வெளிநாடு செல்பவர்களுக்கு 28 நாட்களில் கோவிஷீல்டு தடுப்பூசி - சுகாதாரத் துறை...
வெளிநாடு செல்பவர்களுக்கு 28 நாளில் தடுப்பூசிபோட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
2-வது தவணை
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் அவ்வப்போது ஒதுக்கீடு செய்யப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு 28 நாட்களில் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்தநிலையில் கோவிஷீல்டு தடுப்பூசி 12 வார கால அவகாசம் அளித்து 2-ம் தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனால் கோவிஷீல்டு தடுப்பூசி முதல் தவணை போட்டபின் 2-வது தவணை தடுப்பூசி 84 நாட்களுக்குப்பின் போட வேண்டி உள்ளது. கல்வி, வேலை, டோக்கியோ ஒலிம்பிக் போட்டி உள்ளிட்ட காரணங்களுக்காக வெளிநாடு செல்பவர்களின் நலன் கருதி கோவிஷீல்டு 2ஆம் தவணை தடுப்பூசி 28 நாட்களுக்குப்பின் போட்டு கொள்ளலாம் என மத்திய சுகாதார அமைச்சகம் தற்போது அனுமதி அளித்துள்ளது.
ஆவணம்
இதற்காக தடுப்பூசி போடுவதற்கு முன் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் கல்வி, வேலைவாய்ப்பு அல்லது இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்க வெளி நாட்டுப்பயணம் மேற்கொள்பவர்கள் கோவிஷீல்டு தடுப்பூசி 2-ம் தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ள ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவனையில் 63850 83361 என்ற எண்ணில் சுந்தர்ராஜன் என்பவரை தொடர்புகொள்ளலாம் என தமிழக பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துதுறை தெரிவித்துள்ளது.