர் ஜேம்ஸ் சத்தியராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள், 10ம் வகுப்பு தேர்வு மதிப்பெண், பிளஸ் 1 தேர்வு மதிப்பெண், பிளஸ் 2 செய்முறைத் தேர்வு மதிப்பெண் ஆகியவை அடிப்படையில், மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறைகளை தயாரித்து வழங்க, ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
கல்வித் துறை முடிவு
மூவரும் தங்களின் அனுபவம் மற்றும் கல்வி அடிப்படையில், பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறைகளை, பல்வேறு வகைகளில் தயாரித்துள்ளனர்.
அதேபோல, சென்னை பல்கலை துணைவேந்தர் கவுரி உத்தரவின்படி, தேர்வுத் துறை அதிகாரிகள் உதவியுடன், மதிப்பெண் வழங்கும் முறை தயாரிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவற்றில் சிறந்த முறையை பயன்படுத்தி, மாணவர்களின் உயர் கல்வி பாதிக்காத வகையில், மதிப்பெண் பட்டியல் வழங்க, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, முதல்வரின் ஒப்புதல் பெற்றதும் வெளியாகும் என, பள்ளிக் கல்வி தரப்பில் கூறப்படுகிறது.